கடலூர் மாவட்டம் கிதம்பரம் அருகே இருக்கும் சற்றே பெரிய கிராமம், பரங்கிப்-பேட்டை. இங்கிருந்து பிச்சாவரம் கிள்ளை பகுதிகளுக்குச் செல்லும் ஆற்றுப்பாலத்தை ஒட்டிய அந்தப் பெரிய நிலப்பரப்பு கருவேலம்புதர் மண்டிக் கிடக்கிறது. வெள்ளாற்றின் உப்புநீர் அந்தத் தரைப்பகுதியை நனைத்து நனைத்துச் செல்கிறது. இங்கேதான் ஒரு காலத்தில் ஆசியாவின் முதல் இரும்புத் தொழிற்சாலை இயங்கிக் கொண்டிருந்தது. முதல்தரமான இரும்புத் தூண்களையும் பாளங்களையும் இங்கே உருவாக்கினார்கள்.
அப்போது வெள்ளைக்காரர்கள் இந்தியாவை ஆண்டுகொண்டிருந்தார்கள். சேலம் மாவட்டம் கஞ்சமலையில் இரும்புத்தாது அதிகம் கிடைத்தது. சேலம் மாவட்டத்தின் சேர்வராயன் மலையிலிருந்து உற்பத்தியாகும் வெள்ளாறு. கடலில் கலக்கும் இடம் பரங்கிப்பேட்டை. அதோடு இங்கே சென்னை, நாகப்பட்டினதுக்கு இணையான கப்பல் துறைமுகம் ஒன்றும் அந்தக் காலத்தில் இருந்திருக்கிறது. இதனால்தான் இரும்புத் தொழிற்சாலை அமைக்கும் இடமாக பரங்கிப்பேட்டையைத் தேர்ந்தெடுத்திருக்-கிறார்கள். இரும்புத் தாதுக்களை சேலத்தி-லிருந்து வெள்ளாற்றின் மூலமே படகில் கொண்டுவந்து பரங்கிப்பேட்டை தொழிற்-சாலையில் வைத்து பல்வேறு வடிவங்களில் இரும்பு தயாரித்திருக்கிறார்கள்.
அந்தக் காலத்துல கப்பல்ல வெளிநாடு போகணும்னா சென்னை, நாகப்பட்டினத்திற்கு அடுத்து பரங்கிப்பேட்டை துறைமுகம்தான் அதிகம் பயன்பட்டிருக்கு. இதனால இங்க சுங்கத்துறை அலுவலகம், இமிகிரேஷன் அலுவலகம் எல்லாம் இருந்திருக்கு. மக்கள் கப்பல்ல ஏறவும், சரக்குகளை ஏற்றவும் இந்த இடத்துல ஒரு பெரிய ஜெட்டி (சரக்கு ஏற்றும் தளம்) அமைச்சிருந்தாங்க. ஆனா காலப்-போக்குல எல்லாமே படிப்படியா அழிஞ்சி இப்ப இந்த துண்டு இரும்புகள்தான் மிச்சமிருக்கு.
பரங்கிப்பேட்டையின் பழங்கால வரலாறு மலைக்க வைக்கிறது. கி.பி.11ஆம் நூற்றாண்டில் முதலாம் ராஜேந்திரசோழனின் ஆட்சிக் காலத்தில் பரங்கிப்பேட்டையும், பிச்சாவரம் அருகே உள்ள தேவிக்கோட்டை என்ற இடமும் கப்பற்படைத் தளங்களாக இருந்துள்ளன. பரங்கிப்பேட்டையில் கடல் நீரோட்டம் மணிக்கு 20 கிலோமீட்டர் வேகத்தில் இருந்ததால், இது மரக்கலன்களை இயக்க சரியான இடம் எனத் தீர்மானித்திருக்கிறான் ராஜேந்திரன்.
பிற்காலத்தில் செஞ்சியைத் தலைநகரமாகக் கொண்டு ஆட்சி செய்த இரண்டாம் கிருஷ்ணப்ப நாயக்கர் என்ற மன்னன்தான் இதை ஒரு கடற்கரை நகரமாக நிர்மாணித்தவர். பின்னாளில் போர்ச்சுகீசியர்கள் இங்கும், தரங்கம்பாடி என்ற இடத்திலும் துறைமுகத்தை ஏற்படுத்தினர். புதிய துறைமுகம் என்ற பெயரில் அவர்கள் இதை ‘போர்ட்டோ நோவோ’ என அழைத்திருக்கின்றனர். பிற்காலத்தில் எல்லாமே பிரிட்டிஷார் வசம் வந்தன.
பரங்கிப்பேட்டை இரும்பாலையில் தயாரானவை ‘போர்டோநோவோ இரும்பு’ என்றே அழைக்கப்பட்டிருக்கிறது. துருப் பிடிக்காத தரமான இரும்பாக மதிக்கப்பட்ட இது. இன்றும் பல பகுதிகளில் காலம் கடந்து உறுதியாக நிற்கிறது. சென்னையில் இந்த இரும்புக்கு சாட்சி சொல்வது எழும்பூர் ரயில் நிலையத்தில் இருக்கும் ஒரு நினைவுத் தூண். ‘மேட் இன் போர்ட்டோநோவோ’ என அந்தத் தூணில் பொறிக்கப்பட்டிருப்பதை இப்போதும் பார்க்கலாம்.
பரங்கிப்பேட்டையில் இரும்பை உருக்கு-வதற்கு ஆங்கிலேயர்கள் மரக்கரியைப் பயன்படுத்தியிருக்கிறார்கள். அதற்காக இங்கு கடற்கரையை ஒட்டிய பகுதிகளில் சவுக்கு பயிரிட்டு வளர்த்திருக்கிறார்கள். புகழ்பெற்ற லண்டன் பாலத்தின் உருவாக்கத்துக்குக் கூட இங்கிருந்து இரும்புக் கம்பிகள் அனுப்பப்-பட்டிருக்கின்றன. முக்கிய ஆயுதங்களும்கூட இங்கு தயாரிக்கப்பட்டுள்ளன. வெள்ளாற்றை ஒட்டி அமைந்திருக்கும் பக்கிங்காம் கால்வாய் வழியாக அவை சென்னைக்கு அனுப்பப்பட்டு, அங்கிருந்தும் ஏற்றுமதி ஆகியிருக்கிறது.
“இரும்புத் தாதுக்களை வெட்டியெடுப்பது, உருக்கி வார்ப்பது, தகடாக்குவது எனப் பல்வேறு பணிகளுக்காக ஏராளமான தொழிலாளர்கள் இங்கே வேலை செய்திருக்-கிறார்கள். பணியாளர்கள் இறந்துவிட்டால் அவர்களின் உடலை சுமார் 2 கிலோமீட்டர் தூரத்தில் உள்ள வண்ணாரபாளையம் என்னும் இடத்தில் அடக்கம் செய்திருக்கிறார்கள். இறந்தவரின் பெயரை இரும்புத் தகட்டில்-பொறித்து கல்லறையில் பொறித்து வைத்திருகிறார்கள். இன்றும் மிச்சமிருக்கும் அந்தக் கல்லறைகளில் ராபர்ட் உட் என்பவரின் கல்லறையில் மட்டுமே தற்போது இரும்புத்தகடு எஞ்சியுள்ளது.
—————————————————————————————————————————————————————————–
கல்லூரி மாணவிகளுக்கு
ரூ.2.5 லட்சம் ஸ்காலர்ஷிப்
மருத்துவம், பொறியியல், தகவல் தொழில்-நுட்பம், பார்மஸி, ஆயுர்வேதம், பயோ டெக்னாலஜி மற்றும் அறிவியல் படிப்புகளில் முதலாண்டில் படிக்கும் 50 மாணவிகளுக்கு லோரியல் இந்தியா ஸ்காலர்ஷிப் வழங்கப்-படுகிறது. தேர்வு செய்யப்படும் மாணவிகளுக்கு ஆண்டுக்கு ரூ.2.5 லட்சம் வீதம் உதவித்தொகை வழங்கப்படும்.
இந்தக் கல்வி உதவித்தொகை பெற விரும்பும் மாணவிகள், பிளஸ் டூ தேர்வில் இயற்பியல், வேதியியல் கணிதம் அல்லது உயிரியல் பாடங்களில் 85 சதவீத மதிப்-பெண்கள் பெற்றிருக்க வேண்டும். குடும்பத்தின் ஆண்டு வருமானம் ரூ.4 லட்சத்துக்கு மேல் இருக்கக்கூடாது.
இணைய தளத்திலிருந்து விண்ணப்பத்தைப் பதிவிறக்கம் செய்து தகுந்த சான்றிதழ்களுடன் The Scholarship Cell. L’Oreal India Pvt/ Ltd/. 8th Floor A wing Marathon Futurex, NM Joshi Marg Lower Parel, Mumbai – 400 013 முகவரிக்கு அனுப்ப வேண்டும். விண்ணப்பத்துடன் உங்களைப் பற்றிய தகவல்களுடன், நீங்கள் தேர்ந்தெடுத்துள்ள அறிவியல் படிப்பு குறித்தும் 600 வார்த்தை-களில் எழுதி அனுப்ப வேண்டும்.
விண்ணப்பிக்க கடைசி தேதி: 10.7.2016
விவரங்களுக்கு: www.foryoungwomeninscience.com