சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் 7.5.2016 அன்று காலை 11 மணியளவில் மருத்துவக் கல்லூரி பொது நுழைவுத் தேர்வை திணிப்பதைக் கண்டித்தும், பொதுநுழைவுத் தேர்வை ரத்து செய்ய வலியுறுத்தியும் திராவிடர் மாணவர் கழகத்தின் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. திராவிடர் மாணவர் கழக மாநில செயலாளர் ச.பிரின்சு என்னாரெசு பெரியார் தலைமை வகித்தார்.
திராவிடர் கழகத் துணைத் தலைவர் கவிஞர் கலி.பூங்குன்றன் கண்டன உரையில், “தந்தை பெரியார் அவர்கள் கூறும்போது, வருங்காலத்தில் ஆட்சி அதிகாரம் என்பது தாழ்த்ப்பட்ட, பிற்படுத்தப்பட்ட, ஒடுக்கப்பட்ட மக்கள் கையில் வரும். அந்த நேரத்தில் ஆட்சி நிர்வாகத்துக்கு மேலாக நீதி மன்றம் என்பது பார்ப்பனீய அமைப்பாக இருந்து கொண்டு அரசுகள் கொண்டுவரும் சட்டங்களை முடக்கும் என்று சொல்வார். அதுதான் இன்று நடந்து கொண்டிருக்கிறது. ஒரு பிரச்சினையில் வழக்கு நீதிமன்றத்தில் இருந்தால், நீதிமன்றத்தில் வழக்கு இருக்கிறது என்று நாடாளுமன்றத்தில்கூட கூறிவிடுவார்கள். ஆனால், நீதிமன்றத்தில் பிரச்சினை இருக்கும்போது, நுழைவுத் தேர்வு நடத்த நீதிபதிகள் தீர்ப்பு அளிப்பது எப்படி?’’ என்று வினவினார்.
பொதுச்செயலாளர் வீ.அன்புராஜ் அவர்கள், “இந்த ஆர்ப்பாட்டம் ஆரம்பம்தான். அண்மையில் வந்துள்ள டைம்ஸ் ஆப் இந்தியாவில் அய்.அய்.டி.யில் சேரும் மாணவர்களுக்கு நுழைவுத் தேர்வுக்கான பயிற்சிக்கு 45 நாள்களுக்கு ரூபாய் 22ஆயிரத்து 500 என்று கூறுகிறது. அதாவது ஒரு மணி நேரத்துக்கு ரூபாய் 1,500 என்று நிர்ணயித்து பயிற்சி அளிக்கப்படுகிறது. நினைத்துப்பாருங்கள் இதில் கிராமப்புறத்தில் இருப்பவர்கள் பயன்பெற முடியுமா? இது யாருக்காக செய்யப்படுகின்ற சூழ்ச்சி? சாதாரண மாணவர்கள் இதில் நுழைய முடியுமா? நுழைவுத் தேர்வு கொண்டுவருகின்ற மோடியரசின் சூழ்ச்சியை முறியடிப்போம்’’ என்றார்.
AIOBC பணியாளர் கூட்டமைப்பின் பொதுச்செயலாளர் கோ.கருணாநிதி தொடக்க உரையில், ‘‘2006ஆம் ஆண்டில் திமுக தலைவர் கலைஞர் தமிழகத்தில் நுழைவுத் தேர்வு தேவையில்லை என்று சட்டம் கொண்டுவந்தார். கலைஞர் கொண்டு வந்த சட்டத்தின்மூலமாக தமிழ்நாட்டில் நுழைவுத் தேர்வு இல்லாமல் 1200 பேர் பொதுப்பட்டியலில் தேர்வானார்கள். அவர்களில் 430பேர் தாழ்த்தப்பட்ட மாணவர்கள், தாழ்த்தப்பட்ட அருந்ததியினர் 85 பேர் பொதுப்பட்டியலில் மிக அதிக மதிப்பெண்கள் பெற்று மருத்துவக் கல்லூரிகளில் சேர்ந்தார்கள். மூன்று நீதிபதிகளுக்கு மேலாக 5 நீதிபதிகள் உத்தரவு உண்டு என்றாலும், தீர்ப்பை மே 9ஆம் தேதி அளிப்பதாகக்கூறி, மே ஒன்றாம் தேதி தேர்வு நடத்த வேண்டிய அவசியம் என்ன?’’ என்றார்.
பொதுப்பள்ளிக்கான மாநில மேடை பொதுச் செயலாளர் பிரின்ஸ் கஜேந்திரபாபு பேசும்போது, ‘‘இந்திய உச்சநீதிமன்றம் இதுவரை செய்திராத கொடும் தவறை செய்திருக்கிறது என்பதை நாம் உணரவேண்டும். ஆளுகின்ற பாஜகவின் வழக்குரைஞர் நீதிமன்றத்துக்கு சென்று, இந்திய மருத்துவக்கவுன்சில், இந்திய அரசு இந்த
தேர்வை நடத்த வேண்டும் என்று தயாராக இருக்கின்றது என்று கூறுகிறார். அப்போதுதான் இதில் உச்சநீதிமன்றம் தானாக தீர்க்க கூடியதா? மோடியின் தலைமையில் இருக்கக்கூடிய பாஜகவின் மத்திய அரசாங்கத்தின் விருப்பத்தை நிறைவேற்றவேண்டும் என்று தீர்ப்பு கொடுக்கிறது. அதைத்தான் நாம் உணரவேண்டும். கல்வித்திட்டம், பாடத்திட்டம் என்று வந்தால், நிபுணர் குழு அமைத்து கருத்து கேட்காமல், மத்திய அரசின் வழக்குரைஞர் கருத்தைக் கேட்டுக்கொண்டு, நீதிபதி தீர்ப்பு வெளியாகிறது. சென்னை அய்.அய்.டி 50 ஆண்டுகளாக நடந்துகொண்டிருக்கிறது. அங்கே 800 மாணவர்கள் படிக்கிறார்கள் என்றால், தமிழர்கள்தான் என்றில்லாவிட்டாலும், தமிழ்நாட்டிலிருந்து வெறும் 10 விழுக்காட்டினர் மட்டுமே படிக்கிறார்கள். மற்றவர்கள் எல்லாம் யார் என்றால் வெளி மாநிலங்களைச் சேர்ந்தவர்கள். உச்சநீதிமன்றத்தின் நீதிபதிகள் நவோதயா பள்ளி கட்டமைப்பையும், ஆதிதிராவிடர் நலப்பள்ளியின் கட்டமைப்பையும் பார்க்க வேண்டாமா? இரண்டும் ஒரே கட்டமைப்பு கொண்டுள்ளதா? அப்படி இல்லாதபோது சம வாய்ப்பு கொடுக்காமல் போட்டி போடச் செய்கிறது மோடி அரசு, உச்சநீதிமன்றம் துணைபோகின்றது’’ என்றார்.
எழுத்தாளர் ஓவியா பேசியபோது, ‘‘இந்தியாவில் உள்ள அனைத்து மருத்துவக்கல்லூரிகளுக்கும் ஒற்றைச்சாளர முறையில் என்று நுழைவுத் தேர்வு என்கிற சதித்திட்டம் மத்திய அரசால் கொண்டு வரப்படுகிறது. நம்முடைய எதிர்ப்பால் இந்த ஆண்டு கிடையாது என்கிறார்கள். மாணவர்களிடையே தேர்வு முறையிலேயே மாற்றம் வரவேண்டும் என்கிற இந்த காலத்தில், 12ஆம் வகுப்புரை படித்தது மட்டுமல்லாமல் நுழைவுத் தேர்வும் கொண்டு வந்து சித்திரவதைக் கூடமாக ஆக்க வேண்டுமா? காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை ஒரே கலாச்சாரமா? ஒரே உடையா? பழக்கங்கள் ஒரே மாதிரியாக உண்டா? பலதரப்பட்ட மக்களுக்கு ஒரே நுழைவுத் தேர்வு ஏன்?’’ என்றார். கிராமப்புற மாணவப் பேரவை, அகில இந்திய மாணவர் பேரவை உள்ளிட்ட பல்வேறு அமைப்பினர் கலந்துகொண்டனர்.