ஆசிரியர் பதில்கள்

அக்டோபர் 16-31

‘ஈயம் போன தேசியம்’

கே :    முதல்வரின் உடல்நிலையை ‘மூடு மந்திரமாக’ வைத்திருப்பது திரைமறைவு அரசியல் சதியைக் காட்டுவதாகக் கொள்ளலாமா?
    – தி.பொ.சண்முகம், திட்டக்குடி
ப :    பொதுவாக தலைவர்களின் உடல்-நிலைபற்றி அறிய மக்கள், தோழர்கள், ஆதரவாளர்கள் ஆர்வம் கொள்வது இயல்பு. முதல்வர் உடல்நிலை என்கிற-போது அதில் அதிக ஆர்வம் தவிர்க்க முடியாதது. அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் இப்போது வரத் தொடங்கியுள்ளது வரவேற்கத்தக்கது!

 

கே :    இஸ்லாமியர்களின் ‘தலாக்’ பற்றித் தங்கள் கருத்து என்ன?
    – வெற்றிச்செல்வி, தஞ்சை
ப :    மணவிலக்குக்கு சிறப்பான அம்முறை _ தலாக் _ பற்றி பல்வேறு கருத்துகள் நிலவுகின்றன.  பிடிக்காதவர்கள் பிரிவதுதான் சரியானது.

 

கே :    இரயில்வே பட்ஜெட் தனியே வெளியிடுவதுதானே நல்லது? பா.ஜ.க. அரசின் ஒரே பட்ஜெட் முடிவு சரியா?
    – நாத்திகர் சா.கோ., பெரம்பலூர்
ப :    ரயில்வேயைத் தனியார் மயமாக்கும் அடிப்படைக்கான ஆரம்பப் பணி இது!

 

கே :    காவிரிச் சிக்கலில் உச்சநீதிமன்றத் தீர்ப்பை உதாசீனப்படுத்தும் கர்நாடகா, மேலாண்மை வாரியம் சொன்னால் கேட்பார்களா? இதில் குற்றவாளி, செயல்படுத்தாத மத்திய அரசுதானே?
    – சீதாபதி, சென்னை-45
ப :    மேலாண்மை வாரியம் கண்காணிப்பில்-தான் நீர் கட்டுப்பாடே இருக்கும். சிக்கல் வராது. அணை நீர் நிலவரம் அவர்கள் கட்டுப்பாட்டிற்குள்தான் வரும்.

 

கே :    கர்நாடகாவில் மத்திய அமைச்சர்கள் மாநில அமைச்சர்கள் போல் நடந்து கொள்வது தேசியம் பேசுவதெல்லாம் ஏமாற்று என்றாகாதா?
    – நெய்வேலி தியாகராசன், கொரநாட்டுக்கருப்பூர்
ப :    தேசியத்தின் ‘ஈயம்’ போய்விட்டதே! காவிரி நதிநீர் பங்கீடு விவகாரத்தில்.

 

கே :    சங்பரிவாரங்களின் கோட்சே சிலை திறப்பு குறித்து மோடியின் மவுனம் எதைக் காட்டுகிறது?
    – கெ.நாராயணசாமி, சென்னை-72
ப :    மவுனம் சம்மதத்திற்கு அறிகுறி என்பது பழைய பழமொழி ஆயிற்றே!

 

கே :    முதல்வர் செயல்படமுடியாத நிலையில், மத்திய அரசின் கொல்லைப்புற நுழைவைத் தடுக்க உடனடியாக செய்ய வேண்டியது என்ன?
    – கி.மாசிலாமணி, காஞ்சி
ப :    அது _ நுழைவு அவ்வளவு எளிதல்ல. விளைவு எதிர் விளைவாகுமே!

 

கே :    உயர்நீதிமன்றத்தில் 3%க்குப் பதிலாக 30% இடங்களை பார்ப்பன நீதிபதிகள் பெறும் போக்கு எதனால் வருகிறது? இதில் வழக்குரைஞர்கள் தீவிரமாகப் போராடாதது ஏன்?
    – இல.சங்கத்தமிழன், மதுராந்தகம்
ப :    ஏற்கனவே வழக்குரைஞர்கள் போராடிக் களைத்துள்ளனர்!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *