எத்தனைக் காலம்தான் ஏழைகளை ஏமாற்றுவார்கள்?

செப்டம்பர் 01-15

உலகில் இந்தியாவுக்கு செல்வக் குவிப்பில் 7ஆவது இடமாம்! என்னே பெருமை! என்னே பெருமை!

பி.டி.அய் செய்தி நிறுவனம் தந்துள்ள ஒரு செய்தி இதோ:_

உலக அளவில் அதிக சொத்து மதிப்பு கொண்ட செல்வந்த நாடுகளின் பட்டியலில் இந்தியா 7ஆவது இடத்தைப் பிடித்துள்ளது. இந்திய பெரும் செல்வந்தர்களின் தனிப்பட்ட சொத்து மதிப்பு மட்டும் 5,60,000 கோடி டாலர்களாகும். அதிக செல்வந்தர்கள் கொண்ட நாடுகளின் பட்டியலில் அமெரிக்கா முதலிடத்தில் உள்ளது.

`நியூ வேர்ல்டு வெல்த்’ என்கிற அமைப்பின் அறிக்கையில் இது தெரிய வந்துள்ளது. இந்தப் பட்டியலில் அமெரிக்கா முதலிடத்தில் உள்ளது. அமெரிக்காவில் உள்ள செல்வந்தர்களின் தனிப்பட்ட சொத்து மதிப்பு 48,90,000 கோடி டாலர்களாகும். இதற்கு அடுத்து சீனா உள்ளது. சீன செல்வந்தர்களின் தனிப்பட்ட சொத்து மதிப்பு 17,40,000 கோடி டாலர்களாகும். மூன்றாவதாக ஜப்பான் இடம் பிடித்துள்ளது. ஜப்பான் பணக்காரர்களின் தனிப்பட்ட சொத்து மதிப்பு 15,10,000 கோடி டாலர்களாகும்.

7ஆவது இடத்தில் உள்ள இந்தியாவுக்கு அடுத்து கனடா, ஆஸ்திரேலியா, இத்தாலி நாடுகள் இடம் பிடித்துள்ளன. 8-ஆவது இடத்தில் உள்ள கனட செல்வந்தர்களின் சொத்து மதிப்பு 4,70,000 கோடி டாலர்களாக உள்ளது. 9-ஆவது இடத்தில் உள்ள ஆஸ்திரேலிய பணக்காரர்களின் தனிப்பட்ட சொத்து மதிப்பு 4,50,000 கோடி டாலர்களாகவும், பத்தாவதாக உள்ள இத்தாலி பணக்காரர்களின் சொத்து மதிப்பு 4,40,000 கோடி டாலர்களாகவும் உள்ளன என்று அந்த ஆய்வு கூறியுள்ளது.

பட்டியலில் 4ஆ-வது இடத்தில் இங்கிலாந்து உள்ளது. இங்கிலாந்து செல்வந்தர்களின் தனிப்பட்ட சொத்து மதிப்பு 9,20,000 கோடி டாலர்களாக இருக்கிறது. அதற்கடுத்து ஜெர்மனி பணக்காரர்களின் சொத்து மதிப்பு 9,10,000 கோடி டாலர்களாகவும், பிரான்ஸ் பணக்காரர்களின் சொத்து மதிப்பு 6,60,000 கோடி டாலர்களாகவும் உள்ளன.

இந்தப் பட்டியல் பெரும் செல்வந்தர்களின் நிகர சொத்து மதிப்பு அடிப்படையில் வரிசைப்படுத்தப்பட்டுள்ளது. முக்கியமாக செல்வந்தர்களின் கட்டிடங்கள், ரொக்கம், பங்கு மதிப்புகள், மேற்-கொண்டிருக்கும் தொழில்கள் அடிப்படையிலும், அவர்களது கடன்கள் மதிப்பை கழித்தும் மதிப்பிடப்-பட்டுள்ளது. இந்த செல்வந்தர்கள் அரசு சார்ந்த பாண்டுகள் மற்றும் முதலீட்டு முயற்சிகளின் மதிப்பை இந்த ஆய்வு கணக்கில் எடுத்துக் கொள்ளப்பட-வில்லை என்றும் அந்த அறிக்கை கூறியுள்ளது.

உலக அளவில் அதிக மக்கள் தொகை கொண்ட இந்தியா உலக செல்வந்தர்கள் பட்டியலில் முதல் 10 இடங்களுக்குள் இடம் பெற்றுள்ளது. அதே சமயத்தில் மிகக் குறைந்த மக்கள் தொகை கொண்ட ஆஸ்திரேலியாவும் இந்த பட்டியலில் இடம் பிடித்துள்ளது சுவராஸ்மானது என்று அந்த அறிக்கை குறிப்பிட்டுள்ளது. ஆஸ்திரேலிய மக்கள் தொகை 2.2 கோடி பேர் என்பது குறிப்பிட்டத்தக்கது.

பெரும் பணக்காரர்கள் உருவாவதில் சீனாவின் வளர்ச்சி கடந்த அய்ந்து ஆண்டுகளில் அபரிமிதமாக உள்ளது என்று குறிப்பிட்டுள்ளது. குறிப்பாக பணக்காரர்களின் தனிப்பட்ட சொத்து மதிப்பு உயர்ந்துள்ளது. ஆஸ்திரேலியா மற்றும் இந்தியாவின் வளர்ச்சி மிகவும் வலுவானதாக இருக்கிறது என்றும் அந்த ஆய்வு கூறியுள்ளது. கடந்த ஒரு வருடத்தில் ஆஸ்திரேலியாவும், கனடாவும் இத்தாலியை முந்தியுள்ளன.

செல்வந்தர்களின் தனிப்பட்ட சொத்து மதிப்பு அடிப்படையில் மதிப்பிடப்படும் இந்த செல்வந்த நாடுகளின் பட்டியல் ஜூன் 2016 நிலவரப்படி மதிப்பிடப்பட்டுள்ளது.
– பி.டி.அய்

இந்தியாவின் 125 கோடி மக்களும் செல்வத்தில் புரளுகிறார்களா? காரணம், செல்வத்திற்கே கடவுளான “லட்சுமி’’ இங்கேதானே வாசம் செய்கிறாள்? அதனாலோ? அப்படியானால் பெரிதும் ஹிந்து மதத்தவர் அல்லாதவர் ஆளும், “லட்சுமியை’’ அறியாதார் வாழும் நாடுகள் அல்லவா மேலே 6 இடங்களில் உள்ளன!

அது சரி. நம் நாட்டு மக்கள் எல்லாம் திடீர் “குபேரர்கள்’’ ஆகிவிட்டார்களா?

இந்த செல்வக்குவிப்பு _ ஏழை, எளிய, பாட்டாளி, _ விவசாய _ அன்றாடம் காய்ச்சிகளின் வாழ்வை வளப்படுத்திக் காட்டியுள்ளதா? இல்லையே.

விவசாயிகளின் தற்கொலைகளும், வங்கிக் கடனைத் திருப்பித் தர இயலாமல் தற்கொலை செய்து மாண்டு மடியும் _ வறுமையினால் சாகடிக்கப்பட்டவர் எண்ணிக்கை பெருகியுள்ளதா? குறைந்துள்ளதா?

எனவே, இந்தியா ஏழைகள் வாழும் பணக்காரர்களின் நாடு. அடானிகள், அம்பானிகள், டாட்டா, பிர்லா போன்ற பல பெரு முதலாளிகளின் _ “புராண மொழியில்’’ சொர்க்க பூமியாக உள்ளதுதான் பெருமையா?

வறுமைக்கோட்டுக்கு கீழே உள்ளவர்களின் BPL – Below the Poverty Line — மக்கள்தொகை எவ்வளவு?

வறுமை, வேலை கிடைக்காத திண்டாட்டம், ஒருபுறம்; கொள்ளைபோட்டுச் சுரண்டி சேர்க்கப்படும் கறுப்புப் பணம் _ இத்தியாதி!

இதுதான் 70 ஆண்டு “சுதந்திரத்தின்’’ பலனா?

“ஒய்யாரக் கொண்டையாம், தாழம்பூவாம்
உள்ளே இருப்பது ஈறும் பேனாம்!’’
என்ற நிலைதானே!

பணக்காரர்களின் ஏகாதிபத்தியம்தான் வளர்ந்துகொண்டே போகிறது! _ ஆட்சியாளர்கள், மத்தியில் உள்ள பா.ஜ.க. கூட்டணி இதனை எப்படி மாற்றப்போகிறது?  கறுப்புப் பணத்தை எல்லோருக்கும் தலா 15 லட்ச ரூபாய் என்று பிரித்துக் கொடுத்தா?

எத்தனைக் காலம்தான் ஏழைகள் ஏமாறுவார்கள்?

கி.வீரமணி,
ஆசிரியர்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *