டாக்டர் சோம.இளங்கோவன்
ஆண்டு 1860. நவம்பர் 16ஆம் நாள். சென்னையிலிருந்து ட்ரூரோ எனும் கப்பலில் தென் ஆப்பிரிக்காவின் கரும்புத் தோட்டங்களில் கடுமையாக உழைக்கச் சென்றார்கள். பின்னர் பல தமிழர்கள் அங்கே சென்றனர். வத்தலக்குண்டுவிலிருந்து டர்பன் அருகே கரும்புத் தோட்டத்திற்குச் சென்றது ஒரு குடும்பம். கடுமையான உழைப்பு. கைகளிரண்டையும் இயந்திரத்தில் இழந்து விட்டார். அவரது 8 வயது மகன் குடும்பத்தைக் காப்பாற்றி, பின்னர் 7 குழந்தைகளின் தந்தையானார். அவரும், அவரது துணைவியாரும் எப்படியும் முன்னேற வேண்டும் என்று குழந்தைகளைப் படிக்க வைத்தனர். இரண்டு பெண்கள் நீதிபதிகள், இரண்டு பெண்கள் பள்ளித் தலைமை ஆசிரியர்கள். அதில் ஒரு நீதிபதியை ஒரு நாள் தென்னாப்பிரிக்காவின் பெருந்தலைவர் மென்டலா அழைத்து நீ உயர்நீதிமன்ற நீதிபதியாகப் பணியேற்க வேண்டும் என்று கூறுகின்றார். தென்னாப்பிரிக்காவின் முதல் வெள்ளையர் அல்லாத உயர்நீதிமன்ற நீதிபதி, அவர்தான் நவனீதம் அம்மையார். அவரது துணைவர் பரஞ்சோதி அந்தோனி பிள்ளை. உலகம் அவரை நவிப் பிள்ளை என்று அறியும்.
பின்னர் பன்னாட்டுக் குற்றவியல் நீதிபதி, ராவாண்டா குற்ற விசாரணைக் குழு, 2008இல் அய்க்கிய நாட்டின் மனித உரிமைக் குழுவின் தலைவர் என்று பல்வேறு பொறுப்புக்கள். கொடுத்த வேலையைத் துணிவுடனும், திறமையாகவும் செய்ய வேண்டும் என்பதுதான் சிறு வயதில் இருந்தே இவர் கற்றுக் கொண்டது. அய்க்கிய நாட்டின் அமைப்பில் மனித உரிமைக் குழு ஒதுக்கி வைக்கப்பட்ட இடமாக இருந்தது. பொதுக்குழுவில் கூடக் கலந்துகொள்ள முடியாமல் ஜெனிவாவில் ஒதுக்கி வைக்கப் பட்டிருந்தது.
இவர் வந்ததும் எல்லாவற்றையும் மாற்றினார். மனித உரிமையின்படி நேர்ந்த கொடுமைகளை வன்மையாகக் கண்டித்துச் செயல்கள் நிறைவேற்றப்பட்டன. எதிர்த்தவர்களின் வாயை அய்க்கிய நாட்டின் சட்டங்களைக் காட்டியே மடக்கினார். தென் ஆப்பிரிக்காவின் நிறவெறிக் கொடுமைகளைத் துணிவுடன் எதிர்த்து வெற்றி கண்டவருக்கு இந்தத் தடைகள் பெரிதாக இருக்கவில்லை.
மனித உரிமை அநியாயங்களில் பெண்களுக்கு நிகழ்ந்த வன்புணர்ச்சி பற்றி மிகவும் தீவிரமாக விசாரிக்கும் ஏற்பாடுகளைச் செய்தார். வன்புணர்ச்சி போராளிகளுக்குப் போரில் கிடைக்கும் பரிசுப் பொருள்களல்ல, போர்க்குற்றங்கள், தண்டிக்கப்பட வேண்டியவை என்று கொண்டு வந்தார்.
சாதிக் கொடுமை:
முதல் முதலாக அய்க்கிய நாட்டிலே இந்தியாவின் உள்நாட்டுப் பிரச்சினை என்ற கோட்டையை உடைத்து சாதிக் கொடுமை, மனித உரிமைக் கொடுமை, ஒழிக்கப்பட வேண்டியது என்று கொண்டு வந்தார். தற்போது அது சூடுபிடித்து வந்து கொண்டுள்ளது. இன்னும் பல படிகளைக் கடக்க வேண்டும். ஆனால், சரியான பாதையில் போய்க் கொண்டிருக்கின்றது.
அமெரிக்காவின் நியு ஜெர்சியில், இலங்கைத் தமிழ்ச் சங்கத்தின் 39ஆவது ஆண்டு விழாவின் சிறப்பு விருந்தினராக அழைக்கப்பட்டு, வாழ்நாள் சாதனை விருது பெற்றார். அத்துடன் வடஅமெரிக்க அரசியல் செயல்குழு, நாடு கடந்த தமிழ்ஈழ அரசு, உலகத் தமிழர் அமைப்பு, இளைஞர் அரசியல் குழு இணைந்து தமிழர் சங்கமம் விழா எடுக்கப்பட்டது. அதில் வடஅமெரிக்கத் தமிழ்ச் சங்க முன்னாள் தலைவரும் பெரியார் நிகழ்ச்சிகள் ஒளிக்-காட்சிகள் தொடர்ந்து நடத்துபவருமான நாஞ்சில் பீட்டர் அவர்களுக்குச் சாதனையாளர் விருது அளிக்கப்பட்டது. பல தமிழ்க் குழந்தைகளுக்குக் கட்டுரை மற்ற போட்டிகள் நடத்தி பரிசுகள் அளிக்கப்பட்டன.
இங்கிலாந்து, கனடா, சுவீடன், ஈழம் மற்ற நாடுகளிலிருந்து பலர் கலந்து கொண்டனர். தமிழரல்லாதாரும் பங்கு பெற்றுச் சிறப்புச் சொற்பொழிவாற்றினார்கள். நாடு கடந்த தமிழீழ அரசின் முதல்வர் உருத்திரகுமார், “தமிழரின் உரிமைகள் தமிழர்களாலேயே வெளிப்படையாகத் தீர்மானிக்கப்பட வேண்டும். அதற்கு உழைப்போம்’’ என்றார்.
இசை நிகழ்ச்சியுடன் விழா சிறப்புற்றது.