ஆறுமுகம் – அண்ணா

ஜனவரி 16-31

சுகம், துக்கம் இரண்டும் வாழ்க்கைத் தேரின் இரு உருளைகள்.  கவலையை விடு, கடவுளை நம்பு.  அவன் ஆணைப்படியே அனைத்தும் நடக்கும், அவனைத் தொழு, கஷ்டம் நீங்கும், சுகம் பிறக்கும்.

சஞ்சலப்பட்டு, கூப்பிய கரத்துடன் நின்று, குமுறுகிற நெஞ்சுக்கு ஆறுதல் தேடும் ஏழைக்கு, வேதாந்தி கூறும் உபதேசம் இது.

கடவுளின் முகத்திலே, களிப்பு பிறந்தது.  இந்த ஏழை, எங்கே தன் கஷ்டத்தினால், நம்மை மறந்துவிடுவது, அல்லது மனம் நொந்து தூற்றுவது என்ற மனப்போக்கு கொண்டு-விடுகிறானோ என்று எண்ணினோம், நல்ல வேளையாக, வேதாந்தி, நமக்கு வக்கீலானான்.  சுகம், துக்கம் இரண்டும் இருக்கத்தான் செய்யும் என்று உபதேசித்தான்.  ஏழையின் மனம் சாந்தி அடையும் என்று கடவுள் கருதிக் களிப்-படைந்தார்.

ஆட்டுக்கும் அளவறிந்துதானே, ஆண்டவன் வால் வைக்கிறார். உயர உயரப் பறந்தாலும் ஊர்க்குருவி பருந்தாகுமா, பயல், இப்போதுதான், படுகிறான். வேண்டும் அவனுக்கு.

ஏழையின் கஷ்டத்துக்குக் காரணமாக இருந்தவன், ஆண்டவன் ஏழையைத் தண்டித்-தான், அது தக்ககாரியம் என்று கூறிக் களிக்கிறான்.  ஆண்டவனின் முகம் கோபத்தால் சிவந்தது. கொடியவன்! ஏழையைக் கெடுத்ததுடன் இல்லை, என்னையுமல்லவா, நடுச்சந்திக்கு இ-ழுக்கிறான். அந்த ஏழை படும்பாடு என் ஏற்பாடு, அதுவும் சரியான ஏற்பாடு என்று தைரியமாகக் கூறுகிறான்.  எவ்வளவு துணிவு!  ஏழையைக் கெடுத்ததுமின்றி, ஏழையை என்மேலே ஏவுகிறானே, இவ்வளவும் என் ஏற்பாடு என்று பேசி. எவ்வளவு வன்னெஞ்சம் இவனுக்கு என்று எண்ணினார், கோபம் பொங்கிற்று, ஆண்டவனுக்கு.

அட ஏண்டா தம்பி! ஆண்டவன் ஆண்டவ-னென்று அடிக்கொரு தடவைப் பிதற்றுகிறே. அந்த அக்ரமக்காரன் செய்த கொடுமையாலே நீ அவதிப்படுகிறே. ஆண்டவன் ஏன் இதைச் செய்யப் போகிறார்?

ஏழையைக் கொடுமை செய்தவனின் கெட்ட குணத்தை அறிந்த ஒரு நண்பன், ஏழைக்கு வந்த இடருக்கு ஆண்டவன் பொறுப்பாளி அல்ல என்று கூறுகிறார்.

கடவுளின் கோபம் இந்தப் பேச்சினால் குளிர்ந்துவிட்டது.  வேதாந்தி கஷ்ட காலத்திலும் என்னை மறக்கக்கூடாது என்று உபதேசம் செய்தான், அதற்கு நேர்மாறாக ஏழையைக் கெடுத்த கொடியவன், என் மீது ஏழையை ஏவிவிடப் பார்த்தான்.  நல்ல வேளையாக இந்த நண்பன் வந்தான். என்னைப்பற்றிக் கவலைப்பட வேண்டாம். இடர் விளைவித்தவனைப்பற்றி யோசி என்று ஏழையின் கண்ணையும் கருத்தையும் அந்தப் பக்கம் திருப்பிவிட்டான்; அது மிக நல்லதாயிற்று, என்று எண்ணி ஆண்டவன் நிம்மதியடைந்தார். முகத்திலே கோபம் போய் தெளிவு பிறந்தது.

ஆண்டவனே! எங்களை ஏன் இப்படித் தவிக்க வைக்கிறாயோ தெரியவில்லையே, அந்தப் பாவிக்குப் பக்கத்துணையாகவா இருக்கிறாய்?  நியாயமா? நாங்கள் என்ன குற்றம் செய்தோம்?  தெய்வமே! இது அடுக்குமா? என்று ஏழையின் மனைவி ஆண்டவனிடம் முறையிட்டு, நீதி வழங்கும்படிக் கேட்கிறாள்.

ஆண்டவனின் கண்களிலே இருந்து அவரையும் அறியாமல் நீர் வழியலாயிற்று.  இந்த அபலை, என்னை நீதி வழங்கும்படிக் கேட்கிறாளே. அவள் படும் கஷ்டம் அக்ரமக்காரனால் உண்டானது என்கிறாள், அதுவரையிலே சந்தோஷந்தான், நான்தான் கொடுமைக்குக் காரணம் என்று அம்மை குற்றம் சாட்ட-வில்லை. ஆனால், என்மீது உடந்தையாக இருக்கும் குற்றத்தைச் சுமத்துகிறார்களே, நான் என்ன செய்வேன்?  என் கடமையை நான் செய்ய வேண்டுமென்று எனக்குக் கவனமூட்டுகிறாள் அந்தக் காரிகை, முறையிடுகிறாள்! தூற்றிவிடக் கூடாதா?  கொள்ளாமல், தெய்வத்தை நிந்தித்தாய், ஆகையால் உனக்கு அருள்பாலிக்க முடியாது.  சாந்தி வருவித்துக் கொள்ளாமல், தெய்வத்தை நிந்தித்தாய், என்றாவது சொல்லித் தப்பித்துக் கொள்ளலாமே? இந்தப் பெண்மணி, தன் கஷ்டத்தை என்னிடம் முறையிட்டு அல்லவா, நீதி வழங்கச் சொல்கிறாள். அய்யோ! அந்தக் கண்ணீருக்கு நான் சமாதானம் சொல்லியாக வேண்டுமே என்ன இருந்து நீர், தாரை தாரையாகப் பெருகிற்று.

ஆண்டவனறிய நான் ஒன்றும் தவறு செய்யவில்லை.  வீணாக என்மேல் சந்தேகப்பட வேண்டாம்.  அவன் பொய் பேசுகிறான். நான் அவன் சொத்தை அபகரிக்கவில்லை. சாட்சி உண்டா கேளுங்கள். என்னை அவமானப்படுத்த வேண்டாம்.  ஆண்டவன் சாட்சியாக, நான் அந்த ஏழையின் சொத்தை அபகரிக்கவில்லை என்று, ஏழையைக் கெடுத்தவன் அலறினான்.  ஏழையின் பக்கம் சிலர் சேர்ந்து கொண்டு அடித்து உதைத்து, -ஏழையிடமிருந்து அபகரித்த சொத்தைக் கொடுக்கும்படி வற்புறுத்தும் போது இந்தக் குரல் கேட்டதும், ஆண்டவன் கண்களைத் துடைத்துக் கொண்டார்.  முகத்திலே உறுதி பிறந்தது, ஊரார் நியாயம் கேட்கத் தொடங்கிவிட்டார்கள்! ஏழையின் சார்பிலே பரிந்து பேசவும் ஆட்கள் உள்ளனர், இனி நமக்குத் தொல்லை இல்லை என்று எண்ணினார், உறுதி காட்டும் முகத்துடன் நின்றார்.

ஏழையின் சொத்து திரும்பக் கிடைத்த பிறகு, அவன் களிப்புடன் காணப்பட்டான்.  எல்லாம் அவன் செயல்! என்று கூறி நின்றான்.  அவனுக்கு உதவியாக வந்தவர்கள், அதுசரி அப்பா!  அந்தக் கொடியவனிடமிருந்து, உன்னை மீட்டோ-மல்லவா? அப்பப்பா!  எவ்வளவு கடினமாக காரியம்! என்றனர். அநீதி நிலைக்குமா?  ஆண்டவன், அக்ரமக்காரனை விட்டு வைப்பானா? என்றான் களிப்புடன் அந்த ஏழை,  வேண்டியதைக் கொடுங்கள் என்றனர் உதவி புரிந்தோர். நான் தருவதா? ஆண்டவன் உங்கட்கு நீண்ட ஆயுளும், நோயற்ற வாழ்க்கையும் குறைவற்ற செல்வமும் தருவார் என்று ஏழை கூறினான். உதவி புரிந்தவர்-களுக்குப் பொறுமை இல்லை. கொஞ்சம் கோபத்தோடு கேட்டனர். இருக்கட்டுமப்பா!  ஆண்டவன் கொடுக்கட்டும், நீ எடு என்றனர்.  கொடுப்பதைப்பற்றித் தடை இல்லை, ஆனால், ஆண்டவனின் அருஞ்செயலை நான் ம-றுத்ததாக முடியுமே என்பது பற்றியே கவலைப்படுகிறேன்.  அவனன்றி ஓர் அணுவும் அசையாதே! என்றான் அந்த ஏழை.  உதவி புரிந்தவர்கள் கோபம் தாங்க முடியாமல் ஒரு பலமான அறைகொடுத்தனர், அவனன்றி இந்த அறையும் கிடைக்காது என்று கொக்கரித்தபடி; ஆண்டவன், தன் முகத்தைச் சுளித்துக் கொண்டார். வேகமாகத் தேவியாரின் அறைக்குச் சென்று விட்டார்.  அன்று மட்டும் ஆண்டவன், ஆறு திருக்கோலம் கொண்ட அருமையை வியந்து என் குறிப்பேட்டில் ஆறுமுகம் என்ற தலைப்பிலே, அன்றைய நிகழ்ச்சியை எழுதி முடித்தேன்.

(7.11.1946 இல் எழுதியது)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *