சிறந்த நூலிலிருந்து சில பகுதிகள்

அக்டோபர் 16-31

நூல்: சமயம்
ஆசிரியர்: தொ.பரமசிவன் – சுந்தர் காளி
வெளியீடு: தென்திசைப் பதிப்பகம்,
52, தென்மேற்கு போக் சாலை, தியாகராய நகர், சென்னை – 600 017.
தொலைபேசி: 044-2433 8169
விலை: ரூ.70/-   பக்கங்கள்: 128

(பல அரிய நூல்களின் சீரிய கருத்தாக்கங்-களை வெளியிட்டு நம் வாசகர்களுக்கு அந்நூலின் சிறப்பினை உணர்த்தி, படித்துப் பயன்பெறத் தூண்டுகிறோம்.

அவ்வரிசையில் இவ்விதழில், தமிழ்நாட்டின் தலைசிறந்த தமிழாய்ந்த தமிழ்அறிஞர் போற்றுதலுக்குரிய நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக மேனாள் பேராசிரியர், வாழும் தலைமுறையின் ஒப்பற்ற சிந்தனையாளர் பேராசிரியர் தொ.பரமசிவன் அவர்களின் நூலான ‘சமயம்’ என்பதிலிருந்து இப்பகுதியைத் தருகிறோம்.

மற்றொரு பேராசிரியரின் கேள்விக்கு விடையாக உள்ள நூல் முழுவதும் ஆராய்ச்சிக் கொள்கலம் ஆகும்.
ஒரு பகுதி இதோ!

தமிழ்நாட்டில் (ஆரிய) வைதீகத்தின் நுழைவு, தாக்கங்கள்

சுந்தர் காளி: வைதீகத்தின் நுழைவு, அதன் தாக்கங்கள் பற்றிய அறிமுகம் ஒன்றைத் தாருங்கள்.

தொ.ப.: வைதீகம் என்னும் சொல் வேதம் என்பதிலிருந்து பிறந்தது. வேதம் என்ற சொல்லின் வேர் ‘வித்’ என்பதாகும். வித்யை, வித்யாசாலை என்பவையெல்லாம் அதிலிருந்து பிறந்தவையாகும். கற்பதற்கு உரியது என்பது அதன் பொருள். வேதத்தை நிறுவனமயமாக்கிய பிறகுதான் தமிழ்நாட்டிற்குள் பார்ப்பனர்கள் வந்தார்கள். பழங்கால வழிபாட்டுப் பாடல்கள், இசைப் பாடல்களின் தொகுப்புதான் வேதம், கி.மு.ஏழாம் நூற்றாண்டு அளவிலேயே அவை தொகுக்கப்பட்டு ஒரு எல்லைக்குள் வந்துவிட்டன.

இருக்கு வேதத்தில் உள்ளவை தெய்வங்கள் பலவற்றை வணங்கும் பாடல்கள். சாம வேதத்தில் உள்ளவை இசைப் பாடல்கள். நான்கு வேதம், நான்கு வேதம் என்கிறார்களே அதிலும் ஒரு சிக்கல் இருக்கிறது. பழைய உரையாசிரியர்கள் தலவகார வேதம், பவிழியம் (பவிஷ்யம்) முதலியவற்றை நான்கு வேதங்கள் என்னும் பகுப்பில் அடக்குகிறார்கள். அதில் யஜுரும் அதர்வணமும் கிடையாது. வேறு சிலர் மூன்று வேதங்களை மட்டுமே சொல்லுவர். நெல்லை மாவட்டம் தென்திருப்பேரையில் ‘தலவகார பிராமணர்கள்’ என்னும் பார்ப்பனர்கள் இருக்கின்றார்கள். ‘எங்களிடம் தலவகாரவேதம் என்னும் வேதம் இருந்தது. இப்போது தொலைந்துவிட்டது’ என்கிறார்கள். எனவே, இன்னும் நான்கு வேதங்கள் எவை என்பதில் சிக்கல் உண்டு. ஆகையால் வேதங்களை நிறுவனப்படுத்திய பின்தான் பார்ப்பனர்கள் தமிழ்நாட்டிற்குள் வந்தார்கள். இன்று வேதங்கள் பார்ப்பனர்களின் சொந்தச் சொத்தாக ஆக்கப்பட்டுவிட்டன. வேதம் என்னும் சொல்லுக்கு நேர்தமிழ்ச் சொல்லாக ‘மறை’ என்னும் சொல்லைப் பயன்படுத்து-கின்றார்கள். கிறித்துவ வேதத்தையும் திருமறை என்கிறார்கள்; இசுலாமிய வேதத்தையும் திருமறை என்கிறார்கள். ‘மறை’ என்ற சொல் எவ்வாறு புனித நூலுக்கு ஏற்பட்டது? மறை என்றால் மறைக்கப்பட்டது என்பது பொருள். பார்ப்பனர்கள் அல்லாத மற்றவர்களின் காதுகளுக்குக் கேட்காதபடி, எழுத்து வடிவில் கண்களுக்குப் படாதபடி, மறைத்து ஓத வேண்டும் என்பதால் அதற்கு ‘மறை’ என்ற பெயர் ஏற்பட்டது.

பார்ப்பனர்களுக்கு ‘மறையவர்’ என்பது பெயர். பார்ப்பனர்கள் வேதத்தையும் மற்றவர்கள் கண்ணிலிருந்து மறைத்தார்கள்; தாங்கள் உண்ணுகின்ற சோற்றையும் மற்றவர் கண்ணிலிருந்து மறைப்பார்கள். எனவே மறைப்பதற்கு உரியது வேதம். ஆனால், பைபிளோ, குர்_ஆனோ மறைப்பதற்கு உரியதன்று. எனவே திருமறை என்பதைவிட ‘திருமுறை’ என்று அவைகளை அழைப்பதே பொருந்தும். மறையோர், பார்ப்பான் என்ற சொல் வழக்குகள்தான் சங்க இலக்கியத்தில் பயின்று வருகின்றன. கையைத் தூக்கி ஆசீர்வாதம் செய்யும் வழக்கத்தைச் சங்க இலக்கியத்தில் பிராமணர்களிடம் மட்டும்தான் பார்க்கின்றோம். ஏனென்றால், வேள்வி செய்து செய்து அவர்களின் கைகள் புனிதமானவையாக மாறிவிட்டனவாம். “நான்மறை முனிவர் ஏந்துகை எதிரே’’ என்று பார்ப்பனன் கையைத் தூக்கி ஆசீர்வதிக்கும்போது அரசனின் சென்னி தாழ்கின்றது. எனவே இந்த அதிகாரத்-தோடுதான் தமிழ்நாட்டிற்குள் வருகிறார்கள். அவர்கள் பாடுவதை மறைப்பதற்கு அவர்-களுக்கு அதிகாரம் இருக்கிறது. அது எதுவரை-யென்றால் அரசன் வரை மறைப்பதற்கு அதிகாரம் இருக்கிறது.

வேதங்கள் தருகின்ற அதிகாரம்தான் பின்னால், கோயிலைக் கட்டிய அரசன் கோயில் கருவறைக்குள் நுழையத் தடை செய்கின்றது. வேதத்தை முன்னிறுத்திப் பக்தி இயக்கம் தொடங்கப்பட்டது. பக்தி இயக்கத்தினுள் வேதம், கடவுள் என்ற இரு குரல்களைக் கேட்டுக்கொண்டே வரலாம். இதில் எது பெரியது என்றால் கடவுளே வேதமாக இருக்கிறான்.

“விண்ணாளும் தேவருக்கும் மேலான வேதியர் சிவனே’’ என்பார் அப்பர். ‘வேதம் வேறு; கடவுள் வேறு’ என்பார் சம்பந்தர். வேதங்கள் எல்லாம் இறைவனைத் தொழுவதால் இறைவனே வேதவடிவமாக இருக்கிறான்; வேதம் தனியாக இல்லை என்பது அப்பர் கருத்து. சம்பந்தர் அப்படிக் கூறமாட்டார். ‘வேதமும் வேண்டும்; வேள்வியும் வேண்டும்’ என்பார் சம்பந்தர். சிவனே வேதமும் வேள்வியுமாக இருக்கின்றான் என்று அப்பர் பாடுவார். “வேத வேள்வியை நிந்தனை செய்துழல் ஆதமிலி அமண்தேரர்’’ என்று பாடுவார் சம்பந்தர். “ஒருவன் கடவுள் இல்லை-யென்று கூறிக்கொண்டு நாத்திகனாகக் கூட இருக்கலாம்; ஆனால், அவன் வேதத்தை ஏற்றுக்கொள்ள வேண்டும்’’ என்று மறைந்த சங்கராச்சாரியார் கூறுவார். கடவுள் நிராகரிப்பு இருக்கலாம்; ஆனால், வேத நிராகரிப்புக் கூடாது என்பது இதன் கருத்து. ஞானசம்பந்தர் கூறுவதும் இதுதான். அவருக்குப் பெரிய ஆதர்சம் வேதம்தான். ‘ஸ்ருதி’ என்பதற்குச் சொல்லக்கூடிய என்பது பொருள். வேதத்தை நாம் சொல்ல முடியாது. பார்ப்பனர்கள் மட்டுமே சொல்ல முடியும். வேதம் என்பது விவாதத்திற்கு அப்பாற்பட்டது; கேள்விக்கு அப்பாற்பட்டது. சாதாரண வழக்கில் மக்கள், நீ சொல்வது என்ன வேதமா என்பார்கள். வேதம் என்பது கேள்விக்கு அப்பாற்பட்டது என்பதுதானே இதன் பொருள்? அதை அனைவரும் பணிந்து ஏற்றுக்கொள்ள வேண்டும். இவ்வாறான ஒரு அதிகாரத்தோடு உள்ளே நுழைந்தார்கள். கோயிலின் கருவறைக்குள் வேதம் கிடையாது. ஏனெனில், வேதக் கடவுள்கள் யாரும் கோயிலுக்குள் வரவில்லை. இந்திரன், வருணன், அக்னி, மருத்து ஆகிய வேதக் கடவுள்கள் எல்லோரும் செத்துப் போய்விட்டார்கள். வேறு கடவுள்கள் கோயிலுக்குள் வந்தபின் வேதம் பாடவேண்டு-மென்று கோயிலுக்குள் பார்ப்பனர்கள் வந்துவிட்டார்கள். ஆனால், இதுவரை கருவறைக்குள் வேதம் ஓத முடியாது; இடை கழியில் நின்றுகொண்டுதான் ஓத வேண்டும். ஆனால், தேவாரத்தை இடைகழியில் நின்றுகூடப் பாடமுடியாது. அதற்கும் தள்ளிப் பக்தர்கள் நின்று வணங்கும் இடத்தில்தான் பாடமுடியும்.

சுந்தர் காளி: கருவறைக்குள் நுழையத் தகுதி பெற்றவர்கள் சிவப் பிராமணர்கள் மட்டும் தானே?

தொ.ப.: ஆமாம். பிராமணர்களுக்குத் தாய்மொழியாகத் தமிழை ஏற்றுக் கொள்வதற்கு மனம் இல்லை என்பது அனைவரும் அறிந்ததே. ஆனால், அவர்களுக்குத் தமிழ் தவிர வேறு மொழி எதுவும் தெரியாது என்பதும் நமக்குத் தெரியும். அவர்களின் வீட்டு மொழி தமிழ்தான். அதனால்தான் பெரியார், தமிழன் என்றால் தமிழ்மொழி பேசுகின்ற பார்ப்பனர்கள் உள்ளிட்ட எல்லோரும் வந்து விடுவார்கள்; அதனால்தான் பார்ப்பனர் அல்லாதோர் என்ற அடையாளத்தை உருவாக்கினேன் என்கிறார்.

பல்லவ அரசின் தொடக்க காலத்தில் நிறையப் பார்ப்பனர்கள் தமிழகத்திற்கு வந்தார்கள். ஏனென்றால், குறைந்தபட்ச வேதம் படித்தவர்களுக்குக்கூட நிலங்களைத் தானமாகத் தந்தார்கள். வேதப்படிப்பில் ‘க்ரமம்’ வரைக்குப் படித்தவர்களுக்குக்கூட நிலம் தந்தார்கள். அதுதான் ‘கிராமம்’ ஆயிற்று. அவ்வாறு வந்தவர்கள் தமிழ்நாட்டில் பெண் எடுத்துத் திருமணம் செய்துகொண்டார்கள். இதை நான் மட்டும் சொல்லவில்லை; மீனாட்சி, என்.சுப்பிரமணியம் முதலிய பிராமண ஆய்வாளர்களே எழுதியுள்ளார்கள். அவர்கள் தமிழ்ப் பெண்களைத் திருமணம் செய்து கொண்டதால் அவர்களின் பிள்ளைகள் தந்தை மொழியை மறந்து இயல்பாகவே தாய்-மொழியான தமிழைப் பற்றிக் கொண்டார்கள். ஆனால், அவர்களின் தந்தை மொழி சம்ஸ்கிருதம் என்பதை மறந்துவிடவில்லை. இயல்பாகத் தாயின் மொழிதான் குழந்தை-களுக்கு வரும். அதனால்தான் ‘தாய்மொழி’ என அழைக்கின்றோம். இங்கு வந்த பார்ப்பனர்களின் தாய்மொழியான சம்ஸ்கிருதம் செத்துப்போய் விட்டது. இன்னும் அவர்களின் அடிமனதில் ‘தமிழ்’ தங்கள் மொழி அன்று என்ற உணர்வு இருக்கிறது. இந்தப் பார்ப்பனர்கள் தமிழ்-நாட்டில் பெண் கொண்டவர்கள். வந்தேறி இனம் ஒன்று உலகின் இன்னொரு பக்கத்தில் குடியேறி வேறொரு சமூகத்திடம் பெண்-கொண்ட வரலாறு உலகில் உண்டு. மாப்பிள்ளை முஸ்லீம்கள், சிரியன் கிறித்து-வர்கள் கேரளாவில் உண்டு. இவர்கள் அயல்நாடுகளிலிருந்து வந்து மலையாளப் பெண்களை மணந்துகொண்டவர்கள். மாப்பிள்ளை முஸ்லீம்கள் என்றால் மாப்பிள்ளை-களாக வந்தவர்கள் என்பது பொருள். அதுபோலத் தமிழ்நாட்டில் கீழக்கரை இசுலாமியர்கள். இவர்கள் அரபு நாட்டிலிருந்து வந்து தமிழகத்தில் இனக் கலப்புச் செய்தவர்கள். கீழக்கரை இசுலாமியர் சாமந்தப் பண்டசாலி-களாகத் தமிழகத்திற்கு வந்தவர்கள். இங்கேயே தங்கித் தமிழகத்தில் பெண் எடுத்தார்கள். பார்ப்பனர்கள் தங்கள் பெண்களுக்குக்கூட இருபதாம் நூற்றாண்டின் தொடக்கம்வரை சம்ஸ்கிருதம் கற்றுத்தரவில்லை. சென்னைப் பல்கலைக்கழகத்தில் சம்ஸ்கிருதம் வந்தபோது-கூடப் பெண்களுக்குக் கற்றுத்தர மறுத்து-விட்டார்கள். இதற்கு ஆதாரங்கள் இருக்கின்றன. பெண் சம்ஸ்கிருதம் கற்கத் தகுதியற்றவள் என்பது அவர்கள் வாதம். ‘சம்ஸ்கிருதத்தைப் பெண்ணுக்கும் சொல்ல முடியாது; பேதைக்கும் செல்ல முடியாது’ எனப் பார்ப்பனர்கள் அப்போது எழுதினார்கள். அதுபோலக் கீழக்கரை முஸ்லீம்களும் அரபு-மொழியை இழந்துவிட்டார்கள். அவர்களுக்குத் தமிழ்தான் தாய்மொழி. எனவே, வந்தேறிகள் தங்கள் மொழியை இழந்து தங்கள் குழந்தை-களின் மொழியைத் தாய்மொழியாக ஏற்றுக்கொள்வது என்பது உலக இயல்பு. பார்ப்பனர்கள் தமிழகத்தில் வந்திறங்கிப் பெண் கொண்டவர்கள். அதனால்தான் வடநாட்டுப் பார்ப்பனர்களுக்கும் தென்னாட்டுப் பார்ப்பனர்களுக்கும் குறிப்பிடத்தகுந்த வேறுபாடு உண்டு. தமிழ்நாட்டுப் பார்ப்பனர்-கள் நம்மைப்போல முறைப்பெண், முறை மாப்பிள்ளை உறவுடையவர்கள். வடநாட்டுப் பார்ப்பனர்களிடம் இம்முறை கிடையாது.

சுந்தர் காளி: சிவப்பிராமணர் என்று கூறப்படுவோர் மற்ற பார்ப்பனர்களிட மிருந்து எவ்வாறு வேறுபடுகின்றனர்?

தொ.ப.: பார்ப்பனர்கள் என்போரே கலப்புச் ஜாதியினர் என்னும்போது சிவப் பிராமணர்-களும் வைணவப் பார்ப்பனர்களும் கலப்பு ஜாதிதான். இதுபற்றி விரிவான கள ஆய்வை மேற்கொள்ள வேண்டும்.

சுந்தர் காளி: ஆனால், சிவப் பிராமணர்களுக்கு மட்டும் கோயில் பூசைகளில் முன்னுரிமை இருக்கிறதே?
தொ.ப.: முன்னுரிமை என்பது பாரம்பரியம் சம்பந்தப்பட்ட விஷயம், தொடக்கக் காலத்தில் அவர்கள் சம்ஸ்கிருத அர்ச்சனையை ஏற்றுக்கொண்டு கோயிலின் கருவறைக்கு உள்ளே போனவர்கள். பின்னர் தனியான ஒரு திருமண உட்குழுவாக ஆகிவிட்டார்கள். கோயிலின் இடைகழியில் நின்று வேதம் ஓதுகிற பிராமணர்கள் ஸ்மார்த்தர்கள். இவர்களும் கோயிலில் வேலை செய்வார்கள்; சிவப் பிராமணர்களும் கோயிலில் வேலை செய்வார்கள்; ஆனால் இருவரும் திருமண உறவு வைத்துக்கொள்ள மாட்டார்கள். இவர்கள் வேறு; அவர்கள் வேறு, இதேதான் பெருமாள் கோயிலிலும்.
சுந்தர் காளி: சிவப்பிராமணர்கள் என்று கூறக்கூடிய ஆதிசைவர்கள் தமிழ்நாட்டின் ஆதிக்குடிகளுடன் கலந்தவர்களா? அதனால்தான் கோயிலில் முன்னுரிமை அவர்களுக்குக் கிடைத்ததா?
தொ.ப.: இருந்திருக்கலாம்; அல்லது ஸ்மார்த்தர்கள் வேதமொழியை விட்டுவிட்டுத் தமிழில் அர்ச்சனை செய்ய மறுத்திருக்கலாம்.

சுந்தர் காளி: தமிழ் மக்களின் பூர்வசமய வாழ்க்கை எவ்வாறு இருந்தது? சிவன்தான் தமிழர்களின் கடவுள்,

திருமால்தான் தமிழர்களின் கடவுள் என்றெல்லாம் கூறிய காலங்கள் இருந்தன. சமீபத்தில் ஆசீவகம் தான் தமிழர்களின் பூர்வீக சமயம்என்னும் குரல்களைக் கேட்கின்றோம். மதுரைக் காஞ்சியில் சமணப்பள்ளி, பௌத்தப் பள்ளி, அந்தணர் பள்ளி அனைத்தும் அருகருகே இருக்கின்றன. அதே நேரத்தில் அதற்கும் முற்பட்டதாக வந்த நம்பிக்கைகள், வழிபாட்டு முறைகள், தெய்வங்கள் முதலியனவும் சங்க இலக்கியத்தில் இருக்கின்றன.

சங்ககால சமயத்தைப் புரிந்துகொள்வது என்பது எதற்காக? நமக்கு இன்றைக்குள்ள தேவைக்காகத்தான் வரலாற்றைப் பார்க்கின்றோம். இன்றைக்குள்ள தேவைக் காகத் தமிழர்களின் பூர்வீக சமயத்தை எவ்வாறு புரிந்துகொள்வது? அதற்கான பழைய வழிமுறைகளிலிருந்து மாறுபட்ட புதிய வழிமுறைகள் என்ன?

தொ.ப.: இரண்டு விஷயங்கள், ஒரு விஷயத்தை நீங்கள் யூகம் பண்ணிக் கொள்கிறீர்கள். சங்ககாலச் சமுதாயம் என்பது ஒரு காலத்திய சமுதாயம் அன்று. அதில் பல்வேறு கால அடுக்குகள் உள்ளன. இதில் பிற்பட்டதும் இருக்கிறது. முற்பட்டதும் இருக்கிறது. “வழிபடு தெய்வம் நிற்புறங் காப்ப’’ என்பது தொல்காப்பியம். நீ கும்பிடுகின்ற சாமி எது? எதுவாகவும் இருக்கலாம். இந்த இடத்திலேயே தெய்வங்கள் பல என்ற கருத்தோட்டம் வந்துவிடுகிறது. நிற்புறங் காப்ப _ உன் பின்னால் வந்து அத்தெய்வம் காப்பற்றி விடும் என்பது பொருள்.

இவை போன்றவற்றைச் ‘சடங்கு மதம்’ என்று வைத்துக் கொள்ளலாம். மேற்கண்ட சடங்கு மதங்களிலே தெய்வங்கள் பின்னால் வந்துதான் காப்பாற்றும். ஆனால், பௌராணிக மரபு, சைவ, வைணவ மதங்களிலே தெய்வங்கள் முன்னால் வந்து நின்றுதான் வரம்கொடுக்கும். காப்புக்கு உரியதுதான் தெய்வம் என்பது பழைய நம்பிக்கை. வரம் கொடுப்பதுதான் தெய்வம் என்பது பிற்காலச் சமய நம்பிக்கை. சங்க காலத்தில் கிடையாது. இன்றைக்கும் சுடலைமாடன், காத்தவராயன் கதைகளைக் கேட்டால் சாமி பின்னால்தான் வரும். சாமியாடி வரம் கொடுக்கும்போது என்ன சொல்வார் என்றால், நீ போ உன் பின்னால் வாரேன் என்றுதான் கூறுவார்.

தொடக்கக் காலத் தெய்வங்கள் எல்லாம் காட்டுக்குள் இருந்தன. இன்னும் குறிப்பாகச் சொன்னால் தெய்வங்கள் மரத்திலே இருந்தன. ‘விருட்ச சைத்தியம்’ என்று பௌத்தர்கள் கூறுவார்கள்’. மரத்தில்தான் தெய்வங்கள் இருக்கும். தரையில் மனிதர்களோடு கூடி வாழாது. தரைக்கு அத்தெய்வங்கள் வரும்போது தரையில் அவற்றின் கால் பாவாது. இவையெல்லாம் புராதன நம்பிக்கைகள். தெய்வங்கள் தரையில் இறங்கும்போது தரையில் கால் பாவக்கூடாது. அந்த நம்பிக்கையைக் கம்பனின் இராமாயணத்தில் கூடப் பார்க்கலாம். இராமனைச் சொல்லும்போது கம்பன் சொல்லுகிறான்: “மேலோரு பொருளுமில்லா மெய்ப்பொருள் வில்லும் தாங்கி, கால் தரை தோய வந்து கட்புலற்கு உற்றதம்மா.’’ இராமனுடைய சௌலப்பியத்தைக் கூறும்போது, “அதற்குமேல் ஒரு பொருளுமில்லாத தெய்வம் கால் தரையிலே படும்படி வந்தது. கண்ணுக்குத் தெரியும்படி வந்தது’’ என்கிறான் கம்பன். தெய்வங்களுக்குக் கால் தரையிலே படக்கூடாது என்பதுதானே பழைய நம்பிக்கை?

கோலம் போடுவது ஓர் விளக்கம்

நம்முடைய வீட்டு வாசல்களில் தினமும் இடப்படும் கோலம் என்பது தெய்வங்கள் விண்ணிலிருந்து தரையில் இறங்கும்போது கால்படக்கூடாது அல்லவா? அதற்காக இடப்பட்ட களம் அல்லது தளம்தான் கோலம். பிற்காலத்தில் கவிழ்ந்த தாமரை வடிவில் இடப்பட்டன.

சங்க இலக்கியத்தில் ‘களமிழைத்தல்’ என்று கூறப்படும். வேலன் வெறியாட்டில் முருகன் மேலிருந்து கீழிறங்குவான், முருகன்தான் முதன்முதலில் மனித உருப்படுத்தப்பட்ட கடவுள். அவன் வருகிறபோது, வேலன் களமிழைப்பான். மலையாளத்தில் களமெழுதும் பழக்கம் இன்னும் இருக்கிறது. களமெழுதிப்-பாட்டு இருக்கிறது. இன்னமும் வீடுகளில் களமெழுதுகிறார்கள். வண்ணப்பொடிகளைக் கொண்டு களமெழுதி, அதன்மீது தெய்வ-முற்றவன் ஏறி ஆடுகிறான். நான் கோலம் என்ற ஒரு கட்டுரை எழுதியிருக்கிறேன். ஆக கோலம் என்பது தெய்வங்கள் இறங்குவதற்காக இடப்பட்ட இருக்கை. 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *