இருதய நோயாளிக்கு அதிர்ச்சியூட்டக் கூடாது
இதயம் உணர்வுகளோடு சம்பந்தப்பட்டது. இரத்த ஓட்டமும் உணர்வுகளோடு சம்பந்தப்பட்டது. எனவே உணர்ச்சியூட்டும், அதிர்ச்சியூட்டும் செய்திகளை இருதய நோயாளிகளிடம் சொல்லக் கூடாது.
திடீர் அதிர்ச்சி, மாரடைப்பை ஏற்படுத்தி உயிரைப் போக்கும். எனவே, அதிக அதிர்ச்சி அதிக மகிழ்ச்சி தரும் செய்திகளைச் சொல்லக்கூடாது.
இதய நோயாளிகளை கோபப்படச் செய்யக் கூடாது. அவர்கள் பதட்டப் படாமல் பார்த்துக்கொள்ள வேண்டும். இதய நோயாளிகள் அதிர்ச்சியூட்டும் காட்சிகளைப் பார்க்காது தவிர்க்க வேண்டும். திரைப்படம், தொலைக்காட்சிகளில் கொலை, தாக்குதல் காட்சிகளைப் பார்க்கக் கூடாது. கற்பனைக் காட்சி என்றாலும் உணர்வுகளை அது தூண்டும். ஈடுபாட்டுடன் பார்க்கும் போது எழுச்சியூட்டி பாதிக்கும்.
கொழுத்தவர்கள் கொள் உண்ணத் தவறக்கூடாது
கொழுப்பால் அதிகம் பாதிக்கப்படக் கூடியவர்கள் கொள்ளை வேக வைத்து அல்லது வறுத்துத் தினமும் சாப்பிட வேண்டும்.
பூண்டும், வெங்காயமும் தினம் சாப்பிட வேண்டும்.
இஞ்சியைக் காலையில் ஒரு துண்டைத் தவறாது சாப்பிட வேண்டும்.
கட்டுப்பாடில்லா சுதந்திரம் தரக்கூடாது
தனிநபர் சுதந்திரம் என்று சொல்லி ஒருவர் எப்படி வேண்டுமானாலும் வாழலாம் என்று வாழ்வது அல்ல சுதந்திரம். சுதந்திரம் என்பது வரம்பிற்கு உட்பட்டு, தனக்கும் பிறருக்கும் பாதிப்பில்லாது, நியாயமான தேவைகளை நிறைவு செய்து கொள்ளும் நல்விருப்பப்படியான வாழ்வே சுதந்திர வாழ்வு. மாறாக, கட்டவிழ்த்து காலித்தனமாக கண்மூடித் தனமாக வாழ்வதல்ல.
எனவே, சுதந்திரம் என்பது கட்டுப்-பாட்டுடன் கூடியது என்பது பொருள். வரம்புக்கு உட்பட்டு, விருப்பங்களை விதிப்படி நிறைவேற்றும், எல்லோர்க்கும் நலம் பயக்கும் வாழ்வு வாழ்வது என்பது ஆகும்.
சுயநலக்காரர்களிடம் அதிகாரம் தரக்கூடாது
தன் குடும்பம், தன் பிள்ளை, தன் உறவினர் என்று சுயநலத்திற்கு முன்னுரிமை கொடுக்கும் எவரையும் அதிகாரத்தில் அமர்த்தக் கூடாது. அப்படிப்பட்டவர்கள் அமர்ந்தால் நிறுவன நலன், பொதுநலன் பாதிக்கப்படும். அவர்கள் சிந்தனை அவர்கள் குடும்ப வளர்ச்சியை, நலனை முன்னிறுத்தியே இருக்கும். இதனால் பொதுநலன் பெரிதும் பாதிக்கப்படும். சுயநலத்திற்காக அவர்கள் பொதுநலத்தைப் பலி கொடுக்கத் துணிவர்.
இன்று நாட்டின் வளர்ச்சி பெரிதும் கெட்டு நிற்பதற்குக் காரணம், தன் குடும்பம், தன் ஜாதி, தன் மதம் என்ற சுயநலமிகளும், ஆதிக்கவாதி-களுமே ஆகும். எனவே, இனி வரும் காலங்களில் இவர்களை அப்புறப்படுத்த மக்கள் நலத் தொண்டர்களை, மனிதநேயப் பாற்றாளர்-களைத் தேர்வு செய்ய வேண்டும்.
ஒழுக்கம் இல்லாதவன் ஆசிரியராய் இருக்கக்கூடாது
ஆசிரியப் பணிக்குத் தேர்வு செய்ய தற்போது தகுதித் தேர்வு நடத்தப்படுகிறது. வெறும் ஏட்டுக்கல்வியின் அடிப்படையில் தகுதித் தேர்வு நடத்தப்படுகிறது. ஆசிரியர் தகுதிக்குக் கல்வித் திறன், கற்பித்தல் திறன் எந்த அளவிற்கு முக்கியமோ அந்த அளவிற்கு ஒழுக்கம், கட்டுப்பாடு, வழிகாட்டும் திறன், தொண்டுள்ளம், பற்று பாசம் இவை முக்கியம்.
ஆனால், தற்போதைய தகுதித் தேர்வில் கல்வித்திறன் மட்டுமே மதிப்பிடப்படுகிறது. கற்பித்தல் திறன் உள்ளிட்ட மற்றவை புறக்கணிக்கப்படுகின்றன. இது சரியல்ல.
ஆசிரியராய் வருகின்றவர்களுக்கு ஒழுக்கமே முதல் தகுதி. பணிக்கு வந்த பின் பணியில் நீடிக்கவும் ஒழுக்கம் முக்கியம். ஒழுக்க-மில்லாதவர்கள் ஆசிரியப் பணியில் இருக்கவே கூடாது. இதை 100 சதவீதம் பின்பற்ற வேண்டும்.ஸீ