ஆசிரியர்: சு.அறிவுக்கரசு
வெளியீடு: நாம் தமிழர் பதிப்பகம்
4/7 இராஜா அனுமந்தா தெரு, திருவல்லிக்கேணி,
சென்னை -600005
பக்கங்கள்: 280
நன்கொடை : 150
கற்பனைக் கதாபாத்திரமான இராமனை தேசியக் கடவுளாகவும் – ஒரு இதிகாச கதையை வரலாறாகவும் மாற்ற இந்துத்துவ வெறியர்கள் முயன்று கொண்டிருக்கும் நிலையில், இராமன் பற்றிய பல்வேறு புரட்டுகளை வெளிப்படுத்தும் விதமான கட்டுரைகள் மற்றும் இந்துமதம், இந்து கடவுள்கள், இந்திய தத்துவங்கள், மூடநம்பிக்கைகள், திருமண முறைகள் இவற்றை உள்ளடக்கிய கட்டுரைகளின் தொகுப்பே இந்நூல்.
இந்தியாவின் மதசார்பின்மைக்கு அறைகூவல் விடுக்கும் பாபர்மசூதி _இராமஜென்ம பூமி பிரச்சினையின் தொடக்கம், திருட்டுத்தனமாக இரவோடு இரவாக அயோத்தி பாபர் மசூதியில் இராமன் பொம்மை வைக்கப்பட்ட பின்னணியை விரிவாக அலசுகிறார் நூலாசிரியர்.
இதுபோல் இராமன், கிருஷ்ணன் போன்ற கடவுளர் புரட்டுகள் தக்க இதிகாச புராணங்களை கொண்டு விளக்கப்படுகிறது. லோகாயுதம், சமணம், பவுத்தம் போன்றவை இந்திய தத்துவவியலில் கோலோச்சியமையும் பின்னர் பார்ப்பனரால் சிதைக்கப்பட்டு அழிக்கப்பட்டதையும் விளக்கும் கட்டுரைகள் இடம் பெற்றுள்ளன. யோகா, பொருள் முதல்வாதம், கருத்து முதல்வாதம் போன்றவை இளைய தலைமுறையினர் நன்கு அறிந்துகொள்ளும் விதமாக எளிய நடையில் நேருக்கு நேர் இருந்து விளக்குவது போல் அமைந்துள்ளது.
இலக்கியங்களில் உள்ள மூடக்கருத்துகளான நிமித்தம் (சகுனம்), கார்த்திகை விழா, ஆழியிழைத்தல், பல்லிச்சொல், பறவைச் சகுனம், விலங்கு சகுனம், ஊழ்வினை, பாம்பில் இரத்தினமணி, பேய் போன்ற மூடக் கருத்துகள் இலக்கியங்களில் எவ்வாறு இடம் பெற்றுள்ளன என்பதை விளக்கி, இலக்கியங்களின் போக்கு எவ்வாறு இருக்க வேண்டும் என்பதை தந்தை பெரியாரின் மேற்கோள்களோடு விளக்குகிறார் நூலாசிரியர். தமிழர் திருமணம், சுயமரியாதைத் திருமணம், தாலி போன்ற கட்டுரைகள் ஆழமான பொருள் பொதிந்தவை. பகுத்தறிவாளர்கள் அவசியம் வாங்கி படிக்க வேண்டிய நூல்.
– வை.கலையரசன்
—————————————————————————————————————————————————————-
ஆவணப்படம்
வளர்ச்சி என்பது யாருக்கானது? என்ற கேள்விகளுடன் மண்ணின் மைந்தர்களான ஆதிவாசிகள், சமதளங்களில் வாழும் மக்கள், நர்மதா நதியை நம்பியிருக்கும் மீனவர்கள் ஆகியோர் சமூகப் போராளிகளுடன் இணைந்து நர்மதா நதியின் குறுக்கே கட்டப்பட்டிருக்கும் பெரிய அணைக்கட்டுகளுக்கு எதிராக நடத்தும் அறப் போராட்டத்தின் வரலாறு இந்த ஆவணப் படத்தில் பதிவு செய்யப்பட்டிருக்கிறது. 85 நிமிடங்கள் ஓடக்கூடிய இந்த ஆவணப்படத்தின் இயக்குநர் சஞ்சய் காக். இது 2002இல் வெளியிடப்பட்டது.