“கர்ப்ப காலத்தில் பெண்களுக்கு இயல்பாகவே அதிக இன்சுலின் சுரப்பு தேவைப்படும். அப்படி அதிக இன்சுலின் சுரக்காத பட்சத்தில் அவர்களுக்கு கர்ப்பகாலத்தில் புதிதாக சர்க்கரை நோய் (Gestational diabetes) ஏற்படும்’’ என்கிறார்கள் மருத்துவர்கள்.
யாருக்கெல்லாம் இது வரலாம்?
கர்ப்பமாக இருக்கும் பெண்ணின் தாய்க்கோ தந்தைக்கோ சர்க்கரை வியாதி இருந்தால் அவருக்கும் கர்ப்பகால சர்க்கரை வியாதி வர வாய்ப்புண்டு.
உடல் பருமன் இருப்பவர்களுக்கும், 35 வயதுக்குப் பின் கர்ப்பம் தரிப்பவர்களுக்கும்கூட கர்ப்பகால சர்க்கரை நோய் வர வாய்ப்புகள் அதிகம்.
முதல் கர்ப்பத்தில் இப்படியொரு சர்க்கரை நோய் இருந்தால் அடுத்த கர்ப்பத்திலும் இந்தப் பிரச்சினை வர வாய்ப்புகள் அதிகம். இன்னும் குறிப்பிட்டுச் சொன்னால், முதல் பிரசவத்தில் 5ஆவது மாதத்தில் நீரிழிவு ஏற்பட்டால்அடுத்த பிரசவத்தில் அது 3ஆவது மாதத்திலேயே ஏற்படலாம்.
உயரத்துக்கு ஏற்ற எடை (Body Mass Index) சரியாக இருந்தாலே இது போன்ற கர்ப்பகால சர்க்கரை நோயைத் தவிர்க்கலாம்.
சர்க்கரை அளவை எப்படி கட்டுப்படுத்த வேண்டும்?
ஒரு பெண் கர்ப்பமாக இருப்பது தெரிந்தாலே அவருடைய சர்க்கரையின் அளவும் பரிசோதிக்கப்படும். அப்படி சர்க்கரையின் அளவில் மாறுபாடு இருப்பது தெரிந்தால், அவர்கள் உணவில் ஒரு சில மாற்றங்களைக் கொண்டு வரவேண்டும். இது அந்தப் பெண் என்ன மாதிரியான பணிகள், உடல் உழைப்பு செய்கிறார் என்பதைப் பொறுத்து அமையும்.
காபி அல்லது டீயில் சர்க்கரையின் அளவைக் குறைத்துவிட வேண்டும்.
இரும்புச்சத்தை பேரீச்சையாக எடுத்துக் கொள்ளாமல் பச்சைக் காய்கறிகளாக எடுத்துக் கொள்ள வேண்டும்.
சர்க்கரை அளவு குறைவாக உள்ள பழங்களான ஆப்பிள், மாதுளை போன்றவற்றை அதிகம் சாப்பிடலாம்.
சர்க்கரைச் சத்து மிகுந்த வாழைப்பழம், மாம்பழம் ஆகியவற்றை குறைத்து சாப்பிட வேண்டும்.
இவற்றைப் பின்பற்றி வந்தாலே உடலில் சர்க்கரை அளவு குறைந்துவிடும். இல்லாவிட்டால், அவர்களுக்கு இன்சுலின் ஊசி செலுத்தப்படும்.
இன்சுலின் ஊசியால் குழந்தைக்கு பாதிப்பு வருமா?
கர்ப்பிணிகளுக்கு சர்க்கரைக்கான மாத்திரைகள் பரிந்துரைக்கப்படுவதில்லை. காரணம், மாத்திரைகள் நஞ்சுக்கொடி வழியாக குழந்தைக்குச் செல்லலாம். ஆனால், இன்சுலின் ஊசிகளால் அப்படி எந்தப் பாதிப்பும் ஏற்படாது.
குழந்தைக்கு வர வாய்ப்புண்டு
கர்ப்பகால சர்க்கரை நோய்க்குத் தகுந்த சிகிச்சை அளிக்காவிட்டால், அதிகப்படியான சர்க்கரை குழந்தையைச் சென்றடையும். அப்போது கருவில் இருக்கும் குழந்தையும் இன்சுலினை சுரக்கத் தொடங்கும். அதனால் குழந்தையின் எடையும் 3.5 கிலோவிற்கு மேல் சென்று பெரிய குழந்தை(Big bagy)யாகப் பிறக்கும். இந்த சூழ்நிலைகளில் பிரசவம் பெரும்பாலும் அறுவை சிகிச்சை மூலமாகவே இருக்கும். அப்படிப் பிறந்த குழந்தைகளுக்கு இன்சுலின் சுரப்பு அதிகம் இருப்பதால் மஞ்சள்காமாலை, ஹைப்போ க்ளைசீமியா போன்ற பிரச்சினைகள் வரலாம்.
கர்ப்பகால சர்க்கரை நோய் நீடிக்குமா?
பொதுவாக, தொடராது. கர்ப்பகாலம் முடிந்ததுமே சர்க்கரையும் போய்விடும். பிரசவம் முடிந்த பத்து வருடங்களுக்குப் பிறகு அந்தப் பெண்ணுக்கு சர்க்கரைப் பாதிப்பு ஏற்படலாம். ஆனால், வளர்ந்து வரும் வாழ்க்கை முறை மாற்றங்களால், இப்போதெல்லாம் பிரசவமான ஒரு வருடத்திலேயே இந்தப் பெண்கள் சர்க்கரை நோயால் (இது டைப்_2 டயபடீஸ்) பாதிக்கப்பட்டு விடுகின்றனர்.
இப்படி ஏற்படுவதைத் தவிர்க்கவே பெண்களை பிரசவம் முடிந்ததும் அப்படியே இருந்த இடத்திலேயே முடங்கிக் கிடக்காதீர்கள் என்கிறார்கள் மருத்துவர்கள். நடைப்பயிற்சி, உடற்பயிற்சி, உணவுக் கட்டுப்பாடு போன்றவை இதைத் தடுக்கும்.
கர்ப்பகால சர்க்கரை நோயால் குழந்தைக்குத் தாய்ப்பால் தருவதில் எந்தப் பாதிப்பும் எற்படாது. சிகிச்சைக்குப் பலன் என்பது நோய் எவ்வளவு சீக்கிரம் கண்டறியப்பட்டு எத்தகைய முறையில் சிகிச்சை தரப்படுகிறது, அதற்கு அந்த கர்ப்பிணி எந்த அளவு ஒத்துழைக்கிறார் என்பதைப் பொறுத்தது.
உடற்பயிற்சியும் உணவுக் கட்டுப்பாடும் இந்நோயை விரைவில் நீக்கும்.
சிறு வயதிலிருந்தே சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்டிருக்கும் பெண்கள், கர்ப்பம் தரிப்பது என்பதே சிக்கல்கள் நிறைந்த ஒரு விஷயம்!
அவர்கள் திருமணமாகி குழந்தைப் பேறுக்கு தயாரானதுமே HbAIC பரிசோதனையை எடுத்துக்கொள்ள வேண்டும். அதில் சர்க்கரையின் அளவு 6% இருந்தால் மட்டுமே அவர்கள் கர்ப்பம் தரிக்கலாம். இது தெரியாமல் கருத்தரிக்கும் சர்க்கரை நோய் உடைய சில பெண்களுக்கு சர்க்கரை அளவு 8% அல்லது 10% இருந்தால் கரு கலைந்துவிட வாய்ப்புள்ளது. அல்லது, பிறக்கும் குழந்தை ஏதாவது அங்கக் குறைபாட்டுடன் பிறக்கலாம். இதயக் கோளாறு, இதயத்தில் துளை, மூளைக் கோளாறு போன்றவையும் ஏற்படலாம். அல்லது குழந்தை இறந்தும் பிறக்கலாம்.
சர்க்கரை அளவு அதிகம் இருக்கும்போது கருத்தரிக்காமல் பார்த்துக்கொள்ளுங்கள்.
மருந்துகள், உடற்பயிற்சி, உணவுப் பழக்கத்தின் மூலம் சர்க்கரையின் அளவைக் குறைத்த பின்பு மட்டுமே கருத்தரிப்பது நல்லது.
ஒரு நாளைக்கு மூன்று யூனிட் அளவு இன்சுலின் செலுத்திக்கொண்டிருந்தால் கர்ப்பகாலத்தில் அந்தப் பெண்ணுக்கு இன்னும் அதிக யூனிட் இன்சுலின் தேவைப்படும்.
இப்படியொரு நிலை ஏற்படாமல் இருக்க, டைப்_1 மற்றும் டைப்_2 சர்க்கரை நோய் இருக்கும் கர்ப்பிணிகளுக்கு குழந்தை பிரசவிக்க பெரும்பாலும் அறுவை சிகிச்சையே பரிந்துரைக்கப்படுகிறது. கருவில் உள்ள சிசு நல்ல முறையில் வளர்ந்திருந்தால் 36ஆவது வாரத்திலேயே அறுவை சிகிச்சையின் மூலம் வெளியே எடுத்து விடுவார்கள்.
குழந்தை பிரசவமான அன்று தாயின் உடலில் சர்க்கரை அளவு பழைய நிலைக்கே திரும்பிவிடும். இதை சரியாக கவனித்து பழைய இன்சுலின் அளவே தாய்க்கு செலுத்தப்பட வேண்டும். இல்லையென்றால் தாய்க்கும் சர்க்கரை அளவு குறைய வாய்ப்பு உள்ளது. அதாவது சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்ட ஒரு பெண்ணின் பிரசவம் வெற்றிகரமாக அமைய பெண்கள் நல மருத்துவர், நிரிழிவு நோய் மருத்துவர் இருவரும் கூட்டாக வேலை செய்ய வேண்டும்.ஸீ