மதவெறி, மூடநம்பிக்கைகளை எதிர்த்து பெரியாரைப் போற்றிய எம்.ஜி.ஆர்

அக்டோபர் 16-31

வள்ளல் எம்.ஜி.ஆர் அவர்கள், அதிகம் படிக்காது, இளமையிலே வறுமையில் வாழ்ந்த நிலையிலும், நேர்மை, மனித நேயம், தொண்டு, கொடுமைகளை எதிர்த்தல், எளிய மக்களை நேசித்தல் போன்ற உயரிய பண்புகளைப் பெற்று, அவற்றை வாழ்வில் பின்பற்றியதால் கோடிக்கணக்கான மக்களின் அன்பிற்கும், பாசத்திற்கும் உரியவரானார்.

 தன் நடிப்பு, அரசியல் என்று எல்லா வகையிலும் தம் எண்ணங்களை, கொள்கை-களை பரப்பினார். இதனால் திரைத்துறையிலும், அரசியலிலும் தனி முத்திரை பதித்து சாதனைகள் பல புரிந்தார்.

தந்தை பெரியார், அண்ணா, காமராசர் ஆகியோரிடம் அளவற்ற பற்று கொண்டு, அவர்களின் கொள்கைகளை ஏற்று அவற்றைச் செயல்படுத்த பெரிதும் முயன்றார்.

அரசியலுக்கு வரும்முன் திரைத்துறையில், தன் சீர்திருத்த எண்ணங்களை, சமத்துவக் கொள்கைகளைப் பரப்பியதுபோல, ஆட்சிப் பொறுப்பில் இருந்தபோதும் அவற்றை உறுதியுடன் செயல்படுத்தினார். அக்கொள்கை-களில் உறுதியுடன் இருந்தார். கீழ்க்கண்ட பதிவுகள் அவரின் உள்ளத்தை, எண்ணத்தை, கொள்கைகளை, நோக்கத்தை வெளிப்படுத்து-கின்றன.

ஆதிக்கம் செலுத்தவே ஜாதியைப் புகுத்தினர்!

சென்னை பாலர் அரங்கில் ஒரு ஜாதி மறுப்புத் திருமணம் (28-6-1970 ஞாயிறு). நரிக்குறவர் குடும்பத்தைச் சேர்ந்த எல்.ஆறுமுகம் சிங் மகளுக்கும், வீரசைவ குடும்பத்தைச் சேர்ந்த ஏ.கே.ரகுபதிக்கும் ஜாதிமறுப்புத் திருமணம் எம்.ஜி.ஆர். தலைமையில் நடைபெற்றது. பிற்படுத்தப் பட்டோர் நலத்துறை அமைச்சர் என்.வி.நடராசன் அவர்களும் அவ்விழாவில் கலந்து கொண்டார். விழாவில் எம்.ஜி.ஆர். பேசுகையில்,

இந்த மணவிழா அய்யா முன்னிலையில், அண்ணா வாழ்த்து வழங்கி நடைபெற வேண்டியதாகும். எவ்வளவு தான் சட்டம், கண்டிப்பு வந்தாலும் உள்ளத்தில் மாறுதல் ஏற்பட்டால்தான் அது பயன்படும். தந்தை பெரியார் அவர்கள் இந்த சமுதாய சீர்திருத்தப் பணியை துவக்கிய காலம். பலத்த எதிர்ப்பும், ஏளனமும் மிகுந்த காலம். இன்று அவர்கள் வாழ்நாளிலேயே அவரது கொள்கைளின் வெற்றிகளைக் காணும் பெருமித நிலையில் உள்ளார்கள். சமூகத்தில் ஒரு சிலர் ஆதிக்கம் பெறத்தான் ஜாதி புகுத்தப்பட்டது. ஆதிக்கக்காரர்கள் எதிர்ப்பை சமாளித்து இன்று அய்யா வெற்றி பெற்று இருக்கிறார். உள்ளத்தில் மாறுதல் ஏற்படுத்துவது என்பது பெருஞ்-சாதனை யாகும். உயர்ஜாதிக்காரர்கள் என்றால் அவர்கள் ஒழுக்கவாதிகள் என்பதல்ல பொருள். வாழ்க்கையை அவர்கள் எப்படி நடத்துகிறார்கள் என்பதே முக்கியம். இந்த மணமக்கள் சமுதாய மாறுதலுக்குத் தக்க அடையாளமாகத் திகழ்கிறார்கள். அய்யா அவர்களது தியாகத்திற்குத் தலை வணங்குவதுதான், மரியாதை செலுத்துவதுதான் இத்தகைய விழாவில் நம் கடமையாகும் என்றார்.

ஆஸ்திக சமாஜத்தில் நாத்திகத்திற்கு ஆதரவு தந்த எம்.ஜி.ஆர்.

ஆஸ்திக சமாஜத்தில் நாத்திகத்துக்காக வாதாடுகிறவர்களைச் சார்ந்தவன் என்று பெயர் தரப்பட்டிருக்கிற எம்.ஜி.ராமச்சந்திரனை அழைத்துள்ளீர்கள். ஆத்திக சமாஜத்தில் எம்.ஜி.ராமச்சந்திரனா? இந்தக் கேள்வி சிலருக்கு திகைப்பாக இருக்கக்கூடும். ஆத்திகம் பற்றியும் நாத்திகம் பற்றியும் இதே மேடையில் நிறையப் படித்தவர்கள், நன்கு ஆராய்ந்தவர்கள் நிறையப் பேசியிருப்பார்கள் என்று நினைக்கிறேன்.

பரலோகத்தை நம்பாதவர்களையும், ஈஸ்வரனை வணங்காதவர்களையும், நாதப் பிரமாணத்தை ஏற்றுக் கொள்ளாதவர்களையும் நாத்திகர்கள் என்று குறிப்பிட்டார்கள். பரலோகத்தை நம்பப் போகிறோமா, நாதப் பிரமாணத்தை ஏற்கப் போகிறோமா – அதுவல்ல பிரச்சினை. கருமம், நாதோபாசம், ஞானம் இவற்றை ஆத்திகக் கோட்பாடுகளாகக் கூறினார்களே அதை ஏற்றுக் கொண்டவர்கள் அவற்றைக் கடைப்பிடிக் கிறார்களா?

நான் இங்கே மனம் திறந்து சில கேள்விகளை வெளிப்படையாகக் கேட்க விரும்புகிறேன். கருமம் என்று குறிப்பிட்டிருக்கிறார்களே, எதை? இன்றைய தினம் இந்த 76ஆம் ஆண்டிலும் அவரவர் கருமத்தை யார் ஒழுங்காகச் செய்கிறார்கள்? சிந்தித்துப் பார்க்க வேண்டும். நான் ஆத்திகன் என்று சொல்லிக் கொள்பவர்களில் எத்தனை பேர் அதற்குரிய கருமத்தை ஒழுங்காக நிறைவேற்றுகிறார்கள்?

நான் வேதனையோடு சொல்கிறேன்; ஆத்திகர் என்று தங்களைக் கூறிக் கொள்பவர்களில் நூற்றுக்கு 95 பேர் கடவுளை நம்புவதாக வேஷம் போடுகிறார்கள். எம்.ஜி.ஆர். இவ்வாறு பேசி முடித்ததும், அந்த சமாஜத்தின் தலைவரான ரத்தினம் அய்யர் என்பவர் பேச வந்தார்.

அவர் பேசுகையில், எம்.ஜி.ஆர். எத்தனையோ தருமங்களை செய்துள்ளார். அவர் நாத்திகராக இருந்தால் தருமம் செய்ய வேண்டும் என்ற சிந்தனையே வராது. நிச்சயமாகச் சொல்கிறேன், சத்தியமாகச் சொல்கிறேன்.

அப்போது எம்.ஜி.ஆர். எழுந்து ஒலி பெருக்கியை பிடித்துக் கொண்டு இடை-மறித்துப் பேசுவதற்கு அனுமதிக்க வேண்டும் என்று கூறி ரத்தினம் அய்யர் நான் கொடுப்பதாகப் பாராட்டியதற்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். ஆனால், நாத்திகர்கள் தரமாட்டார்கள் என்பதை நான் ஏற்றுக் கொள்ள மாட்டேன். நான் என்னை நினைத்து இதைச் சொல்லவில்லை. பொதுவாகவே இதைச் சொல்கிறேன்.

நாத்திகம் பரவப் பரவத்தான் ஆத்திகமும் பரவுகிறது என்று கூறிய அவர், பிறகு பெரியாரின் நாத்திகக் கருத்துகளை ஏன் தாக்க வேண்டும்? (சமாஜத் தலைவர் உண்மைதான்… உண்மைதான்…)

மேலும், எம்.ஜி.ஆர். பேசுகிறார், “ஆஸ்திகம் என்ற சொல்லில் உள்ள ஆஸ்தி என்பதற்கு உள்ளது என்று ஒருபொருள் கூறப்படுகிறது. உள்ளது என்று கூறுவதற்கு ஒரு ஆள் இருந்தால் இல்லை என்று மறுப்பவர்களும் இருக்கவே செய்வார்கள்.’’ (சமாஜத் தலைவர்: உண்மைதான், உண்மைதான்).

“ஜாதி உண்டு என்று சொல்பவர்கள் இருக்கும் வரை, ஜாதி இல்லை என்று சொல்பவர்களும் இருக்கத்தான் செய்வார்கள். பணக் காரர்கள் வேண்டும் என்று சொல்பவர்கள் இருந்தால் வேண்டாம் என்று சொல்பவர்களும் இருப்பார்கள்’’ என்று எம்.ஜி.ஆர் தத்துவமாக விளக்கினார். (ஆதாரம்: தென்னகம்)

ஆஸ்திக சமாஜத்திலே நாத்திகத்தின் சிறப்பை எடுத்துரைத்து ஆஸ்திகர்களே ஏற்கும்படிச் செய்தார்.

தந்தை பெரியார் மீது தணியாத பாசங்கொண்ட எம்.ஜி.ஆர்,

தமிழக அரசு ஈரோட்டில் எடுத்த தந்தை பெரியார் நூற்றாண்டு விழாவின் இரண்டாம் நாளான (18.09.1978) இரவு _ அய்யாவின் நினைவுகளை நிலைநாட்ட பத்தம்சத் திட்டங்களை முதல்வர் எம்.ஜி.ஆர். அறிவித்தார்.

1.) தமிழ்நாட்டிலுள்ள ஒவ்வொரு நகரிலும் கிராமத்திலும் தெருப் பெயர்களில் ஜாதியைப் பயன்படுத்துவதைத் தடை செய்ய அவசிய-மானால் சட்டமியற்றுவதன் மூலம் நடவடிக்கை எடுக்கப்படும்.
2.) கலப்பு மணத்தின் மூலம் அல்லது விதவை மறுமணம் மூலம் பிறந்த குழந்தைகள், கல்வி, இதர சலுகைகளுக்காக _ தாழ்த்தப்பட்ட வகுப்பினர், தாழ்த்தப்பட்ட மலை ஜாதி-யினருக்கு இணையாகக் கருதப்படுவர்.

3.) எழுத்துக்களின் எண்ணிக்கையைக் குறைத்து அச்சுக்கும் டைப் செட்டிங்குக்கும் வசதியாக இருக்கச் செய்யும் பொருட்டு பெரியார் தெரிவித்தவாறு தமிழ் எழுத்துக்கள் சீர்திருத்தப்பட்டு எளிதாக்கப்படும்.

4.) தந்தை பெரியார் நினைவாக மியூசியம் ஒன்றைத் துவக்கும் யோசனையை அரசு ஏற்றுக்கொண்டிருக்கிறது. நிபுணர்களுடன் கலந்தாலோசித்துத் தகுந்த நடவடிக்கைகள் எடுக்கப்படும். இதற்காக உலக பாங்கு போன்ற சர்வதேச ஸ்தாபனங்களின் உதவியும் ஆலோ-சனையும் பெறப்படும்.

5.) ஜாதி வேற்றுமையையும், ஜாதிகள் அடிப்படையில் சமூக அமைப்பையும் தடை செய்ய அரசியல் சாசனத்தில் வகை செய்ய வேண்டும் என்ற யோசனை சம்பந்தப்பட்ட வரை, ஜாதி வேற்றுமைகளை நீக்குவதை ஏற்றுக் கொண்டால், தாழ்த்தப்பட்ட வகுப்பினர் அல்லது பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு ‘ஒதுக்கீடு’ ஏற்பாட்டைக் கைவிட வேண்டி-யிருக்கும். எனவே, இதற்கு மய்யமான ஒரு வழியைக் காண வேண்டும். இப்பிரச்சினை குறித்து மத்திய அரசினருடன் தமிழக அரசு ஆலோசனை நடத்திட, சட்டப்பூர்வமாகவும், அரசியல் சட்ட ரீதியாகவும் மாறுதல் மூலம் இந்த நோக்கத்தை எவ்வாறு ஈடேறச் செய்வது என்பதைக் கண்டறியும்.

6.) கோவையில் துவக்கவிருக்கும் பல்கலைக்கழகத்திற்கு ‘பெரியார் பல்கலைக்-கழகம்’ என்று பெயரிட வேண்டும் என்ற யோசனை ஏற்கப்பட்டது.

7.) கோவை மாவட்டத்தை இரண்டாகப் பிரிக்க அரசு நடவடிக்கை எடுக்கும். 45 லட்சம் மக்கள் தொகை கொண்ட மிகப்பெரிய மாவட்டம் இது. ஈரோட்டைத் தலைநகராகக் கொண்ட புது மாவட்டத்துக்கு ‘பெரியார் மாவட்டம்’ என்று பெயரிடப்படும்.

8.) தந்தை பெரியார் போதனைகளைப் பரப்புவதற்காகத் தமிழில் தகுந்த புத்தகங்-களையும், இலக்கிய நூல்களையும் தயாரித்து நூல் நிலையங்களுக்கும், கல்வி நிலையங்-களுக்கும் விநியோகிக்க நிபுணர்குழு ஒன்று அமைக்கப்படும்.

9.) தந்தை பெரியாரின் போதனைகளைப் பரப்ப ஒவ்வொரு மாவட்டத்திலிருந்தும் ஆயிரம் இளைஞர்கள் சேர்த்துக் கொள்ளப்-படுவர். இவ்வாறாக தமிழ்நாடு முழுவதிலும் 15 ஆயிரம் இளைஞர்கள் நூற்றாண்டு விழா முடிவடையும் 1979 செப்டம்பரில் தங்களது பணியைப் பூர்த்தி செய்வர்.

10.) மாநில மட்டத்தில் உள்ள நூற்றாண்டு விழாக்குழு தனது பணியை ஓராண்டுக்கு நீடிக்கும். விழாக்களையும், இதர பணிகளையும் ஏற்பாடு செய்ய மாவட்டக் குழுக்களை அமைக்கும்.
( ‘விடுதலை’ 20.09.1978, பக்கம் 2)

எம்.ஜி.ஆர் அமைத்த அய்யா சிலை

தந்தை பெரியாரின் மீது அளப்பரிய மதிப்பும் பற்றும் கொண்ட எம்.ஜி.ஆர். அவர்கள் சென்னை அண்ணா மேம்பாலம் அருகே தந்தை பெரியார் அவர்களுக்கு அ.தி.மு.க. சார்பில் சிலை ஒன்றை அமைத்தார்.

சிலையை எம்.ஜி.ஆர். தலைமையில் அம்மா (மணியம்மையார்) முன்னிலையில் மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் பாபு ஜெகஜீவன்ராம் அவர்கள் 18.09.1972இல் திறந்து வைத்தார்கள்.

பெருமை மிக்க பெரியார் விழா!

வாழ்வின் அடிமட்டத்தில் உள்ள ஏழை எளிய மக்களுக்காகவே தந்தை பெரியார் அவர்கள் பாடுபட்டார். அத்தகைய அய்யா அவர்களின் கருத்துக்களை மக்களுக்குப் புரிய வைக்க வேண்டும்.

பெரியார் விழா நிகழ்ச்சிகளில் பங்கு பெறுவதன் வாயிலாக, சமுதாயச் சீர்திருத்தக் கருத்துக்கள் பரவுகின்றன. ஏற்கெனவே தெரிந்து கொண்டவர்கள், சுறுசுறுப்பு அடையவும் _ மறந்தவர்கள் நினைவுப்படுத்திக் கொள்ளவும் இத்தகைய விழாக்களைப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.

பெரியார் விழாக்கள் _ பட்டம் பெறவோ, வாக்குச் சேகரிக்கவோ நடத்தப்படவில்லை. பத்துப் பதினைந்து ஆண்டுகள் படித்தாலும் தெரிந்துகொள்ள முடியாத கருத்துக்களைச் சில மணி நேரம் இந்த விழாச் சொற்பொழிவுகளைக் கேட்பதன் மூலமே நாம் பெறலாம்.

(4.8.1979இல் புதுக்கோட்டை மாவட்டத்தில் தந்தை பெரியார் நூற்றாண்டு விழாவில் மாண்புமிகு முதல்வர் திரு. எம்.ஜி.ஆர்.  பேசியது.)

_ தமிழரசு, 16.9.1979

அரசு அலுவலகங்களில் அய்யா படம் எம்.ஜி.ஆர் ஆணை

அரசு அலுவலகங்களில் தந்தை பெரியார் படம் வைக்கலாம் என்ற அரசு ஆணை எம்.ஜி.ஆர் அரசால் 22.09.1977இல் வெளியிடப்பட்டது. இது தந்தை பெரியாருக்கு அவர் செய்த மாபெரும் மரியாதையும் நன்றி பாராட்டலுமாக அமைந்தது.

இராணுவத்தைச் சந்திக்கத் தயார்

“வடபுலம் அளிக்கும் தீர்ப்புக்குத்தான் தென்னாடு கட்டுப்பட வேண்டியிருக்கும்’’ என்று அண்ணா கூறியது உண்மை என்று இப்பொழுது நிரூபிக்கப்பட்டுள்ளது.

மாநில சுயாட்சிக்காக இந்தியாவின் இராணுவத்தையும் சந்திக்கத் தயார்! என்று உரிமைக்குரல் எழுப்பியதோடு போர்முரசும் கொட்டினார் எம்.ஜி.ஆர்.

அய்யாவைப் பாதுகாத்த அம்மாவின் நினைவை அரசு போற்றும்! எம்.ஜி.ஆர் அறிவிப்பு!

“தன்னுடைய இளமைக்குத் தேவையான எதைப் பற்றியும் எதிர் நோக்காமல், தன்னுடைய வாழ்வை அய்யாவுக்காக ஒப்படைத்து, அய்யாவைப் பேணிப் பாதுகாத்து, எத்தனை ஆண்டுகள் இந்த நாட்டுக்கு உயிரோடு காத்து வைத்திருக்க முடியுமோ அந்த அளவுக்கு உழைத்துக் காத்தவர்கள் அம்மையார் அவர்களை தமிழ் உலகம், தன்மான உலகம் ஏன் பொதுவுடைமை உலகம் என்றென்றும் மறக்காது!’’ என்று சென்னை கடற்கரைச் சீரணி அரங்கில் மணியம்மையார் இரங்கற் கூட்டத்தில் பேசிய எம்.ஜி.ஆர்.,

“பதினொருமுறை மாரடைப்பு வந்தபின்னும் ஓய்வு எடுத்துக்கொள்ளாமல், மருத்துவர் சொல்லியும் கேட்காமல் ஊர் ஊராக கொள்கைப் பிரச்சாரத்திற்குச் சென்று வந்தார்கள். அதன் விளைவுதான் இன்று நம்மைவிட்டு பிரிந்தார்கள்.

அனைத்திந்திய அண்ணா தி.மு.க. இரங்கல் கூட்டத்திலே கலந்து தாயை வணங்கும் வகையில் அம்மையாரை வணங்குகிறோம்.

தந்தையால் ஊட்டப்பட்ட ஊட்டச்-சத்தான கொள்கைகளை சமுதாய சீர்திருத்தக் கொள்கைகளை என்றும் நாம் மனதில் பதிய வைக்கும் வகையில் அ.தி.மு.க. அரசு அனைத்தையும் செய்யும்.

தந்தை பெரியாரின் “பொன்மொழிகள்” நூலின் தடை நீக்கிய எம்.ஜி.ஆர்!

தந்தை பெரியார் எழுதிய, “பொன்மொழிகள்’’ நுல் 22.02.1950இல் தடை செய்யப்பட்டது. அந்த நூலுக்கு விதிக்கப்ட்ட தடையை எம்.ஜி.ஆர் அரசு 15.06.1979 அன்று நீக்கி ஆணையிட்டு பெரியாரின் சிந்தனைகள் பரவ வழிசெய்தது.

குடிஅரசு ஏட்டின் மூலம் கொள்கையை உள்ளத்தில் பதித்தேன்! எம்.ஜி.ஆர் நெகிழ்வு!

”என்னுடைய வாழ்வில் மறுமலர்ச்சியை ஏற்படுத்தித் தந்தவர் கலைவாணர் அவர்கள் தான். 1935ஆம் ஆண்டு, “குடிஅரசு’’ பத்திரிகையை படிக்குமாறு என்னிடம் சொன்னார்கள்.

1935இல் திரைத்துறைக்கு நான் வந்தபோது, பச்சை அட்டை குடிஅரசு வார இதழை நான் படித்து, வேகமாக மாறினேன். சிறு வயதில் எவ்வளவோ வீட்டில் பேசினேன். அந்த அளவிற்கு அதன் எழுத்துகள் வலிமையானவை.

கூட்டம் முடிந்து செல்லுகின்றவர்கள் புதிய மாற்றத்தை, புதிய சிந்தனையைப் பெற்றுச் செல்ல வேண்டும். புதிய சமுதாயத்தை உருவாக்க வீறுகொண்டெழுந்து புதிய இளைஞர்களாக ஒவ்வொருவரும் ஆக வேண்டும். அய்யா புகழ் ஓங்குக! அம்மையாரின் நினைவு நமது மனத்தில் நிலைத்திடுக!’’ என்று அம்மையாரின் இரங்கல் கூட்டத்தில் எம்.ஜி.ஆர் பேசினார்.

ஆக, தந்தை பெரியாரின் எழுத்துச் சீர்திருத்தத்தை அரசு ஏற்கச் செய்தது; பெரியாருக்கு நூற்றாண்டு விழா சிறப்பாக எடுத்தது; சிலை எடுத்தது; பிற்படுத்தப்-பட்டோர் இடஒதுக்கீட்டை 31%லிருந்து 50% ஆக உயர்த்தியது போன்ற வரலாற்றுச் சாதனைகளைச் செய்து பெரியாரின் கொள்கை-களை நிலைநிறுத்தினார்! மூடநம்பிக்கைகளைக் கண்டித்தார்.

மதவெறிக்கு எதிராக நின்றார். ஆர்.எஸ்.எஸ். போன்ற இந்துத்வா தீவிரவாதிகளை எதிர்த்தார். தன்னை ‘இந்து’ என்று கூறமறுத்து, ‘என் மதம் திராவிட மதம்’ என்றார். எல்லா மதத்தினரின் உணர்வுகளையும் மதித்தார். எந்த மதத்தையும் அவர் ஆதரிக்காது, மக்கள் நலத்திற்கே முன்னுரிமை தந்து மனிதநேயராக வாழ்ந்தார். வாழ்க எம்.ஜி.ஆர். புகழ்! 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *