Unmai Magazine Subscription - உண்மை இதழ் உங்கள் முகவரி தேடி வர சந்தா செலுத்துங்கள்..

இனிப்பென்று இதற்குப்  பெயர்

உழுதிடத் தேவையில்லை
உச்சிவெயிலில் காய்வதில்லை
நாற்றங்கால் அறிந்ததில்லை
நடுவதும் அறுப்பதுமில்லை

மாடு கன்று கண்காட்சியில்
வயலும் வரப்பும் தொலைக்காட்சியில்
பார்த்து ரசிக்கும் தலைமுறைக்கு
ஹேப்பி பொங்கல் சம்பிரதாயம்

மஞ்சள்கொத்தை
மார்க்கெட்டில் வாங்கி
மருதாணி இலையை
மெகந்தி என்றாக்கி

ஜோதிடன் சொன்ன
நேரத்தைப் பார்த்து
சூரியனைக் கும்பிட
ஆயத்தமாவர்

சர்க்கரை-அரிசி-ஏலம்
மொத்தமாய் அரசு கொடுக்கும்
குக்கரில் பொங்கல் வேகும்
குடும்பமே டி.வி. பார்க்கும்

மற்றென்ன தேவை இங்கே
மற்றுமொருவிடுமுறை நாளில்? உற்றவர் ஊரார் குறித்து
அக்கறை கொள்தல் வீணே!

சலிப்பூட்டும் வேலைச் சூழல்
ஒருபோதும் ஓய்வுமில்லை
தனித் தனித் தீவாய் ஆனார்
தமிழர்கள் நகரந்தன்னில்

அனைத்துமே கிடைத்தபோதும்
அனுபவிக்க நேரமில்லை
இனித்திடும்  பொங்கல் நாளில்
மகிழ்ச்சிக்கு விலையாய் வாழ்க்கை

கோவி. லெனின்