ஆர்.கிருஷ்ணமூர்த்தி M.A(Police Administration) B.L
உலகம் என்றால் உயிருள்ள மற்றும் உயிரற்ற பொருட்களின் கலவை. இதில் உயிருள்ள அனைத்து ஜீவராசிகளும் அழியாமல் இருக்க வேண்டுமென்றால் அதன் வாரிசுகள் தொன்றுதொட்டு உயிர்வாழ வேண்டும். எல்லா ஜீவராசிகளில் உயர்வாக கருதப்படுவது ஆறறிவு படைத்த மனிதனைத்தான். இதையே நம்முடைய ஔவை பாட்டி அரிது, அரிது மானிடராய் பிறத்தல் அரிது’’ என்று மிகப்பெரிய விஷயத்தை எளிதாக சொல்லிவிட்டு போயிருக்கிறார்.
இப்படிப்பட்ட மனிதன் தனக்காக வாழாமல் பிறருக்காக வாழ்வதுதான் சிறப்பு. பிறருக்காக வாழ்வது மட்டுமல்லாமல், உலகம் அழியாமல் நிலைத்து இருக்க தன்னுடைய வாரிசுகளை உருவாக்க வேண்டுமென்பதே மனித நீதியாகும். தன்னுடைய வாரிசுகளுக்குத் தேவையான அனைத்தும், அனைத்து வாரிசுகளுக்கும் சரிசமமாக பிரித்துக் கொடுத்துவிட்டால் ஒரு பிரச்சினையு-மில்லை. பிரித்துக் கொடுக்கவில்லை-யென்றால் தான் பிரச்சினைகளே வருகின்றன.
இவ்வாறு தன்னுடைய வாழ்நாள் முழுவதும் கஷ்டப்பட்டு உழைத்து கொஞ்சகொஞ்சமாக சேர்த்து வைக்கும் சொத்துக்களை அவர்-களுடைய வாரிசுகளுக்கு பிரித்து சரிசமமாக கொடுத்தோ (அ) கொடுக்காமலோ இறந்து-விட்டால் அவருடைய இறப்புச் சான்றிதழ் பெற்றுக்கொண்ட பிறகு வாரிசுச் சான்றிதழ் பெற விண்ணப்பம் செய்ய வேண்டும்.
இந்த வாரிசுச் சான்றிதழ் எதற்கு என்றால் தாய் தந்தையர் மற்றும் மூதாதையர் தங்களுடைய வாழ்நாள் முழுவதும் கஷ்டப்-பட்டு சேர்த்து வைத்த அசையும் மற்றும் அசையா சொத்துக்களை தன்னுடைய வாரிசு-களுக்கு முறையாகக் கொண்டு செல்வதற்கு பயன்படும். வாரிசுச் சான்றிதழ் இல்லை-யென்றால் வாரிசுகளே அல்லாதவர்கள் தாய் தந்தையர் மற்றும் மூதாதையர் சொத்துக்களை அபகரித்துக் கொள்வதோடு முறையான வாரிசுகளுக்கு சென்று சேராது.
முறையான வாரிசுகள் அல்லாதவர்கள் போலியான வாரிசுச் சான்றிதழ்களைப் பெற்று சிலர் சொத்துக்களை அபகரித்துக் கொண்டார்கள் என்று நீதிமன்றங்களுக்கு வழக்குகள் வருகின்றன. இப்படிப்பட்ட பிரச்சினைகளை தவிர்க்க வேண்டுமென்றால் வாரிசுச் சான்றிதழ்களை முறையாக எப்படி பெறுவது என்பதைப் பற்றிப் பார்ப்போம்.
முதலில் இறந்தவரின் இறப்புச் சான்றிதழுக்கு மனு செய்து இறப்புச் சான்றிதழ் வாங்கிய பின்பு இறந்தவரின் வாரிசுகளில் யாராவது ஒருவர் வாழும் இடத்திற்கு அருகாமையிலுள்ள வட்டாட்சியர் அலுவலகத்திலோ (அ) இறந்தவர் கடைசியாக வாழ்ந்த இடத்திற்கு அருகாமையிலுள்ள வட்டாட்சியர் அலுவலகத்திலோ வாரிசுச் சான்றிதழ் வழங்கும்படி மனு செய்ய வேண்டும்.
அவ்வாறு செய்யும் மனுவில் ரூ.2க்கான நீதிமன்ற வில்லையை ஒட்டி, பிறகு இறந்தவரின் பெயர் மற்றும் தந்தை பெயர் (அ) கணவர் பெயரை தெளிவாக எழுத வேண்டும். பிறகு இறந்த தேதி, இறந்தவருக்கு உண்டான மனைவி, தாய், தந்தையர், பிள்ளைகளின் பெயர்கள், வயது, பிள்ளைகள் திருமணம் ஆனவரா (அ) திருமணம் ஆகாதவரா, இறந்தவருக்கு உண்டான உறவு முறையையும் தெளிவாக எழுதி, அனைத்து விவரங்களையும் குறிப்பிட்டுள்ளோமா என்பதையும் சரிபார்த்துக்-கொள்ள வேண்டும்.
வாரிசுச் சான்றிதழ் மனுசெய்யும் போதே இறந்தவரின் பெயரில் இருக்கும் மின்சார இணைப்பு, சொத்துவரி, சொத்துக்கான பெயர் மாற்றம், பட்டா மாற்றம், தொலைப்பேசி இணைப்பு, வங்கிக் கணக்கில் இருக்கும் பணத்தை வாரிசுகளுக்கு மாற்ற, பங்குகளை மாற்ற, இன்னும் பல இறந்தவரின் வாரிசுகளுக்கு பெயர் மாற்றம் செய்ய வாரிசுச் சான்றிதழ் தேவைப்படுகிறது.
மேற்கூறிய அனைத்தின் நகல்களையும், இறப்புச் சான்றிதழ், குடும்ப அட்டை போன்றவற்றின் நகல்களையும் வாரிசுச் சான்றிதழ் மனுவுடன் சேர்த்து உரிய வட்டாட்சியர் அலுவலகத்தில் கொடுக்க வேண்டும்.
இவ்வாறு பெறப்படும் வாரிசுச் சான்றிதழ் மனுவைப் பெற்றுக்கொண்டு ரசீது வழங்குவார்கள். அதோடு உங்கள் வாரிசுச் சான்றிதழ் மனுவின் அடிப்படையில் கிராம நிர்வாக அதிகாரிகள் மூலமாக அல்லது வருவாய் ஆய்வாளர் (ஸிமி) மூலமாக விசாரணை மேற்கொண்டு விசாரணையின் அடிப்படையில் அறிக்கை தயார் செய்து, அறிக்கையை வட்டாட்சியரிடம் வழங்குவார்கள். மேற்கூறிய விசாரணை அறிக்கையின் அடிப்படையில் வட்டாட்சியர் வாரிசுச் சான்றிதழ் வழங்கலாம் என உத்தரவு பிறப்பிப்பார்கள். இந்த உத்தரவின் அடிப்படையில் வாரிசுச் சான்றிதழ் முறையான வாரிசுகளுக்கு வழங்குவார்கள். இறந்தவருக்கு வாரிசுகளே இல்லாத போது உறவினர்கள் கூட வாரிசுச் சான்றிதழுக்கு விண்ணப்பம் செய்யலாம். இதைப்பற்றி Hindu Succession Act இல் தெளிவாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.
முறையான வாரிசுகளுக்கு வாரிசுச் சான்றிதழ் வழங்கமுடியாது என்று சொல்ல வாய்ப்பில்லை. அவ்வாறு சொல்லும்பட்சத்தில் நீதிமன்றம் மூலம் தீர்வு பெற்றுக்கொள்ளலாம்.