பெங்களூரில் சுங்கமணகுடி என்னும் பகுதியிலுள்ள தேவாலயத்தில் பாதிரியாராக இருப்பவர் சாந்தராஜூ (45). இவருக்குத் திருமணமாகி 2 பெண் குழந்தைகள் உள்ளனர்.
தேவாலயத்தில் உள்ள கல்வி மய்யத்தில் தங்கியிருக்கும் ஏழைக் குழந்தைகளிடம் தகாத உறவு வைத்துள்ளார் என்றும், வெளிநாட்டவர் கொடுக்கும் நன்கொடைப் பணத்தை முறைகேடாகப் பயன்படுத்துகிறார் என்றும் பாதிரியாரின் மனைவியே காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார். மேலும், தான் கொடுத்துள்ள புகாருக்கு ஆதாரங்கள் தன்னிடம் இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.
கோவை சூலூர் அருகேயுள்ள அரசூரைச் சேர்ந்த மருதாசலத்தின் மனைவி லட்சுமி அருகிலுள்ள மாரியம்மன் கோவிலுக்குச் சென்றுள்ளார். அப்போது, கையில் மாலையுடன் வந்த இரு இளைஞர்கள், மாலையை சாமிக்குச் சாற்றும்படி லட்சுமியிடம் கூறியுள்ளனர்.
சாமி சிலை அருகே செல்லக்கூடாதே என்று லட்சுமி கூறியுள்ளார். இந்தக் கற்பூரத்தையாவது ஏற்றுங்கள். சாமி கும்பிட்ட மகிழ்ச்சியுடன் செல்வோம் என்று கூறியுள்ளனர்.
இதனைக் கேட்ட லட்சுமி, கற்பூரத்தை வாங்கி கீழே குனிந்து பற்ற வைத்தபோது அவரது கழுத்தில் அணிந்திருந்த நகையினை இளைஞர்கள் பறித்துச் சென்றுள்ளனர்.
பொன் பொருள் சேரும், தீய சக்திகள் அணுகாது, விலையுயர்ந்த பொருள்கள் சொந்தமாகும் என்ற மூடநம்பிக்கையில் கடந்த ஆண்டில் மட்டும் வால்பாறையில் 5 கோபுர கலசங்கள் திருடு போயுள்ளதாக காவல்துறையில் புகார்கள் பதிவாகி யுள்ளதாம்.
கேரளாவிலும் கோவில் கோபுர கலசங்கள் திருடப்பட்டுள்ளதாக காவல்துறையில் புகார்கள் பதிவாகியுள்ளன.
ஊத்தங்கரை தாலுகா சிங்காரப் பேட்டையை அடுத்துள்ள ஓந்தியம் கிராமத்தில் மாரியம்மன் கோவில் உள்ளது. அங்கு ஜூன் 26 அன்று இரவு பூட்டை உடைத்து அம்மன் கழுத்திலிருந்த தாலி, வெள்ளி ஒட்டியாணம், கிரீடம் உள்பட 26 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள பொருள்கள் கொள்ளையடிக்கப்பட்டுள்ளன.
இன்னொரு காலி
நித்யானந்தாவின் பாணியில் சேட்டைசெய்த இன்னொருவர் காவல்துறையால் பிடிக்கப்பட் டுள்ளார். நெல்லை வண்ணாரப்பேட்டையைச் சேர்ந்தவர் கிருஷ்ணன். இவர் கேரள மாநிலம் கோவளத்தில் ஒரு தங்கும் விடுதியில் பணியாற்றி வருகிறார். இந்த தங்கும்விடுதிக்கு சோட்டாணிக்கரையைச் சேர்ந்த சாமியார் நந்தகுமார் அடிக்கடி வந்து தங்கிச் செல்வது வழக்கமாம்.
இந்தப் பழக்கத்தில் கிருஷ்ணன் தன் குடும்பத்தில் உள்ளவர்களின் ஜாதகத்தைப் பார்த்து பரிகாரம் சொல்லுமாறு நந்தகுமாரிடம் கேட்டுள்ளார். இதற்கு நந்தகுமாரும் ஒப்புக் கொள்ள ஜூலை 8 அன்று நந்தகுமார் நெல்லை சந்திப்பிலுள்ள ஒரு விடுதியில் அறை எடுத்து தங்கிருப்பதாக கிருஷ்ணனுக்குத் தகவல் தெரிவித்தார். கிருஷ்ணனின் மனைவி லலிதாவுக்கு ஏற்கெனவே நந்தகுமாரைத் தெரியும் என்பதால், லலிதாவும், உறவினர் பானுமதியும் குடும்பத்தினரின் ஜாதகங்களை எடுத்துக் கொண்டு விடுதிக்குச் சென்றனர்.
அங்கு நந்தகுமார் குடிபோதையில் இருந்தா ராம். பரிகாரம் சொல்வது போல் நடித்து, திடீரென இரு பெண்களின் கைகளைப் பிடித்து இழுத்துள்ளார். அரண்டுபோன பெண்கள் இருவரும் தலைதெறிக்க ஓடி, விடுதி ஊழியர்களிடமும் பின்னர் காவல்துறைக்கும் புகார் தெரிவித்தனர்.
நெல்லை சந்திப்பு காவல்துறையினர் நந்தகுமாரைப் பிடித்து விசாரணை நடத்தியபோது,அவர் எப்போதும் போதையிலேயே இருப்பார் என்பதும், கேரளா, சென்னை, மதுரை, திருச்சி, குமரி உள்ளிட்ட பகுதிகளில் பரிகாரம் சொல்வது போல நடித்து நூற்றுக்கும் அதிகமான பெண்களைச் சீரழித்ததும் தெரியவந்துள்ளது. அவரைக் கைது செய்த காவல்துறையினர் இதுகுறித்து வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.