வந்தவர் மொழியா? செந்தமிழ்ச் செல்வமா

ஜுலை 16-31

புரட்சிக்கவிஞர் பாரதிதாசன்

மேதை

இதை வடசொல்லா, தமிழ்ச் சொல்லா என்று கேட்கின்றார் ஒரு புலவர். அவர் பெயரை வெளிப்படுத்திக் கொள்ள விரும்பவில்லை. காரணம் அச்சம் போலும்!

மேதை மட்டுமன்று, மேதாவி, மேது, மேதகு, மேதகை இவை அனைத்தும் தூய தமிழ்க் காரணப் பெயர்களே.

மேதக்க சோழவளநாடு என்பதில், மேதக்க என்பதை நோக்குக! இதில் மேன்மை என்பதன் அடியாகிய மே என்பதை ஊன்றி அறிவார்க்கு, இச்சொற்கள் அனைத்தும் வடவருடையன அல்ல என்பதை அறிந்து கொள்வது எளிதாகும்.

மீ என்பது மீது என வந்ததுபோல, மே என்பது மேது எனவந்து, மேன்மையை விளக்கியது காண்க! மேதை என்பதில் ஐ பெயர் இறுதிநிலை காண்க. ஒருமைக்குரியது. மேதகு மேன்மைத் தகுதி உடைமை. எனவே, இவை தூய தமிழ்க்காரணப் பெயர்கள் என்று தெளிக.

கம்பலம் – கம்பளம்

இது தூய தமிழ்க் காரணப் பெயர். விளக்கிக் காட்டி, படிப்போருக்குத் தமிழின் தொன்மை உணர்த்தப்படும்.

செந்நெ ருப்புணும் செவ்வெ லிம்மயிர்
அந்நெருப் பளவு ஆப்பொற் கம்பலம்

இச் சீவகசிந்தாமணி மேற்கோளை நுணுகி ஆராய்ந்தால் செவ்வெலி மயிர் கொண்டு நெய்ததே கம்பலம் – —கம்பளம் என விளங்கும்.

இவ்வடிகட்கு நெருப்பைத் தின்னும் எலிமயிர்க் கம்பளம் என்று நச்சினார்க்கினியார் பொருள் கொண்டது பொருந்தாது. செந்நிறம் ஏறிய எலி மயிர் என்பதே அதன் பொருளாகும்.

இனி முதலாவதாகக் கம்பலம் என்னும் சொல் எதனின்று தோன்றியது என்பது ஆராயப்பட வேண்டும். சொல்லாராய்ச்சி இல்லாதவர் இதனை ஒரு வடசொல் என்று கூறுவர். அவ்வாறானால் வடமொழியில் அதற்குப் பொருத்தமான அடிச்சொல் கூற முடியுமா? வாசசுபத்தியம் முதலிய அகரவரிசை நூலோர், ஆசைப்படுதல் என்னும் பொருளுள்ள ‘கம்’ என்ற அடியினின்று இது பிறந்தது என்பர். அது பொருந்தாது. அன்றியும் கம்பலம் என்ற சொல், கிரேக்கர், இலத்தீனியம், பழைய ஆங்கிலம் முதலிய பிற ஆரியமொழிகளுள்ளும் இல்லை. வடமொழியில் இச்சொல் ஒருவகை மானின் பெயராய் வழங்குவதுண்டு. கம்பலி என்னும் சொல்லுருவம் காலத்தால் மிக முற்பட்டது என்று மோனியர் உ. வில்லியம்சு, தம் அகரவரிசை நூலில் கூறியுள்ளதும் நினைற் கொள்ளத்தக்கதாகும். அவர் சொல்லியபடி காலத்தால் முற்பட்ட நாகரிகம் வாய்ந்த தமிழில் இக் கம்பலம் ஆடு என்று கூறிற்றுப் பிங்கலந்தை.

மேழகம் கம்பளம் தகரே திண்ணகம்
ஏழகம் கடாதுரு ஆட்டின் ஏறே

8-2_482

என்பதால் அறிக! இதனால் கம்பலம் — கம்பளம் ஆட்டின் பெயர்.

இனி, எலி மயிர் என்று வந்துள்ளதை ஆட்டு மயிரால் அன்றோ ஆனது கம்பளம் என ஐயுறுவர். எலி மயிர் என்பதில் உள்ள எலி என்ற சொல் ஆடு என்பதே என்பதை மேஷம் என்பது பற்றி விளக்கும் போது விளக்கப்படும்.

(குயில்: குரல்: 1, இசை: 45, 14-4-59)

மேஷம்

இது மேழகம் என்ற தூய தமிழ்க் காரணப் பெயரின் திரிபு. இவ்வாறு திரித்து மேற்கொண்டனர் ஆரியர்.
மேழகம் கம்பளம் தகரே திண்ணகம்

ஏழகம் கடாதுரு ஆட்டின் ஏறே
(பிங்கலந்தை கஎஉ)

இதில் மேழகம் ஆட்டின் பெயராதலை அறிக! “மே’’ அல்லது “மேழ்’’ என்று கத்துதலைக் கொண்டுள்ளதால் மேழகம் என்பது காரணப் பெயர் என்பதை அறிதல் வேண்டும்.

வடவரால் திரிக்கப்பட்டதால் மேஷம் என்பதைத் தமிழர்கள் மேற்கொள்ளுவது சிறப்பில்லை. இதுவே தொகுத்தல் பெற்று மேழம் என்றும் வரும். மேடம் என்றும் வரும். இவைகளையெல்லாம் தள்ளுக! மேழகம் என்பதை மட்டும் கொள்ளுக!

(குயில்: குரல்: 1, இசை: 47, 28-4-1957)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *