பெண்ணுரிமை கொடுத்துப் பெறப்படுவதல்ல! எடுத்துக்கொள்ள வேண்டியது

ஆகஸ்ட் 01-15

 

அய்யாவின் அடிச்சுவட்டில்…. 159  – கி.வீரமணி

பெண்ணுரிமை கொடுத்துப் பெறப்படுவதல்ல! எடுத்துக்கொள்ள வேண்டியது

ஜஸ்டிஸ் வைத்தியலிங்கம் அவர்கள் ஜாதியை எப்படி ஒரு வகுப்பு (Class) ஆக அப்படியே கொள்ளுவது தவறல்ல என்று தெளிவாகக் கூறியிருக்கிறார்.

1972 (1) S.C.C. 660-A.I.R. 1972 SC 1375
Justice Viadyalingam:

At Page 1395 in para 82:

“But in our opinion, though directive principles contained in Article 46 cannot be enforced by courts, article 15 (4) will have to be given effect to in order to assist the weaker sections of the citizens, as the State has been charged with such a duty. No doubt, we are aware that any provision made under this clause must be within the well defined limits and should not be on the basis of the caste alone. But it should not also be missed that a caste is also a class of citizens and that a caste as such may be socially and educationally backward. If after collecting the necessary data, it is found that the caste as a whole is socially and educationally backward, in our opinion, the reservation made for such persons will have to be upheld not withstanding the fact that a few individuals in that group may be both socially and educationally above the general average. There is no gain-saying the fact that there are numerous castes in the country. which are socially and educationally backward and therefore a suitable provision will have to be made by the State as charged in Article 15(4) to safeguard their interests, ///and further observed at page 339 in para 95 as follows:

“To conclude, though prima facie, the list of backward classes which is under attack before us, may be considered to be on the basis of caste, a closer examination will clearly show that it is only a description of the group following the particular occupations or professions, exhaustively referred to by the Commission. Even on the assumption, that the list is based exclusively on caste, it is clear from the materials before the commission and the reasons given by it in its report that the entire caste is socially and educationally backward and therefore their inclusion in the list of Backward Classes is warranted by Article 15(4). The groups mentioned there in have been included in the list of backward classes as they satisfy the various tests which have been laid down by this court for ascertaining the social and educational backwardness of a class

நீதிபதி வைத்தியலிங்கம் அவர்களின் தீர்ப்பின் தமிழாக்கம்

“ஆனால், எங்கள் கருத்தில், 46ஆவது பிரிவில் காணப்படும் நேரடிக் கொள்கைகளை, நீதிமன்றங்களால் நடைமுறைப்படுத்த முடியாதெனினும், 15(4)-வது பிரிவை குடிமக்களில் பலமற்ற பிரிவினர்க்கு உதவுவதே அரசின் கடமையாக இருப்பதால், அமுல் செய்ய வேண்டியுள்ளது. இந்த சட்டப்பிரிவில் செய்யப்படும் ஏற்பாடுகள் ஜாதி அடிப்படையில் மாத்திரம் இல்லாமல் நன்கு வரையறுக்கப்பட வேண்டுமென்பதையும் நாங்கள் உணர்ந்துள்-ளோம் என்பதிலும் அய்யமில்லை. ஆனால், ஒரு ஜாதி என்பது குடிமக்களிலேயே ஒரு வகுப்பு என்பதையும், அந்த ஜாதியானது சமுதாய ரீதியிலும், கல்வி ரீதியிலும் பிற்படுத்தப்பட்டதாக இருக்கக் கூடும் என்பதையும் ஒதுக்க முடியாது. தேவையான புள்ளி விவரங்கள் சேகரிக்கப்பட்ட பின்னர், ஒரு ஜாதி என்பது முழுமையாகவே சமுதாய _ கல்வி அடிப்படையில் பிற்படுத்தப்-பட்டிருப்பதாக அறிந்த பின்பும், அந்தக் குறிப்பிட்ட பகுதியினரில் மிகச் சிலர் சமுதாய கல்வி அடிப்படையில் சராசரிக்கு மேலான நிலையில் இருந்தாலுங்கூட, அந்த வகுப்பினருக்காக செய்யப்படுகின்ற ஒதுக்கீடுகள் நிலைக்க வேண்டுமென்பதே எங்கள் கருத்தாகும். நமது நாட்டில் எண்ணற்ற ஜாதிகள் சமுதாயரீதியிலும் கல்வி அடிப்படையிலும் பிற்படுத்தப்பட்டிருக்கின்றன; அவர்கள் பாதுகாப்புக்காக ஏற்ற நடவடிக்கைகள் அரசால் எடுக்கப்படவேண்டும் -_ அதாவது 15(4) பிரிவின்படி _ என்பதை மீண்டும் சொல்லத் தேவையில்லை… மேலும் 339ஆம் பக்கம் 95ஆவது பாராவில் அடியிற்கண்டவாறும் சொல்லியுள்ளார்.

முடிவாக, மேலோட்டமாக எங்கள் முன்பு தாக்குதலுக்குள்ளாகி வைக்கப்பட்டுள்ள பிற்படுத்தப்பட்டோர் பட்டியல் ஜாதி அடிப்படையில்அமைந்துள்ளதாகத் தெரிந்தாலும், சற்று நெருங்கிப் பா£க்கும்போது, அது ஒரு கமிஷனில் குறிப்பிடப்படுவதுபோல ஒரு குறிப்பிட்ட தொழில் அல்லது அலுவலின் வர்ணனைதான் என்பது புரியும். அப்படி இந்தப் பட்டியல் முழுமையாக ஜாதி அடிப்படையில்-தான் அமைந்துள்ளது என்றே எடுத்துக்-கொண்டாலும், கமிஷன் முன் வைக்கப்-பட்டுள்ள ஆதாரங்கள் அதன் சிபாரிசுகள் ஆகியவற்றை அதன் அறிக்கையிலிருந்து காணும்போது இந்த ஜாதி முழுமையாக சமுதாய ரீதியிலும் கல்வி, அடிப்படையிலும் பிற்படுத்தப்-பட்டுள்ளது; அதனால் 15(4)வது பிரிவின்படிப் பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் சேர்க்கப்-படத்தக்கது என்பது தெளிவாகிறது. பிற்படுத்தப்-பட்டோர் பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ள இந்த குழுக்கள் இந்த நீதிமன்றத்தில் அவர்களின் சமுதாய கல்வித் துறைகளின் பிற்படுத்தப்பட்ட தன்மைகளை நிச்சயிக்கச் செய்யப்பட்ட பல தேர்வுகளிலும் தேறி வந்துள்ளன.’’

இவ்வளவு தெளிவாக இருப்பதைப் போட்டு எவ்வளவு குழப்ப வேண்டுமோ அவ்வளவு குழப்புவதா? என்று நீதிபதி அவர்கள், அவரது தீர்ப்பில் கூறியிருக்கிறார் என்பதை எடுத்துக்-காட்டி விளக்கினேன்.

கரூர் நகர திராவிடர் கழகத் தலைவரும், வழக்குரைஞருமாகிய கரூர் வீரராக்கியம் கே.சின்னப்பன் அவர்கள் 24.08.1979 அன்று மாரடைப்பின் காரணமாக காலமானார்.

திரு.வீர.கே.சின்னப்பன் அவர்கள், கழகம் வேண்டுகோள் விடுகின்ற நிதி அளிப்பதாக இருந்தாலும் சரி, கரூர் நகரம் எடுத்த கழக விழாக்களாக இருந்தாலும் சரி, அதில் தனது முத்திரையை பொறிக்கும் செயல்வீரர். வீர.கே.சின்னப்பன் அவர்கள் சமீபத்தில் மாவட்ட திராவிடர் கழகத்தின் சார்பில் புதுக்கோட்டையில் நடைபெற்ற அய்யா நூற்றாண்டு விழாவில் துவக்க உரை

ஆற்றினார். அவர் இறந்த செய்தியை அறிந்தவுடன் நான் நேரில் சென்று மறைந்த வீரருக்குக் கறுப்புத் துண்டு போர்த்தி மரியாதை செலுத்தினேன். அவரது இறுதி ஊர்வலத்திலும் நான் கலந்துகொண்டேன். என்னுடன் தி.மு.க. பிரமுகர் அன்பில் தர்மலிங்கம் உள்ளிட்ட கழகத் தோழர்கள் பலரும் கலந்து-கொண்டார்கள்.

பகுத்தறிவு மகளிர் அணியினர் சார்பில் பெரியார் நூற்றாண்டு விழா மற்றும் பெண்கள் விடுதலை மாநாடு 26.8.1979 அன்று சென்னையில் நடைபெற்றது.

மாநாட்டு தலைமை வகித்து திருமதி சரஸ்வதி கோரா அவர்கள் உரையாற்றும் போது, “பல நூற்றாண்டு காலமாக அடக்கப்-பட்டு கிடந்த பெண்கள் சமுதாய விடுதலைக்கு அரும்பாடுபட்ட தந்தை பெரியாருக்கு பெண்களே விழா எடுப்பது மிகச் சரியான ஒன்றாகும். பெண்கள் அடிமைத்தனத்திற்கு மூலவேர் எங்கிருக்கிறது என்பதை பெரியார் ஆராய்ந்தவர். கடவுளும், மதமும், ஜாதி அமைப்பும், மூடநம்பிக்கையும் பெண்களை அடிமைப்படுத்தி வைக்கும் கருவிகள் என்பதை ஆழமாக விளக்கினார். பெண்கள் விடுதலையில் அவர் உறுதியாக இருந்தார். எந்த சமரசத்துக்கும் அவர் தயாரில்லை.

மனுசாஸ்திர காலத்திலிருந்து தற்போதுள்ள சட்டம் வரை எல்லாம் பெண்களை அடிமைப்-படுத்துவதாகவே இருந்தன. நாத்திகத்தை வாழ்க்கை நெறியாக நாம் பின்பற்றுவோ-மேயானால் வாழ்க்கையைப் பற்றிய நமது கண்ணோட்டப் பாதை மாறும். சமத்துவ வாழ்க்கையை வாழ்ந்துகாட்ட முடியும்’’ என்று எடுத்துக் கூறினார்கள்.
மாநாட்டில், பேராசிரியை சக்குபாய் அவர்கள், பெண்கள் விடுதலை மாநாட்டை துவக்கி வைத்து உரையாற்றினார்.

பிற்பகலில் நிகழ்ச்சிகள் தொடங்கின. சின்னாளப்பட்டி சண்முகம் குழுவினரின் ‘அண்டசராசரம்’ எனும் இசை நிகழ்ச்சி நடைபெற்றது.

மாநாட்டில், நாகம்மையார் படத்தை சிவகாமி சிதம்பரனார் அவர்கள் திறந்து வைத்தார். அன்னை ஈ.வெ.ரா.நாகம்மையார் அவர்கள் தலைமையில் திருமணம் செய்து-கொண்டவர் இவர். மஞ்சுளாபாய் உள்ளிட்ட கழக தோழியர்கள் கலந்துகொண்டார்கள். மாநாட்டில் பட்டிமன்றம் ‘பெண் ஏன் அடிமையானாள்?’ ‘பொருளாதாரக் கட்டுப்-பாட்டினாலா? சமுதாயக் கட்டுப்பாட்டினாலா?’ என்ற தலைப்பில் நிகழ்ந்த பட்டிமன்றத்திற்கு டாக்டர் லீலாவதி அவர்கள் தலைமையில் பெண்கள் கலந்துகொண்டு வாதிட்டனர்.

பின்னர் கீழ்க்கண்ட தீர்மானங்கள் நிறை-வேற்றப்பட்டன.

பெண்கள் விடுதலைக்காக, தந்தை பெரியார் அவர்கள் அரும்பாடுபட்ட கரணத்தால், அதன் நன்றியின் அறிகுறியாக தமிழ்நாட்டுப் பெண்கள் அவருக்கு “பெரியார்’’ என்ற பட்டத்தை, சரித்திரச் சிறப்புடன் சூட்டியதை, இப்பெண்கள் மாநாடு பெருமையுடன் நினைவு கூர்ந்து, தந்தை பெரியார் அவர்களது தொண்டுக்கு தலைவணங்கி, தந்தை பெரியார் அவர்கள் விட்டுச்சென்று இருக்கிற புரட்சிகரமான அடிச்சுவட்டில் சென்று, பெண் சமுதாயத்தின் முழு விடுதலையைப் பெற்றே தீர்வது, பெண்களை அலங்காரப் பொருள்களாக்கி, அவர்கள் சுரண்டப்படும் நிலையைத் தடுத்து,  தற்போது சீனா போன்ற சோஷலிச நாடுகளில் உள்ளதுபோல் உடைகளில் ஆண், பெண் என்ற வித்தியாசமில்லாமல் ஒரே மாதிரியான உடைகளை (Unisex Dresses) அணியமுன் வரவேண்டும்.

ஒருவர் காலில் மற்றொருவர் விழுந்து வணங்குவது என்பது, மனித சுயமரியாதைக்கும், சமத்துவத்துக்கும் எதிரானது. இந்நிலை எல்லா வழிகளிலும் தடுக்கப்பட வேண்டும்.

தாய் பெயரின் முதல் எழுத்தையே ‘இனிஷியலாகப்’ போட அரசு சட்டம் இயற்ற வேண்டும்.

திருமணமான, ஆகாத ஆண்கள் அனைவருக்கும் திரு. என்ற ஒரு சொல்லே பொதுவாக பயன்படுத்தப்படும்போது, பெண்களுக்கு மட்டும் ‘குமாரி’, ‘செல்வி’, ‘திருமதி’ என்ற வேறுபாடுகள் இருக்கத் தேவையில்லை என்றும், எல்லோருக்கும் பொதுவாக ‘திரு’ என்ற சொல்லையே பயன்படுத்த வேண்டும் என்றும்,தந்தை பெரியார் அறிவுரைப்படி, இந்தியாவில் கல்வி, உத்தியோகங்களில், சட்டமன்றங்கள், நாடாளுமன்றங்கள், மற்றும் எல்லாத் துறைகளிலும் சரி பகுதியாக 50 சதவிகித இடங்கள் பெண்களுக்கு மத்திய, மாநில அரசுகள் ஒதுக்கீடு செய்தாக வேண்டும்,

உயர்நீதிமன்ற நீதிபதிகள், பல்கலைக்கழக துணைவேந்தர்கள், அரசு பணியாளர் தேர்வுக்குழுத் தலைவர் போன்ற பல பொறுப்பு வாய்ந்த முக்கியப் பணிகளில் பெண்களே இல்லாத நிலை வெட்கமும், வேதனையும் அடையக் கூடியதாகும். இந்தத் துறைகளில் பெண்களுக்கு உரிய பிரதிநிதித்துவம் தரப்பட வேண்டும், ஆண்களைப் போன்றே பிறப்புரிமை அடிப்படையில் பெண்களுக்கு சொத்துரிமை வழங்கும் வகையில் சட்டத் திருத்தம் செய்யுமாறு மத்திய அரசை இம்மாநாடு கேட்டுக்-கொள்கிறது என்றும் தீர்மானங்கள்

நிறை-வேற்றப்பட்டன. 2006இல் இது மத்திய அரசால் _ (தி.மு.க. இடம்பெற்ற அய்க்கிய முற்போக்குக் கூட்டணி (U.P.A.) அரசால்) நிறைவேற்றப்பட்டு அமலுக்கு வந்துள்ளது.

இறுதியாக நான் பல்வேறு கருத்துக்களை கூறி உரையாற்றினேன். எனது உரையில், “தந்தை பெரியார் சொன்ன கருத்துக்களை எல்லாம் கொள்கைப் பிழிவாக தர வேண்டுமானால் ஒன்றைத்தான் சொல்ல முடியும். பிறவியின் பெயரால் பேதம் கூடாது என்பதுதான் தந்தை

பெரியார் அவர்களின் எல்லா கொள்கைக்கும் அடிப்படை என்பதை விளக்கினேன்.

தந்தை பெரியார் நூற்றாண்டு விழாவை கொண்டாடும் இவ்வாண்டில் இம்மாநாடு  துவக்கமே தவிர இது முடிவானதல்ல.

பலநூறு ஆண்டுகளாக அடிமைகளாக இருந்து விட்டோம்; இனியும் அடிமையாக இருக்கப் போவதில்லை என்று தோழியர்கள் இங்கே ஒலித்தக் குரலை நாடெங்கும் ஒலிக்கத் தயாராக வேண்டும். எங்கு பார்த்தாலும் இந்த உரிமை முழக்கங்கள் ஒலித்தாக வேண்டும்.

இந்த நாட்டு அரசியல்வாதிகள் என்பவர்கள் எல்லாம், பெண்களின் ஓட்டுகளைப் பற்றிக் கவலைப்படுகிறார்களே தவிர அவர்கள் சமுதாயத்தில் அடிமைகளாக நடத்தப்படுவதைப் பற்றிக் கவலைப்படுவதே கிடையாது.
உரிமை, விடுதலை என்பவை ஒருவர் பார்த்து மற்றவருக்குக் கொடுக்கப்படுபவை யல்ல; தட்டிப் பறிக்கப்பட வேண்டிய ஒன்று. நீங்கள் கிளர்ந்து எழுந்தால் விடுதலை கிடைக்கும்.

“ஆண்களால் பெண்களுக்கு விடுதலை கிடைக்காது; பூனைகளால் எலிக்கு விடுதலை கிடைக்க முடியுமா?’’ என்று கேட்டார் தந்தை பெரியார்.

இதுபோல் பெண்கள் விடுதலை மாநாடுகள் நாடு தழுவிய அளவிலே ஏராளமாக நடத்தப்பட வேண்டும் என்பதை எடுத்துக்கூறி, தாய்ப் பெயரின் முதல் எழுத்தை இனிஷியலாகப் போடவேண்டும், ஆண்களைப் போலவே பெண்கள் உடுத்த வேண்டும், அலங்காரம், நகை ஆசை கூடாது. ஆணுக்கும் பெண்ணுக்கும் ‘திரு’ என்றே போடவேண்டும், பெண்களுக்கு ஆண்களைப் போல சொத்துரிமை வேண்டும். கற்பு என்பது இருபாலர்க்கும் வேண்டும் என்று மாநாட்டுத் தீர்மானக் கருத்துக்களை விளக்கிப் பேசினேன்.

இந்து மதமும், இஸ்லாம் மதமும், கிறித்தவ மதமும், மற்ற மதங்களும் பெண்களை எப்படி அடிமைப்படுத்தி வைத்திருக்கின்றன என்பதை புல்ரேணுகா என்ற அம்மையார் தன் அறிக்கையிலே சுட்டிக்காட்டியுள்ளார். எனவே, பெண் அடிமை தீர மதம் ஒழிய வேண்டும்.

இதுபோல் பெண்கள் விடுதலை மாநாடுகள் நாடு தழுவிய அளவில் ஏராளமாக நடக்க வேண்டும் என்று கூறி என் பேச்சை நிறைவு செய்தேன்.

மாநாட்டில், தி.மு.க. மகளிர் அணி செயலாளர் அலமேலு அப்பாதுரை, அருணா சிவகாமி, சங்கரவல்லி, சற்குணம், தமிழ்நாடு காங்கிரஸ் கட்சித் தலைவர் டி.என்.அனந்தநாயகி, பேராசிரியர் நன்னன் உள்ளிட்ட ஏராளமான கழக தோழியர்கள் மற்றும் தோழர்கள் பலரும், பொதுமக்களும் பெருந்திரளாக கலந்துகொண்டு அய்யாவின் பெண்ணுரிமை பணியைச் சிறப்பாக செய்தனர்.

தந்தை பெரியார் அவர்களின் நூற்றாண்டு நிறைவு விழா செப்டம்பர் 15, 16, 17 ஆகிய தேதிகளில் நடைபெறுவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்ற பொழுது, அய்யா, அம்மா, மறைவிற்கு பிறகு நீண்டகாலமாக நடைபெற்று வந்த ‘வருமான வரி’ வழக்கு மேல்முறையீட்டுக் குழு உச்சநீதிமன்றத்தில் தந்தை பெரியார் சார்பாகவும், சுயமரியாதைப் பிரச்சார நிறுவனத்தின் சார்பாகவும், பிரபல வருமானவரிச் சட்ட வழக்குரைஞர் எம்.உத்தம்-ரெட்டி அவர்களும், ஆடிட்டர் சுரேந்தர் அவர்களும் வழக்காடினார்கள்.

அந்த வழக்கில் பெரியார் சுயமரியாதைப் பிரச்சார நிறுவனத்தை ஒரு அறக்கட்டளை நிறுவனமாக, வருமான வரித்துறை இப்போது ஏற்றுக்கொண்டிருக்கிறது என்பதனை அன்று செய்தியாளர்களிடையே தெரிவித்தேன். அதனை ‘விடுதலை’ (28.8.1979) முதல் பக்கத்தில் பதிவு செய்திருந்தோம். அன்று முதல் இன்றுவரை வருமானவரி பிரச்சினையை மிகவும் விரிவான முறையில் பதிவு செய்து கொள்ளு-வது மிகவும் தேவையான ஒன்றாகிவிட்டது.

பெரியார் சுயமரியாதைப் பிரச்சார நிறுவனத்துக்கு ‘வருமான வரிவிலக்கு’ பெற்ற வரலாறும், கழகத்திலிருந்து வெளியேற்றப்-பட்டவர்கள் செய்த துரோகமும் இங்கு பதிவு செய்கிறேன்.

தந்தை பெரியார் அவர்கள் 1920இல் பெரிய வியாபாரத்தை விட்டுவிட்டு பொது வாழ்க்கைக்கு வந்த வசதியாளரான அவர் எந்த வியாபாரத்திலும் ஈடுபட்டவர் அல்ல. எனவே, கணக்கில் காட்டாமல் மறைத்துவைக்க வேண்டிய வருமானம் (Undisclosed Income Sources)  என்று எதுவும் அவர்களை பொறுத்தவரை இருந்ததில்லை.

மாநாடுகளில் மிச்சப்படும் பணம் நன்கொடை, அன்பளிப்பு, பணம், தனது பங்குத் தொகை, தனது தந்தையார் அறக்கட்டளை-யாகிய “வெங்கட்டநாயக்கர் டிரஸ்ட்’’ சொத்துக்களில் அவரது பங்குமூலம் கிடைத்த தொகை எல்லாம் அவர் இயக்க சொத்தாக ஆக்கியவர், தனி வாழ்க்கை வேறு, இயக்க வாழ்க்கை வேறு என்ற தந்தை பெரியார் அவர்களுக்கு இரு வகையான வாழ்க்கை இல்லாத நிலையில், தனியே கணக்கு  என்பதெல்லாம் அவரைப் பொறுத்து காட்டத் தேவையே எழவில்லை.

அவரது தொண்டர்கள் அவர்மீது வைத்த நம்பிக்கை அசைக்க முடியாத நம்பிக்கை “அய்யாவுக்கு நாம் கொடுத்தோம். அதை அவர் எப்படிப் பயன்படுத்தினாலும் கொடுத்த பிறகு அது பற்றி சிந்திப்பதோ, கேள்வி கேட்பதோ நமது உரிமை அல்ல’’ என்ற தெளிவான எண்ணத்தில் உள்ள தோழர்களே அவர்களது தொண்டர்கள்.

போராட்டங்கள், இடையறாத சுற்றுப் பயணங்கள் _ இவைகளில் ஈடுபட்ட பெரியார் ஒரு வியாபார நிறுவனத்தைப்போல, தனியே கணக்காளர் எவரையும் வைத்து முறையான கணக்கு, தணிக்கை எதையும் வைத்துக்-கொள்ளும் நிலைக்கு ஆட்படாதவராகவே இருந்தார்.

தந்தை பெரியார் அவர்கள், அவருடைய சொந்த சொத்துக்கள், அவருக்கு அவற்றின் மூலம் கிடைத்த வருவாய், அசையா சொத்துக்களை விற்று அதன் மூலம் கிடைத்த தொகை, மக்கள் அவரது தொண்டினைப் போற்றி அய்யா அவர்களை மகிழ்ச்சி அடையச் செய்ய வேண்டி அவருக்கு அன்பளிப்பாகவும், நன்கொடையாகவும் கொடுத்த சொத்துக்கள் இவைகளை ஒரு அறக்கட்டளையாக்கி, தன்னுடைய சுயமரியாதைக் கொள்கைப் பிரச்சாரப் பெரும்பணிக்குப் பயன்படுவதற்காக, ஒரு நிறுவனமாகவே சங்கங்கள் பதிவுச் சட்டத்தின் கீழ் 1952இல் பதிவு செய்தார்கள்.

இந்த அமைப்பினை அவர்கள் 1935-லேயே தோற்றுவித்து விட்டார். எனினும், சட்டபூர்வமாக பதிவு செய்தது 1952இல்தான்.

அதற்குக் காரணம் என்னவென்றால், அதில் அவர்களோடு நிர்வாகக் குழு உறுப்பினர்-களாகப் போடுவதற்கு அய்யாவின் முழு நம்பிக்கைக்கு உரியவர்களை கண்ணில் விளக்கெண்ணெய் ஊற்றி பல ஆண்டுகாலம் அவர்கள் தேடிக் கொண்டே இருந்ததுதான்

(நினைவுகள் நீளும்)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *