வந்தவர் மொழியா? செந்தமிழ்ச் செல்வமா?

மே 16-31

பலி

வாய் என்பதன் அடியாகப் பிறந்த வாய்மை போலவும், மெய் என்பதன் அடியாகப் பிறந்த மெய்ம்மை போலவும், உண் என்பதன் அடியாகப் பிறந்த உண்மைபோலவும், கண் என்பதன் அடியாகப் பிறந்த கணம் போலவும், பல் என்பதன் அடியாகப் பிறந்தது பலி என்று அறிக. பலி- – –பல்லினால் வலிந்து உண்ணத் தகும் உணவுக்கும் நாளடைவில் பல்வகை உணவுப் படையலுக்கும் வழங்கிற்று.

முதலில் விலங்கு முதலியவற்றை மூடவழக்கத்தால் தெய்வப் படிவங்களில் முன் வைத்து வெட்டிக் கொலை புரிந்தார்கள். அதை தெய்வங்களே நேரில் பல்லினால் கடித்து உண்டதாக சிறப்புறுத்தினார்கள்.

பின்னர் நாகரிகமிக்க தமிழர்களின் வெறுப்புக்கு அஞ்சி, தெய்வத்துக்குத் தருவன எவற்றையும் பலி என்ற பெயராலேயே கூறத் தொடங்கினர் ஆரியப்பாவிகள். எனவே, பலி தூயத் தமிழ் காரணப் பெயர் என்று கடைபிடிக்க!

(குயில்: குரல்: 1, இசை: 39, 3-3-1959)

தாமரை

இது தாமரசம் என்ற வடசொல்லின் சிதைவென்று ஏதுங் கெட்ட வடமொழியாளர் இயம்பி மகிழ்வர்.
மரு என்றால் தமிழில் மணத்திற்குப் பெயர். அது ஐ என்ற பெயர் இறுதி நிலையை முற்று அற்று ஒரோ வழி என்ற இலக்கணத்தால் மரையாயிற்று. மரை மணமுடையது. அதாவது மலர். அது இனம் விளக்க தாம் என்பதைப் பெற்றுத் தாமரை என வழங்கும். மரை என்றே வழங்குவதும் உண்டு. தாம் என்பதன் பொருள் என்ன எனில் அஃது தரவு என்பதன் ஈற்றுயிர் மெய் கெட்ட பெயரெச்சம். கொடி நீண்டது அன்றோ தாமரை! கொடி நீட்சியால் அயலிடம் தாவுகின்ற பூ! எனவே

தாமரை.தாமரை தூய தமிழ்க் காரணப்பெயர். இதைத் தாமரசம் என எடுத்தாண்டனர் வடவர் என அறிதல் வேண்டும்.

துளசி

இது துழாய் என்ற தூய தமிழ்ச் சொல்லின் சிதைவு. இவ்வாறு சிதைத்து எடுத்தாண்டனர் வடவர்.
இந்த திருட்டு அவர்களிடம் நிலைத்து விடவே, இன்று துழாய் என்பதே துளசியினின்றும் வந்தது என்கின்றனர். துழாய் இருக்க, அவர்களால் ஒலி மாற்றம் செய்யப்பட்ட துளசி என்ற சொல்லை நாம் ஏன் எடுத்தாள வேண்டும்.
துழா – –பரவுதல். மணம் பரவுதல் என்க.
ய். பெயர் இறுதிநிலை.
(குயில்: குரல்: 1, இசை: 40, 10-3-1959)

இலட்சம்

இது இலக்கம் என்ற தூய தமிழ்ச் சொற் சிதைவு. ஒன்றினும் ஒளியுடையது பத்து, பத்தினும் ஒளியுடையது ஆயிரம். ஆயிரத்தினும் ஒளியுடையது பத்தாயிரம், பத்தாயிரத்தினும் ஒளியுடையது நூறாயிரம். ஒளி – –புகழ், கவர்ச்சி அடையத் தக்கது.

எல்லே இலக்கம் என்பது தொல்காப்பியம். இலக்கம் என்பது அம் சாரியையின்றி இலக்கு என நிற்பதும் உண்டு.

லட்சம் என்ற வடசொல்லினின்று இலக்கம் வந்தது என்று ஏமாற்றுவார். சொற்கள் கான்றுமிழத்தக்கவை.

தமிழன் வடசொற்காரர் சிதைத்தபடி, லட்சம் என்றோ இலட்சம் என்றோ எழுதாமல் இலக்கம் என்ற சிதையா தூய தமிழ்க் காரணப் பெயரையே எழுதுக. பேசுக.

கோடி

இதையும் வடசொற்காரர் வடசொல் என்று கூறிப் பிழைப்பர். எண்ணின் உச்சி என்பது பொருள். ஆதலின் கோடி. (நூறு இலக்கம்) தூய தமிழ்க் காரணப் பெயரே என்று கடைப்பிடிக்க.
(குயில்: குரல்: 1, இசை: 43, 17-3-1959)

மலம்

இது வடசொல் அன்று. மல மல என்பது ஒலிக்குறிப்பு. மலம் கழித்தற் காலத்தில் ஏற்படுவதன்றோ மலமல என்பதன் அடியாகப் பிறந்த தூய தமிழ்க் காரணப் பெயரே மலம் என்பது. சல சல என்ற ஒலிக் குறிப்புச் சொல்லினடியாகச் சலம் தோன்றியதும் இங்கு ஒப்பு நோக்கத்தக்கது. இதை வந்தவர் எடுத்தாண்டனர்.

(குயில்: குரல்: 1, இசை: 43, 24-3-1959)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *