மகளிர்க்கான பங்கை கட்சிகள் தரவேண்டும்
கே : தந்தை பெரியாரின் கொள்கை பிரச்சாரத்துக்கு இரண்டு திராவிடக் கட்சிகளும் பெரிதும் ஆதரவாக இல்லாதது குறித்து?
– அரும்பாக்கம் சா.தாமோதரன்
ப : இரண்டையும் (தி.மு.க. _ அ.தி.மு.க.) ஒரேவகையில் எடை போடாதீர்! தி.மு.க. அதன் அரசியல் சூழலுக்கு ஏற்ப ஆதரவை நல்கும் ஒரு அமைப்புதான்.
கே : தமிழகத்தில் திராவிடர் கட்சிகள் தமது கொள்கையில் இருந்து விலகிச் செல்வதால்தானே சில தமிழ் தேசியவாதிகளும், சாதிய பிற்போக்கு சக்திகளும் தலைதூக்கக் காரணம்?
– சோலை. வேலுமணி, கள்ளக்குறிச்சி
ப : கொள்கை லட்சியங்களுக்கு முன்னுரிமை தந்து கட்சியின் போக்கும் நோக்கும் இருந்தால், மற்றவை இப்படிப் பேசத் துணியா என்பது ஓரளவு உண்மையே!
கே : ஜனநாயகத்தின் பெயரால், பண நாயகத்தின் துணையோடு ‘பார்ப்பனியம்’ வெற்றி பெற்றுள்ளது பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
– நெய்வேலி க.தியாகராசன், கொரநாட்டுக்கருப்பூர்
ப : ஆம். அதிலென்ன சந்தேகம்? ‘ஆரிய மாயை’யின் தாக்கம் தணியவில்லை! அல்லது புரியவில்லை சிலருக்கு இன்னமும்!
கே : விஜயகாந்தை முதல்வர் வேட்பாளராக முன்னிறுத்திய கம்யூனிஸ்டுகள் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
– சுமதி சண்முகசுந்தரம், திட்டக்குடி
ப : ‘பரிதாபத்திற்குரிய தோழர்கள்’ என்றே கூறவேண்டியுள்ளது; நொந்த உள்ளங்களை மேலும் நோகடிக்கக் கூடாது அல்லவா?
கே : திராவிடக் கட்சிகளை, வேரோடும் வேரடி மண்ணோடும் ஒழிக்க வேண்டும் என, இந்த தேர்தலில் உரக்க குரல் கொடுத்தவர்களின் கட்சி-களுக்கும், முதல்வர் வேட்பாளர்-களுக்கும் மக்கள் சரியான பாடம் புகட்டி விட்டார்களே?
– தி.பொ.சண்முகசுந்தரம், திட்டக்குடி
ப : நாம் கணித்தது பொய்க்கவில்லை. சிலரது கணக்கு சட்டமன்றத்தில் திறக்கப்படாமல் முடிக்கப்பட்டது. இதே நிலை நீடித்தால் _ மக்கள் மன்றத்திலும் அது தொடரக்கூடும். எனவே, இந்த சுவர் எழுத்திலிருந்து பாடம் கற்பார்களாக!
கே : நாடாளுமன்றத்தில் பெண்களுக்கு 33% இடஒதுக்கீட்டை வலியுறுத்திவரும் நிலையில் நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் தி.மு.க. _ அ.தி.மு.க. உட்பட எந்தக் கட்சியும் 33% பெண் வேட்பாளர்களை நிறுத்தாமல் ஏமாற்றியது சரியா?
– ஹேமா ராமண்ணா, சென்னை
ப : தவறு! தவறுதான்! முதலில் மகளிருக்குரிய பங்கைத் தர கட்சிகளில் நாம் அனைவரும் வழிகாட்டுவது அவசியம். (நாமும் விதிவிலக்கு அல்ல).
கே : நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் அ.தி.மு.க வெற்றிபெற்றது வழிப்பறிச் சம்பவம் போன்றது என்று திருமாவளவன் கூறியுள்ளது பற்றிய தங்கள் கருத்து என்ன?
– சீத்தாபதி, சென்னை-45
ப : பறிகொடுத்தவர் சொன்னால் தவறு என்றா கூறமுடியும்?
கே : மனைவியைக் கடத்தியபோது தடுக்கமுடியாதவன்; நடத்தையில் சந்தேகப்பட்டு நெருப்பில் தள்ளியவன்; குரங்குக்கு(வாலி) பயந்து மறைந்திருந்து கொன்றவன், வாழ்க்கையை வெறுத்து சரயு நதியில் விழுந்து தற்கொலை செய்துகொண்ட ராமன் உலகைக் காக்கும் கடவுளா?
– இல.சங்கத்தமிழன், செங்கை
ப : உங்களது இராமனைப் பற்றிய புரிதல் எல்லோருக்கும் வரவேண்டும். வாழ்த்துக்கள் உங்களுக்கு!
கே : எதையும் சாதிக்காத மோடி அரசு விளம்பரத்தால் ஏமாற்ற முயல்வது குறித்து தாங்கள் என்ன நினைக்கிறீர்கள்?
– சா.வேல்முருகன், திருக்கோவிலூர்
ப : விளம்பரம் என்றால் கொஞ்சமா? நஞ்சமா? புதுடெல்லி முதல்வர் கெஜ்ரிவால் கூறினாரே, 1,000 கோடி _ (மக்கள் வரிப்பணம்) விளம்பரத்திற்கே மோடி அரசால் செலவிடப்-பட்டுள்ளது என்று. இன்றுவரை மறுக்கவில்லை பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு! ஸீ