அய்யாவின் அடிச்சுவட்டில்… 165
பிறப்பால் இழைக்கப்பட்ட நெடுங் கொடுமைக்குத் தீர்வே இடஒதுக்கீடு!
“சட்டக் கல்லூரி மாணவர் சேர்க்கையில் பச்சைப் பார்ப்பனியம்? விளையாடுவதை எடுத்துக்காட்ட, நீண்டதோர் தலையங்கத்தை 03.10.1979 அன்று ‘விடுதலை’யில் வெளியிட்டிருந்-தோம்.
தமிழக அரசு பிற்படுத்தப்பட்டோருக்குப் பேரிடி மேல் பேரிடிகளை அடுக்கடுக்காகத் தந்துகொண்டே இருக்கிறது. பார்ப்பனர்களை எப்படி மனங் குளிர வைப்பது என்பதே அ.இ.அ.தி.மு.க. ஆட்சியின் லட்சியம்போலும்! இல்லாவிட்டால் தமிழகத்தில் உள்ள சட்டக்-கல்லூரி மாணவர்கள் எண்ணிக்கையை வெகுவாகக் குறைத்து, அந்த எண்ணிக்கையிலும் தலைமுறை தலைமுறையாக கல்வியில் முன்னேறிய சாதியினராகிய பார்ப்பனரே அதிக இடம் பெறுவதற்கு கதவு திறப்பதற்கு ஏற்ற வண்ணம் திட்டமிட்டு செயலாற்றுவார்களா?
இதற்கு முன்பு ஒவ்வொரு ஆண்டும் சட்டக்கல்லூரி மாணவர் தேர்வுக்கு தனி செலக்ஷன் கமிட்டி இருக்கும். அது இவ்வாண்டில் ரத்து செய்யப்பட்டது ஏனோ தெரியவில்லை.
அது மாத்திரமல்ல; எப்படி இப்போது தேர்வு நடைபெறுகிறது தெரியுமா? மார்க் அடிப்படையிலேயே தேர்வுகளாம்!
சட்டக் கல்லூரிக்கு மனு போடுபவர்கள் பலதரப்பட்ட பட்டதாரிகளாக இருப்பார்களே (பி-.ஏ., பி.எஸ்சி., எம்.ஏ., பி.காம், இப்படி) அப்படிப்பட்டவர்களுக்கு மார்க் அளவுகோல் என்பது சீரான அல்லது சமமான அளவுகோலாக ஒன்றுக்கு மற்றொன்று இருக்க முடியுமா?
வழக்கறிஞர்கள் தொழிலில் சிறப்புடன் வருபவர்களில் பலர் முதல் வகுப்பு வாங்கி பாஸ் செய்த பட்டதாரிகள் அல்ல.
இவ்வாண்டு சட்டக் கல்லூரியில் மாணவர் சேர்க்கைக்கு தேர்வு செய்ய,
எம்.ஏ., எம்.எஸ்சி., எம்.காம்., படித்த பட்டதாரிகளில் முதல் வகுப்பு வாங்கியிருந்தால் 65 மார்க், இரண்டாவது வகுப்பு வாங்கியிருந்தால் 60 மார்க், மூன்றாவது வகுப்பு வாங்கியிருந்தால் 55 மார்க் என்று போட்டுக் கொள்ள வேண்டுமாம்! பி.ஏ., பி.எஸ்சி., பி.காம். ஆகிய பட்டங்கள் முதல் வகுப்பு வாங்கியிருந்தால் 50 மார்க், இரண்டாவது வகுப்புக்கு 45 மார்க், மூன்றாவது வகுப்புக்கு 40 மார்க் என்று கணக்கிட்டு கொண்டு மேலும் என்.சி.சி. சர்டிபிகேட்டுகளுக்கு 10 மார்க், விளையாட்டுக்கு 10 மார்க், மற்றவைகளுக்கு 10 மார்க், என்று குறிப்பிடப்பட்டு இந்த மார்க்குகள் அளிக்கப்படுவதில் மொத்த மார்க்கு-களில் எவருக்கு அதிகபட்சம் வருகிறதோ அவர்கள் மாத்திரம்தான் தேர்வு செய்யப்-படுவார்களாம்!
எவ்வளவு அர்த்தமற்ற கொடுமை பார்த்தீர்களா?
தாழ்த்தப்பட்ட பிற்படுத்தப்பட்ட மாணவர்-களுக்கும் இதே அளவுகோல்தான். அவர்களுக்கு எவ்வித சலுகை முன்னுரிமை கிடையாது. இந்த அளவுகோல்படிதான் அவர்கள் இடஒதுக்கீடும் அமையும்.
மெடிகல் காலேஜ் செலக்ஷன்களில்கூட தாழ்த்தப்பட்ட மாணவர்களுக்கு மார்க் வித்தியாசம் உண்டு. சட்டக் கல்லூரி என்ன அதைவிட மிகவும் பெரிய நுண்ணிய படிப்பா?
நேர்முகப் பேட்டி (Interview) அறவே கிடையாதாம்!
எவ்வளவு பச்சையாக ஆச்சாரியார் காலத்தில்கூட நடக்கத் துணியாத அக்கிரமம் அண்ணா வழி என்று சிறிதும் வெட்கமில்லாமல் கூறிக்கொள்ளும் இந்த ஆட்சியில் நடக்கிறது பார்த்தீர்களா?
மேலும், சென்னையில் ஒரு கல்லூரி இருந்தபோது சுமார் 800க்கு மேற்பட்ட இடங்கள் இருந்தன. இப்போது நான்கு கல்லூரிகள் என்று பெயரளவுக்கு ஏற்படுத்தப்பட்டு என்னவாகி இருக்கிறது தெரியுமா?
மதுரை -_ 150
சென்னை _ 180
திருச்சி _ 60
கோவை _ 60
____
450
-____
சரி பகுதி எண்ணிக்கை மிகவும் ரகசியமான முறையில் குறைக்கப்பட்டு விட்டது!
வக்கீல் தொழிலுக்கான சட்டப் படிப்பை சமூகத்தின் எல்லாப் பிரிவினரும் படிக்கத் துவங்கியதே சமீபத்தில்தான். இப்போது அதிலும் மண் விழும்படி இவ்வாட்சி செய்கிறது!
சட்டக் கல்விக்கு இயக்குநர் பதவிகளில் ஒரு தமிழர் இருப்பதால் அவர் (Director of Legal Studies) என்ற பதவியிலிருந்து கல்லூரி, “முதல்வராக்’’கப்பட்டு விட்டார்!
இந்த நிலையில் தமிழக ஆட்சி போய்க் கொண்டே, பெரியாருக்கு விழா வேறு நடத்திட வேண்டுமா?
பிற்படுத்தப்பட்ட சமூகம் பெரிதும் வஞ்சிக்கப்படுகிறது; தாழ்த்தப்பட்ட சமூகம் சூழ்ச்சிப் பொறியில் சிக்க வைக்கப்படுகிறது. இது நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாக வளர்ந்துகொண்டே போகிறது. இதையெல்லாம் திராவிடர் கழகம் ஒரு போதும் சகிக்காது, சகிக்கவே சகிக்காது! மக்கள் மத்தியில் விளக்கிச் சொல்லி, அதன் விளைவு என்ன என்பதை ஆட்சியாளருக்குப் புரியவைத்துக் காட்டுவோம்.
‘ஹிதோபதேசம்’ செய்யும் பார்ப்பனர் எவரும் அப்போது தங்களுக்கு துணை வரமாட்டார்கள் என்பதையும் ஆட்சியாளர் நினைவில் வைக்க வேண்டும்’’ என்று குறிப்பிட்டிருந்தேன்.
9000 வருமான வரம்பு ஆணை மற்றும் சட்டக்கல்லூரி மாணவர் தேர்வு முறையில் உள்ள பாதிப்பு குறித்து நடத்தப்படும் போராட்டங்களுக்கு இடையே,
தஞ்சையில் நடைபெற்ற நூற்றாண்டு விழாக் குழுவினர் சார்பில் மகளிர் பாலிடெக்னிக்கிற்காக 100 பவுன் வழங்கும் விழா எழுச்சியுடன் நடைபெற்றது. 100 பவுனுக்கு ஈடான ரூ.80 ஆயிரத்தை என்னிடம் வழங்கப் பல்லாயிரக்கணக்கான பொதுமக்களின் பலத்த கரவொலிக்கிடையே மலேசிய தி.க. தலைவர் “திருச்சுடர்’’ கே.ஆர்.இராமசாமி அவர்கள் தலைமையில் தஞ்சை அழகிரி சதுக்கத்தில் (கொண்டிராசபாளையம்) 7.10.1979 அன்று இரவு நேரத்தில் பிரமாண்டமான அளவில் நடைபெற்றது. தனித்தன்மை வாய்ந்த கருஞ்சட்டைப் பாசறை வீடுபோல் பொதுமக்கள் கூட்டம் காட்சி அளித்தது.
கழகப் பொருளாளரும் விழாக்குழுத் தலைவருமாகிய தஞ்சை கா.மா.குப்புசாமி அவர்கள் அனைவரையும் வரவேற்று உரையாற்றினார்.
விழாவில் நான் சிறப்புரையாக பல்வேறு வரலாற்று நிகழ்வுகளை எடுத்துக்கூறினேன். அதில்,
இந்தத் தஞ்சை மாநகரம் வரலாறு காணாத வகையிலே கடும் மழை பெய்த நேரத்திலும்கூட நமது அறிவு ஆசான் தலைவர் தந்தை பெரியார் அவர்களுக்கு சிறப்பான விழாவினை ஒருவார காலம் நடத்தவேண்டிய நிகழ்ச்சிகளை மூன்று நாட்களில் முண்டியடித்துக் கொண்டு, நெருக்கி குடும்பம் குடும்பமாக கருஞ்சட்டைக் குடும்பத்தினர் அமர்ந்து கேட்க மிகப் பெரிய கருத்து விருந்தினை அளித்ததோடு, தமிழர் சமுதாயத்திற்கு தோன்றி இருக்கிற பெரும் அபாயங்களைக் களைய கிளர்ச்சித் திட்டங்-களையும் தெளிவாகக் கடந்த சில தினங்களுக்கு முன் அறிவித்து இருக்கின்றோம். கடுமழை காரணமாகவும், நடிகவேள் ராதா அவர்களின் மறைவு காரணமாகவும், அன்று ஊர்வலம் தள்ளி வைக்கப்பட்டது. இன்றைய தினம் அந்த ஊர்வலத்தை சிறப்பாக நடத்தி இருக்கிறோம்.
வரலாற்றிலே எந்த ஒரு தலைவனுக்கும் இல்லாத அளவுக்கு அவ்வளவு சிறப்பான நிகழ்ச்சிகளையெல்லாம் தஞ்சை மண்ணிலே தொடங்கி இந்தத் தமிழ்நாடு முழுவதிலும் சிறப்புற நடத்தி வருகிறோம்.
அப்படிப்பட்ட தலைவருக்கு நூற்றாண்டு விழா என்று சொல்லப்பட்ட நேரத்திலே அய்யா அவர்கள் இருந்திருப்பார்களே யானால், எந்த அளவுக்கு நமக்கு மகிழ்ச்சி உச்சக் கட்டத்திலே இருந்திருக்கும் என்பதையெல்லாம் எண்ணிப் பார்த்து உணர்ச்சி வயப்படக்கூடிய நிலையிலே நாம் ஒவ்வொருவரும் இருக்கிறோம். அய்யா அவர்கள் இருந்த காலத்தில் எந்தக் கட்டுப்பாட்டோடு, எந்த உணர்வோடு இயக்கம் செயல்பட்டு வந்ததோ, அதில் ஒரு இம்மி அளவுகூடப் பிறழவில்லை.
அய்யா அவர்கள் கொள்கை உருவமாக நம்மோடு வாழ்ந்துகொண்டு இருக்கிறார்கள்.
அய்யா அவர்கள் உயிரோடு இருந்தால் என்ன சிறப்புகள் செய்வோமோ அந்தச் சிறப்பை அய்யா அவர்களின் விழாவிலே செய்ய வேண்டும் என்று எண்ணி தஞ்சை மாவட்டத் தோழர்கள் 100 பவுன் அளிப்பது என்று அன்று முடிவு எடுத்தார்கள். என்னைப் பெரும் சங்கடத்துக்கு ஆளாக்கினார்கள்.
என்னைப் போன்ற எளியோர்களுக் கெல்லாம் எதற்காக இந்தப் பெருமை என்று கேட்ட நேரத்திலே _ நண்பர்கள், அய்யா அவர்களுக்கு அளிக்கப்படுகிற பெருமைதான் என்று உரிமையோடு சொன்னார்கள்.
அய்யா அவர்களுக்கு அளிக்கப்படுகிற பெருமைதான் என்ற உணர்வோடு அந்த அன்பளிப்பு மிக முக்கியமான பணிக்குப் பயன்படுத்தப்பட வேண்டும் என்று கருதினேன். இந்த மாவட்டத்திலே மகளிர்க்கென்று தனியே ஒரு பாலிடெக்னிக் இல்லாதது என்பது ஒரு நீண்டகால குறைபாடாகும்.
அந்த அடிப்படையிலும், அய்யா அவர்கள் எந்தப் பெண்கள் முன்னேற்றத்திற்காக அரும்பாடுபட்டார்களோ, அந்தப் பெண்களின் வளர்ச்சிக்குப் பெரிதும் பயன்படத்தக்க பாலிடெக்னிக்கை நிறுவுவதற்கு இந்தப் பொருளைப் பயன்படுத்தலாம் என்று கருதலானேன்.
குறுகிய காலத்திலே தோழர்களின் அயராத உழைப்பாலே 100 பவுனுக்கு உரிய தொகையாக 80 ஆயிரம் ரூபாயை இங்கு அளித்துள்ளார்கள். 80 ஆயிரம் ரூபாய் என்று சொன்னால், ஒரு பாலிடெக்னிக் தொடங்குவதற்கு, இது வெகுபெரு குறைவானது என்பது. பாலிடெக்னிக் பற்றிய துறையில் சிறந்தவர்-களுக்கு மிகத் தெளிவாகத் தெரியும்.
இன்றைக்கு இது ஒரு சிறு துவக்கம் அவ்வளவுதான். பெரியார் அவர்களுடைய காலத்திலே கல்லூரி என்றால், அன்னையார் அவர்களுடைய காலத்திலே உயர்நிலைப் பள்ளி, அந்த உயர்நிலைப் பள்ளி நம்முடைய காலத்திலே மேலும் வளர வேண்டும், தேவைக்கேற்ப விரிவடைய வேண்டும்.
கல்வி நிலையப் பணிகள் வேகமாக வளரக்கூடிய அளவுக்கு, அன்னை நாகம்மையார் பெயராலே கல்வி நிறுவனங்கள், அன்னை மணியம்மையார் பெயராலே குழந்தைகள் காப்பகங்கள் வளர்ந்து கொண்டு இருக்கின்றன. பெரியார் மணியம்மையார் பெயராலே சென்னையிலே மருத்துவமனை துவங்கப்பட்டு, குறுகிய காலத்திலே ஏறத்தாழ 15 ஆயிரம் பேர்களுக்கு மேலே சிகிச்சை அளிக்கப்பட்டு இருக்கிறது.
எங்களாலே என்னென்ன காரியங்களை உறுதியாக அடக்கமாக செய்து முடிக்க முடியுமோ அந்தப் பணிகளைச் செய்து வருகிறோம்.
நீங்கள் தந்து இருக்கிற இந்த 80 ஆயிரம் _ நீங்கள் தந்து இருக்கிற இந்த 100 பவுன் இருக்கிறதே, அதற்குப் பதில் என்ன? இதை சாதாரண பவுனாகக் கருதவில்லை. கொள்கைத் தங்கத்தை தந்தை பெரியார் அவர்கள் தந்தார்களே, அதை என்றைக்கும் நாம் பெற்று இருக்கிறோம் பெற்று இருக்கிறோம் என்று சொல்லத்தக்கவண்ணம் அதை அடித்தளமாக வைத்துக்கொண்டு, நம் வேகமான பணி தொடர்கிறது என்று காட்டத்தக்கவணண்ணம், ஒருஅஸ்திவாரமாகத் தான் இதை நீங்கள் செய்து இருக்கிறீர்கள். அதை மனமுவந்து, அதற்குரிய தகுதி எனக்கு இல்லாவிட்டாலும் நீங்கள் நம்பிக்கை வைத்து இருக்கிறீர்கள் _ அந்த நம்பிக்கை கொஞ்சங்கூட குறையாமல், அந்த நம்பிக்கை ஒரு எள் மூக்கு அளவு கூட சிதறாமல் அந்த நம்பிக்கையை பாழடிக்காமல் அதற்குரிய தகுதி எனக்கு இல்லாவிட்டாலும், அந்தத் தகுதியை நான் உண்டாக்கிக் கொண்டு உங்களுடைய கனிந்த பேரன்பாலே ஒத்துழைப்-பாலே செய்து முடிப்போம், முடிப்போம் என்பதை இந்த நேரத்திலே தெரிவித்துக் கொள்கிறோம்.
இந்த ஆண்டிலேயே திருச்சியில் இருக்கிற ரீஜினல் இன்ஜினியரிங் கல்லூரியின் முதல்வர் பெருமதிப்பிற்குரிய புரபசர் பி.எஸ்.மணிசுந்தரம் அவர்கள் அரிய தொழில்நுட்ப ஆலோசனை-களைத் தர ஒப்புதல் தந்துள்ளார்கள்.
இடத்தை பார்வையிட நிபுணர் குழுவை அனுப்பி அதற்குரிய 21 ஏக்கர் கொண்ட இடத்தையும் தேர்ந்தெடுத்து புரஜெக்ட் ரிப்போர்ட்டுகளைத் தந்துள்ளார்கள். சிறுக கட்டிப் பெருக வாழ் என்பதிலேதான் எங்களுக்கு நம்பிக்கை; எளிய துவக்கமாக, ஆடம்பரம் இல்லாத துவக்கமாக துவங்கப்-பெற்று, பயனுள்ள பணியாக இருக்கும் என்பது மட்டுமல்ல, விரைவிலேயே தஞ்சையிலே வெறும் மகளிர் பாலிடெக்னிக்காக மட்டுமல்ல; அதுவே பெரும் பல்கலைக்கழகமாக வளரக் கூடிய அளவுக்கு தமிழ்ச் சமுதாயத்தின் பேராதரவு அதற்கு இருக்கும் என்பதிலே எந்தவித அய்யப்பாட்டுக்கும் இடம் கிடையவே கிடையாது.
அய்யா அவர்களைப் பெருமைப்படுத்து வதற்காக நீங்கள் அளித்து இருக்கிற இந்த நூறு பவுனுக்குரிய தொகையை, பெரியார் சுயமரியாதைப் பிரச்சார நிறுவனத்தின் தலைவர் பெருமதிப்புக்குரிய சிவகங்கை சண்முகநாதன் அவர்களிடம் முறைப்படி அளிக்கிறேன் என்று அளித்துவிட்டு, பிற்படுத்தப்பட்டோருக்கு பேரிடியாக வந்த வருமான வரம்பு ஆணையின் பாதிப்பை விளக்கிப் பேசினேன். அப்போது, ஏழைகளுக்காக இந்த உத்தரவு என்கிறார் முதல்வர். ஏழைகளுக்கு செய்யுங்கள் நாங்கள் குறுக்கே நிற்கவில்லை.
ஏழைகளுக்குச் செய்ய வேண்டும் என்பது இந்த அரசாங்கத்தின் ஆசையாக, உண்மையான கவலையாக இருக்குமானால், பிற்படுத்தப்-பட்டோர் இடத்தில் ஏன் கைவைக்க வேண்டும். நன்றாகச் சொன்னால், பசுமாட்டை அடித்து செருப்புத் தானம் கொடுப்பது என்ற பழமொழிதான் தமிழக அரசின் செயலை நினைக்கும்போது நினைவுக்கு வருகிறது.
தலையிலே கூடையை வைத்துத் தூக்கித் திரிகிற பார்ப்பனத்தியைப் பார்க்க முடிகிறதா? வேண்டுமென்றால், ஷுட்டிங்குக்காக நாற்று நடுவதுபோல் காட்டப்படும் பார்ப்பனத்தியைப் பார்த்திருக்கலாம்; நிஜ வாழ்க்கையில் காண முடியாது.
அதே நேரத்திலே, ஒரே ஒரு சீலையைத் துவைத்து இடுப்பிலே ஒரு பக்கத்து முந்தாணையை ஒரு சுற்றுச்சுற்றி, மற்றொரு முந்தாணையை மரத்தின் ஒரு கிளையிலே முடிச்சுப் போட்டு விட்டு, மிகுந்த குளிரிலே வெடவெடவென்று நின்றுகொண்டிருக்கிற நமது தாய்மார்களை ஆயிரக்கணக்கிலே பார்த்துக் கொண்டிருக்கிறோமே ஏன் இந்த தாழ்நிலை எண்ணிப் பார்த்தோமா?
இதைத்தான் தந்தை பெரியார் அவர்கள் கேட்டார்கள். பிறவியிலேயே உழைக்க ஒரு ஜாதி; உழைக்காமல் உண்டு கொழுக்க ஒரு ஜாதி என்ற பிறவிக் கொடுமை உலகத்திலேயே இங்குதான் உண்டு. பிறவியிலேயே உயர்ந்த ஜாதி, பிறவியிலேயே இழிந்த ஜாதி என்ற கொடுமை!
Socially and Educationally என்றால் இதுதான் பிறவியின் காரணமாக நமக்கு இழைக்கப்பட்டக் கொடுமையாகும். ஆனால், நமது முதலமைச்சர் என்ன சொல்லுகிறார்? சமுதாய ஏற்றத்தாழ்வுக்கு பொருளாதாரம்தான் முன்னே நிற்கிறது என்று கூறுகிறார்.
நமது முதலமைச்சர் அவர்களுக்கு அய்யா பெயரையும் அண்ணா பெயரையும் சொல்லத் தெரிந்த அளவுக்கு அவர்களது கொள்கைகள் பற்றித் தெரியாமல் தடுமாறிக் கொண்டு இருக்கிறார்.
இரயில்வே இலாகாவிலே ஒரு இரகசிய சுற்றறிக்கை விட்டு இருக்கிறார்கள்.
அகில இந்தியப் பிற்படுத்தப்பட்டோர் நலக் கமிஷன் உருவாகி, அதனுடைய நடவடிக்கை-யாக இதை இரயில்வே இலாகாவில் கேட்டு இருக்கிறார்கள். பிற்படுத்தப்பட்டவர்கள் யார் யார் என்று சொல்லும்போது அந்தக் கமிஷன் அதற்கான விளக்கத்தையும் தந்துள்ளது.
“The Commission have laid down the following criteria to determine socially and educationally backward classes.
An Employee will be deemed to be “Socially Backward” If he does not belong to any of the twice born, Dwija or Kshatriya and Vaisia” என்று சொல்லி இருக்கிறார்கள்.
எவ்வளவு தெளிவாகச் சொல்லியிருக்-கிறார்கள் Twice Born என்றால் யார்? பார்ப்பான் பூணூல் போடுவதற்கு முன் ஒரு பிறப்பு, பூணூல் போட்டதற்குப் பின் இன்னொரு பிறப்பு. துவிஜாதி என்ற பார்ப்பானை சொல்லும் ‘அய்தீகம்’ இதுதான்.
இந்தப் பார்ப்பானோ, சத்திரியனோ, வைசியனோ அல்லாதவன்தான் பிற்படுத்தப்-பட்டவன் என்று அகில இந்திய பிற்படுத்தப்-பட்டோர் நலக்கமிஷன் நெறிமுறைகளை திட்டவட்டமாகத் தெளிவாகக் கூறி இருக்கிறது.
Socially Backward என்பதற்கு இந்த விளக்கம். அடுத்து Educationally Backward என்பதற்கு என்ன நெறிமுறைகளைத் தந்திருக்கிறது?
He will be deemed to be ‘Educationally backward’ neither his father or his grandfather had not studied beyond primary level.
அவருடைய தந்தையோ அவருடைய பாட்டனாரோ யார் ஆரம்பப் பள்ளிக்கு மேல் படிக்காமல் இருக்கிறார்களோ அந்தக் குடும்பத்தைச் சேர்ந்தவர்கள்தான் Educationally Backward.
மத்திய அரசாங்கத்தால் நியமிக்கப்பட்ட கமிஷன், இந்தியாவின் அரசியல் சட்டத்தில் காணப்பட்டுள்ள Backward Classes என்பதற்கு இவ்வளவு அழகாக விளக்கத்தைச் சொல்லி இருக்கிறது. ஆனால், பெரியாருக்கு விழாக் கொண்டாடும் இந்தத் தமிழ்நாடு அரசாங்கம் பிற்படுத்தப்பட்டோர் என்பதற்கு ஆண்டு வருமானம் ஒன்பதாயிரம் ஒன்பதாயிரம் என்று கீறல் விழுந்த ‘பிளேட்’ மாதிரி பாடிக்கொண்டு இருக்கலாமா?
(நினைவுகள் நீளும்)