Unmai Magazine Subscription - உண்மை இதழ் உங்கள் முகவரி தேடி வர சந்தா செலுத்துங்கள்..

முதுமையைத் தோற்கடிக்கும் முயற்சி!

பள்ளிப் பருவத்திலேயே…

பள்ளிப் பருவத்திலேயே பகுத்தறிவுப் பகலவன் தந்தை பெரியாரின் இயக்கம் அவரை ஈர்த்தது. அய்யாவின் அந்நாள் தளபதியாகச் செயல்பட்ட அறிஞர் அண்ணாவின் பார்வை, இளம் மாணவராக இருந்த (கலைஞர்) கருணாநிதி எழுதிய கட்டுரையை தனது வார ஏடான ‘திராவிடநாடு’ இதழில் வெளியிடும் அளவுக்கு அவரது எழுத்தாற்றலின் துவக்கமே, அண்ணாவுக்கு அமைந்த பரிந்துரைக் கடிதமானதும் மற்றொரு அதிசயமே!

மாணவப் பருவத்திலேயே லட்சிய தாகம்- இவரிடம் பீறிட்டது! அவர் திருவாரூரின் மாணவப் பேச்சாளர் – எழுத்தாளர் என்பதோடு, மாணவர் மன்ற அமைப்பாளரும் ஆன அனுபவத்தை அவருக்கு உருவாக்கிக் கொடுத்தது.

அந்த அடிநாள் உழைப்பு இன்னும் அவரை விட்டு நீங்கவில்லை; இன்றும் அது ஓங்கி நின்று ஒளியூட்டும் கலங்கரை விளக்கமாக கழகத்திற்குக் கிடைத்துக் கொண்டே இருக்கிறது!

துள்ளித் திரிந்திடும் வேளையில், பள்ளிப் பருவத்திலும்கூட இன இழிவு ஒழிப்பு, சுயமரியாதைச் சூறாவளிப் பேச்சுகளைக் கேட்ட இவரது காது களும், கால்களும் அவரை ஈரோடு, காஞ்சி என்றே அழைத்து நிறுத்தியது!

ஈரோட்டுக் குருகுலத்திலே…

அந்நாள் குடிஅரசு வார ஏடு ஒரு புரட்சிப் பாசறை – அது அவருக்கு நல்லதோர் வாய்ப்பாக இடந்தந்து, ஈரோட்டுக் குருகுலத்தின் இணை யற்ற மாணவ மணியாக ஆக்கி, பயிற்சிக் களத்தில் நிறுத்தியது.

அப்போதே கவிதையல்ல…! என்ற தலைப்பில் கவிதை வரிகளைப் போன்றே வெடித்துக் கிளப்பிய எரிமலை எழுத்துக்கள்! குடிஅரசின் துணை ஆசிரியராக இருந்த நிலையில், அவர்தம் எழுத்துக்கள், தந்தை பெரியாரின் பாராட்டுகளை பெற்றது. குருகுலவாசமே இவர் பன் முனையிலும் கூர்தீட்டிட குதூகலமான தொரு வாய்ப்பாக ஆகியது. அந்நாள் இன்றும் அவருக்குப் பொன்னாள்! மறக்கமுடியாத கலைக்கூட அனுபவங்கள்!

கலைத்துறை ஆற்றல்

அவரது கலைத்துறை ஆற்றல் இளம் வயதிலேயே நாடகங்களை எழுதிடத் தூண்டியது; அவைகூட வெறும் கேளிக்கைகள், கூத்துக்கள் அல்ல; கொள்கைப் போத்துக்களை நட்டு வைத்து, நாடகம் பார்த்தோரை சிந்திக்க வைத்த லட்சிய வகுப்பு களாகவே அமைந்தன!

திரையுலகப் பிரவேசம் செய்ய அவை துணை நின்றன; கூன் விழுந்த சமூகத்தை நிமிர்த்திடவும், கூழைக் கும்பிடு போட்டுக் கோணலாகிப் போன மக்களை பெரியாரின் பகுத்தறிவு வழியில், அண்ணாவைப் போலவே எழுதி, நிமிர்த்திடும் வெற்றி வாகை சூடிய வீரராக வளர்ந்தார்!

பராசக்தி பேசமாட்டாள்  அது கல்!

‘பராசக்தி பேசமாட்டாள், அது கல்!’ என்று பேசவைத்து பாமர மக்களிடம் கூட கைதட்டலைப் பெறவைத்தார்.  கட்டணம் கொடுத்துக் கேட்கவும் வைத்தார். பகுத்தறிவுப் பிரச்சாரத்தினை, திரையுலகைத் திகைக்கச் செய்து, திராவிடர் இயக்கக் கொள்கைகள் திக்கெட்டும் பரவச் செய்து திரையும் எனக்கு ஒரு அறிவாயுதமே என்று காட்டினார் திறம்பட தீரம்மிக்க எழுத்துக்களால்.

முரசொலி என்ற கையெழுத்து ஏட்டினை திருவாரூரில் 60 ஆண்டு களுக்குமுன் துண்டறிக்கைபோல் தொடங்கி, இன்று தூக்கி நிறுத்தும் அவர்தம் உறுதிப்பாடும், உழைப்பும் எதிரிகளாலும் புரிந்துகொள்ள முடியாத ஒன்று!

தி.மு.க. அரசியல் கட்சியாகியது. தான் போட்டியிட்ட தேர்தல் களத்தில் கலைஞர் தோல்வி காணாத அரசியல் தலைவர் என்ற சரித்திர சாதனையைச் செய்தார்!

தி.மு.க. கப்பலின் மீகாமன்

அண்ணாவுக்குப்பின் முதலமைச்சர் என்பதை, தி.மு.க. என்ற கப்பலுக்கு மீகாமன் (கேப்டன்) என்பதுபற்றி சலசலப்புகளும், சஞ்சலங்களும் உருவான போது, கலைஞர்தான் தகுதிமிக்கவர் என்று தன்னை ஆளாக்கிய தந்தை பெரியாரால் ஆணையிடப்பட்டு, அரியாசனம் ஏறி அமர்ந்து சூத்திரர்களுக்கான, சூத்திரர்களால் ஆளப்படும் சூத்திர ஆட்சி என்ற சரித்திரம் படைத்தவர்;
வாய்ப்பு நேர்ந்த போதெல்லாம் ஆட்சியை வெறும் காட்சியாக நடத்தாமல், இனத்தின் மீட்சியாகவே நடத்திட்ட எழுச்சி நாயகனாகவே காட்சியளித்தார்!

ஈழத் தமிழர் பிரச்சினையிலும் கலைஞருக்கு இருக்கும் தொடர்பின் வரலாறு நெடிது. 1985 மே 15 இல் உருவாக்கப்பட்ட டெசோவை மீண்டும் புதுப்பித்து (30.4.2012) புது முறுக்கேற்றி, உலகளவில் ஈழத் தமிழர் பிரச்சினையைக் கொண்டு சென்றதில் கலைஞர் அவர்களின் பங்கு மகத்தானது.

ஈழத் தமிழர் பிரச்சினைக்காகவே இருமுறை ஆட்சி பறிக்கப்பட்டது என்பதெல்லாம் சாதாரணமானதுதானா?

இருமுறைக் கலைப்பு!

1976இல் முதல் முறை, 1990இல் இரண்டாம் முறையாகவும் இவர்தம் ஆட்சி நியாயமில்லாமல், டில்லி துரைத்தனத்தால் கலைக்கப்பட்டபோதெல்லாம் கூட, ஆரியமும் அதன் அடிவருடிகளும், மகிழ்ந்தபோது, அவர்கள் போட்டது தப்புக்கணக்கு என்று காட்ட அச்சமின்றி, எதிர்ப்பைத் துச்சமாக்கி, துணிவின் உச்சியிலே நின்ற கலைஞரை எவர் மறைத்தாலும் சரித்திரம் மறைக்குமோ; மறைத்தாலும் அது பிழைக்குமோ!

கழகப் பொது வாழ்வு அவருக்கு மலர்ப் படுக்கையாக என்றும் இருந்ததில்லை. எதிர்ப்புகளும், ஏளனங்களும் அவர்மீது பொழியப்பட்டன அடைமழைபோல! அவரால் ஆளாக்கப்பட்டவர்களே கூட அவரது முதுகில் குத்தியபோதும்கூட அவர் அதையும் தாங்கித் தாங்கி, தனது லட்சியப் பயணத்தை பெரியார் வழியில், அண்ணா வழியில் தொடர்ந்து கொண்டே இருப்பவர்!

அவரிடம் செங்கோலைப் பறித்த நிகழ்வுகள் பலமுறை உண்டு. அது ஜனநாயகத்தின் விசித்திரம்; ஏற்றுக்கொண்டே தீரவேண்டிய அரசியல் நியதி. நியாயம்தானா? என்று யாரும் கேட்பதில்லை. அதுபற்றி அவர் கவலைப் பட்டது மில்லை. காரணம், பெரியாரின் துணிவு, அண்ணாவின் கனிவு, அவரது அகத்தினைப் பக்குவப்படுத்தியுள்ள வன்மை. இதுவே அவரது அறிவுடைமை! கொள்கை உடைமை!

செங்கோலும் – எழுதுகோலும்!

செங்கோல் பறிபோகலாம்; காரணம், மக்களாட்சியில் அந்த மகுடம் மாறி மாறி வரும். ஆனால், அவர் கையில் உள்ள வலிமைமிக்க எழுதுகோலைப் பறிக்க எந்த சக்தியாலும் முடியாது! முதுமையே முயன்று அவரிடம் தோற்றுவிட்ட பிறகு, அந்த எழுது கோலைப் பறிக்க எவர் முயன்றாலும் ஏமாறுவர்!

1976 – நெருக்கடி நிலை காலத்தில் நடைபெற்ற அதிகார மிரட்டல்கள், அச்சுறுத்தல்கள் அவரது எழுதுகோலின் மூலம் வரும் எண்ண ஊற்றுகளை நிறுத்திட முடிந்ததா?
பெரியாரிடமிருந்து எப்படி சுற்றுப் பயணத்தை எவராலும் இறுதிவரை நிறுத்திட முடியவில்லையோ, அது போலத்தான் கலைஞரின் எழுத்துக்கள் என்ற சிந்தனை சிற்பியின் உளி செதுக்கல்களை – எவர்தான் தடுத்திட முடியும்?

ஈரோட்டுக் குருகுலத்தில் பெற்ற அந்த இளமைப் பயிற்சி இன்றும் என்றும் கைகொடுக்கிறது! அவரது வற்றாத கொள்கை பலத்திற்கு மூலாதாரம் அதுவே.
முதுமையைத் தோற்கடிக்கும் முதிர்ச்சி!

முதுமை அவரிடம் போட்டியிடு கிறது! ஆனால் அவர்தம் முதிர்ச்சியால் அதை முறியடித்து, விரட்டி ஓடச் செய்கிறது! நினைவாற்றல் என்ற அரிய அற் புதம் அவருக்கே உரிய தனித்ததோர் அறிவுப் படைக்கலன்! பெறற்கரிய பேறு!

எந்த நெருக்கடியிலும் நகைச்சுவை உணர்வைக் கையாண்டு, சிரிக்க, சிந்திக்க, சினம் போக்க ஆக்கிடும் அவரது சிறந்த பண்பு, எளிதில் எவருக்கும் கிட்டாத அரியதோர் அள்ளக் குறையாத அறிவுச் செல்வம்!

அவர்தம் ஆயுள் மேலும் பலப்பல ஆண்டுகள் நீண்டு நூறாண்டினையும் தாண்ட வேண்டும் என்ற விழைவு அவருக்காக மட்டுமல்ல; இந்த நாதியற்ற திராவிடர் இனத்திற்காக. எனவே, அவர் வாழ்ந்தால் அது இனத்தின் ஏற்றம்! எந்தச் சோதனையும் சரி, எதிர்ப்பும் ஏளனமும் சரி, அவரது கொள்கைப் பயிர்விளையும் பண்ணையில் வீசப்படும் உரங்கள் – அவைகளினால் அவருக்கு வளர்ச்சி ஏற்படுமே தவிர, தளர்ச்சி ஏற்படாது!

அவரை வாழ்த்தி நாம் மானமும், அறிவும் உள்ளவர்கள் என்று காட்டுவோம்; அம் மானமிகு சுயமரியாதைக்காரரை வாழ்த்துவது-தானே மானத்தை, அறிவைப் போற்றுவது. – இல்லையா!
வாழ்க கலைஞர் பல்லாண்டு!

(விடுதலை – கலைஞர் 90ஆம் ஆண்டு
பிறந்த நாள்  மலரிலிருந்து)