குழந்தைத் திருமணங்களை தடுத்து நிறுத்திய சாதனைப் பெண்!

அக்டோபர் 01-15

 

 

 

கண் முன் நடக்கும் கொடுமைகளை கண்டுங்காணாமல் ஒதுங்கிச் செல்லும் மக்கள் மத்தியில், துணிச்சலுடன் தட்டிக் கேட்கிறார். ஓசூரைச் சேர்ந்த 32 வயது ராதா.

பெற்றோர்களின் கொடுமையாலும், ஏழ்மைக் சூழலாலும் படிக்க முடியாமல் குழந்தைத் தொழிலாளர்களாக்கப்பட்டவர்கள், பாலியல் வன்செயலுக்கு ஆளான குழந்தைகள் மற்றும் பெண்களைக் காப்பாற்றி, வழிகாட்டி, அவர்களுக்கான நீதியைப் பெற்றுத் தருகிறார். இதுவரை 15 குழந்தைத் திருமணங்களை தவி ஆட்சியர், வட்டாட்சியர் உதவியுடன் தடுத்து நிறுத்தியுள்ளார். தற்போது 56 குழந்தைகளை தன்னுடைய செலவிலேயே தங்கவைத்து படிக்க வைக்கிறார்.

இவர் பிளஸ் ஒன், பிளஸ் டூ படிக்கும்போது,   பொண்ணுங்களுக்கு சின்ன வயசிலேயே கல்யாணம் பண்ணி வைக்கிற செய்தி தெரிந்தது.  பிளஸ் டூ முடிச்சதுமே கல்லூரிக்குப் போயி நல்லா படிக்கனும்னு ஆயிரம் ஆயிரம் கனவுகளோடு காத்துக்கிட்டிருந்த இவரை படிப்பை நிறுத்தச் சொல்லி அப்பா சொல்லிட்டார்.

ஆனால், இவரோட சித்தி படிக்கவைக்கச் சொன்னாங்க. அப்பவே, தனக்கும் தன் நண்பர்களுக்கும் ஏற்பட்ட நிலை வேறு யாருக்கும் வரக்கூடாதுன்னு முடிவு பண்ணி, சமூக சேவை செய்யணும்கிறதுக்காகவே எம்.ஏ., சோஷியாலஜி எடுத்துப் படித்தார். படிச்சி முடிச்சதும் கடந்த 10 வருடமா இத்தொண்டினைச் செய்து வருகிறார். யுனிசெஃப் மூலம் சென்டர் ஃபார் சோஷியல் டெவலெப்மெண்ட் பயிற்சியும் பெற்றுள்ளார்.

இந்தப் பயிற்சி மூலம் குழந்தைகளை எப்படி ஹேண்டில் பண்ணணும், அவங்களோட தேவைகளை எப்படிப் பூர்த்தி செய்யணும்? அவர்களை எப்படி காப்பாற்றி முறைப்படி குழந்தைகள் காப்பகத்தில் ஒப்படைக்கணும் எனப் பல்வேறு விதிமுறைகளைத் தெரிந்து வைத்துள்ளார்.

“தமிழகத்தில் மட்டுமில்ல, வெளி மாநிலங்-களிலிருந்து ஓடிவரும் குழந்தைகளைக் கூட மீட்டு பெற்றோர்களிடம் நேரடியாக சென்று ஒப்படைத்துவிட்டு வருகிறேன்.

பல குழந்தைத் திருமணங்களை நான் தடுத்து நிறுத்தியிருக்கிறேன். இந்த 4 மாசத்துல மட்டுமே 3 குழந்தைத் திருமணங்களை தடுத்தி நிறுத்தி அக்குழந்தைகள் இப்போ பள்ளிகளிலும் கல்லூரிகளிலும் நல்லபடியா படிச்சுக் கிட்டிருக்காங்க…’’ என்றவரிடம் ‘குழந்தைத் திருமணம் குறித்து எப்படி உங்களுக்கு தகவல் வருகிறது?’ என்று நாம் கேட்டபோது, “குழந்தைத் திருமணங்களைத் தடுக்க எனக்கு தகவல் கொடுப்பதே நல்ல உள்ளம் படைத்த பள்ளி ஆசிரியர்கள்தான். ஏன்னா, எந்தக் குழந்தைக்கு கல்யாணம் நடக்கப் போகுதுன்னு அவங்களுக்குத்தான் தெரியும். ஆசிரியர்கள் மட்டுமில்ல. மாணவர்களிடமும் என்னுடைய செல் எண் இருக்கு. அவங்களும் எனக்கு போன் பண்ணி சொல்வாங்க. அப்படி, குழந்தைகள் பிரச்சினைகள் குறித்து மாணவ, மாணவிகள் என்னைத் தொடர்புகொண்டு சொல்வதற்-காகவே ஆராதனா சோஷியல் வெல்ஃபர் டீம் வைத்திருக்கிறேன்.

அவர்கள் மூலமும் எனக்கு தகவல் வந்துவிடும். ஹெச்.அய்.வி பாதிக்கப்பட்ட குழந்தைகளையும் காப்பாற்றி வருகிறேன். யாரிடமும் இந்தக் குழந்தைகளுக்காக பணம் வாங்குவதில்லை. இந்த ஏழ்மையான குழந்தை-களுக்கு ஹெல்ப் பண்ணணும்னு யார் நினைக்கிறாங்களோ அவங்களே நேரடியா வந்து தேவையான பொருட்களை அந்தக் குழந்தை-களுக்கு வாங்கிக் கொடுத்துட்டுப் போகலாம்…’’ என்றவர், “என்னைச் சுற்றியிருப்பவர்கள், எல்லோருமே எனக்கு உறுதுணையாக இருக்கிறாங்க. குறிப்பா, காவல்துறை மற்றும் சமூக நலத்துறை அதிகாரிகளின் ஒத்துழைப்பு இருக்கிறதால துணிச்சலா செய்ய முடியுது.

கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் மகேஸ்வரன் 2012-_ஆம் ஆண்டு எனக்கு சிறந்த சமூக சேவகி பட்டம் கொடுத்து ஊக்கப்-படுத்தினாரு. இப்படி பலரும் என்னை தொடர்ந்து ஊக்கப்படுத்துறதாலதான் என்னால இந்தளவுக்கு தைரியமா சமூக சேவையில ஈடுபட முடியுது’’ என்கிறார் ராதா. இவர் இன்னும் திருமணம் செய்து கொள்ள-வில்லை. தொண்டாற்றும் கடமையில் தன் விருப்பங்களை தள்ளிவைத்து தொண்டாற்றும் இவரைப் போன்ற பெண்களே நாட்டிற்கு கட்டாயத் தேவை. பெரியார் விரும்பிய பெண் இவர் வாழ்க! தொண்டறத்தை தொடர்ந்து வெல்க!

 

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *