கேள்வி: கண்களைக் கட்டிவிட்டதற்குப் பின்.. நீதி தேவதைக்கு எப்படி நீதித் தராசின் முள் தெரியும்? – நெய்வேலி க. தியாகராசன், கொரநாட்டுக்கருப்பூர்
பதில்: நீதி தேவை. வாதாடுவோரைப் பார்க்கக்கூடாது என்பதற்காக கண்கள் கட்டப்பட்டுள்ளன. தராசு முள் – பற்றி பார்க்க வேண்டியது மற்றவர்களே தவிர, நீதி தேவதை அல்ல என்பது தத்துவமாக இருக்கலாம்!
கேள்வி: தங்களின் கீதையின் மறுபக்கம் என்ற நூலில் எனது கருத்தினை மறுக்க உங்களுக்கு உரிமையுண்டு எனக் குறிப்பிட்டுள்ளீர்கள். இதுவரை எத்தனை மறுப்புக் கடிதங்கள் வந்துள்ளன? வந்த கடிதம் பற்றி தங்கள் கருத்து?
ஜே. அய். ஏ. காந்தி, எரும்பி
பதில்: குமரி நண்பர் ஒருவர் ஒரு நூல் – மறுப்பு போல எழுதினார். அதில் சாரமில்லை. மற்றபடி மாறுபட்ட கருத்துகள் வரவில்லை. ஒப்புக் கொண்டவர்கள், விழிகள் திறந்தன என்று வியந்தோரே அதிகம்.
கேள்வி: துறவி – சாமியார்கள் பெயரில் சொத்து சேர்க்கக் கூடாது என்றும் வங்கிக் கணக்கு தொடங்கக் கூடாது என்றும் சட்டம் செய்யப்படுமா?
ச. நா. சாமிசம்மாரன் சத்துவாச்சாரி, வேலூர்
பதில்: உண்மையான சமதர்ம ஆட்சி நடந்தால் அப்படி ஒரு சட்டம் வர வாய்ப்பு உண்டு.
கேள்வி: தமிழக பள்ளிகளில் மனிதனை உருவாக்கும் கல்விமுறை தற்போது இருக்கிறதா? த. அரவரசன், சென்னை
பதில்: இல்லை; இல்லவே இல்லை. மனிதர்களை, சிந்திக்கத் தெரியாத இயந்திரங்களாக்கும் கல்வி முறையே உள்ளது தற்போது!
கேள்வி: எல்லா தெய்வமும் ஒன்றுதான் என்று சொல்லுகிறார்கள். ஆனால், சில தெய்வங்களைத் திருப்திப்படுத்த இப்போதும் நரபலி கொடுக்கப்படுகிறது. ஆகவே, இந்த நரபலி தெய்வங்களும், சிவன் பிரமன், விஷ்ணு, முருகன், விநாயகன் ஆகிய எல்லா தெய்வங்களும் ஒன்றுதானா?
ந. பொற்கோ, ஆற்காடு
பதில்: நீங்கள் காட்டிய சிவன், பிரம்மா, விஷ்ணு, முருகன், விநாயகன் எல்லாம் நரபலியை பற்பல கதைகளில் பெற்றுள்ளதாக புராணம் உள்ளதே! பின் என்ன வேறுபாடு?
கேள்வி: கடந்த சட்டப் பேரவைத் தேர்தலில் பெரும்பாலான திராவிடர்கள் ஆரியர்களாக மாறிவிட்டார்களோ?
சு. விந்தன், கோவை
பதில்: அப்பட்டமாக இல்லை; ஆரிய மாயையில் சிக்கி விட்டார்கள்; கேட்டால் கோபம் என்கின்றனர். கோபத்தில் எதை வேண்டுமானாலும் உண்ணுவது கொடுமை அல்லவா?
கேள்வி: இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி குறைவதற்கு, பொருளாதாரக் கொள்கை மட்டும்தான் காரணமா? ந. அருள், பாராஞ்சி
பதில்: உலகப் பொருளாதார ஆய்வாளர்கள் கண்ணோட்டத்தில் 1. ஜாதி முறை, 2. தலைவிதி நம்பிக்கை, 3. பொருளாதாரக் கொள்கை இவைகளின் கூட்டுதான் காரணம்!
கேள்வி: விசாரணைக் கைதியை, காவல்துறையினர் அடித்துதான் விசாரிக்க வேண்டுமென்று, குற்றவியல் விசாரணைச் சட்டம் எத்தனையாவது பிரிவு வகை செய்கிறது? – உ. கோ. சீனிவாசன், திருப்பயற்றங்குடி
பதில்: அப்படி எந்தப் பிரிவும் கூறவில்லை என்பது மட்டுமல்ல; அடித்து விசாரிப்பது அச்சட்டத்திற்கு விரோதம் என்பதால் நீதிபதி உங்களை போலீசார் துன்புறுத்தினார்களா? என்ற கேள்வியைக் கேட்கும் முறை அமலில் உள்ளது.
கேள்வி: நான் அக்மார்க் ஆத்திகன். பிறப்பும் இறப்பும் இறைவன் செயல் என நம்புகின்றவன். கோவையில் இப்போது தலைக்கவசம் அணிய காவல்துறை வலியுறுத்துவதுடன் கடும் நடவடிக்கையும் எடுத்து வருகிறது. இது எனது கடவுள் நம்பிக்கைக்கு எதிரானது. என்ன செய்யலாம்?
கே.கே. பாலசுப்ரமணியன், குனியமுத்தூர்
பதில்: பலே பலே – அக்மார்க் எதற்கெல்லாம் பயன்படுகிறது என்பதை இப்போதுதான் புரிந்துகொண்டேன்.
காவல் துறையே கடவுள் சக்தி – நம்பிக்கை தத்துவத்திற்கு எதிரானதுதான்! எல்லாம் அவன் செயல். அவனின்றி ஓரணுவும் அசையாது என்கிறபோது கொலை, கொள்ளைகளுக்குக்கூட தண்டிப்பது தவறு அல்லவா? அப்படி இருக்க தலைக் கவசம் (பிமீறீனீமீ) அணிவது கடவுள் ஆணைக்கு விரோதம்தான். கடவுள் நம்மை எல்மெட்டோடு படைக்கவில்லையே….! என்ன சொல்கிறீர்கள்?
கேள்வி : நதிநீர் தேசியமயமாக்க மத்திய அரசு நிதிக்குத் தயங்குவதாகத் தெரிகிறது. சாமியார்களிடம் உள்ள சொத்துகளை தேசியமயமாக்கினால் தேவையான நிதி கிடைத்துவிடுமே. மத்திய அரசு யோசிக்குமா?
அ. மலர்விழி, வாலாஜாபாத்
பதில்: சாமியார்கள், திருப்பதி, பத்மனாபசாமி, சபரிமலை முதலிய கோயில்களின் சொத்துகளை இப்படி நீங்கள் சொன்ன நல்ல காரியங்களுக்குப் பயன்படுத்தலாமே!
துணிச்சலான அரசுகள் இல்லையே! என் செய்வது?