கொசுவை விரட்ட இலைதழைகளைக் கொளுத்துவது போன்ற நம் முன்னோர்கள் வழிமுறைகளிலிருந்து மாறுபட்டு, கொசுவை விரட்ட ஏகப்பட்ட கொசு விரட்டிகள் வந்தாலும், அவற்றில் பக்க விளைவுகள் உண்டு. அதிலும், புகையும் கொசுவிரட்டிகள், புகை வராத திரவ கொசு விரட்டிகள் என நிறைய வகைகள்.
இப்போது தொலைக்காட்சிப் பெட்டிகளில் கொசுவை விரட்டும் ஏற்பாட்டைச் செய்திருக்கிறது எல்.ஜி.நிறுவனம்.
அது தயாரித்திருக்கும் தொலைக்காட்சிப் பெட்டியில் இருந்து அல்ட்ரா சோனிக் ஒலி அலைகள் வருகின்றன. இந்த அலைகள் மனிதர்களின் காதுகளுக்குக் கேட்காது, கொசுக்களோ இந்த அல்ட்ரா சோனிக் ஒலியலைகளைக் கேட்டு தப்பித்தோம். பிழைத்தோம் என்று ஓடிவிடும்.
இந்தத் தொழில் நுட்பத்தால் என்ன பயன்? என்றால், பிற கொசு விரட்டிகளில் வருவதைப் போல இதில் இருந்து எந்த வாசனையும் வருவதில்லை. அதனால் அதைச் சுவாசிப்பதால் வரக்கூடிய நோய்கள் மனிதர்களுக்கு வர வாய்ப்பில்லை. அதுபோல எந்தவிதமான வேதிப்பொருட்களும் இந்த டிவி கொசு விரட்டியில் இல்லை.
கொசுவால் வரக்கூடிய நோய்களுக்குப் பயந்து கொசுவிரட்டியைப் பயன்படுத்தி, ஆஸ்துமா, நுரையீரல் பாதிப்பு, மயக்கமடைதல் போன்ற பல பாதிப்புகளுக்கு உள்ளாகாமல் தப்பிக்க இந்த தொலைக்காட்சிப் பெட்டி கொசுவிரட்டி பயன்படும்.