பெரியார் விரும்பிய பெண்கள்

ஜூன் 01-15

தங்களைப் போல் பலரும் குத்துச்சண்டை விளையாட்டில் சிறந்து விளங்க வேண்டும். தங்களைவிட மேலும் மேலும் போட்டிகளில் கலந்து, பதக்கங்கள் பெற வேண்டும் என்ற எண்ணத்துடன் இலவசமாக குத்துச்சண்டை கற்றுக் கொடுக்கிறார்கள் வடசென்னையைச் சேர்ந்த அய்ந்து பெண்கள்.

நர்மதா, நிலா, செவ்வந்தி, புவனேஸ்வரி, துர்கா இந்த பஞ்ச பாண்டவிகள்தான் அந்த குத்துச்சண்டை பயிற்றுநர்கள். “நாங்க எல்லோருமே ஒரே ஸ்கூல்ல வேற வேற வகுப்புகள்ல படிச்சவங்க. ஆனா, ஒண்ணா குத்துச்சண்டை கத்துக்கிட்டோம். எல்லோருமே ஸ்டேட் லெவல், நேஷனல் லெவல் சாம்பியன்ஷிப் வாங்கியிருக்கோம். நாங்கள் அஞ்சு பேரும் பயிற்சி கொடுத்துட்டு இருக்கோம்’’ என்று நர்மதா, அய்வர் கைகோர்த்த கதையைச் சொல்கிறார்.

“ஒவ்வொரு ஸ்கூல்லயும் ஈவ்னிங் டைம்ல நாங்க போய் கோச்சிங் கொடுத்துட்டிருக்கோம். ஒரே டைம்ல அஞ்சு பேரும் அஞ்சு இடத்துக்குப் போய் பாக்ஸிங் சொல்லிக் கொடுக்கிறோம். நாங்க கோச்சிங் ஆரம்பிச்சு ரெண்டு மாசத்துலயே ஸ்கூல் லெவல்ல வின் பண்ணிட்டு வந்தாங்க. தொடர்ந்து பயிற்சி கொடுத்தா இன்னும் நிறைய பண்ண முடியும்னு நம்புகிறோம்…’’ என்று நம்பிக்கையாக பேசுகிறார் புவனேஸ்வரி.

நர்மதாவும் நிலாவும் பிஸிகல் எஜுகேஷன் முடித்திருக்கிறார்கள். “பாக்ஸிங் பண்ணா உடம்பு ஃபிட்னஸா இருக்கும். போட்டிகள்ல கலந்துக்கிட்டு ஜெயிச்சுட்டு வரலாம். ஆனா, இதை கராத்தே மாதிரி தற்காப்புக் கலையா பயன்படுத்தக் கூடாது…’’ என்று சிரிக்கும் நிலாவுக்குத் திருமணமாகி ஒரு குழந்தை இருக்கிறது.

 

புரசைவாக்கம், நுங்கம்பாக்கம், அயனாவரம், கண்ணகிநகர் ஆகிய இடங்களில் உள்ள பள்ளிகளில் கிட்டத்தட்ட 150 பள்ளி மாணவ, மாணவியருக்கு கோச்சிங் கொடுத்து வருகிறார்கள் இந்தப் பெண்கள்.

“கோச்சிங்ல கையுறை போட்டுக் கத்துக்கிட்டாதான் போட்டிகள்ல கலந்துக்கும்-போது அது பழக்கமாகும். இங்க வெறும்கையில பழகிட்டா அப்புறம் போட்டியில் சிரமம் வரும். இப்பதான் நாங்க அஞ்சு பேரும் கொஞ்சம் பணம் சேத்து அய்ந்து சோடி கையுறை வாங்கிருக்கோம். ஒரு சோடி சாதாரணமா 1,500 ரூபா ஆகுது. நீண்ட நாள் வரணும்னா 2,000 ரூபாய்க்கு வாங்கித்தான் ஆகணும்…’’ என்று சொல்லும் துர்காவைத் தவிர மற்ற நால்வரும் என்.ஜி.ஓ.வில் வேலை செய்கிறார்கள்.

“கையுறை இல்லாததால முடிஞ்ச அளவுக்குக் கிடைக்கிறத வெச்சு சமாளிக்கிறோம். இப்ப ஒரே நேரத்தில் பத்து மாணவர்கள் கத்துக்-கிறாங்கன்னா, அதுல அஞ்சு அஞ்சு பேருக்காதான் சொல்லிக் கொடுக்க முடியுது. ஏன்னா, அஞ்சு கையுறை வாங்கவே எங்களுக்கு ஆறு மாசமாச்சு’’ என்று பேசும் செவ்வந்தி, “யாராவது எங்களுக்குக் கையுறை வாங்கிக் கொடுத்தா எங்களால இன்னும் சிறப்பா சொல்லிக் கொடுக்க முடியும். அது மட்டுமில்ல, பசங்களும் நல்லா கத்துக்குவாங்க’’ என்கிறார்.

இலவசமாக பயிற்சி தர இவர்கள் தயாராக இருக்கிறார்கள். ஆனால், இவர்களுக்குத் தேவை கொஞ்சம் கையுறைகளும், ஒரு இடமுமே. ‘இறுதிச் சுற்று’ படத்திற்குப்பின் குத்துச்-சண்டையில் ஒரு பெண் வெற்றி பெற்று வருவது எவ்வளவு கடினமானது என்பது நமக்குத் தெரியும். இந்தப் பெண்களுக்கு க்ளப் வைத்துச் சொல்லிக் கொடுக்க வாய்ப்பளித்தால்  ஒலிம்பிக்கிலும், காமன்வெல்த்திலும் நம் பிள்ளைகள் களத்தில் கலக்கிவிட்டு வருவார்கள் என்பது உறுதி.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *