அமெரிக்காவில் சாலை விபத்தில் மரணமடைந்த பின்பும் கர்ப்பிணித் தாய்க்கு ஆரோக்கியமான குழந்தை பிறந்த உருக்கமான சம்பவம் நடந்துள்ளது. மிஸவுரி மாகாணத்தை சேர்ந்தவர்கள் மேட் ரைடர் _ சாரா ஜலர் தம்பதி. நிறைமாத கர்ப்பிணியான சாரா ஜலருக்கு இடுப்புவலி ஏற்பட, மருத்துவமனைக்கு காரில் விரைந்தனர். அப்போது எதிரே வந்த டிராக்டர் மோதியதில் ஏற்பட்ட விபத்தில் மேட் ரைடர் படுகாயத்துடன் தப்பிக்க, சாரா ஜலர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். நிறைமாத கர்ப்பிணியான சாரா ஜலர் உயிரிழந்தாலும், அவரது கருப்பையில் இருக்கும் சிசுவையாவது காப்பாற்ற வேண்டும் என்று முடிவெடுத்த மருத்துவர்கள், சிசேரியன் முறையில் குழந்தையை வெளியில் எடுத்தனர்.
2.2 கிலோ எடையுடன் பிறந்த அந்த பெண் குழந்தை, உடனடியாக செயற்கை சுவாசக் கருவிக்குள் வைக்கப்ட்டது. மரணமடைந்த தாயின் உடலில் பிராணவாயுப் பற்றாக்குறையால் சிசுவின் மூளை கடுமையாக பாதிக்கப்-பட்டிருக்கலாம் என்று மருத்துவர்கள் அஞ்சியது போல நடக்கவில்லை. இரண்டு நாள்கள் கழித்து அந்தக் குழந்தையை செவிலி வெளியே எடுத்தபோது, யாரும் எதிர்பாராத வகையில் அந்தக் குழந்தை தன் கண்களைத் திறந்து செவிலியின் விரல்களை இறுக்கமாய் பற்றிக் கொண்டது அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியது.