வந்தவர் மொழியா? செந்தமிழ்ச் செல்வமா?

ஜூன் 16-30

தமிழ்

‘யாம் வந்தவர் மொழியா, செந்தமிழ்ச் செல்வமா?’ என்ற தலைப்பின் கீழ் எழுதி வரும் ஆராய்ச்சி பற்றி அடிக்கடி அஞ்சல்கள் வருகின்றன. அவையனைத்தும் நம் தமிழர்களா-லேயே எழுதப்பட்டவையாகும்.

அவ்வாறு தம் தமிழர்கள் எழுதும் அஞ்சல்களில் காணப்படுவன பெரும்பாலும், அவ்வாரியன் இவ்வாறு தங்கள் சொல் விளக்கத்தை வெறுத்தான், அப் பார்ப்பான் இப்படி மறுத்தான் என்பனவேயாகும்.

சிறுபான்மையாக, இன்ன தமிழ்ப் புலவர் முன்னமே இப்படி எழுதியிருக்கிறார். இன்ன பேராசிரியர் இப்படி முன்னமே எழுதியுள்ளார். அவைகள் அனைத்தும் உங்கள் கருத்துக்களை எதிர்க்கின்றன என்பனவேயாகும்.

ஆயினும், எந்த ஆரியனும், எந்தப் பார்ப்பானும் எமக்கு நேரில் எந்த மறுப்பை-யேனும் தெரிவிக்கத் துணிந்தானா எனில், இல்லவே இல்லை.

எந்தத் தமிழ்ப் புலவராவது, எந்தத் தமிழ்ப் பேராசிரியராவது  தம் நிலையில் நின்றோ, பார்ப்பனரைச் சார்ந்து நின்றோ நம் ஆராய்ச்சிகளை மறுத்துள்ளார்களா எனில், இல்லவே இல்லை.
சிங்கையிலிருக்கும் ஒரு பார்ப்பனக் கீழ்மகன் தன் அண்டையிலிருக்கும் தமிழனை நெருங்கி, அந்தத் தமிழனின் மூளையைக் குழப்பினாலே போதும் என்று கருதி, இன்ன சொல் தமிழ்ச் சொல்லன்று, அது ஆரியமே என்பான்.

ஏனடா பார்ப்பனனே! உனக்கென்னடா தெரியும். தெரிந்தால் காரணத்தோடு மறுப்பு எழுதடா என்று கேட்க நம் தமிழனுக்கும் போதிய துணிவும் கையிருப்பும் இருப்பதில்லை, இது வருந்தத்தக்கது. தமிழ்ப் புலவர்களும், பேராசிரியர்களும் இன்று எதை அடைந்து மகிழ்ச்சிக் கூத்தாடுகிறார்கள் எனில் அது சிறை அன்று! அண்ணாந்தாள்!

எனக்கு நான் தலைவன், எவனுக்கும் நான் கட்டுப்பட்டேனில்லை. ஆழத்தில் புதைக்கப்-படுகின்ற என் அன்னைக்குத் –  தமிழுக்கு நான் தொண்டு செய்வதில் என்னவரினும் அஞ்சேன் –  இஃதோர் பெரும்பதம். இதை நம் தமிழ்ப் புலவர்கள், பேராசிரியர்கள் அடைந்தால் அந்த நாள் தமிழகத்தின் மீட்சி நாளாகும்.

‘சக்கரவர்த்தித் திருமகன்’ என்பது கொட்டை எழுத்தால் அமைந்த தலைப்பு, தலைப்பே பிழை. இந்தத் தலைப்புடைய நூலோ அதற்கு முன்னிருந்த ஓர் ஆரிய நூலின் பார்த்தெழுதல். இதை எழுதியவருக்கும் தமிழுக்கும் எந்தத் தொடர்பும் இல்லை, இருந்ததில்லை. ஆனால் நேரு பல்லாயிரம் வெண்பொற் காசுகளை இதற்குப் பரிசாக வழங்கினார். ஏன்? எழுதியவரின் மகள் காந்தியின் மருமகள்.

இங்குத் தமிழ்ப் புலவர், பேராசிரியர் என்ன நினைக்கின்றனர். பார்ப்பானை மகிழப் பண்ணினால் பரிசு கிடைக்குமே என்பதுதான். எடுத்துக்காட்டாக இதைக் கூறினோம். தமிழ்ப் புலவர், பேராசிரியர் அண்ணாந்தாளைக் காண்க! ஆயினும் தமிழருக்கு எந்த பார்ப்-பானாலும் அண்ணாந்தாள் பூட்டிவிட முடியாது. தமிழரே அதை ஆக்கி அணிந்து கொண்டு பணிந்து செல்கின்றார்கள்.

ஆரிய மறையிலேனும் அதன்பின் வந்த காளிதாசன், பாரவி செய்த இராமாயணம், கிருதார்ச்சுனியத்திலேனும் மற்றெந்த நூல்களி-லேனும் பெரும்பான்மைத் தமிழ்ச் சொற்களே யன்றித் தனியாரியத்தைக் காண முடியாது என்ற உண்மை எம் தமிழ்ப் புலவர்க்கும், பேராசிரியர்க்கும் தெரியும். ஆனால், அதை இன்றளவும் உரக்கக் கூறியவர்கள் உண்டா எனில் இல்லவே இல்லை. மறைமலையடிகளும் சைவம் எனும் ஒன்றுக்கு அடிமைப்பட்டு சில உண்மைகளைக் கூறாமல் இருக்கின்றார்.

இன்றைய நிலைமை வேறு, அது தமிழர் வாழ்வதா? சாவதா? என்பதாகும்.

இந்நிலையிலும் தமிழ்ப் புலவர், தமிழ்ப் பேராசிரியர் விழிகள் திறக்க முடியாமலிருக்-கலாம். தமிழர்கள் சாகத் துணிய வேண்டும், அதனால் வாழ்வை நிலை நாட்ட வேண்டும். தமிழனின் கண்ணும் கருத்தும் தமிழின் வேரை நோக்கட்டும்! அதன் பழமையைப் பார்க்கட்டும், தமிழன்றி இந்த நாவலந்தீவில் எது மொழி? – எத்தனை மொழிக்கு?-எந்தெந்த நாட்டு மொழிக்கு நம் தமிழ், தாய்? என்பதை எண்ணட்டும்.
(குயில்: குரல்: 1, இசை: 44, 7-4-59)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *