குளிரூட்டி ஒரு காலத்தில் ஆடம்பர சாதனம். ஆனால், இன்று அத்தியாவசியங்களில் குறிப்பிடத்தக்க ஒன்று. அலுவலகத்தில் பெரும்பாலான இடங்களில் குளிர்சாதனத்தில் உட்கார்ந்து பழகிவிடுவதால், நிறைய பேர் வீட்டிலும் குளுமைக்கு ஆளாகிவிட்டனர்.
ஆனால், “தொடர்ச்சியாக குளிர்சாதன அறைகளில் இருந்தால், உடலில் பல்வேறு பிரச்சினைகள் உருவாகும்!’’ என்று மருத்துவ ஆய்வுகள் எச்சரிக்கின்றன.
குளிர்சாதனம் பொருத்திய அறைக்குள் இருப்போர் எதிர்கொள்ளும் உபாதைகள்; அவற்றைத் தவிர்க்கும் உபாயங்கள் குறித்து சென்னை அடையாறு மருத்துவமனையின் பிரபல நுரையீரல் மற்றும் சுவாச நோய் சிகிச்சை நிபுணர்கள் கூறுகின்றனர்.
பாதிப்புகள்
“வெளியுலக காற்றின் ஈரப்பதத்தை எடுத்து, குளிர் காற்றாக மாற்றி தருவது குளிர்சாதனத்தின் வேலை. இதில் வரும் காற்று இயற்கையானது அல்ல. எனவே, இது ஒவ்வாமை (‘அலர்ஜி’) உள்ளவர்களுக்கு அதிக தொல்லைகளை உண்டாக்கும். ஆகவே, ‘அலர்ஜி’ இருப்போர் குளிர்சாதனத்தில் இருந்து முடிந்தவரை விலகி நிற்பது நல்லது.
அதேமாதிரி கூருணர்ச்சி (‘ஹைபர் ரியாக்டிவ்’) மிகுதியாக உள்ளவர்களுக்கு உடலில் சொறி, அரிப்பு, மூக்கில் சளி ஒழுகுதல், காதில் நமைச்சல், கண் எரிச்சல் போன்றவை வரலாம்.
குறைந்தபட்சம் 3 மாதங்களுக்கு ஒரு தடவை குளிர்சாதனத்தில் உள்ள தூசி_அழுக்குகளை முறையாக சுத்தப்படுத்த வேண்டும். இல்லையெனில், குளிர்சாதனத்தில் மட்டும் வளரக்கூடிய ‘லிஜினல்லா நிமோபிலியா’ பாக்டீரியா உருவாகும். இது மனிதனின் சுவாசப் பாதையில் பரவினால், கடும் ‘நிமோனியா’ காய்ச்சல் உருவாகும்.
சில வீடுகளில் சன்னல் குளிர்சாதனத்தின் பின்பக்கம் பறவைகள் கூடுகட்டி வசிக்கும். இதனால் அவற்றின் கழிவுகள், குளிர்சாதன மோட்டாரில் சேர்ந்து பூஞ்சைகள் வளரும். இதில் குறிப்பாக ‘கிரிப்டோ காக்கஸ்’ என்கிற பூஞ்சான், மனித மூளையை தாக்கக்கூடியது. இது சுவாசப் பாதையையும் சேர்த்து தாக்கினால், ‘கிரிப்டோ_காக்கல் மெனிஞ்சைட்டிஸ்’ என்கிற
ஆபத்தான நோய் வரும்.
கருவுறுதலில் ஆரம்பித்து இதயம் மற்றும் நுரையீரல் சீராக இயங்குவது வரை அனைவருக்கும் ‘வைட்டமின் டி’ தேவையான ஒன்று. இது சூரியஒளியில் கிடைக்கிறது. சதாநேரமும் குளிர்சாதனத்தில் இருப்போருக்கு உடம்பில் இந்தச் சத்து குறைபாடு உருவாகும். எலும்புகள் பலவீனம் அடைந்து… மூட்டுவலி, முதுகுவலி போன்றவை எளிதாக வரக்கூடும்.
உடல்நலம் காக்கும் வழிகள்:
காலை 6 முதல் ஏழரை மணி வரையிலான சூரிய வெளிச்சத்தில் உடம்புக்கு அவசியமான ‘வைட்டமின் டி’ நிரம்ப கிடைக்கும். எனவே, அந்த நேரத்தில் சூரிய ஒளி உடலில் படுமாறு நிற்பது அவசியம்.
பொதுவாக குளிர்சாதனத்துக்கு நேராக முகம் இருக்கும்படி உட்காரக்கூடாது. மீறி இருந்தால்… ஒற்றைத் தலைவலி, ‘சைனஸ்’, மூக்கடைப்பு, காது அடைத்தது போல இருப்பது போன்ற இம்சைகள் அடிக்கடி சங்கடப்படுத்தும். அதிலும் ஒரு சிலருக்கு குளிர்சாதனத்தின் குளிர்ந்த காற்று, சுவாசப் பாதையில் ரணத்தை உண்டாக்கிவிடும்.
சிலர் சன்னல் குளிர்சாதனத்தின் அருகிலேயே தலைவைத்துப் படுப்பார்கள். இதனால் குளிர்ந்த காற்று இரவு முழுவதும் காதுக்குள் சென்று முக நரம்பை பாதித்து வாயை கோண வைக்கும். முக வாத நோய் (‘பெல்ஸ் பேல்சி’) வந்து சேரும்.
குளிர் சாதனத்தின் ‘குளோரோ_ப்ளுரோ கார்பன்’ மூலப்பொருள், அறையின் வெப்பக்காற்றை வெளியேற்ற பயன்படுகிறது. அப்போது, இது வெளியேற்றும் உஷ்ணக் காற்றால் புவி வெப்பமடைதல் அதிகமாகி ‘ஓசோன்’ ஓட்டை பெரிதாகிறது. எனவே, குளிர்சாதனத்தை தேவைக்கு மட்டும் பயன்படுத்துங்கள்.
‘கூருணர்ச்சி’ அதிகம் இருப்போர் குளிர்சாதன அறையில் வேலை பார்க்கும் நிர்ப்ந்தம் வந்தால், காதுகளில் காது அடைப்பான் அல்லது கவனமாக பஞ்சு வைத்து சமாளிப்பது நல்லது.
காலையில் எழுந்து சுத்தமான காற்றை சுவாசிப்பது, காலை நேர சூரிய ஒளி உடலில் படும்படியாக உடல் பயிற்சி_ மூச்சுப் பயிற்சிகளை செய்வது என்று இயற்கையோடு இணைந்து வாழ்ந்தால், குளிர்சாதனத்தால் வரும் பாதிப்புகளை கட்டுப்படுத்தலாம்’’ என்கிறார்கள்.
தோல் நோய் எச்சரிக்கை:
“மனித உடம்பில் எண்ணெய்ப் பசை திரவங்களும், வியர்வையும் சரியான முறையில் சுரந்தால்தான் சருமம் வறண்டு போகாமல் உரிய ஈரப்பதத்தோடு காணப்படும்.
குளிர்சாதன அறைக்குள் வெகுநேரம் இருந்தால் சருமம், ஒரு கட்டத்தில் எண்ணெய்ப் பசை சுரப்பை நிறுத்திவிடும். இதனால் சருமம் _ முகத்தில் சுருக்கங்கள் அதிகமாகி ‘ஃபிரீ மெச்சூர்டு ஏஜிங்’ என்கிற வயதுக்கு மீறிய மூப்புத் தோற்றம் உண்டாகும்.
சிலருக்கு கண்ணீர் சுரக்காமல் கண்கள் உலர்ந்துவிடும். இதனால் கண்களில் வலி, எரிச்சல் நீடிக்கும். இதுதவிர தலைமுடி வலு குறையும். உடையவும் செய்யும்.
முகத்தில் சுரக்கும் ‘ஹையலுரானிக் ஆசிட்’ திரவமே, வதனத்தை பொலிவாக வைத்திருக்க உதவுகிறது. இத்தகைய மாய்ச்சுரைசிங் கிரீமை’ மருத்துவ ஆலோசனைப்படி பயன்படுத்தினால் சருமம் உலர்தல், முகச் சுருக்கத்தை தவிர்க்கலாம்.
குளிர்சாதன அறையில் அமர்ந்து வேலை பார்ப்போரில் ஒருவருக்கு காய்ச்சல், அம்மை, ‘மெட்ராஸ்_அய்’ போன்றவை வந்தால், அது மிகவும் விரைவாக மற்றவர்களுக்கு பரவிவிடும்.
‘சொரியாசிஸ்’, ‘எக்சிமா’ போன்ற சரும நோய்கள் உள்ளவர்கள் குளிர்சாதனத்தில் நெடுநேரம் அமர்ந்தால், அவை இன்னும் தீவிரமாகும். எனவே, குளிர்சாதனத்தை தேவைக்கு ஏற்ப மட்டும் பயன்படுத்துங்கள். அதிக குளிரில் நீண்ட நேரம் உபயோகிப்பதைத் தவிர்ப்பது நலம்.
இயற்கையான சூரிய ஒளியும், மாசு இல்லாத ஆரோக்கியமான காற்றும் நமக்கு மிகவும் அவசியம். அதை மறந்துவிடக் கூடாது’’ என்கின்றனர் தோல் மருத்துவர்கள். ஸீ