சண்டிகரை சேர்ந்த குஷி சர்மா, அவரது 11ஆவது வயதிலேயே யோகா கற்றுத்தரும் குருவாக மாறியுள்ளார். தன்னைவிட வயதானவர்களுக்கு யோகா சொல்லித் தரும்போது, அவர்களும் பணிவாக இவரது கட்டளையை ஏற்று செய்வதைப் பார்க்கும் போது நாட்டிலேயே இவர்தான் குறைந்த வயது யோகா குருவாக இருப்பாரோ? என்று நினைக்கத் தோன்றுகிறது.
யோகாவில் இவருக்கு எப்படி ஆர்வம் ஏற்பட்டது?
“”யோகா கற்றுக் கொள்வதற்கு முன்னுதாரணமாக இருந்தவர் என்னுடைய அம்மாதான். ஈஷா பவுண்டேஷன் மூலமாக அவர் யோகா கற்றுக் கொண்டபோது தினமும் எனக்கு இதனால் அமைதியும் அதிக சக்தியும் கிடைப்பதாக கூறுவார்.
நானும் ஈஷா பவுண்டேஷன் மூலமாக யோகா பயிலத் தொடங்கியபோது, அதுவரை எதிலும் எரிச்சலையும் முன்கோபத்தையும் கொண்டிருந்த நான் சில மாதங்களுக்குள் அமைதியானவளாக மாறிவிட்டேன். அதன் பின்னரே மற்றவருக்கும் கற்றுதர வேண்டுமென்ற எண்ணம் தோன்றியது. அதற்கான பயிற்சியை முழுமையாக கற்கும்போதே அது தொடர்பான கருத்தரங்கிலும் பங்கேற்றேன். 80 மாணவர்களை பல்வேறு பிரிவுகளாக பிரித்து யோகா பயிற்சியளிக்கத் தொடங்கினேன். முக்கியமாக ஆரோக்கியம், வெற்றி, அமைதி, நடுநிலை தவறாமை போன்றவைகளுக்கான 7 யோகா பயிற்சி முறைகளை மட்டுமே கற்றுத் தருகிறேன். தினமும் அரைமணி நேரம் யோகாவுக்காக ஒதுக்குவேன். உங்கள் ஆரோக்கியமான வாழ்க்கைக்கு யோகா நிச்சயம் உதவும்” என்கிறார் குஷி சர்மா.
நாள்தோறும் புத்துணர்வுடன் இருக்க இவருக்கு மிகவும் பிடித்தமானது விரல்களுக்கு பயிற்சியளிப்பதுதானாம். இது டென்னிஸ் மற்றும் பியானோ பயிற்சிக்கும், ஒருநாள்விட்டு ஒருநாள் செல்லும் நடன பயிற்சிக்கும் உதவியாக இருக்கிறது. இது எனக்கு மட்டுமல்ல அனைவருக்குமே பயனுள்ளதாக இருக்கும்” என்கிறார்.