திராவிடநாட்டுக் கல்வி வரலாறு
– திராவிடப்பித்தன்
மீள் பதிப்பாசிரியர் – இரா.பாவேந்தன்
சோழப் பேரரசர்கள் தங்களின் பெருமை களைப் பேசும் கல்வெட்டுக்களையும், மெய்க்கீர்த்தி களையும் தாங்கள் ஆட்சி செய்த பகுதிகளில் வெட்டி வைத்தனர். சோழப்பேரரசுகளின் அரசியல் சாதனைகளை ஆவணப்படுத்தும் கல்வெட்டுகளையும் புகழ்பாடும் மெய்க்கீர்த்தி களையும் வெட்டி வைத்தவர்களுக்குக் கூட முறையாகக் கல்வியறிவு வழங்கப்படவில்லை.
“ஊர்ப் பொதுமக்களுக்குக் கல்வி பயிற்சியளிக்கப்பட்டதா, கல்வியளிக்கப்பட்டிருந்தால் அதன் தரமும், அது பயிற்றப்பட்ட முறையும் எத்தகையன என்ற கேள்விக்கு விடைகாண முடியவில்லை. ஊர்ப் பொதுமக்கள் பிழையற எழுதும் அளவுக்குக் கல்வியறிவு பெறவில்லை என்று ஊகிக்க வேண்டியுள்ளது. அரசாணைகளையும் உடைமை மாற்று ஆவணங்களையும் அழிவின்றிக் கல்லில் பொறிக்கும் தொழிலை மேற்கொண்டிருந்த கல்தச்சர்கள் பொறித்த கல்வெட்டுக்களில் நூற்றுக்கணக்கான எழுத்துப் பிழைகளைக் காண்கிறோம். ஒரு சில வரிகளையேனும் பிழையின்றி எழுதும் அடிப்படையான இலக்கண அறிவையும் அவர்கள் பெற்றிருக்கவில்லை எனத் தெரிகின்றது. கல்லில் பொறிக்கும்படி வாசகம் எழுதிக் கொடுத்த அரசாங்க அலுவலர்களே இலக்கணப் பிழைகளை அறியாதவர்களாய் இருந்தனரா, அன்றிப் பிழையுடன் பொறிக்கப்பட்டு வரும்போது கண்காணித்து அவ்வப்போது திருத்தும் வழக்கம் இல்லையா என்றெல்லாம் அய்யப்பாடுகள் எழுகின்றன’’. (கே.கே.பிள்ளை, 2002: 319)
என்பதால் அறிகிறோம். மேலும் இராஜராஜன், இராஜேந்திரன் முதலிய தமிழ் மன்னர்கள் தங்கள் மெய்க்கீர்த்திகளில் வடமொழியை முதலில் இடம்பெறச் செய்து தங்களின் வடமொழிச் சார்பை வெளிப்படுத்தினர்.
மேலும், சோழர்கள் காலத்தில் வடஆற்காடு போளூர், காமபுல்லூர் (காப்பலூர்), செங்கல்பட்டு ஆணியூர் (ஆனூர்), தென்னாற்காட்டில் இராசராச சதுர்வேதி மங்கலம் (எண்ணாயிரம்), புதுவை (திரிபுவனி), திருவொற்றியூர், திருவாடுதுறை, பெருவெளுர், திருமுக்கூடல் ஆகிய இடங்களில் பார்ப்பனர்கள் மட்டுமே கல்வி பயிலும் கல்வி நிறுவனங்களை நிறுவி நடத்திவந்தனர். இவர்களைச் சோழப்பேரரசர்கள் ஆதரித்து வந்தனர். இக்கல்வி நிறுவனங்களை நடத்த நிலம் தானமாகக் கொடுக்கப்பட்டது. ஆசிரியர்களுக்கு ஊதியமாக நெல்லும், சில வேளைகளில் பொன்னும் வழங்கப்பட்டன. பார்ப்பனரல்லாத மக்களின் உழைப்பையும் உற்பத்தியையும் முழுமையாகச் சுரண்டிக் கொண்ட சோழப் பேரரசர்கள் பார்ப்பனர்களுக்கு நிலத்தைத் தானமாகக் கொடுத்தது மட்டுமல்லாது அவர்களுக்குக் கல்வியையும், கல்வி கற்க உதவிகளையும் வழங்கினர்.
தமிழகத்தில் இசுலாமியர்கள் ஆட்சி 1378ஆம் ஆண்டு வரை நீடித்தது. இசுலாமியர்களின் வருகையைத் தொடர்ந்து தமிழகத்தில் இஸ்லாமியக் கட்டிடக்கலை, சமயக் கருத்துக்கள், மதராசா கல்விமுறை, உணவுமுறை ஆகியவை பரவின.
இசுலாமியர்களை வெற்றிகொண்ட விஜயநகரப் பேரரசு 1340ஆம் ஆண்டு தன் ஆட்சியைத் தமிழகத்தில் விரிவுபடுத்தியது. விஜயநகரப் பேரரசு பார்ப்பனீயத்தை ஆதரித்த மனுதர்ம அரசாகவே இருந்தது. கிராம நிர்வாகப் பொறுப்பிலிருந்த பொற்கொல்லர்கள், உழவர்களை இடைநீக்கம் செய்து அப்பதவிகளை பார்ப்பனர்கள் மட்டுமே வகிக்கலாம் என அறிவித்தது. மேலும், பார்ப்பனர்களுக்கே கொடைகள் வழங்கப்பட்டன. பார்ப்பனர்களுக்காக ஊட்டுப்புரைகள் ஏற்படுத்தப்பட்டன என வரலாற்று அறிஞர் டி.வி.மகாலிங்கம் குறிப்பிடுவார்.
விஜயநகரப் பேரரசின் வீழ்ச்சிக்குப் பிறகு 1565ஆம் ஆண்டு தமிழகத்தை நாயக்கர்கள் கைப்பற்றினர். தங்களின் ஆளுகைக்கு உட்பட்ட பகுதிகளை நிர்வாக வசதிக்காகப் பாளையப் பட்டுக்களாகப் பிரித்தனர். இவர்களும் சமஸ்கிருதக் கல்வியை ஆதரித்தனர். பார்ப்பனர்கள் மட்டுமே ஆசிரியர்களாகவும் மாணவர்களாகவும் இருக்கும் பல கல்விக் கூடங்களை உருவாக்கினர். கி.பி.17ஆம் நூற்றாண்டுக்கு முற்பட்ட நடுகற்கள் பல, கொங்குப் பகுதிகளில் பெரும் எண்ணிக்கையில் கிடைத்துள்ளன. நடுகற்களை ஆய்வு செய்த தொல்லியல் ஆய்வாளர்கள் அடித்தள மக்களிடம் எழுத்தறிவு இல்லாமை மிகுந்த காரணத்தால் நடுகற்களில் சிற்பங்கள் மட்டுமே எண்ணிக்கையில் இடம்பெற்றுள்ளன. விதிவிலக்காகச் சில நடுகற்களில் எழுத்துக்களும் இடம் பெற்றுள்ளன.
வரலாற்றுக்கு முற்பட்ட காலத்திலும், வரலாற்றுக் காலத்திலும், சங்க காலத்திலும், எழுத்தறிவு பெற்றிருந்த தமிழ்ச் சமுதாயத்தில் வடபுலத்தி லிருந்து வருகை தந்த சமண, பவுத்த சமயங்கள் சமுதாயத்தின் அனைத்துப் பிரிவினரிடமும் எழுத்தறிவு பெருகக் காரணமாக இருந்தன. சமண பவுத்த வருகையின்போது தமிழகம் வந்த ஆரியப் பார்ப்பனர்கள் மனுதர்மத்தின் மூலமாகவும், புராணப் பொய்ம்மைகள் மூலமும் தமிழ் அரசர்களைச் சங்ககாலத்தில் மூளைச் சலவை செய்து பார்ப்பனரல்லாதார் அறிவு பெறுவதைத் தடைசெய்ய முயற்சிகளை மேற்கொண்டனர். களப்பிரர் காலத்தில் பார்ப்பனீயப் பண்ணையம் முற்றிலுமாக வீழ்த்தப்பட்டது. பல்லவர், சோழர், பாண்டியர், விஜயநகர, நாயக்கர் காலங்களில் (இடையில் இசுலாமியர் வருகையின்போது சில நூற்றாண்டுகள் மட்டும் மவுனம் காத்தனர்) மன்னர்களின் துணையுடன் மனுதர்ம ஆட்சியை நடத்திவந்த பார்ப்பனர்கள் இம்மண்ணின் பூர்வக் குடிகளான பார்ப் பனரல்லாதாரைப் பல நூற்றாண்டுகளாக அறிவு பெறுவதிலிருந்து விலக்கி வைத்தனர். அறிவு பரவல் இன்மையால் பார்ப்பனரல்லாத மக்கள் உழவர்களாகவும் கைவினைக் கலைஞர்-களாகவும், இசைக் கலைஞர்களாகவும் இருந்தபோதிலும் தொடர்ந்து பல நூற்றாண்டுகள் அடிமைகளாகவே இருக்க வேண்டிய அவலநிலை தொடர்ந்தது.
இந்தியாவின் மேற்குக் கடற்கரைப் பகுதிகளுக்கு வருகை தந்த என்றி என்றிக்கஸ் என்ற கிறித்துவச் சமயப் பணியாளர் 1554ஆம் ஆண்டு தமிழ் நூல்களை அச்சிட்டார். தென்னிந்தியக் கடற்கரைப் பகுதிகளில் அவருக்குப் பின்வந்த சமயப் பணியாளர்கள் கல்வி நிறுவனங்களைத் தொடங்கியதற்கான சான்றுகள் எதுவும் கிடைக்கவில்லை. தமிழகத்தின் கிழக்குக் கடற்கரை நகரான தரங்கம்பாடிக்கு சீகன்பால்கு, ஹென்றிபுளுட்சே ஆகிய இருவரும் 1706ஆம் ஆண்டு வருகை தந்தனர். தரங்கம்பாடியில் 1709ஆம் ஆண்டு பார்ப்பனரல்லாதாருக்கான முதல் பள்ளியைத் தொடங்கினர். இக்கல்வி நிறுவனமே அய்ரோப்பியர் ஒருவரால் தொடங்கப்பட்ட தென்னிந்தியாவின் முதல் கல்வி நிறுவனமாகும். இத்தகையக் கல்வி நிலையங்களே பவுத்த, சமணக் கல்வி நிறுவனங்களுக்கு அடுத்த நிலையில் சமுதாயத்தின் அனைத்துப் பிரிவினருக்கும் கல்வி வழங்கிய கல்வி நிலையங்களாகும். இப்பள்ளியில் தமிழ், போர்த்துக்கீசியம் ஆகிய மொழிப் பாடங்கள் கற்றுத் தரப்பட்டன. (ஞா.சாமுவேல் 1906:14). இக்கல்வி நிறுவனங்களின் எண்ணிக்கை 1713ஆம் ஆண்டு அய்ந்தாக உயர்ந்தது.
தரங்கம்பாடியில் தொடங்கப் பெற்ற ‘கிறித்துவ அறிவைப் பரப்பும் சங்கம்’ என்ற அமைப்பை 1710ஆம் ஆண்டில் தொடங்கிய சீகன்பால்கு சென்னையில் பள்ளிகளைத் தொடங்க கிழக்கிந்திய வணிகக் குழுமத்திடம் அனுமதி வாங்கி சென்னையில் குடியேறிய ஆங்கிலேயர்களுக்காக இப்பள்ளிகளைச் சென்னையில் தொடங்கினார்.
இதனைத் தொடர்ந்து தமிழகத்தின் பல பகுதிகளில் கிறித்தவச் சமயப் பணியாளர்கள் அய்ரோப்பியக் கல்வி முறையைப் பின்பற்றி அறிவியல் கல்வியைப் போதிக்கும் நோக்கத்துடன் கணிதம், புவியியல், தாவரவியல் முதலியப் பாடங்களைத் தாங்கள் நடத்திவந்த கல்வி நிலையங்களில் பயிற்றுவித்தனர். மேலும், தமிழகத்தில் வழக்கில் இருந்த சித்த மருத்துவ மூலிகைகளை அய்ரோப்பியத் தாவரவியல் முறைகளைப் பின்பற்றி வகைப்படுத்திப் பாதுகாக்கும் முறையையும் அறிமுகப்படுத்தினர். இவ்வாறாக அய்ரோப்பியக் கல்வி தமிழகத்தில் மெல்ல நுழைந்தது. இதே காலகட்டத்தல் திண்ணைப் பள்ளிக்கூடங்கள் தமிழகத்தில் நடத்தப்பட்டு வந்தன என்பதை உ.வே.சாமிநாதையர் பதிவு செய்துள்ளார். (உ.வே.சாமிநாதையர், 1986:5). இதுபோன்ற பள்ளிகளில் வேதம் சமஸ்கிருதம் ஆகியவற்றைப் பார்ப்பனர்கள் மட்டுமே கற்றனர். பத்தொன்பதாம் நூற்றாண்டின் தொடக்க பத்தாண்டுகளில் கிறித்துவச் சமயப் பணியாளர்களால் முன்னெடுக்கப்பட்ட முயற்சிகளின் விளைவாகப் பாரம்பரியத் தமிழ்ச் சமுதாயத்தில் கல்வி பரவலாக்கம் பெற்றது.
தரங்கம்பாடியில் சீகன்பால்கு தொடங்கிவைத்த ‘அனைத்துப் பிரிவினருக்கு-மான கல்வி நிலையங்கள்’ மாகாணம் முழுவதும் பரவின. 1813ஆம் ஆண்டு காலனிய அரசு சாசனச் சட்டத்தை நிறைவேற்றியது.
“இந்தியாவில் இலக்கிய மறுமலர்ச்சிக்கும் வளர்ச்சிக்கும் இந்தியக் குடிகளிடையே கல்வியறிவை ஊக்குவிக்கவும் இந்தியாவிலுள்ள பிரிட்டிஷ் பகுதிகளில் வாழும் மக்களிடையே விஞ்ஞான அறிவைப் புகுத்தவும் அரசு வருமானத்தில் ஆண்டுதோறும் ஒரு இலட்சம் ரூபாய்க்குக் குறையாமல் 1813 சாசன சட்டத்தின் 43ஆவது பிரிவு தலைமை ஆளுநருக்கு அதிகாரம் அளித்தது’’ (து.சதாசிவம், 1983: 21)
இதனைத் தொடர்ந்து 1833ஆம் ஆண்டில் சாசன சட்டம் திருத்தப்பட்டது. இச்சட்டத்தின் 87ஆவது பிரிவின்படி.
“இந்தியாவில் வாழும் எந்த ஒரு குடிமகனும் அவனது மதம், பிறப்பிடம் வமிசம், வர்ணம் என்னும் எந்த ஒரு காரணத்தாலுமோ அன்றி அவையாவற்றானுமோ கம்பெனியில் வேலை மேற்கொள்வதைத் தடுக்கக்கூடாது’’ (ந.சுப்பிரமணியன், 1988:38) என்று கூறி வேலைவாய்ப்புப் பெறுவதைப் பொதுவாக்கியது. இச்சட்டம் பிறப்பின் அடிப்படையில் குறிப்பிட்ட ஜாதியினர் குறிப்பிட்ட தொழிலை மட்டுமே மேற்கொள்ள வேண்டும் என்ற மனுதர்ம கோட்பாட்டுக்கு மரண அடி கொடுத்தது.
கிராமப்புற ஜாதிய அமைப்பின் உற்பத்தியை ஏகபோகமாகக் கொள்ளையடித்து வந்த பார்ப்பனர்கள் காலனிய அரசின் சட்டங்களால் பெரிதும் பாதிக்கப்பட்டனர். எனவே, கிராமங்களிலிருந்து புலம்பெயர்ந்து நகரங்களுக்கு வந்தனர். அய்ரோப்பியக் கல்விமுறையைக் கற்று காலனிய அரசுப் பணிகளைப் பெருமளவில் கைப்பற்றினர்.
ஜாதிய அமைப்பால் கல்வி மறுக்கப்பட்ட பார்ப்பனரல்லாதார் அரசு மற்றும் கிறித்துவக் கல்வி நிலையங்களில் கல்வி கற்று காலனிய அரசின் வேலைவாய்ப்பைப் பெற முனைந்தபோது அரசு இயந்திரத்திலிருந்த பார்ப்பனர்கள் பல்வேறு இடையூறுகளைச் செய்து வந்தனர். இத்தடைகளை மீறி பணி வாய்ப்பைப் பெற்றுப் பணியிலிருந்த பார்ப்பனரல்லாதோரும் பல்வேறு தொல்லை-களுக்கு ஆளாயினர்.
சென்னை மாகாணத்துக்கு வருகைதந்த பொதுப்பணி உயர்மட்ட ஆணைக்குழுவின் முன்பாக டி.எம்.நாயர், பிட்டி தியாகராயர், பாலாஜி ராவ் நாயுடு ஆகியோர் பார்ப்பனரல்லாதோரின் பிரதிநிதித்துவம் குறித்து 1913ஆம் ஆண்டு சாட்சியம் அளித்தனர். இக்கூட்டத்தில் டாக்டர் நாயர், பிட்டி தியாகராசர் ஆகியோர் சென்னை மாகாண சிவில் சர்வீசில் பிராமணர்கள் அதிகமிருப்பதை குழுவினருக்குச் சுட்டிக்காட்டினர். மேலும் இக்குழுவின் முன்பாக நாயரும், தியாகராயரும் வெளியிட்ட கருத்து முக்கியத்துவம் வாய்ந்தது.
“இரண்டு தனித்தனி போட்டித் தேர்வுகள் நடத்தப்பட வேண்டும். முதலாவதாக சரிபாதி உத்தியோகங்களுக்குப் பிராமணர் உள்ளிட்ட அனைவரும் கலந்துகொள்ள அனுமதிக்க வேண்டும். மறுபாதி இடங்களுக்கானத் தேர்வில் பிராமணரல்லாதார் மட்டுமே கலந்துகொள்ள அனுமதிக்க வேண்டும்’’ (முரசொலிமாறன், 1955:64)
உயர்மட்டக் குழுவினர் முன்பாக வைக்கப்பட்ட இந்த யோசனையை ‘பின்தங்கிய வகுப்பினரைக் கைதூக்கிவிட்ட வகுப்புவாரி பிரதிநிதித்துவத்தின் கரு என்று கொள்ள வேண்டும். பின்னால் நீதிக்கட்சியின் முக்கியக் கொள்கைகளில் ஒன்றாக இது ஆக்கப்பட்டது’ (முரசொலிமாறன், 1999:64)
நடேசனார், டி.எம்நாயர், சர் பிட்டி.தியாகராயர் ஆகியோர் தலைமையில் சென்னை மாகாணத்தின் பல பகுதிகளைச் சார்ந்த பல்வேறு ஜாதிகளைச் சார்ந்த பார்ப்பனரல்லாத தலைவர்கள் 20.11.1916 அன்று சென்னை விக்டோரியா பப்ளிக் ஹாலில் கூடினர். இக்கூட்டத்தில் சென்னை மாகாணத்தின் பல்வேறு பகுதியிலிருந்து வருகைதந்த பார்ப்பனரல்லாத சமுதாயங்களைச் சார்ந்த முப்பதுக்கும் மேற்பட்ட தலைவர்களும் கலந்து கொண்ட இக்கூட்டத்தில் தென்னிந்திய மக்கள் சங்கம் (South Indian People’s Association) என்ற அமைப்பைத் தோற்றுவித்தனர்.
இந்த அமைப்பின் சார்பில் பிட்டி. தியாகராயர் பார்ப்பனரல்லாதார் கொள்கை அறிக்கையை (The Non-Brahmin Manifesto) 20.12.1916 அன்று வெளியிட்டார். (Irshick 1996:366). சரியாக ஒரு மாதம் கழித்து அன்றைய தினம் தென்னிந்திய மக்கள் சங்கம் (SIPA) தென்னிந்திய நல உரிமைச்சங்கம் (South Indian Liberal Federation – SILF) என பெயர் மாற்றம் செய்யப்பட்டது.
அந்த அறிக்கை அரசாங்க அலுவலகங்கள், பொதுநிறுவனங்கள் ஆகியவற்றில் பார்ப்பனரல்லாதோருக்கு வேலைவாய்ப்பு பிரதிநிதித்துவத்தைக் கோரியது. மேலும், பார்ப்பனரல்லாதோருக்கு அரசியல் பிரதிதித்துவத்தையும், கல்வியியல் உரிமைகளையும் கோரியது. மேலும், பார்ப்பனரல்லாதாரின் முதற்கடமை என அந்த அறிக்கையில் இடம்பெற்ற கருத்து வருமாறு.
“சிறுவர், சிறுமிகளை இன்னும் அதிகமான அளவில் படிக்க வைக்க வேண்டும். பல இடங்களில் சங்கங்களைத் தோற்றுவித்து பிராமணரல்லாதாருக்கு எந்தெந்த சலுகைகள் உண்டு என்பதை எடுத்துக்கூறி அதிக மாணவர்களைப் படிக்கச் செய்ய வேண்டும். நிதி திரட்டி ஏழைகள் படிப்பதற்கு உதவி செய்ய வேண்டும். கல்வித்துறையில் நாம் முன்னரே கவனம் செலுத்தத் தவறிவிட்டோம். அதனால் இப்பொழுது நாம் அதில் தீவிரமாக ஈடுபட வேண்டும். கல்வியில் கவனம் செலுத்துவதுடன் சமுதாய முன்னேற்றம் மற்றும் அரசியல் முன்னேற்றத்திற்கும் முழுமையாக உழைக்க வேண்டும்’’. (Irshick 1996: 366)
பார்ப்பனரல்லாதார் கொள்கை அறிக்கை சென்னை மாகாண அரசியல் அரங்கில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது. நீதிக்கட்சியின் முதல் மாநாடு 20.8.1917 அன்று கோவையில் நடைபெற்றது. இம்மாநாட்டில் அத்தீர்மானம் ஒன்றில் பார்ப்பனரல்லாரின் கல்விக் குறித்து ஆறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. அறநிலையங்கள் (Charistable Trusts) பார்ப்பனச் சமஸ்கிருதப் பள்ளிகளுக்கு வழங்கும் நிதிக்கும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டுள்ளது. இத்தீர்மானங் களை ஆதரித்துப் பேசிய டி.எம்.நாயர் திருப்பதி மடத்தின் பணத்தைக் கல்விக்காகச் செலவிட சட்டசபையில் திரு.டி.வி.சேசாத்திரி அய்யர் கொண்டு வந்த தீர்மானத்தைத் தான் ஆதரித்தாகக் குறிப்பிட்டுள்ளார். (T.Varadarajan Naidu 1932:21-22) இதனைத் தொடர்ந்து கோதாவரி மாவட்டத்தில் நடந்த பாக்கிவாலே மாநாடு (27, 28.10.1917), புலிவெந்தலா மாநாடு (03, 04.11.1917), பெஜவாடா தெலுங்கு தலைவர்கள் மாநாடு (11.12.1917), திருநெல்வேலி தமிழ்த் தலைவர்கள் மாநாடு (30.1.1917, 01.12.1917), சேலம் மாநாடு (08.12.1917) ஆகிய மாநாடுகளில் சென்னை மாகாண பார்ப்பனரல்லாத மாணவ, மாணவியர்களின் ஆரம்பக் கல்வி முதல் அறிவியல் உயர்க்கல்வி பெறுவதுவரை பல தீர்மானங்களை நீதிக்கட்சி நிறைவேற்றியது. இந்தத் தீர்மானங்கள் அனைத்தும் செயல்வடிவம் பெற நீதிக்கட்சியின் இதழ்கள் தொடர்ந்து குரல் கொடுத்து வந்தன.
பிரிட்டிஷ் பாராளுமன்ற கூட்டுப்பொறுப்புக் குழுவின் முன்னிலையில் நீதிக்கட்சிப் பிரதிநிதிகள் தங்கள் கோரிக்கையை எடுத்துவைக்க டி.எம்.நாயர், கே.வி.ரெட்டிநாயுடு, அப்பாராவ் நாயுடு, எல்.கே.துளசிராம், சென்னை திராவிடர் சங்கத்தின் சார்பில் சர்.ஏ.ராமசாமி, ஜமீன்தார்கள் பிரதிநிதியாக பனகல் அரசர் ஆகியோர் அடங்கிய குழு லண்டன் சென்றது. இப்பயணக் குழுவின் வழிகாட்டி டி.எம்.நாயர் லண்டனில் 17 அக்டோபர் 1918ஆம் ஆண்டு இயற்கை எய்தினர்.
எனினும், மற்ற உறுப்பினர்கள் லண்டன் மாநகரில் பல்வேறு அரசியல் தலைவர்களைச் சந்தித்தனர். மேலும், லண்டன் நகரின் பல பகுதிகளில் பொதுமக்களிடம் கருத்துப் பரப்புரையில் நீதிக்கட்சித் தலைவர்கள் ஈடுபட்டனர். இக்குழுவினரின் பிரதிநிதியான கே.வி.ரெட்டிநாயுடு நீதிக்கட்சியின் நிலைப்-பாட்டை காலனிய அரசின் பிரநிதிகளிடம்
“ஒரே வாக்கியத்தில் கூறவேண்டுமானால் வகுப்புவாரிப் பிரதிநிதித்துவமும், வகுப்புவாரித் தொகுதிகளும் கொண்ட எந்தச் சீர்த்திருத்தத்தையும் நாங்கள் ஏற்றுக்கொள்ளத் தயாராக இருக்கிறோம். வகுப்புவாரி பிரதிநிதித்துவம் இல்லாத எந்தச் சீர்திருத்தத்துக்கும் நாங்கள் தயாராக இல்லை’’.
(மேற்கோள், முரசொலி மாறன், 1999: 195)
எனத் தெளிவாக விளக்கினார்.
இதனைத் தொடர்ந்து 1920ஆம் ஆண்டு நடந்த தேர்தலில் நீதிக்கட்சி போட்டியிட்டு வென்று ஆட்சியைப் பிடித்தது. ஆட்சியைப் பிடித்த நீதிக்கட்சி வகுப்புவாரிப் பிரதிநிதித்து-வத்துக்கான முதல் ஆணையை 1921ஆம் ஆண்டு வெளியிட்டது. இந்த ஆணைதான் இன்று-வரை இடஒதுக்கீடு கல்வி, வேலைவாய்ப்-பில் வழங்குவதற்கான அடித்தளத்தை இடஒதுக்கீடு ஏற்படுத்தியது. வரலாற்றுச் சிறப்புமிக்க இந்த ஆணை முதல் வகுப்புவாரி ஆணை (First Communal G.O.) என வழங்கப்படுகிறது. இதனைத் தொடர்ந்து இரண்டாவது வகுப்புவாரி ஆணை (1922) வெளியிடப்பட்டது. இதனைத் தொடர்ந்து கல்லூரிகளில் இடஒதுக்கீட்டை முறைப்படுத்த கல்லூரிக் கல்விக்குழு 1924ஆம் ஆண்டு உருவாக்கப்பட்டது.
சுயமரியாதை இயக்கம் கண்ட பெரியாரின் தலைமையில் செங்கல்பட்டில் தமிழ்மாகாண முதல் சுயமரியாதை மாநாடு 1929ஆம் ஆண்டு பிப்ரவரியில் நடைபெற்றது. இம்மாநாட்டில் பார்ப்பனரல்லாதவர்களின் கல்வி குறித்து பல தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
‘லண்டனில் 1930ஆம் ஆண்டு முதல் வட்ட மேஜை மாநாடும், இரண்டாவது வட்ட மேஜை மாநாடு 1931ஆம் ஆண்டும் நடைபெற்றன. ‘இவ்வட்ட மேஜை மாநாட்டின் முடிவின்படி சிறுபான்மையோர்க் குழு (Minorities Committee) உருவாக்கப்பட்டது. இக்குழுவின் பரிந்துரை-களுக்கு ஏற்ப காலனிய அரசு இடஒதுக்கீடு வழங்க முன்வந்தது’ (க.நெடுஞ்செழியன் 1996:244)
இது அன்றைய காலனிய அரசு (நடுவண் அரசு) வழங்கிய முதல் இடஒதுக்கீடாகும். இதற்கான ஆணை 1934ஆம் ஆண்டு வெளியிடப்பட்டது.
இந்நிலையில் பிப்ரவரி 1937ஆம் ஆண்டு நடைபெற்ற பொதுத் தேர்தலில் நீதிக்கட்சி தோற்று காங்கிரஸ் கட்சி பதவியேற்றது. இராஜகோபாலாச்சாரியார் தலைமையில் அமைந்த அமைச்சரவை நீதிக்கட்சி அரும்பாடு-பட்டு பார்ப்பனரல்லாதாருக்கு ஆற்றிய பணிகளைக் குழிதோண்டிப் புதைத்தனர். ‘இதனை, க.நெடுஞ்செழியன்,
“… பொருளிழப்பை ஈடுகட்டும் வகையில் ஏறத்தாழ 2500 பள்ளிகளை மூடியதுடன் கல்விக்கான செலவுகளில் கைவைத்தார். வகுப்புரிமையை செயல்படுத்தும் வகையில் நீதிக்கட்சி அரசால் கொண்டுவரப்பட்ட கல்லூரிக் குழுவைக் கலைத்தார். இதன் வாயிலாகப் பார்ப்பனர் அல்லாத மாணவர்கள் கல்லூரியில் சேர்வதற்குரிய வாய்ப்புக்கள் மறுக்கப்பட்டன. அரசுப் பதவிகளில் காலியாகும் இடங்களுக்குத் தகுதி திறமை இவற்றைக் காரணம் காட்டி பார்ப்பனர்களையே நியமிக்க வழிவகை செய்தார்’’ (க.நெடுஞ்செழியன் 1996: 245) என விளக்குவார்.
மேலும் இந்தியைக் கட்டாயமாகக் கல்வி நிலையங்களில் 1937ஆம் ஆண்டு அறிமுகப்-படுத்துவதற்கான அரசாணையையும் இராஜாஜி தலைமையிலான அரசு வெளியிட்டது. தாய்மொழி, ஆங்கிலம் கூடுதலாக இந்தி என்ற மும்மொழித்திட்டம் வெறும் மொழித் திணிப்பு மட்டுமல்ல பாடச்சுமையை ஏற்றிப் பார்ப்பனரல்லாதோரைப் படிப்பிலிருந்து துரத்தும் மறைமுக நடவடிக்கையாகவே இத்திட்டம் அமைந்தது.
இரண்டாம் உலகப் போருக்கு பின் நடந்த பொதுத் தேர்தல்களிலும் காங்கிரஸ் கட்சி பிரகாசம் தலைமையில் மீண்டும் 1946ஆம் ஆண்டு ஆட்சியமைத்தது. முதலமைச்சர் பிரகாசம் ‘நான் கம்யூனல் ஜீ.ஓ.வுக்கு எதிரானவன்’ என்பதைச் சட்டமன்றத்திலே ஒப்புக்கொண்டார். இவர் வகுப்புவாரி ஆணையைச் செயல் இழக்கச் செய்ய ‘தகுதி’ அடிப்படையில் 20 சதவீதம் மாணவர்களுக்கு இடஒதுக்கீடு அளித்து புதிய குழப்பத்தை ஏற்படுத்தினார்.
பிரகாசத்தின் மீது நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டுவரப்பட்ட நிலையில் ஓமந்தூர் இராமசாமி ரெட்டியார் 1947ஆம் ஆண்டு முதலமைச்சரனார். இவர் பார்ப்பனரல்லாதோரில் முதன்முறையாகப் பிற்பட்டோருக்கு தனி ஒதுக்கீடு கொடுத்து பிரகாசம் செய்த சிக்கல்களை நீக்கினார். ஸீ