1 பிறப்பினால் வந்த பாதிப்புகளை எண்ணிக் கவலைப்படாமல், ஒரு இலக்கை நிர்ணயித்து அதற்காகத் தொடர்ந்து முயலுங்கள். மூடநம்பிக்கைகளை விலக்கி அறிவார்ந்த வாழ்வை நடத்துங்கள்.
2 சாதித்து உயர்ந்த எளிய மனிதர்கள் பற்றிய நூல்களையும், தன் முன்னேற்றத்திற்கு ஊக்கமளிக்கும் நூல்களையும் அதிகம் படியுங்கள்.
3 தாய்மொழியில் சிறப்பான அறிவும், ஆங்கிலத்தில் கருத்துப் பரிமாற்றத் திறத்தையும் கட்டாயம் வளர்த்துக் கொள்ளுங்கள். அதற்கேற்ற சூழலில் பழகுங்கள்.
4 செயற்கை உணவுகளை அறவே விலக்கி, இயற்கையான பாரம்பரிய உணவுகளை உண்ணுங்கள். பரோட்டா, பிராய்லர் கோழியின் சுவைக்கு அடிமையாகாது அவற்றை அறவே விலக்குங்கள். காய்கறி, மலிவான பழங்களை நிறைய உண்ணுங்கள். கம்பு, கேழ்வரகு போன்ற சிறு தானியங்களை அதிகம் சாப்பிடுங்கள்.
5 மது, புகை, போதை தீய வழக்கங்களை அறவே விலக்குங்கள், விளையாட்டிற்கோ, உல்லாசத்திற்கோகூட அவற்றைப் பயன்படுத்தாதீர்கள்.
6 படிக்கின்ற பாடத்தில் கவனம் செலுத்துவது போலவே, பல்துறைச் செய்திகளையும், உலக அளவிலான செய்திகளையும் தினம் தினம் தேடித் தெரிந்து கொள்ளுங்கள்.
7 பதட்டப்படாமல், வெறுப்பு கொள்ளாமல், சலிப்பு அடையாமல், எதையும் உறுதியோடு மனம் தளராமல் எதிர்கொள்ளுங்கள். அன்பாக, இனிமையாக அடுத்தவர் மீது அக்கறையோடு பழகுங்கள்! பல வகையில் உங்களுக்கு இவை உதவும்.
8 ஒரு நாளைக்கு 7 மணி நேரம் கட்டாயம் உறங்குங்கள். மீதியுள்ள நேரத்தை திட்டமிட்டு பிரித்துக் கொண்டு தவறாது அவற்றைச் செய்யுங்கள். நண்பர்களோடு மகிழ 2 மணி நேரம் ஒதுக்குங்கள். தனிமையைத் தவிருங்கள். நல்ல நண்பர்களை, உங்கள் முன்னேற்றத்தை விரும்பும் நண்பர்களைத் தேர்வு செய்யுங்கள்.
9 குடும்ப உறுப்பினர்களிடம் மகிழ்வாக மனம் விட்டுப்பேசிப் பழக நேரம் ஒதுக்குங்கள். உங்களைவிட சிறியவர்களுக்கு வழிகாட்டியாக இருங்கள்; முதியவர்கள் கூறுவதற்கு மதிப்பளியுங்கள்; சரியானவற்றைப் பின்பற்றுங்கள்.
10 வாழ்க்கைக்குத் தேவையான பணத்தை மட்டும் சம்பாதியுங்கள்; பணத்திற்காகவே அலைந்து வாழ்க்கையை அர்த்தமற்றதாக்கி அல்லல் படாதீர்கள். வாழ்வில் சுமைகளைக் குறைத்து சுகங்களை அதிகப்படுத்துங்கள். அன்போடு, விட்டுக் கொடுத்து வாழுங்கள், வீண் பிடிவாதம் வாழ்க்கையை நாசமாக்கிவிடும். அன்பும், பற்றும் யாருக்கு அதிகம் இருக்கிறதோ அவர்கள்தான் விட்டுக் கொடுப்பர்.
11 நடிகர்களுக்கு ரசிகனாக, கிரிக்கட் அடிமையாக, அரசியல்வாதிகளின் எடுபிடியாக ஒருபோதும் ஆகாதீர்கள்.
12 தான், தனது குடும்பம் என்ற குறுகிய வட்டத்திற்குள் ஒடுங்கிவிடாது, பொது நலனுக்கும் வாழ்வைச் செலவிடுங்கள்.
மனக் கட்டுப்பாடும், திட்டமிட்ட செயலும், முயற்சியும் இருந்தால் இவை சாத்தியமே! இப்படி வாழ்ந்து பாருங்கள், உங்களுக்கே ஒரு பெருமிதம், மகிழ்வு தோன்றும். ஸீ