ஆயுள்
இது ஆயுசு என்ற வடசொல்லின் சிதைவென்றுசொல்லி ஏமாற்றி வருகின்றனர் வடவர். அவ்வாறே ஏமாந்து கிடக்கின்றனர் தமிழர்.
ஆயுள் என்பது ஆவுள் என்பதன் மரூஉ. ஆவுள் – -உள் என்னும் தொழிற் பெயர் இறுதி நிலை பெற்ற ஆதல் என்னும் பொருட்டாய தொழிற் பெயரேயாகும். இதை வந்தவர் எடுத்தாண்டனர்.
வாழ் நாள் ஆய்க்ª£ண்டே – -கழிந்து கொண்டே போவது என்ற காரணம் பற்றி வந்தது ஆயுள் என்பது.
எனவே, ஆயுள் தூய தமிழ்க் காரணப் பெயரே.
பசு
இதையும் வடசொல் என்றே நம்புகின்றனர். படித்த தமிழரும். பசைதல் என்னும் சொல்லுக்கு அன்புறுதல், ஒட்டுதல், பொருளுட்டமுடைமை என்பன வெல்லாம் பொருள். பால் என்னும் பொருளுட்ட முடையது பசு – பசை பண்புப் பெயர், அதன் முதனிலையாகிய பசு என்பதில் இறுதிநிலை. ‘இ’ புணர்ந்து கெட்டதென்க.
பசு வென்ற தமிழ்க் காரணப் பெயரை வடவர் எடுத்தாண்டனர். தட்டிக் கேட்க ஆள் இல்லாதபோது தம்பி! தடபுடல் செல்லுமன்றோ!
(குயில்: குரல்: 1, இசை: 43, 24-3-1959)
பதம்
இது வடசொல்லன்று. பகுதலின் மரூஉவாகிய பதல் என்பதன் அடியாகிய பது, அம்முச்சாரியை பெற்றுத் தகரத் தொகுத்தல் உற்றது. பதம் சிறப்பாய் உயர் பதத்தைக் குறிக்கும் – –ஒரு நிலையினின்று மற்றொரு நிலையடைந்த ஒன்றையும் குறிக்கும். பதம் சோற்றுக்கும் பெயர். சோறு நிலைதிரிந்ததன்றோ. மற்றும் இடம் இன்பம் முதலியவைகளைக் குறிக்கும்போதும் இவ்வாறே காரணம் அறியப்படும். எனவே பதம் தூய தமிழ்க் காரணப் பெயர்.
இதை வடவர் தமிழினின்று எடுத்-தாண்டனர்.
கலசம்
கலயம் என்ற தமிழ்ச் சொல் கலசம் என வடவரால் திரிக்கப்பட்டது. எனவே கலயம் என்பதினின்று கலசம் தோன்றியது.
கல்+அகம்=கல்லகம். இதன் மரூஉ கலம். கல்+அகடு=கலடு. கன்னிலம் ஆனது நோக்குக. கலம் இடை யகரம் பெற்றுக் கவசம் ஆனது. கல்லைக் குழிவு செய்தது கலம், கலயம் என்று காரணம் கண்டுகொள்க. குழிவு கல்லைக் குழிவு செய்தது என்ற இடத்துப் போல, கல்லை என்பதும் கல்லியது என்ற பொருள் அமைந்ததே ஆகும். வடவர் திரித்ததால் நாம் அதை மேற்கொள்ள வேண்டா. கலயம், கலம் என்றே எழுதுக.
குண்டம்
தூய தமிழ்க் காரணப் பெயரே, தமிழினின்று வடவர் எடுத்தாண்டனர், ஓமகுண்டம் என்பதில் காண்க.
குண்டு – –குளம் அதுபோல அமைந்தது, குண்டை – –குண்டுசட்டி, குண்டான், குண்டம்! குண்டம்- – -ஆழக்கல்லிய இடம்.
(குயில்: குரல்: 1, இசை: 43, 31-3-59)
சூது
இது வடசொல் அன்று. தூயதமிழ்க் காரணப்பெயர். சூழ் வினை முதனிலை, தல் என்ற தொழில் இறுதிநிலை பெற்றுச் சூழல் என்றும், வு என்ற தொழிலிறுதி நிலை பெற்றுச் சூழ்து என்றும் வரும். எனினும் சூழ்தல், சூழல், சூழ்து அனைத்தும் பொருளால் ஒன்றே.
சூழ்து – —விரகு (உபயம் என்பர் வடசொல்லார்) சூது, இடைக்குறை. எனவே சூது விரகால் பிறர் பொருள் பறித்தல் என்பது. சூது, அம்சாரியைப் பெற்றுச் சூதம் எனவும் வருவதுண்டு. குன்று குன்றம், மன்று மன்றம் என்பவற்றைப் போல.
இனிச் சூழ்து என்பது சூது என இடையிலுள்ள ‘ழ்’ இல்லாதொழிந்தது எப்படி எனில், அது இடைக்குறை என்னும் தமிழிலக்கணம். போழ்து என்பது போது என்று ஆனது போல.
எனவே சூது தூயதமிழ்க் காரணப்பெயர். வடநூலில் வரும் ‘த்யூத்’ என்பதன் திரிபல்லவா சூது என்று கேட்பது முடிச்சு மாறித்தனம் எனவிருக்க.
(குயில்: குரல்: 1, இசை: 44, 7-4-59)