கற்றல், கற்பித்தல் இதைத் தாண்டி பள்ளி ஆசிரியரால் வேறு என்ன செய்துவிட முடியும் என்ற கேள்விக்கு, அரசு அதிகாரிகளை உருவாக்க முடியும் எனச் செயல்படுத்திக் காட்டி அனைவரையும் ஆச்சரியப்பட வைக்கிறார் தேனி மாவட்டம், அல்லிநகரம் அரசு மேல்நிலைப் பள்ளித் தமிழாசிரியர் கோ. செந்தில்குமார்.
வழிப்போக்கர்கள் இளைப்பாற உதவும் “திண்ணை’யின் பெயரால், இன்னும் சில நல்ல உள்ளங்களை இணைத்துக் கொண்டு இவர் இந்தச் சேவையில் ஈடுபட்டுள்ளார். அரசுப் பள்ளியில் பிளஸ் 2 முடித்த பிறகும், கல்லூரிப் படிப்பை முடித்த பிறகும் திக்குத் தெரியாமல் தவிக்கும் மாணவர்களுக்கு உரிய வழி-காட்டுதலை வழங்கி வருகிறார்.
ஏழை மாணவர்களுக்கான இலவசப் பயிற்சி வகுப்புகள் என்பதால், தேனி என்.ஆர்.டி நகரில் உள்ள என்.ஏ. கொண்டுராஜா உயர்நிலைப் பள்ளி வளாகத்தில் திண்ணை அமைப்பின் பயிற்சி வகுப்புகளை நடத்துவதற்கு அந்தப் பள்ளி நிர்வாகம் அனுமதி வழங்கியிருக்கிறது.
கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்னர் தொடங்கிய இந்தத் திண்ணை அமைப்பின் மூலம் இதுவரை 150 அரசு அதிகாரிகளை செந்தில்குமாரும், அவரது குழுவினரும் உருவாக்கியுள்ளனர்.
இந்த அமைப்பின் பணிகள் குறித்து செந்தில்குமார் கூறியதாவது:
கடந்த 2006-ஆம் ஆண்டில் நான் போட்டித் தேர்வு எழுதிய போது எனக்கு மிகவும் கடினமாகத் தோன்றியது. ஆசிரியரான நானே இந்தத் தேர்வை எழுத சிரமப்பட்ட போது, கிராமப்புற மாணவர்களால் எப்படி இதை எதிர்கொள்ள முடியும் என்ற சிந்தனை ஏற்பட்டது.
அப்போதுதான் 2012 ஆம் ஆண்டு இறுதியில் ஓய்வு பெற்ற அரசுப் பள்ளித் தலைமை ஆசிரியர்கள், அரசுப் பணியாளர்களுடன் இணைந்து, தமிழை மொழிப் பாடமாகக் கொண்டு 15 மாணவர்களுக்குப் பயிற்சி அளித்தோம். அவர்களில் 5 பேர் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத் தேர்வை எழுதித் தேர்ச்சி பெற்றனர். அது முதல் 24 பேர் கொண்ட அமைப்பாக “திண்ணை’ வளர்ச்சி பெற்றதுடன், 1,500 மாணவர்களுக்கு இதுவரை பயிற்சி அளித்திருக்கிறோம். இவர்களில் 170-க்கும் மேற்பட்டோர் அரசுப் பணி வாய்ப்பைப் பெற்றுள்ளனர்.
மாணவர்களுக்கு நுழைவுத் தேர்வு: நாங்கள் இலவசமாக வகுப்பெடுப்பதால், திண்ணை அமைப்பு மூலம் பயிற்சி பெற விரும்பும் மாணவர்களுக்கு முதலில் எளிதாக நுழைவுத் தேர்வு நடத்துகிறோம். இதில் தேர்ச்சி பெறுபவர்களில் 250- 300 மாணவர்கள் கொண்ட 5 பிரிவுகளாகப் பிரித்து பயிற்சி அளிக்கிறோம். இந்த மாணவர்களுக்கு சனி, ஞாயிறுகளில் காலை முதல் இரவு வரை, 5 மாதப் பயிற்சி அளிக்கிறோம்.
அரசுப் பணி போட்டித் தேர்வுக்குப் பயிற்சி அளிப்பதற்காக, 1,200 பக்கம் கொண்ட புத்தகத்தைத் தயாரித்துள்ளோம். மேலும், பிற நகரங்களிலிருந்தும் கருத்தாளர்கள் வந்து வகுப்பெடுக்கிறார்கள். அரசுத் தேர்வை எதிர்கொள்வதற்கு முன்பாக, எங்களது அமைப்பில் பயிற்சி பெறுபவர்கள் இரண்டு முறை மாதிரித் தேர்வுகளை எழுதிவிடுவர். ஆட்டோ ஓட்டும் ஒருவர் தற்போது குரூப்-2 தேர்வில் தேர்ச்சி பெற்றுள்ளார். இவ்வாறு அனைத்து அரசுத் துறைகளிலும் எங்களது மாணவர்கள் இடம் பெற வேண்டும். அய்ஏஎஸ் அதிகாரிகளையும் உருவாக்க வேண்டும்.
சாளரம்-முற்றம்: அரசுப் பள்ளிகளில் நன்றாகப் படித்து உயர் கல்வி கற்க வசதியில்லாத மாணவர்களைக் கண்டறிந்து, மற்ற நல்ல உள்ளங்களின் மூலம் அவர்களின் கல்விக் கட்டணத்தைச் செலுத்த வைக்கிறோம். அதன்படி, தற்போது 12 மாணவர்களைத் தேர்ந்தெடுத்து அவர்களுக்கு கல்லூரியில் முதல் பருவக் கட்டணம் செலுத்தப்பட்டுள்ளது. இந்த முயற்சியை “சாளரம்’ என்று அழைக்கிறோம்.
இதைத் தொடர்ந்து அரசுப் பள்ளிகளில் பயிலும் மாணவர்களில் திறனும் ஆர்வமும் உள்ளவர்களைத் தேர்வு செய்து, அவர்களுக்குப் பயிற்சி தந்து அய்அய்டி வரை அழைத்துச் செல்வதே எங்களின் அடுத்த முயற்சி. இந்த முயற்சிக்கு “முற்றம்’ என்று பெயரிட்டுள்ளோம். தற்போது இதற்கான முதல் கட்ட முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. பள்ளிகளில் படிக்கும் மாணவர்களை தேர்வுகளில் தேர்ச்சி பெறச் செய்வது மட்டும்தான் ஆசிரியரின் பணி என்று கருதி செயல்படக் கூடாது. அந்த மாணவர்களை வாழ்வில் நல்ல நிலையில் அமர்த்தி, சிறந்த மனிதர்களாக்குவதும் ஆசிரியரின் கடமைதான் என்பதை ஆசிரியப் பணியில் ஈடுபட்டுள்ள அனைவரும் உணர வேண்டும் என்றார் அவர்.
புதியதொரு சமுதாயத்தை உருவாக்குவதும், சமுதாயத்தில் மாற்றத்தைக் கொண்டு வருவதும் ஆசிரியர்களால் முடியும் என்பதைத் தனது செயல்பாடுகளால் நிரூபித்து வருகிறார் செந்தில்குமார் என்றால் அது மிகையல்ல.