மின்னஞ்சலைக் கண்டுபிடித்த சாதனைத் தமிழர்!

நவம்பர் 16-30

உலக அளவில் தகவல் பரிமாற்றத்தில் மாபெரும் பங்கு வகிப்பது மின்னஞ்சல் (e-mail).. இதை உருவாக்கியவர், இன்று அமெரிக்காவில் மிகச் சிறந்த கண்டுபிடிப்-பாளரா-கவும், பல நிறுவனங்களின் உரிமையாளராகவும் விளங்குகிறார். தமிழகத்தின் ராஜபாளையத்தை அடுத்த முகவூரைச் சேர்ந்த வெள்ளையன் அய்யாதுரை -_ மீனாட்சி ஆகியோரின் மகன் சிவா அய்யாதுரை ஆவார். தந்தை பன்னாட்டு நிறுவனங்களில் உயர்பதவி வகித்தவர். தாய் கணிதப் பேராசிரியர். இத்தம்பதிக்கு 1963, டிசம்பர் 2இல் பிறந்தவர் சிவா.

சிவா குழந்தையாக இருந்தபோது தொழில் நிமித்தமாக அவர்களது குடும்பம், மும்பை சென்றது. பிறகு அங்கிருந்து அமெரிக்காவுக்கு 1970-இல் குடிபெயர்ந்தது. அமெரிக்காவில் நியூஜெர்ஸி மாகாணத்தின் பேட்டர்சன் டவுனில் சிவாவின் கல்விப் பயணம் துவங்கியது. படிப்பில் சிவா மிகவும் கெட்டிக்காரர். 9ஆம் வகுப்பு படிக்கும்போதே கல்லூரிப் பாடங்-களைப் படிக்கத் தொடங்கிவிட்டார். உயர்நிலைப் பள்ளியில் படிக்கும்போது, கோடை விடுமுறையில் நியூயார்க் பல்கலைக்-கழகத்தில் நடத்தப்பட்ட கணினி மொழிப் பயிற்சியில் சிவா சேர்ந்தார். அந்தப் பயிற்சிக்கு உலகம் முழுவதிலும் இருந்து தேர்வு செய்யப்பட்ட 40 பேரில் சிவாவும் ஒருவர். அங்கு கணினி ஆணைகளுக்கான (கம்ப்யூட்டர் புரோகிராம்) FORTRAN, COBOL, PL1, SNOBOL, BASIC ஆகிய 5 மொழிகளைக் கற்றார் சிவா.

அவரது தாய் மீனாட்சி, நியூஜெர்ஸி மாகாணத்தின் நெவார்க் கிராமத்தில் உள்ள மருத்துவப் பல்கலைக்கழகத்தில் கணிதப் பேராசிரியராகவும் சிஸ்டம் அனலிஸ்டாகவும் பணிபுரிந்தார். அந்நிறுவனம் சிறுவன் சிவாவின் திறமையை உணர்ந்து ஆராய்ச்சி மாணவராக அவரைச் சேர்த்துக் கொண்டது (1978). அந்த பல்கலைக்கழகத்தின் தகவல் பரிமாற்றங்கள் காகிதத்தில் இருந்து வந்தன. அவற்றை கணினி மயமாக்கும் பணி சிவாவிடம் ஒப்படைக்கப்-பட்டது. அதை ஒரு சவாலாக ஏற்ற அவர், பல நாட்கள் ஓய்வின்றி உழைத்து, தகவல் தொடர்புக்கான ஒரு புதிய கணினி நிரலை உருவாக்கினார். அது 50,000 வரிகள் கொண்டதாக இருந்தது. அதற்கு இ- மெயில் என்று பெயரிட்டார் 14 வயதுச் சிறுவனான சிவா. எலக்ட்ரானிக் மெயிலிங் என்பதன் சுருக்கமே அது. இப்படித்தான் மின்னஞ்சல் கண்டுபிடிக்கப்-பட்டது. இதற்கு 1982இல் அமெரிக்காவில் முறைப்படி காப்புரிமையும் பெற்றார் சிவா அய்யாதுரை. ஆனால், விஞ்ஞானிகள் உலகம் அவரை அங்கீகரிக்கவில்லை.

காப்புரிமை பெற போராட்டம்:

சிவா இமெயிலைக் கண்டுபிடிப்பதற்கு முன்னரே, கணினியில் சிறு தகவல்களை அனுப்பும் முறை இருந்தது. ரேமண்ட் டாம்லின்சனின் கண்டுபிடிப்பானது இரு கணினிகளிடையே சிறு தகவலை அனுப்ப மட்டுமே உதவியது. ஆனால், சிவா உருவாக்கிய மின்னஞ்சல் முறையானது, எந்தக் கணினியிலிருந்தும் பிற கணினிகளுக்கு இணைய வழியில் தகவல்களை அனுப்பக் கூடியதாகும். தவிர, இன்று பயன்பாட்டிலுள்ள INBOX, OUTBOX, FROM, TO, SUBJECT, CC, BCC, DATA, BODY, FORWARD, REPLY ஆகிய மின்னஞ்சலின் அங்கங்கள் அனைத்துமே சிவா உருவாக்கியவை. இதன்மூலமாக, சிறு தகவல்கள் மட்டுமின்றி, படங்கள், ஒளி_ஒலி இணைப்புகளையும் அனுப்ப முடிகிறது.

இதுவே சிவா உருவாக்கிய மின்னஞ்சலின் சிறப்பாகும். FORTRAN IV கணினி மொழியைப் பயன்படுத்தி உருவாக்கப்பட்டது இது. ஆனால், சிவா இந்தியராக இருந்தது அவருக்குப் பெரும் தடையாக இருந்தது. அவரது சாதனையை எம்.அய்.டி. நிறுவனம் அங்கிகரித்தபோதும், மின்னஞ்சலுக்கான முழுப் பெருமையும் அவருக்குக் கிட்டாமல் செய்ய அமெரிக்காவில் பல தரப்பிலிருந்தும் முயற்சிகள் நடைபெற்றன.

இமெயிலின் கண்டுபிடிப்பாளர் தாம் தானென்று பலர் போட்டியிட்டனர். ஆயினும், உலகப் புகழ் பெற்ற மொழியியல் அறிஞான சாம் நோம்ஸ்கி, சிவாவை ஆதரித்தார். இறுதியில் ஸ்மித்சோனியன் தேசிய அமெரிக்க வரலாற்று அருங்-காட்சியகம், சிவாவின் சாதனையை அங்கீகரித்து, மின்னஞ்சலைக் கண்டு-பிடித்தது அவர்தான் என்று 2012இல் அறிவித்தது. நியூயார்க் டைம்ஸ் அவரை “டாக்டர் இமெயில்’’ என்றே குறிப்பிட்டது.

அமெரிக்க அதிபரின் பரிசு

1993இல் அமெரிக்க அதிபராக இருந்த பில் கிளிண்டன், தனக்கு வரும் பல்லாயிரக்-கணக்கான மின்னஞ்சல்களை எளிதாகக் கையாள தானியங்கி முறையை உருவாக்கு-வோருக்கு பரிசு வழங்குவதாக அறிவித்தார். அந்தப் போட்டியில் பல பெரிய நிறுவனங்கள் பங்கேற்றாலும் தனி நபராக சிவா அய்யாதுரை உருவாக்கிய எக்கோ மெயில் (ECHO MAIL) என்ற மின்னஞ்சல் கட்டுப்பாட்டு முறைக்கே பரிசு கிடைத்தது. 1994இல் அந்த மின்னஞ்சல் கட்டுப்பாட்டு முறையை அடித்தளமாகக் கொண்டு எக்கோ மெயில் டாட் இன்க் நிறுவனத்தைத் துவங்கி, அமெரிக்க நிறுவனங்-களுக்கு சிவா உதவி வருகிறார்.

இதனிடையே, மாசாசூசெட்ஸ் தொழில்-நுட்ப பல்கலைக்கழகத்தில் (எம்.அய்.டி) சேர்ந்த சிவா, மின்னியல் மற்றும் கணினி அறிவியலில் இளநிலை பொறியியல் பட்டம் (1986) பெற்றார். பிறகு, எம்அய்டி மீடியா லேபாரட்டரியில் பயின்று காட்சி ஊடக அறிவியலில் முதுநிலைப் பட்டம் (1989) பெற்றார்.

தொடர்ந்து எம்.அய்.டி.யில் பயன்பாட்டு இந்திரவியலில் முதுநிலைப் பட்டமும் (1990). சிஸ்டம்ஸ் பயாலஜியில் முதுநிலைப் பட்டமும் (2007) பெற்றார். அவரது கல்வி, ஆராய்ச்சிப் பணிகள், 1978இல் துவங்கி இன்று வரை, பல்வேறு நிறுவனங்களில் தொடர்கின்றன. தற்போது எம்.அய்.டி.யில் பேராசிரியராக உள்ளார். மேலும், சர்வதேச இன்டகிரேடிவ் சிஸ்டம்ஸ் கல்வி ஆராய்ச்சிக்கான மையத்தில்  (ICIS) இயக்குநராக ஆராய்ச்சிகளிலும் ஈடுபடுகிறார். தவிர கணினி தொடர்பான பல ஸ்டார்ட் அப் நிறுவனங்களும் அவரால் துவங்கப்பட்டுள்ளன.

சித்த மருத்துவத்திலும் சாதனை:

சிவாவின் தந்தை வழிப் பாட்டி சின்னத்தாய், கிராமத்தில் சித்த மருத்துவராக இருந்தவர். அதனால் சித்த மருத்துவம் மீது ஈடுபாடு கொண்ட சிவா உருவாக்கிய சைட்டோசால்வ்  (CytoSolve),, அனைத்து ஆய்வக ஆராய்ச்சி-களையும் உள்ளடக்கிய புதுமையான ஆராய்ச்சி முறையாகும். உடலியக்கத்தையும், மருந்தின் செயல்பாட்டையும் கணினி மூலமாகவே பொருத்தி ஆராயும் இம்முறை முழுமையாக வெற்றி கண்டால், மருத்துவத் துறையில் பெரும் புரட்சி நிகழும். அமெரிக்காவின் ஃபுல்பிரைட் உதவித் தொகை பெற்று, 2008இல் இந்தியா வந்து பாரம்பரிய சித்த மருத்துவ முறைகள் குறித்த ஆய்வில் சிவா ஈடுபட்டார். அதன் விளைவாக உருவானது, சிஸ்டம்ஸ் ஹெல்த் (Systems Health) என்ற புதிய கல்வித் திட்டம். அதேபோல, எம்.அய்.டி.யில் சிஸ்டம் விஷுவலைசேஷன் என்ற புதிய படிப்பையும் அவர் துவக்கினார். கணையப் புற்றுநோய்க்கு சித்த மருத்துவ அடிப்படையில் மருந்து ஒன்றையும் அவர் கண்டுபிடித்திருக்கிறார். உலகம் முழுவதும் உள்ள பல்வேறு ஆராய்ச்சி அமைப்புகள், பொதுநல அமைப்புகள், கல்வி நிறுவனங்களில் சிவா அய்யாதுரை உறுப்பினராகவும், வழிகாட்டியாகவும் உள்ளார். அவரை நாடி பல்வேறு சர்வதேச விருதுகளும், பாராட்டுகளும் வந்துள்ளன.

Arts and the Internet, The Internet Publicity Guide, The Email Revolution, Systems health ஆகிய 4 நூல்களையும், நூற்றுக்கணக்கான ஆராய்ச்சிக் கட்டுரைகளையும் எழுதியுள்ள சிவா. முக்கியமான கணினி தகவல் பரிமாற்றக் கட்டுப்பாடு கண்டுபிடிப்புகளுக்காக, 3 காப்புரிமைகளையும் பெற்றுள்ளார். அறிவாற்றலில் சிறந்தவன் தமிழன் என்பதற்கு இவர் ஓர் அடையாளம்!  

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *