கோவில் உண்டியல் கருப்புப் பணமும் தடுக்கப்படுமா..?

நவம்பர் 16-30

8.11.2016 அன்று இரவு வானொலி, தொலைக்-காட்சிகளில் உரையாற்றிய பிரதமர் மோடி, கருப்புப் பணத்திற்கு எதிரான அதிரடி நடவடிக்கையாக, 08.11.2016

12 மணிமுதல் தற்போது புழக்கத்தில் உள்ள 500 ரூபாய், 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்று அறிவித்துள்ளார்.

பழைய 500 ரூபாய், 1000 ரூபாய் நோட்டுகளை எப்படி மாற்றிக் கொள்ளலாம்;   எந்த  அளவு, என்ன கால அவகாசம் என்பதை-யெல்லாம் அறிவித்துள்ளார்! தீவிரவாதிகளால் கள்ள நோட்டுகள்  – குறிப்பாக ரூ.500 நோட்டு புழக்கத்தில் விடப்பட்டு, அப்பாவி மக்கள் இழப்புக்கு ஆளாகும் நிலை ஆங்காங்கே இருந்தது. இது அதனை ஒழிக்க உதவும்.

2014 இல் தனது தேர்தல் பிரச்சாரத்தின்-போது, வெளிநாட்டில் உள்ள கருப்புப் பணத்தை இந்நாட்டுக்குக் கொண்டு வந்து, ஒவ்வொரு குடிமகனின் வங்கிக் கணக்கில் 15 லட்சம் ரூபாய் போடுவேன் என்றும் கூறினார்!

வெளிநாட்டுக் கருப்புப் பணம் வந்த அளவு பெருங்குறைவே!

உள்நாட்டில் தாங்களே முன்வந்து தங்களது கணக்கில் காட்டப்படாத பணத்தை வங்கிகளில் கட்டி, வருமான வரி அபராதம் கட்டினால், வேறு நடவடிக்கை எடுக்கப்-படமாட்டாது என்று செப்டம்பர் இறுதிவரை அவகாசம் தரப்பட்டது மத்திய நிதியமைச்சகத்தால்.

இதன்மூலம் ரூபாய் 65 ஆயிரம் கோடி கூடுதல் தொகை வசூலாகியது!

புதிய அறிவிப்பு – வரவேற்கத்தக்கது

தற்போது அறிவிக்கப்பட்டுள்ள இந்தக் கருப்புப் பணத்தை ஒழிக்கும் திட்டம் வரவேற்கப்படவேண்டியதாகும்.
இதன்மூலம் சாதாரண தொழிலாளர்கள், பொதுமக்கள், வியாபாரிகள், நடுத்தர வர்க்கத்தினர் முதலிய சாமான்ய மக்களுக்குப் பல வகைகளில் தொல்லையும், துன்பமும் ஏற்படவே செய்யும்.

அதைக் களையும் வகையில் மத்திய அரசு சரியான வழிமுறைகளை நடைமுறைப்படுத்தி, அத்தகைய மக்கள் பிரிவினரின் சங்கடங்கள் போக்கப்படவேண்டும்.

வெளிநாட்டுக் கருப்புப் பணம் போதிய அளவில் இந்நாட்டுக்குள் கொண்டுவரப்பட-வில்லை இன்னமும்!
எனவே, உள்நாட்டுக் கருப்புப் பணத்தை வெளியே கொண்டுவரவே இத்தகைய முயற்சிகள் என்று கூறப்படுகிறது!

இந்த நடவடிக்கை கள்ள நோட்டுப் புழக்கத்தைத்  தடுக்கப் பெரிதும் உதவும் என்பது உறுதி.

வேடிக்கையான முரண்பாடு

ஆனால், புதிய 500 ரூபாய் நோட்டு, 2000 ரூபாய் நோட்டு என்று அறிவித்துள்ளது ஒரு வேடிக்கையான முரண்பாடாக உள்ளது; காரணம், 1000 ரூபாய் நோட்டுகளை வெளியிடாமல், புதிதாக 2000 ரூபாய் நோட்டுகளை வெளியிடுவதால், கொஞ்ச காலத்திற்குப் பின் இதன்மூலம் கணக்கில் காட்டப்படாத பணம் பெருக வாய்ப்பு ஏற்படக்கூடுமே!

இந்த நடவடிக்கைமூலம், நியாயமான வகையில் பணியாற்றும் வியாபாரிகள், போக்குவரத்து வாகனத் தொழிலாளர்கள், எளிய நடுத்தரக் குடும்பத்தினர் பாதிப்பு அடையாமல், பாதுகாப்பு நடவடிக்கைகளையும் மத்திய அரசு செய்து அவர்களை அவதிப்படாமல் காக்கவேண்டியது அவசர, அவசியமாகும்.

திருப்பதி, குருவாயூரப்பன் போன்ற பெரிய கோவில் உண்டியல்களில் போடும் கருப்புப் பணத்தையும் கட்டுப்படுத்த மத்திய அரசு முன்வர வேண்டும். புதிய 500, 2000  ரூபாய் நோட்டுகளும், காசோலை (செக்), வரைவோலை (டி.டி.) போன்றவைகள் மட்டும்தான் செல்லும் என்றும் தெளிவுபடுத்தினால், கருப்புப் பணம் கடவுளுக்குச் செலுத்திடும் பழக்கமும் தடுக்கப்பட ஏதுவாகும்.

கி.வீரமணி,
ஆசிரியர்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *