மோடி ஆட்சியால் மாற்றமா? ஏமாற்றமா?

ஜுலை 16-31

மனிதவளக் குறியீட்டில் உலகில் 105 ஆம் இடத்தில் இந்தியா!

பிரதமர் மோடி அவர்களது தலைமையில், ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் கட்டுப்பாட்டின்கீழ் நடைபெறும் பா.ஜ.க.வின் (என்.டி.ஏ.) தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சியில் ஏற்கெனவே அளித்த பல வாக்குறுதிகள் இன்னமும் கானல் நீராகவே காட்சியளிக்கின்றன.

1. இளைஞர்களுக்கு வேலை வாய்ப்புகள் ஏராளம் உருவாகி, வேலையில்லாத் திண்டாட்டத்தை ஒழித்துவிட்டோம்; அல்லது  பெரும் அளவுக்கு வேலை கிட்டாதவர்கள் பட்டியலைக் குறைத்து விட்டோம் என்று சொல்லிப் பெருமைப்படும் நிலை வந்துள்ளதா?

2. “கருப்புப் பணத்தை வெளியே கொண்டு வந்து, நாட்டுக் குடிமக்கள்  ஒவ்வொருவருக்கும் 15 லட்சம் ரூபாய் கிடைக்க வழி செய்வேன்’’ என்றார் தேர்தல் பிரச்சாரத்தின்போது, பிரதமர் வேட்பாளரான நரேந்திர மோடி!

பிறகு அவரது நிதியமைச்சர் அருண்ஜெட்லி, ‘அது சும்மா விளையாட்டுக்காகக் கூறப்பட்டது’ என்றார்! இது பொறுப்பான பதிலாகுமா?

வெளிநாட்டு வங்கிகளில் பதுக்கி வைக்கப்-பட்டுள்ள கருப்புப் பணத்தை மீட்டுக் கொண்டு வரும் நடவடிக்கையில் ஏற்பட்ட கணிசமான முன்னேற்றம்-தான் என்ன? காங்கிரஸ் தலைமை யிலான மன்மோகன்சிங்கின் ஆட்சியும், அதற்குமுன் ஆண்டவர்கள் ஆட்சியும் 60 ஆண்டுகளில் செய்யாததை நான் 60 நாள்களில் செய்வேன் என்று மார்தட்டினார் மோடி _ சாதித்தது என்ன?

‘குறைந்த ஆட்சி; நிறைந்த ஆளுமை’ என்று பிரதமராகும் முன்பு முழங்கினாரே!

அதுவும் வெளிப்படை நிர்வாகம் (Transparency) என்று அறிவிக்கப்பட்டதே – அது எந்த அளவுக்கு நிறைவேற்றப்-பட்டது?

*மனந்திறந்த தனது வானொலிப் பேச்சில்* இதையெல்லாம் விளக்கியுள்ளாரா?

அவரது அமைச்சரவை சகாக்களிலிருந்து அண்மையில் நியமனம்மூலம் உள்ளே நுழைந்த சு.சுவாமியின் விவகாரங் களுக்குரிய பேச்சு, வாய்த் துடுக்கு வக்கணை -இவை எல்லாம் தடுக்கப்பட்டு, ஆளுமை உள்ள அமைச்-சரவையாக உள்ளதா? அல்லது ஆர்.எஸ்.எஸ். ஆணைக்கேற்ப நடைபெறும் அரசாங்கமாக உள்ளதா? என்பதை அவர் மனந்திறந்து கூறுவாரா?

இன்று ஒரு சிறு எடுத்துக்காட்டு. மனிதவளக் குறியீடு என்பது மனித வள முதலீடு (Human Capital) என்பதாகும். உலகின் முக்கிய 130 நாடுகளின் தர வரிசையில், நமது நாடு (இந்தியா) 105 ஆம் இடத்தில்தான் உள்ளது!

(1. பின்லாந்து 2. நார்வே 3. சுவிட்சர்லாந்து 4. ஜப்பான் 5. சுவீடன் இப்படி உள்ளதில் இந்தியா 105 ஆவது வரிசை எண்ணில் உள்ளதாக, ஜெனீவாவைத் தலைமையிடமாகக் கொண்ட அமைப்பின் உலகப் பொருளாதார ஆண்டு கூட்டம் சீனாவில் நடைபெற்றபோது _- 2016இல் வெளியான தகவல் இது).

உலக அளவில், நாட்டினுடைய இயற்கை-வளம், பொருளாதார வளர்ச்சி சார்ந்த மேம்பாடுகள் மற்றும் திறமைகளைப் பயன் படுத்துகின்ற திறன் சார்ந்த மனிதவளக் குறியீடுகள் _- ஆகியவைகளைக் கொண்டதே இத்தகவல் ஆகும்.

இதில் ஒரு வேடிக்கையான, வருத்தத்திற்குரிய செய்தி என்னவென்றால்,

வங்கதேசம், பூடான், இலங்கை போன்ற நாடுகள் மனிதவளக் குறியீட்டில், இந்தியாவை-விட முன்னிலையில் இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளதுதான்!

வறுமை மற்றும் மனித உழைப்பு பங்களிப்பு விகிதத்திலும் இந்தியாவின் நிலை பரிதாபம்-தான்.
வேலை வாய்ப்பற்ற தலைமுறை இடைவெளியில் இந்தியா 121 ஆவது இடத்தில் உள்ளது.
இந்திய ரிசர்வ் வங்கி ஆளுநர் ரகுராம் ராஜன் அவர்கள் இந்தியப் பொருளாதார நிலைபற்றிக் கூறும்போது,
“கண்ணற்ற மக்களின் ராஜ்ஜியத்தில் ஒரு கண் உள்ளவரே ராஜா’’ என்பதுபோல நமது நாட்டின் பொருளாதார நிலை, உலகின் மற்றவர்களோடு ஒப்பிட்டுப் பார்க்கையில் உள்ளது என்று, ஒளிவு மறைவின்றிக் கூறினாரே! சிகிச்சை அளிக்கவேண்டிய டாக்டர், நோயின் தன்மையை மறைக்காமல் கூறியதனால், ஆர்.எஸ்.எஸ். குழுவினரும், சு.சுவாமிகளும், குருமூர்த்திகளும், அந்த ரகுராம் ராஜன்மீது திட்டமிட்ட எதிர்பிரச்சாரத்தை கட்டவிழ்த்து, அவரை, நோகடித்து தானே விலகும்படி செய்துள்ளனரே!

எப்படியோ இப்போது நமது பிரதமர் சு.சாமியின் பொறுப்பற்ற பேச்சுக்கு எதிராக கண்டனம் தெரிவித்திருப்பது ஓரளவு வரவேற்கத்தக்கதுதான். Better Late than Never என்ற ஆங்கிலச் சொலவடைக்கேற்ப, இப்போதாவது தமது மவுனம் கலைத்தாரே, பரவாயில்லை!

சதா வெளிநாட்டுச் சுற்றுப்பயணம், இடையறாது ஊடகங்களில் விளம்பர வெளிச்சம்_தேர்தல் கூட்டங்களின் பேச்சுகளைப்-போல் _- எடுத்தெறிந்த பேச்சுகள்தான் மிஞ்சியுள்ளன!

ஆளுங்கட்சியைச் சேர்ந்த அனுபவம் மிகுந்த அருண்ஷோரி, யஷ்வந்த் சின்கா போன்றவர்-களே பொருளாதாரத் துறையில் சாதனை எதுவும் குறிப்பிட்டுச் சொல்லத் தகுந்ததாக இல்லை என்று கூறுகிறார்களே _- அதற்கு *காழ்ப்புணர்வினால் தான் அவர்கள்  அவ்வாறு கூறுகிறார்கள்’ என்பது மட்டும்தான் பதிலா?

நாடாளுமன்ற நடவடிக்கைகளோ இணக்கத்தோடு கூடிய ஜனநாயகக் கட்சிகளின் காட்சிகளாக இல்லையே!
சிலரை விட்டு தேவையின்றி பிரதான எதிர்க்கட்சியைச் சீண்டிடும் மலிவான செயற்பாடுகள் _- தலைமை,  கண்டும் காணாத நிலை _- இது ஆரோக்கியமானதுதானா?

தமிழ்நாட்டைப் பொறுத்தவரை மிகப்பெரிய ஏமாற்றம்தான் மிச்சம்!

காவிரி நதிநீர் ஆணையம் அமைத்தல், ஈழத் தமிழர்களின் வாழ்வுரிமைப் பாதுகாப்பு, தமிழக மீனவர்களை இலங்கை இராணுவம், கடற்படை தொடர்ந்து _ தாக்குவது, கைது, சிறைக்கு அனுப்புதல், முதலமைச்சரின் 80ஆம் கடிதம் _- முன்பு கொடுத்த அதே கோரிக்கைகளை மீண்டும் வைத்து _- மனு அளித்தல் இத்தியாதி _ இத்தியாதிதானே! தமிழ்நாடு மத்திய பி.ஜே.பி. ஆட்சியில் பெற்ற பலன்கள் இவைதான்!

மாணவர்களை அச்சுறுத்தி கல்வியைக் காவி மயமாக்கிடும் முயற்சியில்தான் “முன்னேற்றம்!’’

நடுநிலையாளர்கள், வாக்காளர்களான புதிய தலைமுறை இளைஞர்களுக்கு மிஞ்சியது ஏமாற்றமே!
மதவெறி, சமஸ்கிருத வெறி, கொடிகட்டிப் பறக்கும் கொடுமை கண்கூடு! மாற்றமா? ஏமாற்றமா? சிந்திப்பீர்!

கி.வீரமணி,
ஆசிரியர்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *