8.7.73 அன்று இரவு 7 மணி அளவில் மேட்டூரில் தந்தை பெரியார் அவர்களின் வேன் நிதி அளிப்புக் கூட்டம் மிக்க சீரும் சிறப்புடனும் நடைபெற்றது. கூட்டத்திற்கு, கொளத்தூர் பஞ்சாயத்து யூனியன் தலைவர் வி.ஏ. இராமலிங்கம் அவர்கள் தலைமை வகித்தார். மேட்டூர் அலுமினியம் கம்பெனி (மால்கோ) யின் நிருவாகி கே. புருஷோத்தமன் மேட்டூர் நகர தி.க., தி.மு. கழகம் ஆகியவற்றின் சார்பில் வசூல் செய்யப்பட்ட தந்தை பெரியார் வேன் நிதியை, தந்தை பெரியார் அவர்களிடம் அளித்தார். அடுத்து, பி.என். பட்டி பேரூராட்சித் தலைவர் க.கு.சின்னசாமி, சேலம் மாவட்ட தி.க. தலைவர் பொத்தனூர் க. சண்முகம், தருமபுரி மாவட்ட தி.க. தலைவர் எம். என் நஞ்சையா ஆகியோர் உரை நிகழ்த்தினார்கள். பின்பு, தந்தை பெரியார் அவர்கள் அறிவுரையாற்றுகையில் குறிப்பிட்டதாவது:
இந்தக் கூட்டம் என்னுடைய பிரயாண வசதிக்காக, கார் வாங்க நிதி அளிக்கின்ற கூட்டம். ரூ. 3000 அளித்திருக்கிறீர்கள். கார் நிதி வாங்கியது எனக்கே வெட்கமாக உள்ளது. நண்பர் வீரமணி அவர்கள், ஓட்டைக் காரில் அய்யா பிரயாணம் செய்வது, பிரயாணத்திற்கே குந்தகமாக இருக்கின்றது. வசதியான காரில் பயணம் செய்யவேண்டும் என்று ஆசைப்பட்டு வேண்டுகோள் விடுத்தார். நல்ல வண்ணம் நிதியும் சேர்ந்து கொண்டு உள்ளது. அவரது அன்பினை என்னால் தட்ட முடியவில்லை. எனக்கோ வயது 94 முடிந்து 95 ஆகப்போகின்றது.
எத்தனை நாளைக்கு அனுபவிக்க முடியும்? என்றாலும், பிரயாணத்திற்கு வசதியாக வேண்டும் என்றே இப்படிச் செய்யப்பட்டு உள்ளது. இதற்காக நன்றி தெரிவித்துக் கொள்கின்றேன். மனிதன் என்றாலே பகுத்தறிவுவாதி; மாறுதலுக்கு ஆட்பட்டவன் என்பதுதான் பொருள். மனிதன் எல்லாத் துறைகளிலும் மாறுதலை மேற்கொள்கின்றான்; சிந்திக்-கின்றான். ஆனால் கடவுள், மதம், சாஸ்திரம்-பற்றிய கருத்துகளைச் சிந்திக்கவோ, மாற்றிக் கொள்ளவோ மட்டும் மறுக்கின்றான்.
இப்படிப்-பட்ட மக்களைச் சிந்திக்கச் செய்ய-வேதான் சுயமரியாதை இயக்கமும், பகுத்தறிவுக் கழகமும் பாடுபடுகின்றது. சாஸ்திர புராணங்களில் எவன் ஒருவன் பகுத்தறிவு கொண்டு கடவுள், மதம், முன்னோர்கள் நடப்பு இவற்றை விவாதிக்-கின்றானோ அவன் நாத்திகன்; நரகத்துக்குப் போவான் என்று எழுதி வைத்துக் கொண்டு உள்ளார்கள். இதன் காரணமாகவே எவனுமே இந்தத் துறையில் முன் வரவில்லை.
நண்பர் வீரமணி அவர்கள் கூறியது போல, முதல் முதல் ஜாதி ஒழியவேண்டும் என்று பட்டாங்கமாக வெளியே வந்து பிரச்சாரம் செய்ய முன் வந்தது நான்தான். எனது தொண்டு தொடங்கும்-வரைக்கும் நாடெங்கும் வருணாசிரம சங்கம், சனாதன சங்கம் என்பதுதான் ஊருக்கு ஊர் வீதிக்கு வீதி இருந்தது – 1920 வரைக்கும் பிரபலமாக இருந்தது. இவற்றைக் கண்டிக்கின்ற முறையில் ஒரு இயக்கத்தை ஏற்படுத்திப் பிரச்சாரம் செய்ய முற்பட்டது நான்தான். சுயமரியாதை இயக்கத்தைத் தோற்றுவித்தேன். இதன் கொள்கை கடவுள், மதம், காந்தி, காங்கிரஸ், பார்ப்பான் இந்த அய்ந்து பேர்களை ஒழிப்பதுதான் என்று திட்டம் வகுத்தேன்.
இன்று வரவேற்பு அளிக்கின்றீர்கள். பணம் கொடுக்கின்றீர்கள். இந்த இயக்கம் தோன்றிய காலத்தில் பிரச்சாரம் செய்யும்போது கல்லடி, சொல்லடி, கலவரம், காலித்தனம் ஆகியவை கொஞ்சநஞ்சம் அல்ல; இவ்வளவையும் சமாளித்துக்கொண்டுதான் இந்த நிலைக்கு வந்துள்ளேன். எனது பிரச்சாரம் ஒன்றும் வீண் போகவில்லை. இன்றைக்கு மக்கள் எனது கருத்துகளின்படி நடக்காவிட்டாலும் காது கொடுத்துக் கேட்கும் அளவுக்கேனும் பொறுமை பெற்று உள்ளார்களே அது ஒன்றே போதும்.
இன்றைக்கு அரசியலில் பார்ப்பனருக்கு இடம் இல்லாமல் செய்துவிட்டோம். மந்திரி-களில் ஒருவர்கூட பார்ப்பனர்கள் கிடையாதே. நான் இயக்கம் தொடங்கும் போது, நமது மக்களில் 100க்கு 5 பேர்கள்கூட படித்தவர்-களோ, பதவியில் உள்ளவர்களோ கிடையாது. இன்றைக்கு நமது மக்களும் 100க்கு 45 பேர்களுக்குமேல் படித்து-விட்டார்கள். பெரும்-பகுதியாகப் பதவி உத்தியோகங்களில் நிறைந்து இருக்கின்றதைக் காண்கின்றீர்களே. இதற்காக இந்த நாட்டில் எங்களைத் தவிர வேறு யாராவது பாடுபட்டு உள்ளார்கள் என்று யாராவது கூற முடியுமா? நமது பிரச்சாரம் காரணமாக, நமது தொண்டு காரணமாக ஏற்பட்டுள்ள தமிழர் நலங்காக்கும் தி.மு.கழக ஆட்சியினைத் தமிழர்களாகியவர்கள் ஆதரிக்க வேண்டும், பாதுகாக்க வேண்டும் என்று எடுத்துரைத்தார்கள்.
அடுத்து நான் பேசுகையில் குறிப்பிட்டதாவது: தந்தை பெரியார் அவர்களின் தொண்டு தனித்தன்மை வாய்ந்ததும், புடம்போட்டு எடுக்கப்பட்டதும் ஆகும். தேர்தல் பக்கமோ பதவிப் பக்கமோ தலைவைத்துப் படுக்காத-வர்கள். தமிழ் மக்கள் வசதியற்றவர்களாக, இழிமக்களாக, தீண்டப்படாதவர்களாக ஆக்கப்பட்டு இருப்பது ஏன் என்று தந்தை பெரியார் அவர்கள்தான் சிந்தித்தார்கள். மனிதனை மனிதனாக மதிக்காத சமுதாயம், மனிதனை மனிதத் தன்மையுடன் நடத்தாத சமுதாயம், 100க்கு 3 பேராக இருந்தாலும் 100க்கு 97 மக்களை ஆட்டிப் படைப்பதை ஒழிக்க பரிகாரம் காண தந்தை பெரியார் அவர்கள்தான் சிந்தித்தார்கள்.
தமிழர் சமுதாயத்தைப் பிடித்துள்ள மூடநம்பிக்கை, ஜாதி முறை முதலிய பிணிகளைத் தீர்க்க தந்தை பெரியார் அவர்கள் இந்தச் சமுதாயத்திற்கு, கசப்பான ஈரோட்டு மருந்தினைக் கொடுத்து வருகிறார்கள். தந்தை பெரியார் அவர்களின் தொண்டினைத் தமிழகத்தின் எல்லாத் தரப்பு மக்களும் நுகர்ந்து கொண்டுதான் வருகின்றார்கள்!
நாமம் போட்ட தமிழன், விபூதி போட்ட தமிழன் முதற்கொண்டு தந்தை பெரியார் அவர்களின் தொண்டு காரணமாகத்தான் இன்றைக்கும் நாம் தலை நிமிர்ந்து உள்ளோம் என்று சில சமயத்திலாவது நினைத்துப் பார்க்கின்றார்கள். தந்தை பெரியார் அவர்கள் வயதோ 94. இந்தத் தள்ளாத வயதிலும் சுற்றிச் சுற்றிச் சூறாவளிப் பிரச்சாரம் செய்து வருகின்றார்கள். தந்தை பெரியார் அவர்களின் உழைப்புக்கு அவரின் வாகனத்தால் (வேன்) ஈடுகொடுக்க முடியவில்லை. அடிக்கடி பழுது-பட்டு விடுகின்றது.
எனவேதான், தந்தை பெரியார் அவர்களின் தொண்டுக்கு வசதியான புதிய வேன் அளிக்க முன்வந்துள்ளோம். அய்யா அவர்கள் இப்படிப் புதிய வேன் கேட்கவில்லை. நாம்-தான் அவர் தொண்டுக்கு வசதியாக வேன் அளிக்கின்றோம். காரணம், தந்தை பெரியார் அவர்களின் நிழலில்-தான்- – பாதுகாப்பில்தான் தமிழகமும், தமிழ்மக்கள் வாழ்வும் இருக்கின்றது.
தந்தை பெரியார் அவர்கள் வயோதிகம் அடைந்துவிட்டவர் என்று யாரும் கூறத் துணிவது இல்லை. தந்தை பெரியார் அவர்-களை, 94 வயது இளைஞர் என்றுதான் கூறத் தோன்றுகின்றது. தந்தை பெரியார் அவர்களின் அயராததொண்டு காரணமாக, இன்றைக்குப் பல துறைகளிலும் தலை எடுத்து உள்ளோம். இதற்கு ஒரு உதாரணம் வேண்டும் என்றால், சென்னை உயர்நீதிமன்றத்தை எடுத்துக்-கொள்ளுங்கள். ஒரு காலத்தில், தமிழர்களுக்கு வாய்ப்பில்லாது இருப்பது கண்டு தந்தை பெரியார் அவர்கள்தான் எடுத்துக்காட்டிப் போராடினார்கள். இதன் காரணமாக, அத்தி பூத்தாற்போல சிதம்பரத்தைச் சார்ந்த சோமசுந்தரம் பிள்ளை ஒருவர் வந்தார். இன்றைக்கு 18 உயர்நீதிபதிகள் உள்ளனர் என்றால், இதில் 16 பேர்கள் பார்ப்பனர் அல்லாதவர்களாக இருக்கக் காண்கின்றோம். இரண்டே பார்ப்பனர்கள்-தான் நீதிபதிகளாக உள்ளார்கள்.
அதிலும் ஓர் சிறப்பு என்னவென்றால், இதுவரை – – உயர்நீதிமன்றம் தோன்றிய காலம் முதல் ஒரு தாழ்த்தப்பட்டவர்கூட நீதிபதியாக வந்தது இல்லை. தந்தை பெரியார் அவர்களின் பிரச்சாரத்தின் காரணமாகத்தான் இன்று தாழ்த்தப்பட்ட வகுப்பைச் சார்ந்த ஜஸ்டிஸ் ஏ. வரதராஜன் அவர்கள் நீதிபதியாக வந்து உள்ளார்.
இன்றைக்கு ஏராளமான டாக்டர்கள், இன்ஜினியர்கள் என்று நம் இனத்தில் பார்க்கின்-றோம். தந்தை பெரியார் அவர்களின் வகுப்புவாரிப் பிரதிநிதித்துவம் வேண்டும் என்று போராடியது காரணமாகவேயாகும். இந்த வகுப்புவாரிப் பிரதிநிதித்துவம் செல்லு-படியற்றதாகப் பார்ப்பனர்கள் ஆக்கியபோது, தந்தை பெரியார் அவர்களின் போராட்டம் காரணமாக 1951-ஆம் ஆண்டில், முதல் முதல் அரசியல் சட்டம் திருத்தப்பட்டு வகுப்புவாரிப் பிரதிநிதித்துவத்திற்குப் பாதுகாப்பு ஏற்பட்டது.
எந்தப் பார்ப்பனர்கள் வகுப்புவாரிப் பிரதிநிதித்துவத்தை எதிர்த்தார்களோ, அந்தப் பார்ப்பனர்களே மதுரையில் மாநாடு கூட்டி, தங்களுக்கும் வகுப்புவாரிப் பிரிதிநிதித்துவம் வேண்டும்; தங்களையும் பிற்பட்டோர் பட்டியலில் சேர்த்துக்கொள்ள வேண்டும் என்று பார்ப்பனர்கள் கேட்கக்கூடிய நிலை-யினைத் தந்தை பெரியார் அவர்களின் வாழ்-நாளிலேயே பார்க்கின்றார்கள் என்று எடுத்துரைத்தேன்.
– நினைவுகள் நீளும்…