தென் ஆர்காடு மாவட்டம் கல்லக்குறிச்சியில் ஜூலை மாதத்தில் மாவட்ட திராவிடர் கழகத்தின் சார்பில் பெரியார் நூற்றாண்டு விழாவும், ஊர்வலமும் நிகழ்ச்சிகளும் கழக வரலாற்றில் தனி சிறப்பு வாய்ந்தவையாக திகழ்ந்தன. மாநாட்டில், கழகப் பொருளாளர் தஞ்சை கா.மா.குப்புசாமி, மாவட்ட தி.க. தலைவர் பண்ருட்டி நா.நடேசன், மாவட்டச் செயலாளர் இரா.கனகசபாபதி, அமைப்புச் செயலாளர் வழக்குரைஞர் கோ.சாமிதுரை உள்ளிட்ட கழக தோழர்களும், முன்னாள் அமைச்சர், இராசாங்கம், இந்திய கம்யூனிஸ்டுக் கட்சி தமிழ் மாநிலத் துணைச் செயலாளர் தா.பாண்டியன் உள்ளிட்டவர்களும் என்னுடன் கலந்து கொண்டனர். மாநாட்டின் இரண்டாம் நாளில், கல்லக்குறிச்சியில் எடைக்கு எடை ரூபாய் நாணயம் அளிக்கப்பட்டது. எடை தட்டில் நான் உட்காரவில்லை, அதற்கு பதிலாக தந்தை பெரியார் அவர்களின் உருவ படத்தை வைத்து, பணம் அளிக்கப்பட்டது.
பொருளாதார அடிப்படையில்தான் இனி சலுகைகள் என்பது பிற்படுத்தப்பட்டோரை பாதிக்கும் உத்தரவுதான் என்று அன்று கல்வி அமைச்சராக இருந்த அரங்கநாயகம் அவர்கள் ஒப்புக்கொண்டு, “பிற்படுத்தப்பட்ட தலைவர்-களுடன் பேச்சு வார்த்தை நடத்தத் தயார்!’’ என்று, திருச்சியில் 08.07.1979 அன்று நடைபெற்ற பெரியார் மணியம்மை மேல்நிலை பள்ளி தொடக்க விழாவில் கலந்து கொண்டு பேசும் பொழுது தெரிவித்தார்.
இதுபற்றி இறுதியாக, விழாவில் உரையாற்றிய நான் குறிப்பிடுகையில், அரசு பேச்சுவார்த்தை நடத்த இருக்கிறது என்ற கருத்தை வரவேற்கிறோம் என்று குறிப்பிட்டு, அரசின் உத்தரவு பிற்படுத்தப்பட்ட வகுப்பினரை எப்படி பாதிக்கும் என்பதை நிருபிக்கத் தயார் என்று அறிவித்தேன்.
சட்டத்தில் கல்வி மற்றும் சமூக அடிப்படையில் பிற்படுத்தப்பட்டோர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளதே தவிர, பொருளாதார அடிப்படையில் பிற்படுத்தப்பட்டவர் என்பது அரசமைப்புச் சட்டத்தில் இல்லை என்பதை விளக்கினேன். தமிழக அரசு பேச்சு வார்த்தை நடத்துவதற்கு விடுத்துள்ள அழைப்பை ஏற்று விவாதிக்க தயார் என்று அப்போது அறிவித்தேன்.
09.07.1979 அன்று விடுதலையில் இரண்டாம் பக்கத்தில் கல்வி அமைச்சருக்கு நமது விளக்கம் என்ற தலைப்பில் இதுகுறித்த விரிவான கட்டுரை வெளியிடப்பட்டது.
இந்த நிலையில் 10.07.1979 அன்று வட ஆற்காடு மாவட்டம் திருப்பத்தூரில் நடைபெற்ற தந்தை பெரியார் நூற்றாண்டு விழாவில் கலந்து கொண்டேன். இதில் பங்கேற்று ஆற்றிய உரையில், “தந்தை பெரியார் அவர்களின் தொண்டை, மூச்சுக் காற்றாக இந்த சமுதாயம் சுவாசித்துக் கொண்டு இருக்கிறது.’’
தந்தை பெரியார் அவர்கள் போராடி போராடிப் பெற்றுத் தந்த நம் மக்களுக்கான கல்வி, உத்தியோகம் உரிமை மீது ஒரு “ஸ்கைலாப்’’ விழுந்து விட்டது. பொருளாதார அடிப்படையில் தான் இனி கல்வி, உத்தியோகம் சலுகைகளாம். தமிழக அரசின் புதிய உத்தரவால் பிற்படுத்தப்பட்டோர் கல்வி, உத்தியோகத் துறைகளில் பெரிதும் பாதிக்கப்படுவார்கள். கல்வி வாய்ப்பை இழக்கும் நம் சமுதாய மக்கள் மீண்டும் குலத்தொழிலை செய்யப் போக வேண்டியதுதான். ஆச்சாரியார் குலக்கல்வி திட்டம் வேறு வழியிலே உள்ளே நுழையப் பார்க்கிறது.
அய்யா அவர்களின் கடுமையான உழைப்பில் தொடந்து போராட்டாங்களால் தமிழர்களுக்குக் கல்வி வாய்ப்பு உயர்ந்தது.
1950, ஆம் ஆண்டு வரை அது நீடித்தது. இந்தியாவில் குடிஅரசு உதயமானது. மீண்டும் பேராபத்துச் சூழ்ந்தது. 1928 முதல் சென்னை மாநிலத்திலே நடைமுறையில் இருந்து வந்த வகுப்புவாரி பிரதிநிதித்துவ உரிமை புதிய இந்திய அரசியல் சட்டத்தின் பெயரால் பறிக்கப்பட்டது.
இந்த வரலாறு எல்லாம் நம் இளைஞர்களுக்குத் தெரியாது. நாமும் நமது வரலாற்றை நம் இளைஞர்களுக்கு முறையாகச் சொல்லிக் கொடுக்கவில்லை. தார்ரோட்டில் போகிறவனுக்கு அந்த ரோடு உருவாக்குவதற்கு முன் அங்கு இருந்தநிலை புரியாதல்லவா?
நீதிக்கட்சி ஆட்சிக் காலத்திலே நிறைவேற்றப்-பட்ட வகுப்புவாரி பிரதிநிதித்துவ சட்டத்திற்கு, சுதந்திரம் வந்ததாகக் கூறிக்-கொண்டவுடன் ஒரு ஆபத்து வந்து சேர்ந்தது. புதிதாக ஏற்படுத்தப்பட்ட அரசியல் சட்டத்திற்கு அது முரணானது என்று கூறி அச்சட்டத்தைத் தீர்த்துக் கட்டினர்.
செண்பகம் துரைராசன் என்ற பார்ப்பன மாணவி நீதிமன்றத்திலே ஒரு வழக்குப் போட்டார். மருத்துவக் கல்லூரிக்கு தான் விண்ணப்பித்திருந்ததாகவும், தான் முற்படுத்தப்பட்ட சமுதாயத்தைச் சேர்ந்தவர் (Forward Community) என்ற காரணத்தால் தான் தனக்கு இடம் கிடைக்கவில்லை யென்றும், அதற்குக் காரணம் சென்னை மாநிலத்திலே அமலில் இருந்து வரும் வகுப்புவாரி பிரதிநிதித்துவ சட்டம் தான் என்றும் அந்த சட்டம் புதிய இந்திய அரசியல் சட்டம் 15ஆவது ஷரத்துக்கு விரோதம் என்றும் நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டது.
இந்த வழக்கு, அக்கிரகாரம் கூடி முடிவு செய்து திட்டமிட்டு போட்ட வழக்காகும். இந்த வழக்குக்காக வாதாட வந்தவர் யார் தெரியுமா? ஒரு காலத்தில் சென்னை மாகாண அட்வகேட் ஜெனரலாக இருந்தவரும், இந்திய அரசியல் சட்டத்தை உருவாக்கிய ஆறுபேர்களில் ஒருவருமாகிய சர் அல்லாடி கிருஷ்ணசாமி அய்யராவார்.
பொதுவாக பெரியநிலைக்குப் பதவிகளில் சென்றவர்கள் அந்தப் பதவி காலங்களுக்குப் பிறகு, கீழே இறங்கி வந்து நடந்து கொள்வது கிடையாது. ஆனால் அல்லாடி என்ன செய்தார் தெரியுமா? ரொம்ப காலத்திற்கு முன்பு கழற்றிப் போட்டுவிட்ட அந்தக் கருப்புக் கவுனை எடுத்து மாட்டிக் கொண்டு நீதிமன்றத்திற்கு வந்து நின்றார்.
பார்ப்பனர்களுக்கு இருக்கிற சமுதாய உணர்வு எத்தகையது என்பதற்கு இது ஒரு முக்கியமான உதாரணம். சென்னை உயர்நீதி மன்றத்தின் பெரும்பான்மை நீதிபதிகளின் தீர்ப்பு, சென்னை மாநிலத்தில் அமலில் இருந்துவந்த வகுப்புவாரி பிரதிநிதித்துவ உரிமை சட்டம் செல்லாது என்பதாகும்.
தந்தை பெரியார் அவர்களின் அழுத்தமான உரிமைக்குரலுக்குப் பிறகு, ஓமந்தூர் ராமசாமி ரெட்டியார் அவர்கள் முதலமைச்சராக இருந்த காலத்தில் சென்னை உயர்நீதிமன்றத்திலே முதல் தமிழனாக உள்ளே நுழைந்த சிதம்பரத்தைச் சேர்ந்த என்.சோமசுந்தரம் மட்டும் மாறுபட்ட தீர்ப்பை (Dissenting Judgement) வழங்கினார்.
வழக்கு உச்சநீதிமன்றத்திற்குச் சென்றது. அப்பொழுது அங்கே ஒரு உண்மை தெரியவந்தது, செண்பகம் துரைராசன் என்ற பார்ப்பன மாணவி மருத்துவ கல்லூரிக்கு அப்படி ஒரு விண்ணப்பம் போடவேயில்லை என்ற உண்மை தெரிய வந்தது. ஆனால், உச்சநீதிமன்றம் அதைக்கூட கருத்துக்குக் கொள்ளாமல் அசல் அநியாயம் அப்பீலில் அதுவே காயம் என்பது போல சென்னை உயர்நீதிமன்ற தீர்ப்பையே உறுதிப்படுத்தித் தீர்ப்பு வழங்கியது.
இதேபோல ஒரு வழக்கு அதற்குப் பின்னர் பஞ்சாப் நீதிமன்றத்திலே வந்தது. அங்கே என்ன தீர்ப்பு வழங்கப்பட்டது தெரியுமா? சென்னை உயர்நீதிமன்றத்திலே மாறுபட்ட தீர்ப்பை (Dissenting Judgement) ஜஸ்டிஸ் சோமசுந்தரம் வழங்கினாரல்லவா, அதை மேற்கொள் காட்டி, பஞ்சாபில் தீர்ப்பு வழங்கினார்கள்.
பல்லாயிரம் ஆண்டு காலமாக சமூக, கல்வித்துறையிலே ஒடுக்கப்பட்டுக் கிடந்த மக்களை கை தூக்கி விடுவதற்காக நீதிக்கட்சி ஆட்சிக் காலத்தில் ஏற்படுத்தப்பட்ட சட்டத்தை பார்ப்பனர்கள் திட்டமிட்டு ஒழித்துக்கட்டி விட்டதைக் கண்ட தந்தைபெரியார் அவர்கள் குமுறி எழுந்தார்கள். தமிழர்களின் கண்கள் பறிக்கப்பட்டதைக் கண்டு ஏரிமலையாகக் கொந்தளித்து எழுந்து போராடினார்.
சட்டத் திருத்தம்:
முடிவு இந்திய அரசியல் சட்டம் திருத்தப்பட்டது. முதன் முதலாக இந்திய அரசியல் சட்டம் திருத்தப்பட்டதே வகுப்புவாரி உரிமைக்காகத்தான். திருத்தம் செய்த பெருமை தந்தை பெரியார் அவர்களையே சாரும். இந்திய அரசியல் சட்டத்தின் 15ஆவது பிரிவு திருத்தப்பட்டது.“Nothing any article shall prevent the state from making any special provision for advancement of any socially and educationally backward classes of citizens.” என்று அரசியல் சட்டத்திலே திருத்தம் செய்யப்பட்டது.
சமூகத்திலும் கல்வியிலும் பிற்படுத்தப்-பட்டவர்களின் முன்னேற்றத்திற்காக பிரத்தியேக சலுகைகள் கொடுப்பதற்கு இந்திய அரசியல் சட்டம் இடங்கொடுக்கிறது. தமிழக அரசு இப்பொழுது நிறைவேற்றி இருக்கிற ஆணை இந்திய அரசியல் சட்டத்துக்கு நேர் எதிர்ப்பும், முரணானதுமாகும்.
நாடாளுமன்றத்திலே இந்த திருத்த மசோதா வந்த பொழுது பல தரப்பட்ட கருத்துகள் கூறப்பட்டன உண்மை. அப்பொழுது கூட (“Economically”) என்ற வார்த்தையையும் சேர்க்க வேண்டும் என்று கூறியவர்கள் உண்டு. ஆனால், அதை நாடாளுமன்றம் ஏற்றுக் கொள்ளவில்லை. Socially and Educationally என்ற வார்த்தைகளை மட்டும் தான் இணைத்து ஓட்டெடுப்பு நடத்தி திருத்தம் நிறைவேற்றப்-பட்டது. பொருளாதாரம் பேசும் தமிழக அரசின் புதிய உத்திரவு இந்திய அரசியல் சட்டத்துக்கு முற்றிலும் முரணான ஒன்றாகும்.
நம் சமுதாய மக்களுக்கு தலைமுறை தலைமுறையாகக் கல்வி வாய்ப்பு மறுக்கப்பட்டுக் கிடந்தது கல்வி வாசனையே இல்லாத தலைமுறையாக திட்டமிட்டு நாம் ஆக்கப்பட்டுக் கிடந்தோம் ஆனால் பார்ப்பனர்கள் சூழ்நிலை அவ்வாறானதா? பாட்டியிலிருந்து, அத்திம் பேர்வரை அத்தனைபேரும் படித்தவர்களாயிற்றே அவர்களுக்குள்ள கல்வி சுற்றுச் சார்பு நமக்கு உண்டோ?
பரம்பரை கல்வி வாய்ப்பும், சுற்றுச் சார்பும் கல்வி முன்னேற்றத்திற்கு முக்கியமான காரணங்களல்லவா?
நம் பிள்ளைகளுக்கு சிறுவயதிலே தஞ்சாவூர் தலையாட்டிப் பொம்மை வாங்கிக் கொடுத்ததைத் தவிர நாம் கற்பித்த கல்வி என்ன? ஆட்டி விட்டால் தலையாட்டிப் பொம்மை ஆடுவதைப் போல யார் எதைச் சொன்னாலும், அதை அப்படியே தலையாட்டிக் கொண்டு நம்பி வந்திருக்கிறோம்.
நம் மக்களை கை தூக்கி விட நேரடித் தேர்வு முறை ஏற்படுத்தப்பட்டது. அதற்கு 150 மார்க்கை 50ஆகக் குறைத்தார் என்ன ஆயிற்று? பார்ப்பனர்கள் மளமளவென்று மருத்துவம், பொறியியல் துறையில் நுழைந்துவிட்டனர். தந்தை பெரியார் அவர்கள் இதை மிகக்கடுமையாக எதிர்த்தார்கள் ஆனால், அந்த நேரத்திலே கூட ஆச்சாரியார் சொல்லவில்லை பெரியார் தன் வீட்டுப்பிள்ளைகள் பாதிக்கப்படுவதால் வீணாக எதிர்க்கிறார் என்று கூறவில்லை. (கைதட்டல்)
காமராசர் ஆட்சிக்கு வந்தார் வந்தவுடன் என்ன செய்தார் தெரியுமா? ஆச்சாரியாரால் குறைக்கப்பட்ட 50 மார்க்கை மீண்டும் 150 ஆக உயர்த்தினார். பார்ப்பன நிருபர்கள் காமராசரைப் பார்த்துக் கேட்டனர். ஏன் இப்படி இண்டர் வியூ மார்க்கை உயர்த்தினீர்கள்? என்று கேட்டனர். அதற்கு காமராசர் பதில் சொன்னார். எந்த காரணத்துக்காக ராஜாஜி குறைத்தாரோ, அதே காரணத்துக்காகத்தான் உயர்த்தினேன் போ! என்று சூடாகப் பதில் சொன்னார். (கைதட்டல்)
இந்த வரலாறுகளை யெல்லாம் நாம் தெரிந்துகொள்ள வேண்டாமா? பெரியாருக்கு விழா கொண்டாடாத காமராசர் பெரியார் கொள்கையை ஆட்சிப் பீடத்திலே அமரச் செய்தார். பெரியார்க்கு விழா எடுத்துக்கொண்டு நீங்கள் என்ன செய்துகொண்டு இருக்கிறீர்கள்? பெரியார் உயிராய் மதித்த கொள்கைகளுக்கே அல்லவா குழிதோண்டி விட்டீர்கள்!
தகுதி திறமை பற்றி பிரச்சினை வந்த பொழுதெல்லாம் காமராசர் என்ன சொல்லுவார் தெரியுமா?
உன் தகுதியும் எனக்குத் தெரியும்; உனக்கு சொல்லிக் கொடுத்தவன் தகுதியும் எனக்குத் தெரியும் போ என்றார். பறையன் டாக்டர் ஆனான்; ஊசி போட்டான் எந்த பிள்ளை செத்தது? பறையன் இஞ்ஜீயர் ஆனான்; பாலங்கள் கட்டினான் எந்த பாலம் இடிந்தது? என்று கேட்டார்.
பெரியார் பாரம்பரியத்திலே வராத காமராசர் திராவிடர் இயக்கத்திற்குத் தொடர்பில்லாத காமராசர் அவர்களின் கொள்கைகளில் அவ்வளவு உறுதியாக இருந்தார். ஆனால் பெரியார் பாரம்பரியம் என்று சொல்லிக்கொண்டு, அதற்கு நேர் எதிர்ப்பான ஆச்சாரியார் வழியில் செல்லுவது என்றால் என்ன பொருள்?
ஆச்சாரியார், அய்யா, அண்ணா, காமராசர் ஆகியோர்களின் பாதைகளில் இந்த ஆட்சி நடைபோடுகிறதாம். இப்படி விளம்பரம் செய்கிறார்கள். சாதாரண பொது அறிவுள்ள ஒரு மனிதனுக்கு இது தெரியுமே! இந்த நான்கு பேர் வழிகளில் ஒருவர் எப்படி போக முடியும்? மற்ற மூன்று பேர்களின் வழி என்றாலும் ஓரளவுக்கு ஒத்துகொள்ள முடியும்.
ஆச்சாரியாரையும் அய்யாவையும் இணைத்து அவர்கள் வழிகளில் அரசு நடைபோடுகிறது. என்றால் இந்த ஆட்சி சரியான பாதையிலே போகவில்லை. சரியான பாதையிலே போக முடியாத ஆட்சி; சரியான பாதையிலே போகமுடியாததற்கும் காரணம் ஆச்சாரியார் வழியிலும் அய்யா வழியிலும் ஒரே நேரத்திலே போகமுயலும் குழப்பம்தான் என்பது சாதாரணமாகவே தெரிந்துவிட்டது.
சுட்டிக்காட்டினால் நமது மாண்புமிகு முதலமைச்சருக்கு ஆத்திரமும் கோபமும் கொப்பளித்துக் கொண்டு கிளம்புகிறது உண்மைகளை சுட்டிக் காட்டினால், ஒட்டக் கூத்தன் பாட்டுக்கு இரட்டைத் தாழ்ப்பாள் என்பது போல மேலும் மாறுபாடாகப் போகிறார்.
தானும் தனது மகனும் தான் இந்தியா என்று நினைத்த சர்வாதிகாரி இந்திராவின் இன்றைய நிலை என்ன? தெருவிலே வந்தல்லவா நிற்கிறார்! இந்த முன் மாதிரிகளை முதலமைச்சர் தெரிந்து கொள்ள வேண்டாமா?
தமிழன் உணர்ச்சிகளுடன் விளையாட முனைந்தால் அது ஆபத்து!
அண்ணா அவர்கள் முதலமைச்சராக வந்தபொழுது, தொழிற்கல்லூரிகளுக்கு மனுபோடும் தகுதி மார்க்கை 50 சதவிகிதத்திலிருந்து 55 சதவிகிதமாக உயர்த்தி உத்திரவுப் போடப்பட்டது.
இதைக் கண்டித்து, ‘விடுதலை’யில் எழுதினோம். அண்ணா அவர்கள் உடனே என்ன செய்தார்கள் தெரியுமா? சம்பந்தப்பட்ட சுகாதார இலாகா செயலாளரைக் கூப்பிட்டு உத்தரவை நிறுத்தச் சொன்னார். விண்ணப்பங்கள் எல்லாம் அடித்தாயிற்றே என்று செயலாளர் சொன்னார். பரவாயில்லை, விண்ணப்பங்கள் அப்படியே இருக்கட்டும் பிராஸ்பெக்டஸ்களை மாத்திரம் புதிதாக அச்சடித்து விடுங்கள் என்று ஆணை பிறப்பித்தார்.
அண்ணா உத்திரவை மாற்றினார்; காரணம், அண்ணாவுக்கு விவரம் புரியும்; அண்ணாவுக்கு சரித்திரம் தெரியும்; அண்ணாவுக்கு இனஉணர்வு, பிற்படுத்தப்பட்ட மக்கள், ஒடுக்கப்பட்ட மக்கள் தலையெடுக்க வேண்டும் என்ற பரிவும் இருந்தது. அதன் காரணமாகவே அவர் அப்படி நடந்து கொண்டார்.
ஆண்டு வருமானம் ஒன்பதாயிரம் ரூபாய் இருந்தால், பிற்படுத்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்தவர்கள் முற்பட்ட வகுப்பாகி விடுகிறான் என்ற தமிழக அரசின் உத்தரவால் உதவிப் பணம் கொடுப்பதற்காக இந்த உத்திரவால் _ மாறாக பிற்படுத்தப்பட்டவரின் மகன் கல்வி பயிலவோ, டாக்டர் ஆகவோ, என்ஜினியர் ஆகவோ உள்ளே நுழைய முடியாதபடிக்கு தடைக்கல் போடும் உத்திரவு இது.
இதற்கு முன்பிருந்த ஆட்சிகளின் காலத்தில்கூட டில்லி மேலிடத்திலிருந்து பல தாக்கீதுகள் வந்ததுண்டு. ஆனால், அந்த ஆட்சிகள் எல்லாம் அவற்றைப் பொருட்-படுத்தவில்லை.
வகுப்புவாரி பிரநிதித்துவத்தை அமல்-படுத்துவதில் அவர்கள் கவனமாக இருந்தார்கள். நாகரசம்பட்டியிலே நடைபெற்ற பெரியார் இராமசாமி உயர்நிலைப்பள்ளி துவக்க விழாவிலே முதலமைச்சர் அண்ணா அவர்களை அருகில் வைத்துக்கொண்டே அய்யா சொன்னார். சப்ரீம் கோர்ட் தீர்ப்பு, 50 சதவிகிதத்துக்கு மேற்படாத அளவுக்கு இடஒதுக்கீடு செய்யலாம் என்று இருக்கிறதல்லவா? அப்படியானால் 49 சதவிகிதம் வரை கொடுக்கலாமே! இப்பொழுது 41 சதவிகிதம்தானே கொடுக்கப்படுகிறது. மேலும், எட்டு இடங்களை உயர்த்தி உத்திரவு போடலாமே என்று கூறினார்.
அண்ணா அவர்கள் அதை ஏற்றுக் கொண்டார்கள். சிறிது காலத்தில் அண்ணா அவர்கள் மறைந்துவிட்டார்கள். அவர்களுக்குப் பிறகு முதலமைச்சர் பொறுப்பை ஏற்ற கலைஞர் அவர்கள் அய்யா விரும்பியபடி 49 சதவிகிதமாக, தாழ்த்தப்பட்ட பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு இடஒதுக்கீடு செய்தார்.
அ.தி.மு.க. ஆட்சி புதிய உத்தரவு மூலம் ஏழை எளிய பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு, கிராமப்புற மக்களுக்கு வசதி செய்து கொடுத்து இருக்கிறதாம். அரசின் உத்தரவில் இருக்கிற ஆபத்தை எடுத்துச் சொன்னால், உடனே முதலமைச்சர் கூறுகிறார். இந்த சட்டத்தினால் கருணாநிதிக்கும், வீரமணிக்கும்தான் கவலை என்று சொல்லுகின்றார்.
உண்மைதான், இந்த நாட்டிலே இருக்கிற கோடானுகோடி தாழ்த்தப்பட்ட மக்களும், பிற்படுத்தப்பட்ட மக்களும், கருணாநிதி, வீரமணி குடும்பம்தான். அவர்களுக்காக நாங்கள் கவலைப்பட வேண்டியவர்கள்தான்.
பெரிய பொறுப்பில் இருக்கும் ஒரு முதலமைச்சர் இவ்வளவு இறங்கி பேசி இருப்பது வேதனைக்குரியது.
சமூக நிலையிலும் கல்வியிலும் பிற்படுத்தப்பட்டு இருக்கிற ஒரு குடும்பத்துக்கு ஆண்டு வருமானம் ரூபாய் ஒன்பதாயிரம் ஆகிவிட்டால் உடனே அவன் முற்படுத்தப்-பட்டவனாகிறான். அவன் 51 சதவிதம் உள்ள முற்படுத்தப்பட்ட மக்களுடன் திறந்த போட்டியில் மோத வேண்டும்.
திறந்த போட்டிக்கு முன்பிருந்ததைவிட அதிக ஆள் சேருகிறது. போட்டி வலுக்க வலுக்க தேர்ந்தெடுக்கும் நிர்ணய அளவை மாற்றுவார்கள். ஏற்கனவே பல தலைமுறை படித்த முற்படுத்தப்பட்ட மக்களுடன் இந்தப் புதிய, ஆண்டு வருமானம் ஒன்பதாயிரம் ரூபாய் இருப்பதாலேயே முற்படுத்தப்பட்ட சமுதாயமாக ஆக்கப்பட்டுவிட்ட முதல் கல்வித் தலைமுறையினரும் மோதினால் முடிவு என்னாகும்?
இந்த சூழ்ச்சியை நாம் புரிந்து கொள்ள வேண்டாமா? ஏழை எளிய பிற்படுத்தப்பட்ட மக்களுக்குத்தானே இந்த உத்திரவான வாய்ப்பு என்பது எவ்வளவு பெரிய ஏமாற்று வித்தை?
ஏழை எளியவர்களை கை தூக்கிவிடத்தான் இந்த ஏற்பாடாம். ஏழை எளிய கிராமப்புற மக்கள் மருத்துவக் கல்லூரியில் மனு போட 70 சதவிகிதம் மார்க் இருந்தாக வேண்டும் என்று நிபந்தனை வைத்து இருக்கிறார்களே _ இதுதான் ஏழை எளிய கிராமப்புற மக்களை முன்னேற்றுவதற்கான வழிமுறையா?
ஏழை எளிய கிராமப்புற மக்கள், முதல் தலைமுறையாக கல்லூரியை எட்டிப் பார்க்கும் மக்கள் எந்தக் காலத்தில் 70 சதவிகித மார்க்குகள் வாங்கப் போகிறார்கள்? சர்க்கரை பூசப்பட்ட நஞ்சு துண்டுதான் தமிழக அரசின் புதிய உத்தரவு.
எஸ்.எஸ்.இராமசாமி படையாச்சியாரும், திண்டிவனம் இராமமூர்த்தியும், அனந்தநாயகி அம்மையாரும் தமிழக அரசின் புதிய உத்திரவினை எதிர்க்கிறார்கள் என்றால் அரசியல் நோக்கமா? திண்டிவனம் இராமமூர்த்தி உங்கள் தோழமைக் கட்சியைச் சார்ந்தவர் தானே, உடனே அவர் பிள்ளையைப் பாதிக்கிறது, அதனால்தான் அப்படி சொல்லுகிறார் என்று முதலமைச்சர் கூறுவாரா?
இன்றைய தினம் பார்ப்பனர்களுக்கு எவ்வளவு மகிழ்ச்சி! ‘இந்து’ ஏடு எவ்வளவு பூரிப்போடு தலையங்கம் தீட்டுகிறது. இனி முழுக்க முழுக்க பொருளாதார அடிப்படையிலேயே சலுகைகள் இருக்க வேண்டும் என்றல்லவா பூணூலை உருவி விட்டுக் கொண்டு எழுதுகிறது.
அக்கிரகாரம் மகிழ்ச்சி கூத்தாடுகிறது; ‘இந்து’ ஏடு ஆனந்த பல்லவி பாடுகிறது என்றால், பார்ப்பனரல்லாத மக்களுக்கு ஏதோ பெருங்கேடு சூழ்ந்திருக்கிறது என்று தானே பொருள். இந்த சூத்திரத்தைக் கூடப் புரிந்து கொள்ளாமல் அய்யா வழி, அண்ணா வழி என்றால் அது யாரை ஏமாற்ற?
இன்றைய தினம் நாம் மிகப் பெரிய ஆபத்துக்கு ஆளாகி இருக்கிறோம். ஏதோ திராவிடர் கழகத்துக்கு வந்த ஆபத்து என்று யாரும் கருதிவிடாதீர்கள்; நம் இனத்துக்கு வந்து சேர்ந்த பேராபத்து!
வகுப்பு இருக்கும்வரை அதன் வாதம் இருந்தே தீரும் என்று அய்யா அவர்கள் கூறினார்கள். சாலையின் குறுக்கே பாலம் கட்டும்போது வேறு ஒரு தரைப்பாதை (Diversion Road) ஏற்பாடு செய்கிறோம் அல்லவா? அதுபோலவே ஜாதி ஒழியும்வரை ஜாதி அடிப்படையிலான உரிமையும் இருந்தாக வேண்டும். அந்தப் பாதைக்கு குறுக்கே போடும் தடைதான் தமிழக அரசின் புதிய உத்திரவு.
பதவிக்குப் போவதற்காக இதை நாங்கள் சொல்லவில்லை. ஈரோட்டை நாடியவன் பாராட்டைக்கூட விரும்பமாட்டான். நீண்ட கால ஓயாப் போராட்டத்துக்கு பிறகு நம் மக்களுக்குக் கிடைத்த அரிய பெரிய பாதுகாப்புக் கவசம் வகுப்புவாரி உரிமை. அந்தப் பாதுகாப்புக்கு இன்றைய தினம் ஆபத்து ஏற்பட்டு இருக்கிறது.
தமிழினத்தைச் சூழ்ந்த பேராபத்திலிருந்து காப்பாற்றவே ஜூலை 14, 15 தேதிகளில் திராவிடர் கழகத்தின் சார்பில் சேலத்தில் நடக்க இருக்கும் மாபெரும் பிற்படுத்தப்பட்டோர் உரிமை காப்பு மாநாடாகும். பிற்படுத்தப்பட்ட மக்களின் வாழ்வில் நல்லெண்ணங் கொண்ட அத்தனைத் தலைவர்களும் மாநாட்டில் கலந்துகொள்கிறார்கள்.
இந்தப் பிரச்சினைக்கு முடிவு காணும்வரை ஓயமாட்டோம். தெருத்தெருவாக வீடுவீடாகப் பிரச்சாரம் செய்வோம். குலக்கல்வித் திட்டத்தை எப்படி ஒழித்துக் கட்டினோமோ, அது போலவே இந்த புதிய உத்திரவையும், முறியடிப்போம் _ முறியடித்தாக வேண்டும்.
சோளக் கொல்லை பொம்மைகளைக் காட்டி எங்களை அச்சுறுத்தலாம் என்று நினைக்க வேண்டாம். பொம்மை பொம்மைதான்; உண்மை காவலாளி காவலாளிதான் கறுப்புச் சட்டைக்காரன் காவலுக்குக் கெட்டிக்காரன் தந்தை பெரியார் போராடிப் போராடிப் பெற்றுத்தந்த உரிமைகளைப் பறிக்கவிட மாட்டோம்; விடமாட்டோம்!
தூக்குக் கயிற்றைத் தழுவ நேர்ந்தாலும் தமிழினத்தின் உரிமைக்காக தந்தை பெரியார் அவர்களின் கொள்கைகளுக்காக இறுதி மூச்சு அடங்கும் வரை போராடுவோம்!
உரிமைகளைவிட உயிர், வாழ்வு எங்களுக்குப் பெரிதல்ல. அய்யா ஏற்றித் தந்த இன உணர்ச்சிச் சுடரை எந்த சூறைக் காற்று மோதினாலும் அணைய விடோம்!
எந்த நியாயமான உரிமைகளைப் பெற்றிடவும் அதற்கான கஷ்ட நஷ்டம் என்னும் விலையை கொடுத்தாக வேண்டும் என்று தந்தை பெரியார் கூறி இருப்பதை அறிந்தவர்கள் மட்டுமல்ல _ அதற்கு முற்றிலும் தயாரானவர்கள் பயிற்சி பெற்றவர்கள் என்பதை தெரிவித்துக் கொள்கிறோம்’’ என்று சூளுரைத்து, பின்பு வெற்றியும் பெற்றேன். (அந்த வரலாறு தனியாக.)
விழாவில், சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி மாண்புமிகு ஜஸ்டிஸ் வரதராசன் அவர்கள், சோலையார்பேட்டை கே.கே.சின்னராசு, பேராசிரியர் இறையன், பேரா. நெடுஞ்செழியன், பேரா. புலவர் ந.இராமநாதன், வ.ஆற்காடு மாவட்ட திராவிடர் மாணவர் கழக துணை செயலாளர் வீரமணி, கவிஞர்கள் இராகவன், குயில்தாசன், பொன்னடியான் போன்றோர் பல்வேறு தலைப்புகளில் உரை நிகழ்த்தினார்கள். நிகழ்ச்சியை பார்த்த பொதுமக்கள் திருப்பத்தூர் முழுவதும் நகரப் பொதுமக்கள் பெரிதும் ஆச்சரியமும் அதிசயமும் பட்டனர் அன்று.
(நினைவுகள் நீளும்)