இலங்கையில் உள்ள ஈழத் தமிழர்களுக்கு இன்னமும் விடியல் தோன்றவே இல்லை.
உள்நாட்டில் மூர்க்கன் ராஜபக்ஷே தலைமையில் தமிழின அழிப்புப் போரின் முடிவு ஏற்பட்டு ஏழு (7) ஆண்டுகள் உருண்டோடி விட்டன!
ராஜபக்ஷே ஆட்சி வீட்டுக்கு அனுப்பப்-பட்டதற்கும், புதிய ஆட்சி மைத்ரிபால சிறிசேனா தலைமையில் வருவதற்கும் வாக்களிப்பில் தமிழர்கள் தந்த பெரும்பங்கே முக்கிய காரணமாக அமைந்தது!
ஏதோ ஓரளவுக்காவது வந்த புதிய கட்சி, தேர்தலில் தமிழர்களுக்கு கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றக் கூடும் என்று நினைத்த உலகத்தவர்க்கு, மிஞ்சியது ஏமாற்றமே என்பதுதான் இன்றைய யதார்த்த நிலை!
1. தமிழர்கள் வாழும் பகுதிகளில் _ ஏற்கனவே நிறுத்தி வைக்கப்பட்ட (சிங்கள) இராணுவம் முற்றாக விலக்கிக்கொள்ளப் படாமல், அவை ஏதோ இராணுவத்தின் பாசறையே என்று அச்சுறுத்தும் அவலம்.
2. தமிழர்களுடைய வீடுகள், காணிகள் எல்லாவற்றிலும் சிங்களக் குடியேற்றங்கள் மிகுதியாகி உள்ளதோடு, இராணுவத்தையும் சிங்களர்களையும் அங்கு கொண்டுவந்து நிரப்பி, தமிழர் பகுதிகளின் அடையாளங்களை அறவே மாற்றும் திட்டமிட்ட முயற்சிகள் தீவிரப்-படுத்தப்படுகின்றன.
3. தமிழ்ப் பெயர்கள் உள்ள பகுதிகள், ஊர்கள் எல்லாம் சிங்கள மயமாக்கப்படும் கொடுமை ஒரு தொடர் பணியாக அங்கே நீட்டிக்கப்படும் அநியாயம்!
இவற்றையெல்லாம் எதிர்த்து தமிழர்கள் அறவழியில் தங்கள் அதிருப்தியை தெரிவிக்கும் போராட்டத்தில், வடகிழக்கு மாகாண முதல்வர் விக்னேஸ்வரரும்கூட கலந்துகொண்டு, பறிக்கப்படும் தமிழர் உரிமைகள் மீட்டெடுக்க குரல் கொடுத்துள்ளார்கள்!
அய்.நா.வின் மனிதஉரிமை ஆணையத்தின்-படி, போர்க் குற்றம் புரிந்த சிங்கள வெறியர்கள் _ ஆட்சி அதிகாரங்களைத் தவறாகப் பயன்படுத்தி ‘தானடித்த மூப்பாக’ச் செயல்பட்டோர் பற்றிய விசாரணை, ஒரு நாடகம்போல், ஏதோ ஒப்புக்கு நடைபெறும் அவலம் தொடரும் துன்ப நிலையே எங்கும் காணப்படுகிறது.
நம் இந்தியாவின் மோடி அரசோ _ பறிக்கப்பட்ட தமிழ்நாட்டு மீனவர்களின் படகுகளை மீட்டுத்தரும் குறைந்தபட்ச விடிவைக்கூட தரவில்லை; வாக்குறுதிகள் காற்றில் பறக்கின்றன!
இங்குள்ள மீனவத் தமிழர்கள் முதல் அங்குள்ள ஈழத்தமிழர்கள் வரை உரிமைகள் பறிக்கப்பட்ட அனாதைகள்போல் வாழ்வதா?
வேதனை! வெட்கம்! விடிவு காண்பது எப்போது?
கி.வீரமணி,
ஆசிரியர்