நூல்: பொதிகையில் வீசிய பூந்தென்றல்
ஆசிரியர்: பேராசிரியர் க.அன்பழகன்
வெளியீடு: தமிழாலயம், 124/3, பாரதி குடியிருப்பு, அண்ணா நகர், சென்னை-600 040.
பேசி: 044-2616 1661
விலை: ரூ.25/- பக்கங்கள்: 32
(இனமானப் பேராசிரியர் க.அன்பழகன் அவர்கள் பொதிகைத் தொலைக்காட்சிக்கு அளித்த நேர்காணலில் சில துளிகள்…)
நேர்காணல் செய்தவர் மு.பி.பாலசுப்பிரமணியம்.
பேராசிரியர்:
வடமொழி தமிழைத் தாழ்த்தியது ஒரு காலம். ஆங்கிலம் தமிழை உயர்த்தியது ஒரு காலம். ஆங்கிலம் தமிழை உயர்த்திய-தாகத்தான் வரலாறு உள்ளது. ஆங்கில மொழி பேசுபவர்களும், அய்ரோப்பிய மொழியாளர்-களும் தமிழை உயர்ந்த மொழி என்று தான் சொன்னார்களே தவிர யாரும் தாழ்வாகக் குறிக்கவில்லை. ஆகவே, தமிழுடன் ஆங்கிலம் இன்றைக்குத் தமிழ்-நாட்டிலே இருக்கிறது. தமி-ழுக்கு முதன்மை வேண்டும் என்பது வலியுறுத்தப்பட்டு, மெல்ல மெல்ல நடைமுறைப்-படுத்தப்பட்டு வருகிறது. அண்மையிலேதான் தமிழைச் செம்மொழி என்று, மத்திய அரசு ஏற்றுக்கொண்டது. முதல்வர் டாக்டர் கலைஞர், தமிழ் செம்மொழி என அறிவித்தது மட்டுமல்லாமல், செம்மொழி ஆய்வு நிறுவனம் ஒன்று மிகப்பெரிய அளவிலே சென்னையிலே அமைவதற்கு நிலம் வழங்கியிருக்கிறார்கள். அதைத் தொடங்கி வைத்திருக்கிறார்கள். விரைவில்செம்மொழி நிறுவனத்தினுடைய செயற்பாட்டின் மூலமாகத் தமிழ்மொழி-யினுடைய புகழ் மேலும் மேலும் உலகமெல்லாம் பரவும் என்று, நான் உறுதியாக நம்புகிறேன்.
மு.பி.பாலசுப்பிரமணியம்:
செம்மொழி என்ற அந்தக் கனவு, பரிதிமாற் கலைஞர் கண்ட கனவாகும். தற்பொழுது முத்தமிழறிஞர் கலைஞர் காலத்தில் நனவாகி இருப்பதாக உலகமெல்லாம் இருக்கின்ற தமிழர்கள் நினைத்துப் பார்க்கிறார்கள். அந்த நிலை வளர்வதற்கும் நீங்கள் சொன்னதுபோலத் தமிழ் இந்த மண்ணிலே புதையுண்டு போகாமல் காப்பதற்கும், தமிழர்களிலே பலர் தமிழ்மொழியை ஒரு தாழ்வு மனப்பான்மை-யோடு எண்ணிப் பார்க்கிறார்கள் என்பதைப் போக்குவதற்கும் முயலவேண்டும். தமிழ்நாட்டில் கிறித்தவ மதத்தைப் பரப்ப வந்த பாதிரிமார்கள் செய்த தொண்டு மகத்தானது என்று எழுதியிருக்கிறார்கள். தாங்களும் “தமிழ்க் கடல் அலை ஓசை’’ என்ற நூலில், அதை மிகச் சிறப்பாக எடுத்துக் காட்டியிருக்கிறீர்கள். அந்த மேல்நாட்டுப் பாதிரிமார்கள் மூலம் தமிழ் வளர்ந்த விதம் என்ன என்பதை நாங்கள் தெரிந்துகொள்ள விரும்புகிறோம்.
பேராசிரியர்:
குறிப்பாக மேல்நாட்டுப் பாதிரிமார்களுள் கான்ஸ்டான்டியஸ் ஜோசப் பெஸ்கி என்னும் வீரமாமுனிவராக இருந்தாலும், அதற்கு முன்பாகவே தரங்கம்பாடி வந்த சீகன்பால்குவாக இருந்தாலும், கான்ஸ்டான்டியன் ஜோசப் பெஸ்கி காலத்திலிருந்த டாக்டர் ஜி.யு.போப்பாக இருந்தாலும், அதே காலத்தில் வருகை தந்து தமிழ்மொழி ஆராய்ச்சியில் ஈடுபட்ட டாக்டர் கால்டுவெல்லாக இருந்தாலும் அவர்கள் அனைவருமே வெவ்வேறு இடங்களிலிருந்து வந்தவர்கள் மட்டுமல்லர், வெவ்வேறு காலகட்டங்களில் தமிழகத்தில் சமயத் தொண்டு ஆற்றியவர்கள், தமிழ்மொழியை நமது மக்கள் பேசுகிற பேச்சு வழக்கிலேயே பயின்றிட அவர்கள் விரும்பினார்கள். இன்னும் சொல்லப்போனால் மக்கள் பேசுகிற அதே முறையில் தாங்களும் பேசிக் கற்றுக்கொள்ள விரும்பினார்கள்.
சீகன் பால்கு அவர்கள், ஜெர்மன் நாட்டிலிருந்து தரங்கம்பாடியிலே வந்து தங்கியவர். 16ஆவது நூற்றாண்டுக் கடைசியிலேதமிழ்நாட்டுக்கு வந்தவர். அவர் தமிழ் எழுதக் கற்றுக் கொள்வதற்கு விரும்பி, ஆசிரியர் ஒருவரிடத்தில் மணலிலேயே விரலால் தமிழ் எழுத்துக்களை எழுதிப் பழகியவர். அவர் ஓர் இளைஞரைப் பக்கத்திலே வைத்துக் கொண்டு அவனிடத்தில் தமிழிலே உரையாடி உரையாடியே தமிழ்ப் பேச்சு வழக்கைப் பயின்று, தமிழறிவை வளர்த்துக் கொண்டார்.
அவர் ஒருமுறை மேல்நாட்டுக்குச் சென்று வரக் கப்பல் பயணம் மூன்று மாதமாகும் என்ற காரணத்தினாலும், மேல்நாட்டில் 3 மாதம் தங்க வேண்டுமென்பதாலும், தன்னோடு ஒரு தமிழ் இளைஞனை உடன் அழைத்துக்கொண்டு சென்றார். அவனிடத்திலே உரையாடிக் கொண்டேபோனால்தான், “தமிழ்’’ மறக்காது என்று அவர் கருதினார் எனில், அது தமிழனிடத்தில் ஏற்பட்ட பற்று என்று நான் கருதமாட்டேன். ஆனால் தமிழை மதித்தார்கள். நமது மக்களுடைய மொழியான தமிழ்மொழியை அவர்கள் படிக்கிறபொழுது, ஒரு நாகரிகம் மிகுந்த சமுதாயத்தினுடைய கருத்துகளாக இருப்பதை அவர்கள் புரிந்து கொண்டார்கள். அதற்குப் பின்னர் வீரமாமுனிவரும், திருக்குறள் போன்ற நுல்களை இலத்தீன் மொழியிலே மொழிபெயர்த்து, மேல் நாட்டவர்கள் அறியும்படி செய்தார்கள்.
ஜி.யு.போப்பு அவர்கள் திருக்குறள், நாலடியார், சிவஞானபோதம் போன்ற நூல்களை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தார். நாலடியார் நூலுக்கு முன்னுரை எழுதும்போது, தமிழர்கள் தங்களுடைய மொழி தாழ்ந்த மொழி என்றும், எண்ணுகிறார்கள். அப்படி எண்ணுவதற்கு எவ்வித நியாயமும் இல்லை. அவசியமும் இல்லை. நாலடியார், திருக்குறள் போன்ற மிக உயர்ந்த கருத்துகளைக் கொண்டிருக்கிற நூல்களை இயற்றிய இனத்தார். ஒரு சாதாரணமானவர்களாக இருக்க முடியாது. உயர்ந்த நாகரிகத்திற்கு உரியவர்-களாகத்தான் அவர்கள் இருக்க முடியும்.
தமிழ் மக்கள் தங்களுடைய தாய்மொழியை எண்ணித் தலைநிமிர்ந்து நடக்கலாம். அவர்கள் வேறு யாரைவிடவும் தாழ்வு என்று நினைக்காமல் தலைநிமிர்ந்து நடக்க வேண்டும் என்று ஜி.யு.போப்பு அவர்கள் எழுதிய முன்னுரையிலேயே அந்த வரிகள் இடம் பெற்றுள்ளன.
குறிப்பாகச் சொல்லப்போனால், நீ சூத்திரன் என்றோ, உன்னுடைய மொழி நீசமொழி – தாழ்ந்த மொழி என்றோ, வடமொழியிலிருந்து தமிழ்மொழி பிறந்தது என்றோ, எண்ணிக்கொள்ளுகிற இழிவான எண்ணங்களை விட்டுவிட்டு, “எங்கள் மொழி உயர்ந்தது’’ என்ற அந்த உணர்வோடு நடைபோடலாமென்று சொன்னவர் டாக்டர் கால்டுவெல். இதற்கெல்லாம் தகுந்த சான்றுகளைத் தெலுங்கு, கன்னடம், மலையாளம், துளு போன்ற தென்னக மொழிகளுடன் வடமொழியிலும் தேர்ச்சி பெற்றவராகி, தகுந்த ஆதாரங்களோடு உண்மை உணர்ந்து திராவிட மொழிகள் ஒரு தனிமொழிக் குடும்பம் என்றார். அந்தக் குடும்பத்தினுடைய மொழிகள் தனித்துப் பிறந்தவையே தவிர, அவை வடமொழியிலிருந்து பிறந்தவை அல்ல என்றும், இந்தக் குடும்பம் ஒரு தனித்தன்மை உடைய குடும்பம் என்றும் சான்றுகளுடன் நிறுவினார்.
வடமொழி தமிழ் மொழிக்கோ, திராவிட மொழிகளுக்கோ எவ்வளவு கடன் பட்டிருக்கிறதோ, அதே அளவிற்குத்தான் வடமொழிக்குத் தமிழ் கடன்பட்டிருக்கிறது. தமிழிலிருந்து வடமொழியில் இடம் பெற்றிருக்கும், தமிழ்ச் சொற்கள் ஏராளம் என்றார். ஆய்வுகளின் அடிப்படையில் மிக விரிவாகவும், சிறப்பான முறையிலும், “திராவிட மொழிகளின் ஒப்பிலக்கணம்’’ என்ற ஒப்பிலா உயர்நூல் ஒன்றினை, டாக்டர் கால்டுவெல் அவர்கள் 1858ஆம் ஆண்டு எழுதி முடித்தார். ஒரு 30 ஆண்டுக்காலம் அந்த ஆய்வினைத் தொடர்ந்து நடத்தி, ஓர் ஆராய்ச்சி நூலாக எழுதி வெளியிட்டார்கள். அதில் தமிழுக்கும் வடமொழிக்கும் எவ்வித உறவும் இல்லை. வடமொழி துணை இன்றியே தனித்து இயங்கக்கூடியது தமிழ்மொழி என்று அறுதியுட்டுக் கூறியுள்ளார். இங்கிலாந்து நாட்டுப் பல்கலைக்கழகம், அந்த ஆய்வினைப் பாராட்டி, அவருக்கு டாக்டர் பட்டம் வழங்கிச் சிறப்பித்தது.
இந்த ஒப்பியல் மொழி நூல் வெளிவருவதற்கு முன்னமே, எல்லீசர் என்ற ஓர் அறிஞர், “திராவிட மொழிகள், வடமொழி-யினின்றும் வேறுபட்டவை. அவை ஒரு தனிக்குடும்பம் என்ற கருத்தை அவரும் தெளிவுபட எழுதியிருக்கிறார். ஆனால், அதற்கான விரிவான விளக்கங்களைத் தந்தவர், டாக்டர் கால்டுவெல்அவர்கள். அவ்வாறு தமிழினுடைய பெருமையும் தமிழ் இலக்கியத்தினுடைய சிறப்பும், திருக்குறளின் மேன்மையும் பாதிரிமார்கள் பலராலும் மிகச் சிறப்பாகப் பாராட்டப்பட்டுள்ளன. அன்னிய நாடுகளைச் சேர்ந்த பாதிரிமார்கள் எப்படி நம்முடைய தமிழ் மொழியைப் பாராட்டினார்களோ, அதுபோல வடமொழியாளர்களில் எவரும் பாராட்டவில்லை. வடமொழியில் எத்தனையோ தமிழ்மொழிச் சொற்களை எடுத்துப் பயன்படுத்திக் கொண்டிருப்பினும் வடமொழியிலிருந்துதான் அனைத்து மொழி-களும் பிறந்தன என்று பொய்யுரை புகன்றனர்.
பரிதிமாற் கலைஞர் எழுதிய “தமிழ் மொழி வரலாறு’’ என்ற நூலில் ஓர் இடத்தில் குறிப்பிடுகிற கருத்து இது. “தமிழ்மொழியில் நீண்டகாலமாக வழக்கத்தில் இருந்த நூல்களை வடமொழியாளர்கள் சமஸ்கிருத பண்டிதர்கள் தங்களுடைய வடமொழியில் எழுதி வைத்துக்-கொண்டு, மூல நூல்களான ஓலைச்சுவடிகளைத் தீயிலிட்டுக் கொளுத்திவிட்டுப் பிறகு அந்நூல் வடமொழியிலேயே முதல் நூலாக இயற்றப்-பட்டது போலவும், மக்களிடத்திலே பேசி, அவர்களை ஏமாற்றுகிற காரியத்தில் ஈடுபட்டார்கள்’’ என்னும் கருத்தை எழுதியிருக்-கிறார். ஆகவே, தமிழ் மொழியின் உயர்வை உலகம் ஒப்புக்கொள்ளக்கூடிய ஒரு சூழ்நிலையைப் பாதிரிமார்களாலே தான் பெற்றது. அதனுடைய தொடர்ச்சியாகத்தான் இன்றைக்குச் செம்மொழித் தகுதியுடையது என்று தமிழ்மொழி, மத்திய அரசால் ஏற்றுக்கொள்ளப்பட்டிருக்கிறது.
* * *
மு.பி.பாலசுப்பிரமணியம்:
திராவிட இயக்கத்தினுடைய அழுத்தமான பாதிப்பு (மிஸீயீறீuமீஸீநீமீ)/ பங்களிப்பு. இந்த நூற்றாண்டில் தமிழகத்தில் மிக அதிகமாக இருக்கிறது. திராவிட இயக்கத்தினுடைய அந்தத் தாக்கம் வந்த காரணத்தினால்தான். தமிழ் இயக்கத்தில் தொய்வு ஏற்பட்டுவிட்டதாகச் சிலர் கருதிக் கொண்டிருக்கிறார்கள். உண்மை-யல்ல வெனினும், அப்படிப் பலர் கருதிக் கொண்டிருக்கிறார்கள். ஆனால், திராவிட இயக்கம், தமிழ் இயக்கத்திற்கு எதரானது அல்ல என்பதால்தான். பாவேந்தர் பாரதிதாசனே “தமிழியக்கம்’’ என்ற நூலை எழுதி வெளியிட்டிருக்-கிறார்கள். சேலம் மாநாட்டிலே நீதிக்கட்சியைத் திராவிடர் கழகம் என்று பெயர் மாற்றம் செய்திட, அறிஞர் அண்ணா அவர்கள் கொண்டு வந்த தீர்மானம் நிறைவேற்றப்-பட்டதனால், தமிழ்_தமிழர் என்னும் உணர்வு ஒதுக்கப்படுவதாகக் கருதிய முத்தமிழ்க் காவலர் கி.ஆ.பெ.விசுவநாதம் அவர்கள், திராவிடர் கழகம் என்று மாற்றக்கூடாது, அது தமிழர் கழகம் என்று இருக்க வேண்டும் என்று சொன்னதற்கு எது அடிப்படைக் காரணம்? திராவிடர் இயக்கம் என்பது, தமிழ் இயக்கத்திற்கு எதிரானது என்பது போன்ற ஒரு தோற்றத்தை உருவாக்க முனைகிறார்களே, அதைப் பற்றிய உங்களுடைய கருத்து யாது?
பேராசிரியர்:
சிலருக்கு ஒரு குழப்பமான சிந்தனை. தமிழ்_திராவிடம் என்று சொல்கிறபோது ஏற்படுகிறது. தமிழேதான் திராவிடம், திராவிடம்தான் தமிழ். தமிழினுடைய வழிமொழிகளாகத் தெலுங்கு, மலையாளம், கன்னடம் ஆகிய மொழிகள் அமைகின்றன. ஒருவேளை அவை நேரடியாகத் தமிழின் வழிமொழிகள் அல்ல எனினும், அவற்றின் தாய்மொழி தமிழ் என்று ஒப்புக்கொள்ள அவர்கள் தயாராக இல்லை என்றாலும், சகோதர மொழி என்று ஏற்றுக்கொள்வார்கள். தென்னக மொழிகள் ஒரு குடும்பம் என்பதும், அவை உடன்பிறப்பு மொழிகள் என்பதும் ஒப்புக்கொள்ளப்பட்ட உண்மை. இந்த மொழிகள் வடமொழிக்கு எந்த வகையிலும் கடன்பட்டவை அல்ல. அவற்றின் தனித்-தன்மையைச் சுட்டும் பெயர்ச்சொல்தான் திராவிடம். தமிழ் என்று சொல்கிறபோது, மொழியிலே ஆரியக் கலாச்சாரக் கருத்துகளும் காலப்போக்கில் கலந்து இருக்கிற காரணத்தால், தமிழர்கள் பலர் தமிழ் என்று சொல்லி ஆரியக் கலாச்சார எண்ணத்தையே பின்பற்றுகின்றனர். திராவிடர் என்று சொல்வதனால், திட்ட-வட்டமான தெளிவும், துணிவும் ஏற்படுகிறது. எனவே, தமிழர்களின் தனித் தன்மைக்கு வலுவூட்டுவதற்கு, தமிழர்கள் தலைநிமிர்ந்து நிற்பதற்கு, தமிழினம் ஒரு தனி இனம் என்னும் வரலாற்று உண்மையைச் சொல்வதற்கு, பழந்தமிழர் நாகரிகச் சின்னமாக ஆதிச்சநல்லூர் மட்டுமன்றி, சிந்துவெளி நாகரிகமான மொகஞ்சதாரோ, அரப்பாவை இணைப்பதற்கு, தொன்னாளில் தமிழர்கள் இந்தியா முழுவதும் பரவி இருந்து ஆட்சி நடத்தியவர்கள் என்னும் உண்மையை நாட்டுவதற்கு, தமிழர்களின் நாகரிகம் திராவிட நாகரிகம் என்ற பெயரால் மெசபடோமியா வரை பரவியுள்ள அந்த நாகரிகத்திற்கு உரியவர்கள் என்பதை எடுத்துக்காட்ட ஏற்கப்பட்ட இனப்பெயரே திராவிடம் என்பது, உலகத்திற்கே திராவிடர்கள் வழிகாட்டுகிற ஓர் இனமாகத் திகழ்ந்தார்கள்.
தமிழ்மொழி உலக மொழிகட்கெல்லாம் தாய்மொழி என்று எடுத்துச்சொல்ல _ அதன் மூலம் தமிழுக்குப் பெருமை சேர்க்கத்தான் நாம் திராவிடம் என்னும் சொல்லைப் பயன்-படுத்துகிறோம். அரசியல் கண்ணோட்டத்தில் பார்த்தால், தென்னாடு முழுவதும் திராவிடம் என்று சொல்கிறபோது, தெலுங்கர்களோ, கன்னடியர்களோ, மலையாளிகளோ அந்தக் கருத்தை ஏற்று உடன்பட்டு வரவில்லை என்றாலும், வரலாறு அந்தக் கருத்தை ஏற்றுக்கொள்ளச் செய்யும். வரலாற்று அடிப்படையில் திராவிடர்கள் என்று சொல்வதை எவரும் மறுக்க முடியாது.
நடைமுறையில் தமிழர்களுடைய தலைமை-யிலே உள்ள இயக்கத்தைப் பிற மாநிலத்தவரான தெலுங்கரோ, கன்னடியரோ, மலையாளியோ ஏற்காமல் இருக்கலாம். அது அவர்கள் விருப்பம். டாக்டர் டி.எம்நாயரைப் போலவோ, சர்.பிட்டி.தியாகராயரைப் போலவோ, திராவிட இனப்பெயரை அவர்கள் ஏற்காமல் இருக்கலாம். ஆனால், அவர்களும் திராவிடர்களே. ஆரியத்தின் ஆதிக்கத்தை ஏற்காதவர்கள் எல்லாம் திராவிடர்கள் என்று சொல்வதனால், தமிழன் வலிமை பெறுகிறான். தமிழின் தனித்தன்மையைக் காக்கத் திராவிட இன உணர்வு அவசியம் என்ற காரணத்தினாலே-தான். ஆரியக் கலாச்சாரத்திலிருந்து விடு-படுவதற்காக _ வருணாசிரம தருமத்தை எதிர்ப்-பதற்காகத் தந்தை பெரியாரும், பேரறிஞர் அண்ணாவும், திராவிடம் என்ற அச்சம் முத்தமிழ்க் காவலருக்கு இருந்த காரணத்தால், அவர் இதிலே கலந்துவிடக் கூடாது என்-பதற்காகத்தான் தனியாக விலகி நின்றார்கள்.
(பொதிகைத் தொலைக்காட்சிக்கு பேராசியர் அளித்த பேட்டியே இந்நூல்)