சீனியை, இனிப்பாக மட்டுமே தெரியும்; இனிப்புக்குப் பின்னர் நிகழப்போகும் கசப்பான வாழ்வு தெரியாது. ஒவ்வொரு முறையும் தீபாவளி ரிலீஸாகக் களம் இறங்கும் வெள்ளை மைதாவும் ஈஸ்ட்மென்ட் கலர் பாதுஷாவும் சரி, வெள்ளைப் பாலும் வெள்ளைச் சினியும் இணைந்து உருவாகும் பால்கோவாக்களும் சரி, கடலை மாவுடன் இரண்டறக் கலந்து இருக்கும் லட்டு பூந்தியும் சரி, அனைத்துமே நான்கு இன்ச் அளவுள்ள நாவுக்கு இனிமை தந்துவிட்ட, நம் உடம்பில் நான்கு டிரில்லியன் அணுக்களை அடித்துத் துவைக்கம் பொருட்கள் என்பதை மறந்துவிடக் கூடாது!
ஆறு மாதங்களுக்கு முன்னர் அமெரிக்கா சென்றிருந்தபோது, எனக்கு ஓர் ஆச்சர்ய விஷயம் தென்பட்டது. நான் தங்கி இருந்த அய்ந்து ஊர்களின் விடுதிகளில் நான்கில் வெள்ளைச் சீனியே பரிமாறப்படவில்லை. இந்தோனேஷியாவில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட பழுப்பு சர்க்கரை அல்லது பனஞ்சர்க்கரைதான் அத்தனை தேநீர் குவளைகளுக்கு அருகிலும் அடுக்கப்-பட்டிருந்தன. அய்ரோப்பிய வீடுகளில் வெள்ளைச் சீனி வாங்குவது அரிதினும் அரிது. வெள்ளையர்கள் வெள்ளை மோகத்தில் இருந்து படுவேகமாக வெளியே வருகிறார்கள். நமக்கு இன்னும் தெளியவில்லை. இங்கே ரசாயன இனிப்பு இல்லாத தீபாவளியை இன்னும் நினைத்துக்கூடப் பார்க்க முடியவில்லை. பலரும் நினைப்பதுபோல வெள்ளைச் சீனி, சர்க்கரை நோயை மட்டும் உருவாக்கவில்லை. சாதாரண சளி _ இருமலில் இருந்து, உயிர் பிழை வரை உருவாக்கக்கூடும்!
சர்க்கரை வியாதியும் அதிக உடல் எடையும்தான் புற்றுநோய் உருவாக மிக முக்கியக் காரணிகள். இவை இரண்டுக்குமே நேரடிக் காரணம் வெள்ளைச் சர்க்கரை. புற்றுநோய் உருவாகிய பின்னர், புற்று அணுக்கள் உடலினுள் வேகமாக வளர, பிற உறுப்புக்-களுக்குப் பரவ, பிறழ்வுபட்ட மரபணு உருவாக முக்கியக் காரணமாக, அறிவியலாளர்கள் சந்தேகிக்கத் தொடங்கியிருப்பது வெள்ளைச் சர்க்கரையைத்தான்.
சர்க்கரைச் சத்தை தடாலடியாக ரத்தத்தில் கலக்க வைக்கிறது வெள்ளைச் சர்க்கரை. ‘ஒருவேளை உடலில் புற்று அணுக்கள் இருந்தால் அந்தச் செல்களுக்கு வெள்ளைச் சர்க்கரை, முதல் விருந்தாக அமைந்துவிடும். அது வேகமாக புற்று பரவ வாய்ப்பு அளிக்கும்’ என சில அறிவியலாளர்கள் தொடர்ந்து உரக்கச் சொல்லி வருகிறார்கள். ‘அப்படி எல்லாம் இல்லை; ஆதாரங்கள் போதுமானதாக இல்லை’ என, இன்னொரு பக்கம் வேகமாக வேறு சில அறிவியலாளர்கள் மறுக்கிறார்கள். இங்கே ஒரு விஷயத்தை நாம் நினைவில்கொள்ள வேண்டும். ரேசல் கார்ச்சன் ‘டி.டிடி.தான் ராபின் பறவையின் அழிவுக்கு காரணம்’ என்றபோதும் ஓர் அறிவியல் கூட்டம் வேகமாக மறுத்தது. ‘புகைப்பிடித்தலுக்கும் புற்றுக்கும் எந்த ஒரு தொடர்பும் இல்லை’ என 1940-களில் இங்கிலாந்து ராணிக்கு முன்பாக சூடம் அணைத்து சத்தியம் செய்யாத குறையாக வலியுறுத்தியது. களைக்கொல்லி (Glyphosyte), ‘மனிதனை ஒன்றும் செய்யாது, ரொம்பச் சமத்தாக்கும்’ என நேற்று வரை வக்காலத்து வாங்கியது. இன்று, ‘இவை எல்லாமே புற்றுக் காரணிகள் விலக்கி வையுங்கள்’ என அதே கூட்டம் அவசர அவசரமாகக் கூக்குரல் எழுப்புகிறது. ஆபத்தின் அடையாளம் தெரியும்போதே அதை விலக்குவது மட்டுமே புத்திசாலித்தனம்.
சீனி குறித்த சர்ச்சை தொடங்கும்போதே அறிமுகப்படுத்தப்பட்ட முதல் செயற்கை இனிப்பு ‘சாக்கரின்’ (Saccharin). . மருந்து மாத்திரை கேக் பிஸ்கட், டயட் பானங்கள் என, பலவற்றில் சேர்க்கப்-பட்ட ரசாயனம். இந்த சாக்கரின் இடைக்-காலத்தில் சாக்கரினை அதிகம் பயன்படுத்தவதால் சிறுநீர்ப்பை புற்று (Bladder Cancer) ஏற்படுகிறது எனத் தெரிந்ததும், நெடுங்காலம் இதை பல நாடுகள் தடைசெய்து வைத்திருந்தன. மீண்டும் அப்படி எல்லாம் சேட்டை பண்றதா தெரியலை. பயன்படுத்தலாம்’ என சந்தைக்கு வந்துவிட்டது சாக்கரின். அதேபோல் ‘அஸ்பார்டைம்’ எனும் செயற்கைச் சர்க்கரையை ‘குழந்தைகளுக்குக் கொடுக்காதீங்க; குழம்பு, காயில் போடாதீங்க; காபி, டீக்கு மட்டும் கலந்துக்குங்க’ என்கிற அறிவுறுத்தலோடு வியாபாரத்துக்கு வந்தது.
இப்போது சந்தையைக் கலக்கும் ‘சுக்ருலோஸ்’ செயற்கைச் சர்க்கரையோ ‘இதை வைத்து கேசரி கிண்டு; லட்டு பிடி; அல்வா கிளறு…’ என மொத்த வித்தையையும் உரக்கச் சொல்கிறது. ஆனால், டியூக் பல்கலைக்கழகம், எலிகளில் இதை ஆய்வு செய்து, ‘இதன் மூலம் மிகக் குறைந்த அளவில் பல பிரச்னைகள் உருவாகின்றன’ என அறிவித்தது. சீன தேசிய அறிவியல் கழகத்தின் உதவியுடன் நடைபெற்ற ஓர் ஆய்வு, ‘சுக்ருலோஸை அதிகச் சூட்டோடு பயன்படுத்தும்போது அது டயாக்ஸின் போன்ற (டயாக்ஸின் பிளாஸ்டிக் சிதையும்போது வெளியாகும் நேரடிப் புற்றுக்காரணி) நச்சை வெளியிடக்கூடும்’ என அறிவிக்கிறது. ‘Polychlorinated dibenzo-p-dioxins’ எனும் இந்த நச்சு, பழைய ஸ்டெயின்லெஸ் ஸ்டீல் பாத்திரத்தில் சமைக்கும்போது உருவாகும் வாய்ப்புதான் அதிகமாம். காபி டபராவில் அய்தீகமாக காபி குடிக்கும் நம்மவர்கள் கொஞ்சம் உஷாராக ‘இப்படியான சர்க்கரையில் சிக்கியிருக்கும் சுக்ருலோஸைப் போட்டுத்தான் இனிப்பை ருசிக்க வேண்டுமா?’ என கொஞ்சம் சிந்தியுங்கள். ஏனென்றால், வாழ்க்கையை அரியரில் இன்னொரு முறை எழுத முடியாது.
எந்த உணவு, சர்க்கரைச் சத்தை ஜீரணத்துக்குப் பின் மெள்ள மெள்ள ரத்தத்தில் கலக்கிறதோ (Low Glycemic Index), எந்த அளவு குறைவாக Low glycemic Load) கலக்கிறதோ… அதுதான் நலவாழ்வை விரும்பும் எல்லோருக்கும் ஏற்றது. குறிப்பாக புற்றுநோயருக்கு இந்த தேர்வு மிக முக்கியம். சமீபத்தில் உலகின் தலைசிறந்த மருத்துவப் பல்கலைக்கழகமான ஹார்வார்டு பல்கலைக்கழகம், முக்கிய 1000 உணவுகளில் இந்த கிளைசிமிக் இண்டெக்ஸ் மற்றும் கிளைசிமிக் லோடு குறித்த ஒரு முக்கியப் பட்டியலை வெளியிட்டது. அந்தப் பட்டியலில் ‘பாலிஷ் செய்து பட்டை தீட்டிய வெள்ளை அரிசிதான் மிக அதிக கிளைசிமிக் லோடம் இண்டெக்ஸும் கொண்டது’ எனத் தெரிவிக்கப்பட்டது. அதே சமயம் ‘பிரவுன் அரிசி’ எனும் உமி நீக்கப்படாத அரிசி, வெள்ளை அரிசியின் கிளைசிமிக் லோடில் கிட்டத்தட்ட மூன்றில் ஒரு பங்கு மட்டுமே (வெள்ளை அரிசியின் கிளைசிமிக் லோடு அளவு 43; பிரவுன் அரிசியின் அளவு 16) கொண்டிருப்பதைத் தெரிவிக்கிறது. பட்டை தீட்டாத நம் நாட்டுச் சிறுதானியங்கள் குறித்த பாரபட்சம் இல்லாத அளவீடுகள் இன்னும் தெரியவில்லை. நிச்சயம் பழுப்பு அரிசியைவிடக் குறைவானதாகத்தான் இருக்கும் என்றாலும், துல்லிய அளவீடுகள் ஆராயப்பட்டதாகத் தெரியவில்லை. தென் அமெரிக்கச் சிறுதானியமான ‘க்யூனோவா’ (ஹீuவீஸீஷீஸ்ணீ), பிரவுன் அரிசியைவிட மூன்று புள்ளிகள் குறைவாகத்-தான் இருக்கிறது.
புகைப்போருக்கு வரும் சாதாரண வாய்ப்புண்ணோ அல்லது கருப்பையின் வாய்ப்பகுதியில் வரும் புண்களோ Pappilloma Virus-ன் சில சேட்டைக்கார வகைகளின் அத்துமீறிய குடியேற்றத்தால் சாதாரண அழற்சியை, புற்றுநோயாக்கி விடுகின்றன. இந்த மாற்றம் நடக்க வெள்ளைச் சீனியையும், ஹை கிளைசிமிக் உணவுகளான பட்டை தீட்டிய தானியங்களையும் அளவுக்கு அதிகமாகப் பயன்படுத்துவது மிக முக்கியக் காரணம். ‘கள்ளினும் காமம் பெரிது’ என வள்ளுவன் சொன்ன கள்ளுக்குப் பொருள் அது மட்டும் அல்ல… எல்லா பெரும் இனிப்புகளும் கூடத்தான். வெள்ளைச் சர்க்கரை வேண்டாம்! வேண்டவே வேண்டாம்!