சந்திரனின் மறுபக்கம்..!

ஜூன் 01-15

நமக்கெல்லாம் தெரிவது சந்திரனின் ஒரு பக்கம் தான். எப்படி பூமிக்கு மேல்புறம், கீழ்புறம் என இருக்கிறதோ, அது போன்று சந்திரனுக்கும் ஒளிப்பகுதி, இருண்ட பகுதி என்று இரு பகுதிகள் உள்ளன. சூரியனின் ஒளியை வாங்கி பிரதிபலித்து வரும் பகுதி ஒளிப்பகுதி. அதற்கு நேர் பின்னால் மறைந்திருக்கும் பகுதியைத்தான் இருண்ட பகுதி என்கின்றனர். இந்த இருண்ட பகுதியை ஆய்வு செய்ய அமெரிக்காவும் சீனாவும் களமிறங்கியுள்ளன.

சீன விண்வெளி ஆய்வு மய்யம் 2020ஆம் ஆண்டுக்குள் சேலஞ்ச் 4 என்ற விண்கலத்தை சந்திரனின் இருண்ட பகுதிக்குச் செலுத்த-வுள்ளது. சந்திரனிலுள்ள இருண்ட பகுதியின் நிலவியல் கூறுகளை ஆராய்வதற்கு மட்டுமல்ல, வருங்காலத்தில் விண்வெளியை மிகத் தெளிவாக ஆய்வு செய்ய அந்த இடத்தில் ஒரு நிரந்தர விண்கலத்தை நிறுத்திவிடவும் திட்டமிட்டுள்ளது. இது சீனாவின் திட்டம்.

அதேசமயத்தில் அமெரிக்காவும் இடைவிடாத ஆராய்ச்சிகளைச் செய்து வருகிறது. நாசா விண்வெளி ஆய்வு மய்யம், விண்நிலைகலன் முறையில்(Space Launch System) மிகப் பெரிய ராக்கெட் ஒன்றை பரிசோதனை முயற்சியாக சந்திரனின் மிகத் தொலைவிலுள்ள பக்கத்துக்கு 2018 நவம்பரில் செலுத்தவுள்ளது. சுமார் 22 நாட்களுக்கு நீடிக்கவுள்ள SLS பரிசோதனைத் திட்டம் வருங்காலத்தில் சந்திரனில் இருந்து பிற கிரகங்களுக்கு மனிதன் செல்வதற்கான வாய்ப்புகளை ஆராயவுள்ளது.

2018 இல் கென்னடி ஏவுதளத்தில் இருந்து ஏவப்படவுள்ள இந்த ஒரியன் என்ற 70 மெட்ரிக் டன் எடை கொண்ட பரிசோதனை ராக்கெட், இதற்கு முன் பயணித்த அப்பொலோவை விட 30ஆயிரம் மைல் அதிகமாக சுமார் 2 லட்சத்து 75ஆயிரம் மைல்கள் பயணித்து சந்திரனின் மறுபக்கத்தை அடையும். அங்கு தனது ஆய்வை 22 நாள்களுக்கு மேற்கொள்ளவுள்ளது.

இது வெற்றியளிக்கும் பட்சத்தில் முதற்கட்டமாக 2020-இல் சந்திரனில் மற்றொரு கிரகத்துக்கு விண்வெளி வீரர்களை அனுப்புவது குறித்து முடிவு செய்யப்படவுள்ளது. இதன் மூலம் 2030 ஆம் ஆண்டுக்குள் செவ்வாய்க்கிரகத்தில் மனிதன் காலடி எடுத்து வைப்பதற்கான வாய்ப்புகள் அதிகரித்துள்ளதாக வானியல் அறிஞர்கள் கருதுகின்றனர்.

அதேசமயம் இந்த ஆய்வில் அமெரிக்கா ஏதேனும் மறைமுக திட்டமும் வைத்துள்ளதோ என்ற சந்தேகம் உலகளாவிய வானியல் அறிஞர்களிடம் ஏற்பட்டுள்ளது. அதற்குக் காரணம், ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரி வெளியிட்ட ஒரு கருத்து தான். சமீபத்தில் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரி எலொன் முஸ்க் கூறும்போது, “”அணு ஆயுதத்தை செவ்வாய்க் கிரகத்தில் பிரயோகித்தால் என்ன விளைவுகள் ஏற்படும் என்பதை ஆராய திட்டமிட வேண்டும்” என்றார். இந்தக் கருத்து தான் பல சந்தேகங்களை எழுப்பியுள்ளது. பூமியில் மனிதன் வசமுள்ள பேரழிவை ஏற்படுத்தும் ஆயுதமான அணு ஆயுதத்தை அங்கு பிரயோகித்தால், செவ்வாயின் தரை மேற்பரப்பு வெப்பநிலையானது பூமிக்கு இணையாகச் சற்று அதிகரிக்கும் எனவும் இதன் மூலம் அங்கு உயிர் வாழ்க்கை ஏற்படுவதற்கான சாதகமான சூழல் ஒன்றை உருவாக்க முடியும் என்றும் நாசா கருதுவதாக கூறப்படுகிறது.

பூமியை மாசுபடுத்தி ஓசோனில் ஓட்டை போடும் அளவுக்கு கொண்டு சென்ற மனிதன் தற்போது விண்ணையும் ஆராய்ச்சி என்ற பெயரில் மாசுபடுத்தத் தொடங்கிவிட்டான். இது எங்கே போய் முடியும்? என்பது தான் நடுநிலை நாடுகளிலுள்ள விஞ்ஞானிகளின் கவலையாக உள்ளது.  ஸீ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *