கலகலப்பாகச் சிரித்துப் பழகுகிறவர்கள் நட்பைவிடக் கூடாது
உலகில் கிடைத்தற்கரியது எதுவென்றால் கலகலப்பாகச் சிரித்துப் பழகுகிறவர் கிடைப்பதுதான். சிலருடன் 5 மணி நேரம் இருந்தாலும், அரைமணி நேரம் கழிந்ததுபோல் இருக்கும். சிலரிடம் அரைமணி நேரம் கழிக்கவே நெளிய வேண்டி வரும்.
ஒன்று நாம் கலகலப்பாக இருக்க வேண்டும்; அல்லது கலகலப்பாக இருப்பவர்-களோடு இருக்க வேண்டும். குழந்தைகளோடு விளையாடிப் பாருங்கள். எப்படிப்பட்ட மன இறுக்கமும் மறைந்து போகும். மனைவியிடம் தோற்றுப் பாருங்கள்; மகிழ்ச்சி அங்கே அலை மோதும். நண்பர்களுக்கு உதவிப் பாருங்கள். உங்களுக்காக எதையும் செய்வர். உறவுகளை மதித்துப் பாருங்கள், உங்கள் சுமையைத் தூக்கிச் சுமப்பர்.
வரட்டுக் கவுரவத்தில் வாழ்க்கையைத் தொலைக்காமல், விட்டுக் கொடுத்து, அனுசரித்து நடந்து பாருங்கள். வந்த சிக்கல்கூட வழியிலே திரும்பிவிடும். கலகலப்பாக இருப்பவர் எவரும் எதையும் எளிதாக எடுத்துக் கொள்வர். மன அழுத்தம் வராமலிருக்க அதுவே மருந்தாகும். ஒருநாளைக்கு ஒரு மணி நேரம் மனம் விட்டுச் சிரிக்கும் வாய்ப்பை உருவாக்குங்கள். உடலும் உள்ளமும் நலமாக இருக்கும்.
தாழ்வு மனப்பான்மை கூடாது
நாமும் மனிதர், நமக்கும் எல்லா ஆற்றலும் உண்டு, நம்மாலும் எதையும் செய்ய முடியும் என்று எண்ணுகின்றவர்களால் மட்டுமே எதையும் சாதிக்க முடியும். மாறாக, நம்மாலா! ம்… எங்க நடக்கப் போவுது…! அதெல்லாம நமக்குச் சரிபட்டு வாராது…! என்கின்றவர்கள் எதையும் செய்ய முடியாது.
எடுத்த எடுப்பிலே நமக்கு இது வராது, இது புரியாது, எனக்கு விளங்காது, எனக்கு அதற்குத் தகுதியில்லை என்பது தவறான முடிவு.
சிலருக்குச் சிலது முடியாமல் போகும். ஆனால், வேறு சிலது முடியும். தனக்கு எதில் ஆற்றல், விருப்பம் உள்ளது என்பது அறிந்து அதில் முயன்றால் முடியாது போகாது. தன்னம்பிக்கை வேண்டும்; மூடநம்பிக்கைதான் கூடாது.
தன்னைப் பற்றிய செருக்கும், ஆணவமும்-தான் கூடாது. ஆனால், தன்னம்பிக்கை கட்டாயம் வேண்டும்.
தன்னம்பிக்கைதான் செயலின் முதற்படி. வானத்தில் பறப்பேன் என்பது அல்ல தன்னம்பிக்கை. இந்தப் பணியை என்னாலும் செய்ய முடியும்; இந்தப் படிப்பை என்னால் தோல்வியின்றி முடிக்க முடியும். இந்த வீட்டைக் கட்டி முடித்துவிடுவேன் என்பன போன்ற-வற்றில் நம்பிக்கைக் கொள்வது கட்டாயம் அல்லவா? அதுவே தன்னம்பிக்கை.
இரண்டு காலும் இல்லாமல் நாட்டியம் ஆடினார் ஒருவர். இரண்டு கண்களும் தெரியாமல் ஏராளமான புத்தகங்களைப் படித்தார் மில்டன்; ஆயிரம் முறை தோற்றுப் பல்ப்பை எரிய வைத்தார் இறுதியில். தன்னம்பிக்கை வர வேண்டும். நம்மாலும் முடியும் நாமும் சாதிக்கப் பிறந்தவர்தான் என்று தனக்குத்தானே சொல்ல வேண்டும். நமக்கு நாமே பாராட்டிக் கொள்ள வேண்டும். இப்படிச் செய்வது தற்செறுக்கல்ல; தன்னம்பிக்கை ஊக்கி.
குறைவான பலனிற்கு அதிகம் உழைக்கக் கூடாது
சிலர் சாதாரணமானவற்றிற்குக்கூட அதிக முக்கியத்துவம் கொடுத்து உடலையும், உள்ளத்தையும் பரப்பரப்படையச் செய்து, பதற்றத்தை உருவாக்கிக் கொள்வர். அதேபோல், அப்படிப்பட்டவற்றை நிறைவேற்ற எளிய முயற்சியே போதும் என்ற நிலையில் கடும் முயற்சிகளையும், கூடுதல் செலவுகளையும் செய்வர்.
சந்தேகமும், பயமும், தவறக்கூடாது என்ற எதிர்பார்ப்புமே அவர்களை இப்படிச் செய்யத் தூண்டும்.
எனவே, எந்தெந்தச்செயலுக்கு எவ்வளவு உழைக்க வேண்டும், செலவு செய்ய வேண்டும், நேரம் ஒதுக்க வேண்டும் என்பதைத் திட்டமிட்டு அதற்கேற்பச் செய்ய வேண்டும்.
தேர்வில் சில மாணவர்கள் 2 மதிப்பெண் கேள்விக்கு அளவுக்கு மீறி முக்கியம் கொடுத்து நேரத்தை வீணடித்து விட்டு 20 மதிப்பெண் கேள்வியை விட்டுவிடுவர். அப்படி வாழ்விலும் செய்தல் தப்பு ஆகும்.