நூல்: மானுட வாசிப்பு
(பேராசிரியர் தொ.ப.வின் தெறிப்புகள்)
ஆசிரியர்: தயாளன், ஏ.சண்முகானந்தம்
வெளியீடு: தடாகம், 112, திருவள்ளுவர் சாலை, திருவான்மியூர், சென்னை-600041.
பேசி: 044-4310 0442, 89399 67179
விலை: ரூ.100/- பக்கங்கள்: 116
தலித்தியம்
1990களில் தலித் அமைப்புகளின் எழுச்சியோடு ஒப்பிடும்போது, இன்றைய தர்மபுரி, மரக்காணம் என சாதிய ஆதிக்கவாதிகளின் கை ஓங்குவது எதனைக் காட்டுகிறது? தமிழ்ச் சமூகம் பிற்போக்கு தன்மையை நோக்கிச் செல்கிறதா? தலித் அமைப்புகளின் பலவீனமாக இதனைக் கருதலாமா? அல்லது பெரியார் என்ற ஆளுமையின் தாக்கம் சமூகத் தளத்தில் குறைந்துள்ளதாக கருதலாமா? இந்நிலையை எப்படி எடுத்துக் கொள்ளலாம்?
பிற்போக்குத்தனத்தை நோக்கி போகலை. தர்மபுரி இளவரசன் நிகழ்வு நடக்கிறபோதே அதே ஊர்ல திவ்யாவின் சாதி, இளவரசனின் சாதியைச் சார்ந்தவங்க திருமணம் செய்துகொண்டு மகிழ்ச்சியாக வாழ்கிறார்கள். என்னுடைய மாணவர் ஒருத்தரே அங்க இருந்தார். சாதி மறுப்பு திருமணம் செய்துகொண்டு, தொழில் செய்துகொண்டு அங்கேயே இருந்தார். அது இல்ல.
ஆதிக்கச் சாதிக்கு ஒரு பங்கு இருக்கிறதுபோல மிகமிகக் குறைந்த அளவாவது தாழ்த்தப்பட்ட சாதித் தலைவர்களுக்கும் ஒரு பங்கு இருக்கு. வெளில சொன்னா வருத்தப்படுவாங்க. இல்ல சண்டைக்கு வருவாங்க. தாழ்த்தப்பட்ட மக்களுக்கு சரியான தலைமை இல்லைன்னு பொதுவாவது சொல்லலாம்.
சாதி மறுப்புத் திருமணங்கள் குறித்து?
இருக்கக் கூடியதுல, இருக்கிற சமநிலையை குலைக்கனும்தான் நாம ஆசைப்படுறோம். சமநிலைய திடீர்னு குலைச்சா கலவரம் வரும். மெல்லமெல்ல அந்தச் சமநிலை குலையவேண்டும். வேற ஒன்றும் வேண்டாம். சாதி மறுப்புத் திருமணம் பண்றவங்களுக்கு இந்த ஊர்ல வாடகைக்கு வீடு தரமாட்டாங்க. சாதி மறுப்புத் திருமணம் பண்ண எல்லாப் பொண்ணுங்களுமே ஒழுக்கங்கெட்டவன்னு ஒரு கருத்து இருந்துச்சு. கொஞ்சம் கொஞ்சமா அந்தக் கருத்து மாறியிருக்கு.
இன்னமும் இந்த ஊர்ல சாதி இறுக்கம் அதிகம். வாடகைக்கு வீடு கேட்டா சாதி கேட்பாங்க. இப்ப கொஞ்சம் குறையுது. சாதி மறுப்புத் திருமணத்தைப் பற்றி பெண்களுக்கு கோபமோ, அக்கறையோ வருவது இல்ல. கொஞ்சம்கறது நம்ம தேவைக்கும் ஆசைக்கும் ஏற்ப சீக்கிரமா நடக்காது. ஆனா, நடக்கும் மெல்லமெல்ல நடக்கும்.
இன்றைய சூழலில் சாதிச் சங்கங்களை எப்படி பார்ப்பது?
‘சாதி என்பது பாதுகாப்பற்றவனின் புகலிடம்’ என்று ஒரு இடத்துல சொல்லியிருக்கேன். அதுக்குள்ள போய் ஒளிஞ்சுகுறான். சாதாரணமா சின்ன வயசுல மற்ற பையலுக அடிச்சுட்டு எங்க தெருவுக்கு வாடா பார்த்துக்கோம்னு சொல்றது. எங்க தெருவுக்கு வான்னா எங்க சாதி எல்லைக்குள்ள வான்றது. அப்பப் பாதுகாப்பற்றவனின் புகலிடம் சாதி. பாதுகாப்பு வெளியில இருந்து கிடைக்கிறதுன்னு சொன்னா, தொழிற்சங்கத்துல இருந்து கிடைக்குதுன்னு சொன்னா தொழிலாளர்கள் சாதியை நம்பமாட்டார்கள்.
இன்றைய நிலையில் தாழ்த்தப்பட்ட மக்கள் வாழ்விடங்களை பறை சேரி என்கிறார்கள். இதற்கான துவக்கப் புள்ளு எது என்று நினைக்கிறீர்கள்?
பக்தி இயக்கத்தோட எழுச்சியின் போதே இந்த மாதிரி பறைசேரிகள் உருவாயிருச்சு. நந்தனார் கதையைப் பார்க்கலாம். இந்த மாதிரி தனித்தனி குடியிருப்புகள் அப்பவே வந்துருச்சு. கோயில் அதப் பாதுகாத்துட்டே வந்துச்சு. அதனாலதான் பெரியார் சொல்றாரு. கோயிலை நான் நிராகரிக்கிறேன். அது சாதி பேணும் கோயில் என்கிறார். சங்க காலத்துல கோயில் கிடையாது. ‘கோட்டம்’ என்று சொல்லக்கூடிய மண்ணாலான சிறு வட்டங்கள். அப்ப பூசாரிக்கு பெரிய அதிகாரம் எல்லாம் கிடையாது.
ஆனா பறையர்கள் வாழ்ந்திருக்கிறார்கள். ‘பார்ப்பார் ஒரு வரலாற்றுப் பார்வை’னு ஒரு கட்டுரை எழுதியிருக்கேன். பார்ப்பான்னா ஜூனியர்னு அர்த்தம். பாப்புனா ஜிலீமீ சீஷீuஸீரீ ஒண்ணுன்னு அர்த்தம். அதான் குழந்தையை பாப்பான்னு கூப்பிடுறோம். அப்போ யாரு சீனியர் என்ற கேள்வி வருகின்றபோது பறையர்தான் சீனியர். அதான் கிராமப்புறங்கள்ல ஒரு பழமொழி சொல்வாங்க. ‘பார்ப்பானுக்கு மூப்பு பறையன், கேட்க நாதியில்லாம கீழ்ச்சாதியா போனான்’. நான் கட்டுரை எழுதியிருக்கேன்.
யானை மேல பறையர் அமர்ந்து போவதா, பண்பாட்டு அசைவுகள்ல சொல்லி யிருக்கீங்க…
திருவாரூர்ல யானையேறும் பெரும் பறையர்ன்னு இருக்காங்க. நிறைய கோயில்கள் அவங்களோடது. அவங்க பூசை செய்த கோயில்களை புடுங்கிக் கொண்டார்கள். நான் சொன்னேன்ல -ஸ்ரீசக்கரப் பிரதிஷ்டை பண்ணாரு ஆதிசங்கரர். அதுலயிருந்து தொடங்கியது.
பெரியாரியம்
ஆத்திகம், நாத்திகம் என்ற சொற்களுக்கான வேர்ச்சொல் என்ன? கடவுளை ஏற்றுக் கொண்டவர்களை ஆத்திகர் என்றும், கடவுளை நம்பாதவர்களை நாத்திகர் என்றும் குறிப்பிடுவதற்கான காரணம் என்ன? இது எதன் அடிப்படையில் வந்தது? அதற்கான பின்புலம் என்ன?
இரண்டுமே தமிழில் இல்லை. நாத்திகம் எதிர்மறையைக் குறிக்கக் கூடிய சொல். இரண்டு சொல்லுமே தமிழ்ச்சொல் இல்லை. இணையாகச் சொல்வதென்றால் இறை மறுப்புக் கொள்கை அப்படின்னு ஆக்கிக்கொள்ளலாம்.
பெரியாரின் எதிர்ப்பு என்பது, வேதப் பிராமணர்கள் மீதா? தமிழ்ப் பிராமணர்கள் மீதா?
அதிகாரங்கிறதப் பத்தி சரியானப் பார்வை இல்லை. ‘வேதப் பிராமணர்களும் வேஷப் பிராமணர்களும்’னு 1909இல் அயோத்தி-தாசப் பண்டிதர் ஒரு கட்டுரை எழுதினார். வேதங்கறது ஒரு எழுதப்படாத அதிகாரம். எல்லாவற்றையும் தீர்மானிக்கிற அதிகாரம். அவன் சொல்லறது வேதம்ன்னா என்ன வேதம். விவாதத்திற்கு உட்படுத்த முடியாததுதான். மிகப்பெரிய வேதத்தின் தலைமையை ஏற்றுக்கொண்ட ஸ்மார்த்த பிராமணர்கள்தான் சிக்கலான ஆட்கள். அதாவது சங்கராச்சாரியாரும், சங்கராச்சாரியா-ரோட அவரது சிந்தாந்தத்தை பின்பற்று-கிறவர்களும். ஒரு வைணவனை அப்படிச் சொல்ல முடியாது, சிவப்பிராமணனை அப்படிச் சொல்ல முடியாது. அவங்ககூட ஒருவகைல மதத்துக்காகச் சாதியை விட்டுக்கொடுப்பான்.
சாதியும் மதமும் ஒன்றாகவே வைத்துக்-கொண்டு வேதத்தை மட்டுமே தெய்வமாக வைத்திருக்கக் கூடியவர்கள். ஸ்மார்த்த பார்ப்பனர்கள் சங்கராச்சாரியாருடைய கட்சியைச் சேர்ந்தவர்கள். அவங்களைத்-தான் நாம எதிர்க்கணும். வேதம்கிற அதிகாரத்தத்தான் நாம எதிர்க்கணும். எதைச் சொன்னாலும் ‘வேதத்துல சொல்லி-யிருக்குன்னு கிராமத்துல நம்புறான்’. அதான் அது மூளையில பதிவாயிருச்சு. வேதத்தை கேள்வி கேட்கவே முடியாது. விவாதங்களுக்கு அப்பாற்பட்டது. மிகப்பெரிய உடைக்கமுடியாத அதிகாரம் இந்த வேதம். அதை கையில தூக்கிக்கொண்டு பிராமணர்கள் வருகிறார்கள். ‘நாத்திகனாகூட இருக்கலாம். ஆனா வேதத்தை மறுக்கக் கூடாது’. அப்படிங்கிறாரு ‘தெய்வத்தின் குரலில்’ பழைய சங்கராச்சாரியார். அதான் சிக்கல். வேதம் என்பது எழுதாத எழுத்து.
மிகப்பெரிய அதிகாரக் கூட்டமைப்பு.
தந்தை பெரியாரை முற்றாக ஏற்றுக் கொண்டவர்கள் ஒருபுறமும், முற்றாக மறுத்தவர்கள் அல்லது எதிர்ப்பவர்கள் ஒருபுறமும் என்ற சமகால தமிழ்ச் சூழலில் இன்றைய இளைஞர்கள் பெரியாரை எப்படி புரிந்து கொள்வது? ஏற்றுக்கொள்வது?
பெரியாரை முற்றாக நிராகரிப்பது என்பது முட்டாள்தனம் தவிர வேறெதும் இல்லை. ஏனென்றால் ராஜாஜியாலேயே பெரியாரை முற்றாக நிராகரிக்க இயலவில்லை என்னும்போது புரிதலின்மைதான் மிகப் பெரிய காரணம். பெரியார்தான் ராஜாஜியை நிராகரித்தார்.
தமிழ் காட்டுமிராண்டி மொழின்னு பெரியார் சொன்னாரு, சங்க இலக்கியங்களை பெரியார் ஏற்றுக் கொள்ளவில்லை என்பதை யெல்லாம் எப்படி பார்ப்பது?
சங்க இலக்கியங்களை ஏற்றுக் கொள்பவர்களைத்தான் இவர்கள் தலைவராக ஏற்றுக் கொள்வார்களா? காமராஜர் ஏத்துகிட்டாராமா? அது இல்ல. தமிழ்க் காட்டுமிராண்டி மொழின்னு பெரியார் சொன்னார். நூறு முறை கேட்கப்படுகிற கேள்வி இது. அவர்தான் உ.வே.சாமிநாத அய்யர், வையாபுரிப் பிள்ளை, பாவாணர் வரை நூற்றுக்கும் மேற்பட்ட அறிஞர்கள் வாழ்ந்துக் கொண்டிருந்த காலகட்டத்தில் தமிழுக்கு எழுத்துச் சீர்திருத்தம் வேணும் என்று சொன்னதும், செய்து காட்டியதும். இந்த பெருந்தமிழ் புலவர்கள் அல்ல. பெரியார்தான். பெரியார் வாழ்க்கையை வாழ்க்கையாகப் பார்த்த மனிதர். ஆகவே, இவர்கள் ஒத்துக் கொள்ளணும் என்ற அவசியம் இல்ல. அதேபோல பெரியார் சொல்கிற எல்லாவற்றையும் இவர்கள் ஒத்துகிறணும்னு அவசியம் இல்ல. இவங்க ஒத்துக்கிலேன்னா அவர் சிறியார் ஆயிருவாரா?
1937களில் நடந்த இந்தி எதிர்ப்புப் போராட்டத்தை பெரியார் ஆதரித்தார். ஆனால், 1960களில் நடந்த இந்தி எதிர்ப்பு போராட்டத்தை அவர் ‘காலிகளின் போராட்டம்’ என்கிறார். இந்த முரண்பாடு ஏன்?
1965இல் நடந்த போராட்டம் அரசியல் அதிகாரத்துக்கு ஆசைப்பட்டவர்களாலே நடத்தப்பட்ட போராட்டம் என அவர் நினைக்கிறார். அது மட்டும் இல்ல. காமராஜர் கையிலே உள்ள அதிகாரத்தை தட்டிப்பறிப்பதாக அமைந்துவிடுமோ என்று அவர் பயந்தார். அவர் பயந்தபடிதான் நடந்தது. அதனால அவர் எதிர்த்தார். 1937இல் நடந்த போராட்டம், அது நேரடியா பிராமணர்களோட எதிர்ப்பு ஆதிக்கத்திற்கெதிராக (றிuக்ஷீமீ பிவீஸீபீவீ) நடந்தது. அப்ப எதிர்த்தார்.
அப்படி என்றால் இந்தி எதிர்ப்பு சரியா? மாணவர் போராட்டம் சரியா?
அப்படிக் கேட்க முடியாது. கேள்விதான் சரியில்ல. இந்தி எதிர்ப்பு சரி. சரியாச் சொன்னா, இந்தி ஆதிக்கம். எல்லா வகையான ஆதிக்கமும் எதிர்க்கப்பட வேண்டியவை. இந்தியும் பல்வேறு வகையான இந்திய மொழிகளை கொன்னுட்டுது. இப்போது நாலு நாளைக்கு முன்னால பாட்னாவுக்கு போய்ட்டுவந்த மனித உரிமை ஆர்வலர் சொன்னார். தமிழ்நாட்டைப் போல இங்க இந்தி எதிர்ப்பு இல்லாததால போஜ்புரி, மைதிலி, அர்த்தமாகதி ஆகிய மொழிகளை நாங்க இழந்துகிட்டிருக்கோம் என்று சொன்னார். இவையெல்லாம் இந்தியைப் போல கிராகிருதத்தின் கிளை மொழிகள். மைதிலி என்ற மொழி பிராமணர்கள் பேசுகிற மொழி. ‘மைதிலி பிராமணர்கள்’ என்றே பிராமணர்களில் ஒரு பிரிவு உண்டு. இந்த மொழிகள் எல்லாம் இந்தியாவிலே அழிந்துக் கொண்டிருக்கின்றன என்று அவர்கள் அச்சப்படுகிறார்கள்.
பெரியாரோட ‘கடவுள் இல்லை! கடவுள் இல்லை! கடவுள் இல்லவே இல்லை!!! என்ற முழக்கத்தை இன்றை இளைஞர்களிடம் எவ்வாறு கொண்டு சேர்ப்பது?
சுயசிந்தனை மூலமாகத்தான் இந்த முழக்கத்தை அவர்கள் புரிந்துகொள்ள வேண்டும். இரண்டாவது பெரியார் ஏன் முட்டாள்னு சொல்றேன், ஏன் அயோக்கியன்னு சொல்றேன், ஏன் காட்டுமிராண்டினு சொல்றேன்னு பேசியிருக்காரு. நிறைய எழுதியிருக்காரு. அச்சில வந்துருக்கு. படிச்சுப் பாருங்க.
எளிய மக்களின் கடவுள் நம்பிக்கையை பெரியார் சொல்ற கடவுள் மறுப்போடு எவ்வாறு காண்பது?
அந்தக் கடவுள் வேற, இந்தக் கடவுள் வேறன்றதுதான் சிக்கலே. நாட்டார் மக்களுடைய சுடலைமாடனும், காத்தவராயனும் நம்மளை தொந்தரவு பண்ணுற கடவுள் இல்ல. துணை செய்ற கடவுள், அவங்களுடைய நம்பிக்கைப்படி.
‘கடவுள் இல்லை’ என்ற திராவிட இயக்கங்களின் பரப்புரை தொடர்ந்தாலும், இளைஞர்களின் மனப்போக்கு மாறாமல் இருப்பதற்கான காரணம் என்ன?
ஊடகங்களோட செல்வாக்கு. அதை எதிர்கொள்கிற அளவுக்கு பெரியார் இயக்கங்களுக்கு வலிமை இல்லை. வீரமணியும் 10 படம் எடுத்தார்னா நல்லாயிருக்கும்.
சிறு தெய்வ வழிபாடு, பெருந்தெய்வ வழிபாடு என்பதை இடதுசாரிகள் ஒன்றாக பார்த்து பக்தின்றதே
மூடநம்பிக்கை என்கிறார்கள். அதுகுறித்து…
இடதுசாரிகள் யார்? இடதுசாரிகள்ல பண்பாட்டு ஆய்வாளர்கள் கிடையாது. ஒரு பண்பாட்டு ஆய்வாளர் இடதுசாரியா இருக்க முடியாது. இவங்க தமிழ்னு, திராவிடம்னு பேசுற எல்லாவற்றையும் கொட்டி கவிழ்க்கிறாங்க. இவர்கள் எல்லாவற்றையும் ஒரு வெறுப்போடயே அணுகுகிறார்கள். தென் தமிழ்நாட்டையும், தென் தமிழ் நாட்டு மக்கள் பண்பாட்டையும் இடதுசாரிகள் அடி மனதிலே வெறுப்போடயே அணுகுகிறார்கள். கேட்டா அவங்கதான் மக்களை காதலிக்கிறவங்க மாதிரி பேசுவாங்க. அதுதான் எல்லா வகையான சீர்கேடுகளுக்கும் வழிவகுத்தது. அவங்க பெரியாரைப் புரிஞ்சுக்காம தான் நிறைய காலம் இருந்தாங்க.
‘பகுத்தறிவு சிகரம் ஈ.வெ.ரா.’னு ஒரு புத்தகம் 1953_1954இல் தொழிற்சங்கத் தலைவர். இவ்வளவுக்கும் அய்யங்கார் அவரு. கட்சி அத ஏறெடுத்துக்கூடப் பார்க்கல. இன்னைக்குப் பெரியார் 150வது விழாவக் கொண்டாட வேண்டிய கட்டாயத் தேவை இருக்கிறது. வாக்கு வங்கி காரணமாக பெரியாரை நிராகரிக்க முடியாது என்ற நிலை. ஏற்றுக்கொண்டதைப் போல பாவனை செய்கிறார்கள். வேறொன்னும் வேண்டாங்க. இடதுசாரி இயக்கத்திலே உள்ளவர்கள் பெரியார் இயக்கத்திலே உள்ளவர்களைப் போன்று சாதி மறுப்புத் திருமணம் பண்றாங்களா, இல்லையே!