தந்தை பெரியார்
ஜாதி ஒழிப்பைக் காங்கிரஸ் கட்சி தன்னுடைய இலட்சியமாகக் கொள்ள வேண்டுமென்று தீர்மானம் கொண்டு வந்துள்ளேன். அந்தச் சந்தர்ப்பத்தில் இராஜகோ-பாலாச்சாரி சொன்னார் நாயக்கரே! (திருநெல்வேலியில் நடைபெற்ற காங்கிரஸ் மாநாட்டில்) இது வீண்வேலை; புத்தனெல்லாம் முயற்சி செய்து தோற்றுப்போனான்; முஸ்லிம் 700 ஆண்டு முயற்சி செய்து தோற்றுப் போனான்; நீங்கள் ஏன் இதைச் செய்ய வேண்டும்? என்றார்.
நான் தோற்றாலும் கவலையில்லை; இது நல்ல வேலையாகத் தெரிகிறது; அந்தக் காலம் வேறு; இந்தக் காலம் வேறு; மக்களுக்கு அறிவுவர ஆரம்பித்துள்ளது; மேலும் இன்னும் எத்தனை காலம் நாங்கள் சூத்திரராக (தேவடியாள் மக்களாக) இருப்பது என்றேன் நான்.
பிறகு காங்கிரசை விட்டு 1925இல் காஞ்சிபுரம் மாநாட்டிலே வெளிவந்தேன்; நான் கொண்டு வந்த வகுப்புரிமைத் தீர்மானத்தைச் சூழ்ச்சியாக ஒழித்துக்கட்டினார்கள். காங்கிரஸ் ஸ்தாபனம் (கட்சி) பார்ப்பனரல்லாதாருக்குத் துரோகம் செய்து அவர்களைப் பார்ப்பனருக்குக் காட்டிக் கொடுக்கும் அமைப்பு என்பதை நன்றாக உணர்ந்தவுடன் நான் வெளியே வந்தேன். வந்தவுடன் (1925) சுயமரியாதை இயக்கத்தைத் தோற்றுவித்தேன்; இந்த 32 வருடங்களாக ஜாதிகள் ஒழிய வேண்டும் என்றே பிரச்சாரம் செய்து வருகிறேன்.
1938ஆம் ஆண்டில் இராஜகோ-பாலாச்சாரியார் சென்னைக்கு முதன்மந்திரியாக வந்தபோது பள்ளிக்கூடத்துப் பிள்ளைகளுக்கு இந்தியைக் கட்டாயப் பாடாமாக்கினார். அதை எதிர்த்து 2000 பேரைச் சிறைக்கு அனுப்பினேன்; எனக்கும் 2 வருட தண்டனை விதித்தார்கள். அப்போது சொன்னேன் நான், தமிழ்நாட்டின் ஆட்சி தமிழ் மக்களின் கைக்கு வந்து ஆகவேண்டும் என்பதை; அப்போதே நான் உணர்ந்தேன்; காங்கிரஸ்காரன்கூட விடுதலை கேட்காத காலம். ஏதோ கொஞ்சம் அதிகமான அதிகாரத்தை வெள்ளைக்காரன் கொடுத்தால் போதும் என்று சொல்லி வந்த காலம்.
நம்முடைய இயக்கம் நாளுக்கு நாள் நல்லமுறையில் வளர்ந்து வருகிறது; நம்முடைய உண்மையான பலத்தை அறிந்தவர்கள் வடநாட்டவர்களே. அதனால்தான் அரசமைப்புச் சட்டத்தில் தங்களுக்கு மிகுந்த பாதுகாப்பைத் தேடிக்கொண்டார்கள்.
இந்தத் தமிழ்நாட்டுப் பார்ப்பனர் தங்களுடைய ஆதிக்கத்தை நிலைக்க வைக்க சூழ்ச்சி செய்ததுதான் இந்த அரசமைப்புச் சட்டம்! தமிழ் நாட்டைப் பற்றிப் பார்ப்பனருக்கு மிகவும் சந்தேகம்; பார்ப்பனரால்லாதார் உணர்ச்சி இங்கு மிகுதியாக உண்டு; நாட்டு ஆட்சி தமிழர்கள் கைக்குப் போனால் தங்களை ஒழித்துக் கட்டிவிடுவார்கள் என்பது அவர்-களுக்குத் தெரியும். ஆகவே யாரை விட்டாலும் விடலாம். இந்தத் தமிழ் நாட்டவரை மட்டும் தனியாக விடக்கூடாது. அவர்களை என்றென்றும் அடிமையாக வைத்திருக்க வேண்டும் என்று திட்டம் தீட்டி விட்டார்கள்.
பெயருக்கு ஏதோ இது கூட்டாட்சி (Federal State) என்று பெயர். ஆனால் இது உண்மையல்ல. பலமான சர்வாதிகார ஆட்சியே. கூட்டாட்சி என்று சொல்கிறானே ஒழிய சட்டத்தில் பிரிவதற்கு இடம் இல்லை. அந்தப் பிரச்சினைக்கே அதில் இடம் கிடையாது. சேர்வது வேண்டுமானால் சேர்த்துக் கொள்ளலாம்; கோவாவைச் சேர்த்துக் கொள்ளலாம். பாண்டிச்சேரியைச் சேர்த்துக் கொள்ளலாம்; பாகிஸ்தான் மீதுகூட சண்டைக்குப் போகலாம்! ஆனால் நம்முடைய தமிழ் நாடு பிரிவதற்குச் சட்டத்தில் இடமில்லை; ஆகவே கூட்டாட்சி என்று சட்டத்தில் போட்டிருப்பதெல்லாம் பித்தலாட்டம்.
ஜாதியினுடைய இழிவை மக்கள் உணர்-வதில்லை; அந்த அளவுக்கு அதில் ஊறிப்போய் விட்டார்கள்; ஏதோ பகவான் செயல், பகவானால் அமைக்கப்பட்டுள்ளது என்று எண்ணிக்கொண்டுள்ளனர் நம்முடைய மக்கள். என்றையத் தினம் மதம், கடவுள் இவற்றில் நம்பிக்கைக் கொள்ள ஆரம்பித்தார்களோ அப்போதே இந்த இழிவை இவர்கள் உணராத நிலைக்கு வந்து விட்டார்கள்.
இந்த ஜாதி முறையைக் கண்டித்தவர்கள் இரண்டொருவர். அவர்களில் புத்தர் ஒருவர். அவருடைய கொள்கையை இந்த நாட்டை-விட்டே ஒழித்துவிட்டார்கள். ஏதோ அங்கொன்றும் இங்கொன்றுமாய் புத்தர்கள் என்பவர்கள் அந்தக் கொள்கை தோன்றிய நாட்டில் வாழ்கிறார்கள். புத்தக் கொள்கையில் மக்களைச் சேர்த்தார் அம்பேத்கர்! உடனே அரசாங்கம் புத்தக்கொள்கையில் சேர்ந்தவர்-களுக்குச் சலுகையில்லை; வேலைக்கு இடம் ஒதுக்கி வைக்கமாட்டோம் என்று சொல்லி விட்டார்கள். அந்தக் கொள்கைக்குப் போனவன் இரண்டொருவனும் இப்போது திரும்பி வரப் பார்க்கிறான்.
புத்தக் கொள்கையில் மக்களைச் சேர்த்த அம்பேத்கரைக் கொன்று போட்டு ஒழித்து விட்டார்கள். அவர் எப்படிச் செத்தார் என்பதற்கு இன்றையத் தினம் வரை தகவல் ஏதும் இல்லையே! ஏதோ இரவு பத்து மணிவரை படித்துக் கொண்டிருந்தார்; படுக்கைக்குப் போனார்; பொழுது விடிய படுக்கையில் பிணமாகக் கிடந்தார் என்பதைத் தவிர எப்படிச் செத்தார் என்று யாரும் சொல்லவில்லையே? இந்து மதத்திற்கு விரோதமாக (பகையாக) இருந்த அவரை ஒழித்துக்கட்ட வேண்டும் என்பதுதானே இவர்களுடைய எண்ணம்? அதன்படி அவரைக் கொன்றுபோட்டு விட்டார்களே! இதைப்பற்றிக் கேட்கக் கூட இன்று நாதி இல்லையே?
வெள்ளைக்காரனுக்கு இந்த நாட்டில் ஆதிக்கத்திற்கு வசதி செய்து கொடுத்தவன் பார்ப்பனன். நீங்கள், காங்கிரஸ் சரித்திரம், என்ற புத்தகத்தை வாங்கிப் பார்த்தால் உங்களுக்குத் தெரியும்; காங்கிரசின் முதல் தீர்மானமே வெள்ளைக்காரன் ஆட்சி என்றென்றைக்கும் நீடிக்க வேண்டும் என்பதுதான். வெள்ளைக் காரனுக்கு உதவி செய்து தங்களுக்கு வேண்டிய-படி அவனுடைய காலத்திலேயே சட்டத்தை ஏற்பாடு செய்துகொண்டுவிட்டார்கள் பார்ப்பனர்கள்
நம்மை இன்று ஆள்கின்ற இந்து லாவை (இந்து சட்டம்) வாங்கி அதன் முதல் பக்கத்தை முகவுரையைப் படித்துப் பாருங்களேன்.
இந்து லாவானது இந்துமத வேதசாஸ்திரங்களை அடிப்படையாகக் கொண்டது. பராசரர், நாரதர், யாக்ஞயவல்கியர் மனு ஆகியவர்-களுடைய ஸ்மிருதிகளை (கருத்துக்களை) அடிப்படையாகக் கொண்டது; வருணாசிரமத்தை அடிப்படையாகக் கொண்டது; இந்து லாவில் ஏதாவது சந்தேகம் வந்தால் சொந்தப் புத்தியை உபயோகப்-படுத்தக்கூடாது. சாத்திரங்களில் வல்லவர்களைக் கூப்பிட்டுத்தான் சந்தேகம் தீர்த்துக் கொள்ள வேண்டும். இப்படித்தானே போட்டிருக்கிறது இந்து லாவில்? யாராவது இல்லை என்று சொன்னால் நான் மாற்றிக் கொள்ளுகிறேன்; கொஞ்ச நாள்களுக்கு முன் சுயமரியாதைத் திருமணம் சம்பந்தமாக அய்கோர்ட்டில் (உயர் நீதிமன்றம்) வழக்கு ஒன்று வந்தபோது வேத சாஸ்திர அடிப்படையில் தானே தீர்ப்புக் கூறப்பட்டது? வேதத்தின் சூத்திரத்தையல்லவா ஜட்ஜ்மெண்டில் (தீர்ப்பில்) எடுத்துக்காட்டி அதன் அடிப்படையில் தீர்ப்புக் கூறுவதாக எழுதியிருக்கிறார் நீதிபதி.
ஜாதிப் பிரிவினையால் இந்த நாட்டிற்கு ஏற்பட்ட நன்மை என்ன? இருக்கவேண்டிய அவசியமென்ன? வேண்டுமானால் இந்தப் பார்ப்பான் பாடுபடாமல், உடம்பை வளைக் காமல் வாழமுடிகிறது. மற்றவர்கள் அடைந்த, அடைகின்ற இலாபம் என்ன?
நம்முடைய மக்கள் பிறவித் தொழிலாளர் களாகவும், இழி மக்களாகவும், தற்குறிகளாகவும் இருப்பதற்குக் காரணமான ஜாதியை ஒழிக்க நாம் முயற்சிகள் செய்துள்ளோம். எங்களுடைய முயற்சிகள் போதிய பயனளிக்காததற்குக் காரணம் சட்டம் குறுக்கே நிற்கிறதுதான்.
உயிருக்கு நாங்கள் துணிந்து விட்டோம், முதலாவதாக அரசமைப்புச் சட்டத்தைக் கொளுத்தப்போகிறோம். இந்தச் சட்டத்துக்குக் காரணமான காந்தியை அடுத்தப்படியாக ஒழிக்கப்போகிறோம். பிறகு உயிரைக் கொடுப்போம்.
23-10-1957 அன்று நெல்லை மாவட்டத்தில் ஏரலில் பெரியார் ஈ.வெ.ரா. சொற்பொழிவு: (விடுதலை 4-11-1957)