பிள்ளைகளை எப்படி உருவாக்க வேண்டும் என்ற சரியான புரிதல் இன்றி, மந்தைக் கூட்டமாய் மழலைகளை வதைத்தெடுக்கும் கொடுமைகளுக்குத் தீர்வுகாண இத்திரைப்படம் முயன்றிருப்பதை நாம் கட்டாயம் பாராட்ட வேண்டும்.
சமுதாயத்தில் உள்ள பெற்றோரின் மனநிலையை மூன்றாகப் பிரித்து, மூன்று பெற்றோர்களை எடுத்துக்காட்டுகளாக்கி விளக்கியிருக்கிறார் இயக்குநர் சமுத்திரக்கனி.
கல்வி முறையில் உள்ள சிக்கல்களுக்கு தீர்வுகள் கூறுகையில் காட்சிக்குக் காட்சி கைத்தட்டல் பெறுகிறார்.
பள்ளியில் ஆசிரியர் தரும் புராஜெக்டை தானே தன் முயற்சியில் செய்து எடுத்துச் செல்லும் சமுத்திரக்கனியின் மகனுக்குக் கிடைத்தது தலைவீங்க குட்டு. கடையில் வாங்கிவந்து வைத்தவர்களுக்கு “வெரிகுட்டு’’! போலிக்குரிய மரியாதையையும், உண்மை உழைப்பு உதாசீனப்படுத்தப்படுவதையும் உறைக்கும்படி உணர்த்துகிறது படம்.
வணிகக் கல்வி நிறுவனங்களின் மோசடிச் செயல்களை, முகமூடிகளை வெளிக்-கொணர்வதிலும் வெற்றி பெற்றுள்ளது!
பெற்றோர் விருப்பத்தை பிள்ளைகள் மீது திணிக்கக் கூடாது என்ற சரியான உளவியல் சிந்தனையை இப்படம் ஆழமாய் பதிவு செய்துள்ளது. அப்படி திணிக்கப்படாத பிள்ளைகள்தான் வெற்றி பெறுகிறார்கள் என்ற உண்மை நிலையும் உணர்த்தப்படுகிறது.
தன் விருப்பத்தை பிள்ளைமீது திணிக்கும் பெற்றோரின் பிரதிநிதியான தம்பி ராமையா தன் நடிப்பின் மூலம் பெற்றோரைக் கலங்க வைத்திருக்கிறார். அது கருத்தின் அடைவிற்கு பெரிதும் துணை செய்கிறது.
பிரச்சினைகளில் ஒதுங்கிவாழும் நமோ நாராயணன் யதார்த்த நடிப்பு, அப்படிப்பட்ட பெற்றோரை அதிர்ச்சிக்குள்ளாக்கி, சிந்திக்கச் செய்கிறது.
இளையராஜாவின் இசை உயிரோட்டமாய் அமைந்து வெற்றிக்கு உதவுகிறது.
மதிப்பெண்ணுக்காக மாணவர்களை மனநோயாளியாக்கி, சுயசார்பற்று வாழச் செய்யும் கல்வி நிறுவனங்களைச் சாடுவதன் மூலம் நல்ல விழிப்புணர்வை இப்படம் ஏற்படுத்துகிறது.
அப்பா படமல்ல. அப்பாக்களுக்கான பாடம்! பிரச்சினைகளை பேசும் படங்கள் வர இது ஓர் உந்துசக்தி! பாராட்டுகள்!