பெரியார் பெருந்தொண்டர் மானமிகு நீலமேகம்

ஜுலை 16-31

பேரா.ப.சுப்ரமணியன்

பகுத்தறிவு சிந்தனைகள் செயல்பாடுகள் மழையாக பொழியும் 94 வயதுடன் வாழ்ந்து கொண்டுள்ள பெரியார் பெருந்தொண்டர் மானமிகு நீலமேகம். இளைஞர்களுக்கு பகுத்தறிவு சிந்தனைகள் தழைத்தோங்க இதுபோன்ற மழைகளைப் பொழியும் மேகங்கள் பலப்பல…!

21.6.16 அன்று திருச்சிக்கு வருகைபுரிந்த தமிழர் தலைவர் அவர்களிடம் பெரியாரிடம் உதவியாளராக இருந்த மானமிகு மகாலிங்கம் அவர்கள் உரையாடி கொண்டிருந்தார்கள்.  அப்போது திருச்சி பெரியார் பெருந்தொண்டர் மானமிகு நீலமேகம் அவர்கள் வாழ்விணையர் திருமதி தங்கம்மாள் அவர்கள் மறைவுற்றார்கள் எனத் தெரிவித்தார்.  உடனே தமிழர் தலைவர் அவர்கள், ‘நீலமேகத்தை சந்தித்து விசாரித்து விட்டுவர வேண்டும்.  மாலையில் செல்வோம்’ என்றார்கள்.

மாலை 6.30 மணியளவில் தமிழர் தலைவருடன், மானமிகு தி.மகாலிங்கம், பெரியார் ஆசிரியர் பயிற்சி நிறுவன முதல்வர் திரு.கலைச்செல்வன், பெரியார் மாளிகை மூர்த்தி, தொழிலாளர் அமைப்பின் பொறுப்பாளர் திராவிடன் கார்த்திக், பகுத்தறிவாளர் கழக மலர்மன்னன் ஆகியோர் சென்றிருந்தோம்.

வீட்டின் முதல் மாடியில் இருந்த மானமிகு 94 வயது நீலமேகம் அவர்கள், ஆசிரியர் அவர்கள் மாடிப்படி ஏறி மேலே வரக் கூடாது என்பதற்காக அவர்களே அவரது மகனின் துணையோடு கீழே வந்தார்கள்! வந்தவுடன் ஆசிரியர் அவர்களின் கையை பற்றிக் கொண்டு நா தழுதழுக்க அய்யா பெரியாரின் இடத்தில் இருக்கும் தாங்களை பெரிதும் மதிக்கிறேன். தாங்கள் வீட்டிற்கு வந்தது எனக்கு மிகவும் உற்சாகத்தை அளிக்கிறது என்றார்கள்.

பின்பு பெரியார் பெருந்தொண்டர் நீலமேகம் அவர்கள் தன்னுடைய அனுபவங்களைப் பகிர்ந்து கொண்டார்கள்.

அந்தக் காலத்தில் பீமநகரில் பார்ப்பனர்கள் கூட்டம் போட்டு அய்யாவையும் நமது இயக்கத்தையும் கண்டபடி திட்டிவிட்டார்கள்.  இதை தோழர்கள் என்னிடம் கூறினார்கள்.  உடனே நான் கோபமாகி அதே இடத்தில் கூட்டம் போட “குப்தாவை’’ புக் செய்து விட்டேன். இதை வேதாசலம் அய்யாவிடம் கூறினேன்.  அவர்கள் அவன்தான் தெரியாமல் செய்துவிட்டான். நாம் அப்படியெல்லாம் இருக்கக் கூடாது. எனவே, கூட்டம் நடத்தக் கூடாது என்றார். இந்த புத்தி அவனுக்கு வேண்டும். பாப்பான் அவன் மந்தையிலே கூட்டம் போட்டு அய்யாவையும், அம்மாவையும் கண்டபடி பேசுகிறான். அதே இடத்தில் அதே மேடையில் அவர்களைப் பேசாமல் இருக்க மாட்டேன் என்றேன். அதற்கு வேதாசலம் அய்யா அவர்கள் அது முடியாது போய்யா! உன்னை டிஸ்மிஸ் பண்றேன் என்றார்.  அதற்கு நான், “நீ டிஸ்மிஸ் பண்ணாலும் நடக்கிறது நடந்தே தீரும்’’ என்றேன்.  கூட்டத்திற்கு ஏற்பாடுகள் செய்து விட்டேன்.

அடுத்தநாள் ஒரு ஆள் வந்தான். பார்ப்பானோட சம்பந்தி மன்னார்குடியைச் சேர்ந்த குன்னியூர் சாம்பசிவம் என்று நினைக்கிறேன். அந்த பார்ப்பானிடம் சொல்லி 100 பேர் அடிக்க வந்தனர். ‘கழகத்தை அப்படி பண்ணி விடுவான், இப்படி பண்ணி விடுவான் பிச்சிபிச்சி எடுத்து விடுவான்’ என்று சொன்னார்கள். ‘பார்க்கலாம்’ என்று நானும் சொன்னேன். பெரியார் மாளிகைக்கு சென்றேன்  வக்கீல் வேதாச்சலம் இருந்தார். அவர் நான்தான் சொன்னேனே அவர்களுக்கு அதுதான் தெரியும்.  ‘இப்போது யார் போய் நிற்பது கோர்ட்டுக்கு உங்களுக்கு புத்தி இருக்கிறதா? அது இருக்கிறதா?’ என்று கேட்டார்.

பின்பு அய்யா அவர்களிடம் போய் சொன்னோம். அவர் உடனே சிரித்துவிட்டு ஓகோ அப்படியா! வர்ரானா! 100 பேரா எதைத் தாண்டி வருவான்? வரட்டும். நீங்க நாலுபேரோ அய்ந்துபேரோ இருங்க. உங்களைத் தாக்கினால் நீங்கள் ஒருஅடி கூட அவர்களை அடிக்கக் கூடாது.  அடி வாங்கி விட்டுவாங்க! நானாச்சு! அவனாச்சு! ஒரு கை பார்க்கிறேன். தைரியமாக போங்க நான் பார்த்துக் கொள்கிறேன் என்றார்.

வேதாச்சலத்திற்கும் அய்யா அந்த வயதில் சொன்னதற்கும் எவ்வளவு வித்தியாசம் பாருங்கள்?  உடனே கைதட்டி, “அவர்கள் 100 பேரென்ன? 1000 பேர் வந்தாலும் பார்த்துக் கொள்வோம்’’ என்றோம். உடனே அய்யா, “அதுதானே வேண்டாம் என்பது. நீ அடி வாங்கிட்டு வா! நானாச்சு அவனாச்சு’’ என்றார்.

கூட்டத்திற்கு பார்ப்பனர்களோடு வந்த நம்மவர்களிடம், “எங்களுக்கு என்று ஒரு ஸ்தாபனம் வேண்டாமா? எங்கள் சூத்திர இழிவை போக்குவதற்கு என்று வேண்டாமா?  நீயும் சூத்திரன், நானும் சூத்திரன் இதனை எப்படிப் போக்குவது? இதற்குதானே அய்யா பாடுபடுகிறார்! கொஞ்சம்கூட விவரம் இல்லாமல் என்னிடம் பேசுகிறீர்களே’’ என்றோம். எவ்வளவு கலாட்டா வந்தாலும் அவர்கள் பக்கம் சேர்ந்துகிட்டு தடி எடுத்துக் கொண்டு வந்து அடியுங்கள் என்றேன்.  பிறகு எல்லோரும் ஒதுங்கிபோய் விட்டார்கள். நம் ஆட்கள் தடியை வைத்துக் கொண்டு விடியவிடிய உட்கார்ந்திருந்தார்கள்.

“எவ்வளவோ இருக்கு! அதுபற்றிப் பேசினால் அது நமக்குத்தான் அவமானம் அவர்கள் எல்லாம் விளம்பரதாரர்கள் என்றுதான் சொல்ல வேண்டும் அந்த இரண்டு பேரால் தான் (வேதாச்சலம், டி.டி.வீரப்பா) திருச்சியே கெட்டுபோனது. நல்ல உணர்ச்சி உள்ள ஆட்களையெல்லாம் உடனே மட்டம் தட்டி விடுவார்கள்.  எங்கே கழகம் இருக்கிறது?  யார் அதை நடத்துகிறார்கள் என்றே அவர்களுக்கு தெரியாது. அப்படிப்பட்டவர்கள் அந்த இரண்டு பேரும். அவருக்கு விளம்பரம் வேண்டுமா? இந்த இரண்டு பேரும் இப்படித்தான். நான் இதுபோன்று சொல்வதற்கு மன்னிக்க வேண்டும். நீங்க மேடைஏறி அதுபோன்று இருக்க வேண்டும்,- இதுபோன்று இருக்க வேண்டும், சீர்திருத்தத்தில் முன் மாதிரியாக இருக்கவேண்டும் என்பார்.  வீட்டில் எல்லாம் அப்படி இருக்கவேண்டும், இப்படி இருக்கவேண்டும் என்பார். இவரிடம் குமாஸ்தா பணிசெய்தார் அல்லவா? அவன் நாமத்தை போட்டுப் கொண்டிருப்பார் _ பயம்! நம்மை உதைத்து விடுவார்களோ பார்ப்பனர்கள் என்று பயம். இன்னொரு சம்பவத்தையும் சொல்லவேண்டும் எனத் தொடர்ந்தார்.

“நாங்கள் எல்லாம் பூசாரி, சடையன் பூசாரி என்னுடைய தாத்தா. பூசாரி தொழில்தான் பரம்பரையாக எங்களுக்கு. எங்கள் தாத்தா இங்கே வந்து எங்கள் சொந்த இடத்தில் (தற்போது குடியிருக்கும் வீட்டின் முன்புறம் காட்டுகிறார்) 35 அடி நீளம், 15 அடி அகலத்தில் ஒரு கோயில் கட்டினார். அந்தத் தெருவாசிகள் நான் எப்போது திராவிடர் கழகத்தில் சேருவேன் சேருவேன் என்று பார்த்துக் கொண்டிருந்தார்கள். நான் திராவிடர் கழகத்தில் சேர்ந்தவுடன், உருண்டை சோறு தின்ன பயல்கள் எல்லாம் _- கிழடு பயல்கள் எல்லாம் சேர்ந்து, இவன் திராவிடர் கழகம். இவன் கோவிலை இடித்து விடுவான். இவனிடமிருந்து அதனைப் பிடுங்க வேண்டும் என்று ஓரு பிரச்சாரத்தை கிளப்பி விட்டார்கள்.  ஒரு 50 பேர் வந்து என்னிடம் சொன்னார்கள்.

என்னிடம் அதையெல்லாம் பேசாதீர்கள். நான் என்னுடைய தொழிலை செய்கிறேன்.  அவ்வளவுதான். “இடித்துவிடுவேன் இடித்துவிடுவேன்’’ என்று சொல்கிறீர்களே, அப்படியென்றால், இடிக்கச் சொல்கிறாயா? அல்லது இருக்கவேண்டுமா? இரண்டில் ஒன்று சொல்லுங்கள் என்றேன்.

வழக்கு போட்டார்கள். அந்த வழக்கில், யார் எதிர் வக்கீல் தெரியுமா?  இந்த வேதாச்சலம் தான்.

அந்த இடம் என்னுடைய பாட்டனார் கொடுத்தது. காலடி 20க்கு 70 அடி காலடி அவன் என்ன செய்து விட்டான். பணத்தைக் கொடுத்து ஜாதியடி என திருத்தம்  சொல்லி விட்டான். வழக்கு நம் பக்கம் தீர்ப்பாகியது.  உயர்நீதிமன்றம் வரை சென்றது. எல்லா பயல்களும் சேர்ந்து கொண்டார்கள். நான் ஒரு ஆள்தான். என்னிடமிருந்து எப்படியாவது அந்த இடத்தைப் பிடுங்கிக் கொள்ள வேண்டும் என்று நினைத்தார்கள்.

வழக்கு போட்டவர்  மறைவுற்றார். உடனே நான் எனது மகனிடம் கூறி ஒரு மாலை வாங்கி வரச்சொல்லி மரியாதை செய்தேன். இதுதான் பெரியார் தொண்டர்களின் பண்பாடு.  இரண்டு மூன்று தலைமுறையாக கோயில் கட்டிய  எங்கள் குடும்பத்தில் ஒவ்வொருவருக்கு ஒரே ஒரு ஆண் வாரிசு தான் உண்டு. அந்த கோயிலை இடித்த எனக்கு தான் ஏழு வாரிசுகள். அதில் மூன்று மகன்கள். இதை நான் ஏன் சொல்கிறேன் என்றால், ‘கடவுள் இல்லை’ என்பதற்குதான்.

உயர் நீதிமன்றத்தில் நம்பால் தீர்ப்பாகியது.  மத்தியானம் ஒரு மணி. பகலில்தான் இடிக்க வேண்டும் என்று மனதில் நினைத்துக் கொண்டு என்னோடு பாலகிருஷ்ணன் என்பவரை அழைத்துக் கொண்டு சென்றேன். நானே அந்தக் கோவிலை இடித்தேன்.  அந்த இடத்தை நிரப்பி முனிசிபல் அலுவலகத்திற்கு கடிதம் எழுதி. பிளான் வாங்கி வீட்டையும் கட்டினேன்.

இவ்வளவும் செய்து விட்டு நான் அலுவலகத்திற்கு சென்று விட்டு வந்தேன்.  மாவுடையான் மச்சான் வந்து, வணக்கம் சொன்னார்.  நானும் வணக்கம் சொன்னேன்.  என்னுடைய கையைப் பிடித்துக் கொண்டு, மாப்பிள்ளை நாங்கள் சொல்பேச்சுக் கேட்டு செய்து விட்டோம். மன்னிக்க வேண்டும். நீ எந்த இடத்தில் மன்னிப்பு கேட்கச் சொன்னாலும் நாங்கள் கேட்கிறோம்.  எங்களுக்கு அந்த இடத்தைப் பார்த்துக் கொடு என்றார்.

ஒரு வாரம் கழித்து வாருங்கள் என்றேன்.
ஒரு வாரம் கழித்து வந்தார்.

என்னைக்கு ரிஜிஸ்டரை வைத்துக் கொள்ளலாம் என்றேன்.

வீட்டில் திட்டினார்கள். உன்னை இந்தப் பாடுபடுத்தினார்களே! என்னென்ன செய்தார்கள் 10 வருஷமாக. நீ என்னடாவென்றால், சொல்லாமல் கொள்ளாமல் திருப்பிக் கொடுக்கிறேன் என்கிறாயே என்றனர்.

அதுதான் பெரியார் தொண்டர்கள் என்பதற்கு அடையாளம் -_ நாணயமானவர்கள். 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *