உற்சாக சுற்றுலாத் தொடர் – 31

ஜூன் 01-15

இயற்கையின் இன்பத்தைப் பல விதமாக அனுபவித்து மகிழ்ந்தோம். விடை பெறும் நேரம் வந்தது. மீண்டும் அழகிய இயற்கைக் காட்சிகளைக் கண்டு ஆறு மணி அருமையான சாலையில் பயணம் செய்து ஆங்கரேஜ்ஜூம் என்ற அலாஸ்காவின் பெரிய நகருக்கு வந்தோம். அமெரிக்காவில் வாழ்வதற்கு மிகவும் பிடித்த பத்து நகரங்களில் ஆங்கரேஜ் ஒன்று. செயற்கையாகப் படைக்கப் பட்ட நகரம் என்றாலும் இயற்கை அருகே உள்ள வித விதமான மகிழ்ச்சியூட்டும் செயல்களில் மனம் மகிழலாம். பல மிருகங்கள், வேட்டை, மீன் பிடிப்பு, நாய்கள் பூட்டிய வண்டியில் சவாரி,குதிரை சவாரி,ஆறுகள்,ஏரிகளில் பல விதப் படகு ஓட்டுதல், ஆற்றின் மிக வேகமாகச் செல்லும்  மயிர்க்கூச்செரியும் படகுச் சவாரி,மிதி வண்டி, நடை, மலை ஏறுதல், கோல்ப்ஃ என்று பல விதமான உடலுக்கும் உள்ளத்திற்கும் உற்சாகமளிக்கும் செயல்கள் அருகேயே உள்ளன.அங்குள்ள பல அருங்காட்சியகங்களில் அங்கு வாழ்ந்த ஆதி மனிதர்களின் பல் வேறு குழுக்கள், அவர்களின் நாகரீகங்கள், வாழ்க்கை முறை மிகவும் அற்புதமான காட்சிகளாக அமைத்துள்ளனர். அங்கேயே அவை திரைப்படமாகக் காட்டப் படுகின்றன. வேறெங்கும் பார்க்க முடியாத பல பொருட்களையும்,காட்சிகளையும் அங்கே அருமையாக வைத்துள்ளார்கள்.

ஒரு பெரிய இடத்திலே பல் வேறு ஆதி மக்கள் குழுக்கள் வாழ்கின்றனர். அவர்களது வாழ்க்கை முறை, நடனங்கள், வேட்டை, மீன் பிடிக் கருவிகள் என்று அனைத்தையும் காண்பித்து மகிழ்விக்கின்றனர். இன்றும் அவர்களது மொழிகளையும், கலாச்சாரத்தையும் கடை பிடித்து வாழ்கின்றனர். அரசு முக்கிய உதவிகள் அனைத்தையும் செய்து வருகின்றது. அவர்களுடைய கலைத் திறனும், கை வண்ணமும் பல்வேறு உடைகள் -_ நகைகள் வண்ணங்கள் பல நிறைந்து, பறவையின் இறகுகள், தோல் ஆடைகள், மன்னர்கள் போல அணிந்து கொள்ளும் பல்வேறு மணி முடிகள் என்று அந்தப் பண்பாட்டின் உச்சத்தை நாம் அறிந்து கொள்ள முடிகின்றது. அவர்களின் கைவண்ணம் இயற்கையில் கிடைக்கும் அனைத்தையும் வீணாக்காமல் அழகுறச் செய்து அணிந்து கொள்ளும் அழகு நம்மை வியக்க வைக்கின்றது! ஏதோ குதிரை மீது ஏறிஅமர்ந்து வாழ்ந்த நாடோடிகள் என்பதுதான், பலரின் அமெரிக்க ஆதி மனிதர்கள் பற்றிய எண்ணம். அதை முற்றிலும் முறியடிக்கும் வண்ணம் உள்ளது அவர்களின் பண்பாட்டின் வெளிப்பாடுகள். நீண்ட நேரம் பார்த்து உண்மையிலேயே வியந்து மகிழ்ந்தோம். உலகிலே நடந்த மிகப் பெரிய இனப் படுகொலை அமெரிக்க ஆதி மனிதர்களை அழித்ததுதான்!! இன்று அவர்களில் பலர் நோயாலும், குடியாலும் அழிந்து கொண்டுள்ளனர் என்பது வேதனை மிகுந்த செய்தியாகும். அவர்களை மீட்டெடுக்கும் அமைப்புக்கள் உள்ளன. தொடர்ந்து பாடுபட்டு, அவர்களில் பலர் இன்று கல்லூரிகளில் படித்துப் பட்டம் பெற்றுள்ளனர் என்பது மகிழ்வானச் செய்தியாக இருந்தது. அலாஸ்கா மக்களின் பல மொழிகள், பல குழுக்களின் வரலாறு என்பன பற்றிப் பல அமெரிக்க மாணவர்கள் வந்து ஆராய்ச்சி செய்து வருகின்றனர். வெறும் அருங்காட்சியகமாக அல்லாமல் ஒரு பல்கலைக் கழகம் போலவே நடப்பது கண்டு வியந்து மகிழ்ந்தோம்.

ஆங்கரேஜில் ஆர்க்டிக் எனும் வட எல்லையின் ஆராய்ச்சி நிறுவனத்தின் மய்யம் உள்ளது. ஆர்க்டிக்கில் நடக்கும் ஆராய்ச்சி உலகிற்கு மிகவும் முக்கியம். அங்கு நிகழும் பல கால மாற்றங்கள் பற்றிப் பாடம் போலவே நமக்குக் கண்காட்சி வைத்துள்ளனர். இரவும், பகலும் பல மாதங்களாக நீண்டு இருக்கும். அங்கு இரவில் விண்மீன்களைப் படமெடுத்-துள்ளதும், சூரியன் உதிப்பதும் மறைவதும் பல வண்ணக் கலவைகளின் விளையாட்டுக்களாக அற்புதமானப் படங்களைக் காட்சிக்கு வைத்துள்ளனர். வடக்கு ஒளி எனும் அருமையான விண்மீன் ஒளிக்கதிர் வண்ணங்களின் சிகரமாக உள்ளது. அருங்காட்சியகத்தைச் சேர்ந்த ஆராய்ச்சி யாளர்கள்  அவர்களது அனுபவங்களைச் சொல்வது நம்மை வியப்பில் ஆழ்த்துகின்றது. அங்குச் செல்ல வேண்டும் என்ற ஆவலைத் தூண்டுகின்றது. அங்கிருந்து ஆயிரம் மைல் தொலைவு செல்ல வேண்டும். அதற்கான சிறப்பு ஏற்பாடுகள் செய்து கொள்ள வேண்டும். சென்று வந்த நண்பர்கள் கட்டாயம் செல்ல வேண்டும் என்று தான் சொல்கின்றனர். ஆகட்டும், பார்க்கலாம் !

ஆங்கரேஜில் இரண்டு நாட்கள் தங்கிப் பார்த்தோம். மகிழ்ந்தோம். அலாஸ்கா வாழ்க வாழ்கவே என்று கூறி விடை பெற்றோம். வீடு நோக்கிப் பறந்தோம்.

 

— மருத்துவர்கள் சோம&சரோ இளங்கோவன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *