வறுமையிலும் சாதனை படைக்கும் பெருமைமிகு பெண்!

நவம்பர் 01-15

 

 

 

கோயம்புத்தூர் மீன் கடைக்காரர் மகள் பிளஸ் டூ மாணவி சம்யஸ்ரீ தேசிய அளவில் 7 தங்கப் பதக்கங்கள், 3 வெள்ளிப் பதக்கங்கள், 4 வெண்கலப் பதக்கங்கள் பெற்றுள்ளார்.

இவை மட்டுமல்லாமல் மாநில அளவில் நடந்த போட்டிகளில், 16 வயதிற்குட்-பட்டவர்கள் பிரிவில் 800 மீட்டர் தூரத்தை 2 நிமிடம் 16 வினாடிகளில் கடந்தும், 600 மீட்டர் தூரத்தை ஒரு நிமிடம் 40 வினாடிகளில் கடந்தும், இரண்டு “ரெக்கார்டு பிரேக்கும்’’ வைத்துள்ளார். அதோடு இந்திய தரவரிசைப் பட்டியலில் இளையோர் பிரிவில் 2ஆவது இடம்பிடித்து தமிழகத்திற்குப் பெருமை சேர்த்துள்ள சம்யஸ்ரீ, விளையாட்டில் மட்டுமல்ல, படிப்பிலும் திறமையானவர். கோவை சி.எம்.எஸ். பள்ளியில் படித்துவரும் சம்யஸ்ரீ 10ஆம் வகுப்பு பொதுத் தேர்வில் 420 மதிப்பெண்கள் எடுத்ததோடு, அறிவியல் பாடத்தில் 100க்கு 100 மதிப்பெண்கள் பெற்றுள்ளார்.

இவர் தன்னைப் பற்றிக் கூறுகையில், “நான் ஆறாவது படிக்கும்போது, முதலில் மாவட்ட அளவிலான ஓட்டப்பந்தயத்தில் கலந்துக்-கிட்டேன். ஆனால், 100 மீட்டர், 200 மீட்டர் ஓட்டப் பந்தயம், லாங் ஜம்ப் எல்லாவற்றிலும் தோற்றுவிட்டேன். முதல் போட்டியிலேயே தோற்றுப் போனதும் என் மேல் அதிகச் சுமையை ஏற்றுகிறோமோ என்று நினைத்த அப்பா, ‘உன்னால் முடியலைன்னா வந்துடு செல்லம், வேணாம்’னு சொன்னாங்க. ஆனா, நான் அடம்பிடிச்சு 300 மீட்டர் ஓட்டப்-பந்தயத்தில் கலந்துகொண்டு சில்வர் மெடல் வாங்கினேன். அப்பா உற்சாகமாகிவிட்டார்.

அதன்பிறகு தினமும் அதிகாலையில் 5 மணிக்கும், மாலையில் 4 மணிக்கும் நேரு ஸ்டேடியத்துக்கு கூட்டிக் கிட்டுப் போயி, ஒரு நாளுக்கு 5 மணி நேரம் பயிற்சி கொடுத்தார். இனிமே, என்னோட பயணம் தடகளம்தான்னு முடிவு பண்ணினேன். தடகளப் பயிற்சியாளர் சீனிவாசன் சார்கிட்ட சேர்த்துவிட்டார் அப்பா.

அதன்பின்னர் நடைபெற்ற மாநில அளவிலான போட்டியில் சிறப்பா விளையாடி கோல்டு மெடல் வாங்கினேன். அடுத்து, தமிழக தடகள அணி சார்பாக ஹரித்துவாரில் நடந்த தேசிய அளவிலான போட்டியில் வாய்ப்பு கிடைத்தது. அதில் வெண்கலம் வென்றேன். அதே வருடத்தில், கொச்சினில் நடந்த தேசிய அளவிலான இரண்டாவது போட்டியில் 600 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் தங்கப்பதக்கம் வென்றேன்.’’ “பெங்களூருவில் நடைபெற்ற 1,000 மீட்டர் தடகளப் போட்டியில் வென்றதுதான்  மறக்க முடியாத அனுபவம்.’’

“மூணு வருடத்துக்கு முன்னால ‘தடகளப் போட்டியில் கலந்துகொள்பவர்களுக்கு பயிற்சி கொடுக்கிறார் பி.டி.உஷா’ என்ற தகவலைப் பேப்பர்ல படிச்சுட்டு அவங்ககிட்ட டிரெயினிங் எடுக்கப் போயிருந்தேன். 20 நாள் டிரெயினிங்குக்குப் பிறகு கடைசிக்கட்ட தேர்வுல என்னை ரிஜக்ட் பண்ணிட்டாங்க. அது என்னோட ஆழ்மனசுல ஆறாத தழும்பை உண்டாக்கிடுச்சு. ஆனால், பெங்களூரு போனால் தடகளப் போட்டியில் என்னோட போட்டிபோட வந்திருந்தது, என்னை ரிஜெக்ட் செய்தபிறகு, பி.டி.உஷா மேடத்திடம் டிரெயினிங் எடுத்தவர்கள். அவர்களை வென்று அந்தப் போட்டியில் தங்கப் பதக்கம் பெற்றேன்’’ என்னும்போது ஏகலைவனை நினைவூட்டினார்.

‘தடகள விளையாட்டுல பெண்கள் சாதிக் கணும்னு நினைச்சா, கண்டிப்பா பொறுமை ரொம்ப அவசியம். அதேபோல ஒருமுறை தோற்றாலும் அடுத்தமுறை வெற்றிபெறுவோம் என்ற நம்பிக்கையுடன் இருந்தால்தான் சாதிக்க முடியும்.

எங்கப்பா தனக்குக் கிடைக்கிற குறைந்த வருவாயில், நான் போட்டிருக்கிற ஷூவுல இருந்து ஸ்போர்ட்ஸ் ட்ரஸ் வரைக்கும் தரமானதா பார்த்துப் பார்த்து வாங்கிக் கொடுப்பார். அரசு எங்களுக்குத் தேவையான உதவிகளைச் செய்தால் என்னால இன்னும் சிறப்பா விளையாடி நாட்டுக்குப் பெருமை தேடித்தர முடியும்’’ என்று நம்பிக்கையுடன் பேசினார்.

 

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *