பொதுவாக ஆண்டு முழுவதும் மிதமான தட்பவெப்பம் நிலவினாலும், தமிழகத்தில் கோடைக்காலம் கொஞ்சம் ஓவர் டோஸ்தான். நிழல்தரும் மரங்களும், நீர்நிலைகளும், அவை உண்டாக்கும் இயல்பான குளிர்ச்சியும் அருகிவரும் நிலையில், அதிகரித்துவரும் சூழல் மாசுபாடு வெப்பநிலையை மேலும் அதிகரித்துவிடுகிறது. எனினும், சில வழிமுறைகளையும் முன்னெச்சரிக்கை செயல்பாடுகளையும் பின்பற்றுவதன் மூலம் நாம் கோடையை புன்னகையுடன் வரவேற்க முடியும்.
அதிக வியர்வை, வியர்க்குரு, கட்டிகள், அம்மை, சோர்வு, மயக்கம் என வெயிலின் விளைவுகள் அநேகம். கூடவே, வெயில் காலத்தில் ஆட்டோ ஓட்டுநர்கள் முதல் அலுவலகத்தில் சக ஊழியர்கள் வரை எரிந்துவிழுவார்கள். வெயில், நம் மனதின் ஈரத்தையும் உறிஞ்சி, நம்மைச் சிடுசிடுப்பாக்கிவிடுவதே இதற்குக் காரணம். கொஞ்சம் முன்னெச்சரிக்கையாக, தயாராக இருந்தால் கோடையை குளுமையாக எதிர்கொள்ளலாம் என்கிறார், பொதுநல மருத்துவர் சுசீலா.
நீர் வறட்சி
அதிகப்படியான வெப்பத்தால் உடலில் உள்ள நீரின் அளவு குறைந்து, நீர் வறட்சிப் பிரச்சினை (Dyhydration) வருகிறது. நீரிழப்பு ஏற்படும்போது, உடலில் உள்ள சத்துகளும் வெளியேறிவிடும். வியர்வை வராத நபர்களுக்குக்கூட நீர்ச்சத்து, சிறுநீர் மூலமாக வெளியேறும். இதனால், மயக்கம், வயிற்றுப் போக்கு, சிறுநீர்ப் பாதையில் தொற்று ஏற்படலாம். சுற்றுலா செல்வோர் பல மணி நேரத்துக்குச் சிறுநீர் கழிக்காமல் அடக்கிவைப்பதால், கிருமிகள் பல்கிப் பெருகி தொற்று ஏற்பட்டு, எரிச்சல் உணர்வைத் தருகிறது. சிறுநீர் தொடர்ச்சியாக வெளியேறும் அளவுக்கு உடலில் நீர்த்தன்மையைப் பராமரித்துக்கொள்வது அவசியம்.
உடல் வெப்பம்
உடல் சூடு அதிகம் உள்ளவர்களுக்கு, வெயில் காலத்தில் இன்னும் சூடு அதிகரிக்கும். நீர்ச்சத்து குறைவதால், வயிறு இழுத்துப் பிடித்தல், அடிவயிற்று வலி, சிறுநீர் கழிக்கும்போது எரிச்சல் போன்ற பிரச்சினைகள் ஏற்படலாம். உடலின் வெப்பத்தை முதலில் கண்கள்தான் வெளிப்படுத்தும். கண்கள் சூடாக இருப்பது போன்ற உணர்வு, எரிச்சல், சிவந்துபோதல், கண்கள் பொங்கி அழுக்கு வெளியேறுதல் போன்ற பிரச்சினைகள் உருவாகும். நீர்ச்சத்துள்ள பழங்கள், காய்கறிகள், இளநீர், நீர்மோர் நிறைய எடுத்துக்கொள்வதன் மூலம், இந்தப் பிரச்சினைகளைத் தவிர்க்கலாம். வெளியில் வெயில் தகித்துக் கொண்டிருக்கையில், அறையில் குளிர்சாதனத்தில் 16 டிகிரி அளவுக்கு அதிகக் குளிருடன் இருக்கக் கூடாது. வெளியே வரும்போது, வெப்பநிலை வேறுபாடு உடலைப் பாதிக்கும். கண்களின் வெப்பத்தைப் போக்க, குளிர்ந்த நீரால் அடிக்கடி கண்களைக் கழுவலாம்.
சன் ஸ்ட்ரோக்
வயதானவர்கள், இதயப் பிரச்சினை உள்ளவர்கள், சர்க்கரை நோயாளிகள், எதிர்ப்புத் திறன் குறைந்தவர்கள் கடும் வெயிலில் வெளியே போவதைத் தவிர்க்கலாம். அவசியம் எனில், அதற்குரிய பாதுகாப்புடன் செல்ல வேண்டும். உடலில் நீர் சரியான அளவில் இருந்தால்தான், ரத்த ஒட்டம் சீராக நடைபெறும். ரத்த ஓட்டம் மூளைக்குச் சரியாக செல்லாதபோது, சன் ஸ்ட்ரோக் ஏற்பட்டு, மயக்கம் வரலாம். சுயநினைவு இருப்பவர்களுக்கு, வாய் வழியாகத் திரவ உணவுகளைக் கொடுத்து எழுப்பலாம். சுயநினைவு இல்லாதவர்களை, உடனடியாக மருத்துவமனைக்குக் கொண்டுசெல்ல வேண்டும். காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை வெயில் நேரடியாக உடலில் படுவதைத் தவிர்ப்பதே நல்லது.
வயிற்றுப்போக்கு
வெளியில் சாப்பிடுபவர்களுக்கு, வெப்பச் சூழலில், அடிக்கடி உணவு நஞ்சாதல் ஏற்படும். இதனால், தொடர் வயிற்றுப் போக்கால் அவதிப்பட நேரிடும். உணவகங்களில், நீர்ப் பற்றாக் குறையால் சுகாதாரமற்ற நீரைக் கொண்டு, உணவு தயாரிக்கப்படும். வெளியில் குடிக்கும் தண்ணீர்கூட சுகாதாரமானதா என்ற உறுதிப்படுத்திக்கொள்ள வேண்டும். நீரை நன்றாகக் கொதிக்கவைத்து, ஆறி வடிகட்டிய பிறகு குடிப்பதே நல்லது. இந்த முன்னெச்சரிக்கை செயல்பாடுகள் மூலம் டைஃபாய்டு காய்ச்சலையும் தடுக்கலாம்.
உணவை மாற்றுங்கள்
மூன்று வேளையும் திட உணவு எடுத்துக் கொள்வதைவிட கஞ்சி, கூழ், மோர், இளநீர் என திரவ உணவுகளை அதிகம் எடுத்துக்கொள்ளலாம். அலுவலகங்களுக்கு கொண்டு போகும் லஞ்ச் பாக்ஸ்களில் சோறு, சாம்பார், ரசம், பொரியல் என வழக்கமான உணவுகளுக்குப் பதிலாக நீர்ச் சத்துள்ள காய், பழங்களின் சாலட்கள், மோர் ஆகியவை நிரம்பியிருக்கட்டும். சாலட்கள் அதிகம் எடுத்துக்கொள்வதால் சமையலறை வெப்பத்தில் வியர்க்க, விறுவிறுக்க அதிக நேரம் நிற்பதில் இருந்தும் தப்பிக்கலாம். உணவில் அதிகக் காரம், மசாலா, பொரித்த உணவுகள் வேண்டவே வேண்டாம். வியர்வையால் குழந்தைகள் சீக்கிரம் சோர்ந்து போவார்கள் என்பதால் அவர்களுக்கு நீர் உணவுகள் அடிக்கடி தருவது அவசியம்
வீட்டை கூல் ஆக்குங்கள்
மாநகர்களில் ஒரே ஒரு அறையில் மட்டும் குளிர்சாதனம் இருக்கும் வீடுகளில் கோடைக்காலத்தில் திண்டாட்டம்தான். இரவில் தூங்கும்போது குளிர்ச்சிக்காக குடும்பத்தினர் எல்லோரும் ஒரே அறையில் தங்கி நெரிசலை அதிகப்படுத்தினால் இடநெருக்கடியோடு. மனநெருக்கடியும் சேர்ந்துவிடும். வெயிலுக்குப் பயந்து ஒரே அறைக்குள் ஒடுங்குவதைவிட, குடியிருக்கும் வீட்டை குளிர்ச்சியாக்குவது பற்றி யோசிக்கலாம். கிடைக்கிற இடங்களில் செடிகள் வளர்ப்பது, கூரைக்குக் கீழே தெர்மோகோல் அமைப்பது, மாடியில் தோட்டங்கள் அமைப்பது, இளநிற பெயிண்டுகள் அடிப்பது என, வீட்டை வெயிலில் இருந்து பாதுகாத்து, செயற்கைக் குளிரூட்டிகள் ஏற்படுத்தும் பாதிப்புகளில் இருந்தும் தப்பித்துவிடலாம்.
நோ ஃப்ரிட்ஜ்
வெயிலில் இருந்து வீட்டுக்குள் நுழைந்ததும், நம் கைகள் திறப்பது ஃப்ரிட்ஜைத்தான். சில்லென தண்ணீரோ, ஜூஸோ குடித்தால்தான் நமக்கு உயிர் வரும். இதைவிட தொண்டைக்கு ஆபத்து தருவது வேறொன்று இல்லை. அதிக வெப்பநிலை, அடுத்த நொடியே அதிகக் குளிர் என்கிற வெப்பநிலை மாற்றங்களை நம் உடல் ஏற்றுக்கொள்ளாது. வெயில் காலத்துலகூட ஏன் ஜலதோஷம் பிடிக்குது? என்று சந்தேகக் கேள்வி கேட்பவர்களுக்குப் பதில் இந்த ஃப்ரிட்ஜ் தண்ணீர்தான். அறை வெப்ப நிலையில் தண்ணீர் குடிப்பதே எப்போதும் சிறந்தது. சில்லென்ற தண்ணீர்தான் வேண்டும் என்பவர்கள், மண்பானைத் தண்ணீரைப் பயன்படுத்தலாம். சாலை ஓரங்களில் குவித்து வைக்கப்பட்டிருக்கும் மண்பானைகளில், சிவப்பு நிறத்துக்காக ரெட் ஆக்ஸைட் பயன்படுத்தப்படுகிறது. இதுவும் உடலுக்குக் கெடுதல்தான் என்பதால், மண்பானை வாங்கும் முன்
பானையின் தரத்தை உறுதிப்படுத்துவது நல்லது.
வெப்ப காலத்தில் உணவுப் பொருட்கள் சீக்கிரம் கெட்டுப் போய்விடும் என்பதால், ஃப்ரிட்ஜில் வைத்த உணவுப் பொருட்களைச் சூடுபடுத்தி உண்ணாமல், அவ்வப்போது சமைத்துப் பயன்படுத்தலாம். அதுபோலவே, வெளியில் பழச்சாறு குடிக்க நேர்ந்தால் அய்ஸ்கட்டிகளை தவிப்பது நல்லது. பயணங்களின்போது சுத்தமான தண்ணீர் பாட்டில் ஒன்றை எப்போதும் உடன் வைத்திருப்பது பலவிதங்களில் நன்மை தரும்.
வியர்க்க வியர்க்கக் குளிக்காதீர்கள்
தலை அதிகம் வியர்த்தால் அடிக்கடி துடைத்துக்கொண்டே இருக்க வேண்டும். வியர்வையை அப்படியே விட்டுவிட்டால், உடலில் சளி பிடித்துக்கொள்ளும். சைனஸ் பிரச்சினை உள்ளவர்கள், தலை வியர்க்காமல் பார்த்துக்கொள்வது அவசியம். குழந்தைகள் விளையாடிவிட்டு வந்ததும், டவலால் துடைத்து வியர்வையை அகற்றுங்கள். சில நிமிடங்கள் கழித்துக் குளிக்க வைக்கலாம். வியர்வையோடு குளிப்பது, வியர்வை வழிய, வழிய முகம் கழுவுவது இரண்டையும் தவிர்க்க வேண்டும்.
இயற்கையை பின்பற்றுவதே சிறந்த வழி
ஆண்டின் பருவகால மாற்றங்கள் இயல்பானவை. கோடையும் அவ்வாறே. இயற்கையின் ஒரு அங்கமான கோடைக்காலத்தை எதிர்கொள்ள இயற்கை நமக்கு பல விஷயங்களை அளித்துள்ளது என்கிறார் சித்த மருத்துவர் கு.சிவராமன். இதோ அவர் பரிந்துரைக்கும் எளிய வழிகள்:
வெயிலால் உடலில் இருக்கும் எலக்ட்ரோலைட்கள் (Electrolytes) என்னும் நுண்சத்துகள் சமன் இல்லாமல் போகிறது. அதை ஈடுசெய்ய இளநீர் அதிகம் குடிக்கலாம். இளநீரில் உள்ள எலக்ட்ரோலைட், உடனடியாக உடலின் நீர்ச்த்தை சமன்செய்யும், கூடவே, மூன்று நான்கு லிட்டர் தண்ணீர், நீர்மோர், பழங்கஞ்சி, உப்பும் சர்க்கரையும் சேர்ந்த நீர் ஆகாரங்களைச் சாப்பிடலாம். உடலில் உள்ள நச்சுகளை வெளியேற்றவும், உடலை சமநிலையில் வைத்துக் கொள்ளவும், தண்ணீரைவிட சிறந்தது எதுவும் இல்லை.
வாரத்துக்கு இரண்டு நாள்கள் நல்லெண்ணெய் தேய்த்து, அரை மணி நேரம் கழித்துக் குளிக்கலாம். வயிறு, கண் பகுதிகளில் ஈரத்துணி அல்லது நீரில் நனைத்த பஞ்சை, 20 நிமிடங்கள் போட்டு, உலரவிடலாம். மருதாணி இலைகளை அரைத்து, உள்ளங்கை, பாதத்தின் அடிப்பகுதியில் வைத்துக்கொள்ளலாம்.
உடலில் உள்ள நீரின் அளவு குறைவதால், சருமத்தில் பருக்கள், கட்டிகள், சிவப்புத் திட்டுகள், வியர்க்குரு, தொடை இடுக்குகளில் அரிப்பு போன்றவை உருவாகின்றன. அதிகமாக வியர்வை வரும் நபர்களுக்கு, எண்ணெய்ப் பசை பிரச்சினையும் இருந்தால், அவர்களுக்கு வெயில்காலப் பருக்களும் வரும். இதற்குக் கற்றாழையின் சதைப்பகுதி, தேன், வெள்ளரிக்காய் சாறு, வேப்பிலை விழுது, தேங்காய் எண்ணெய், தேங்காய் வழுக்கை விழுது போன்றவற்றை உடல் முழுவதும் பூசலாம். அரசு சித்தா மருந்தகங்களில் ‘மட் பேக்’ (Mud pack) கிடைக்கும். அதை நீரில் கலந்து, உடல் முழுவதும் தடவலாம். வயிறு, கண் பகுதிகளில் ‘மட் பேக்’ போட்டுக் கொள்ளலாம்.
அடர்ந்த நிறத்தில் சிறுநீர் கழித்தாலே, உடலில் நீரில் அளவு குறைந்துள்ளது என்று தெரிந்துகொள்ளலாம். சிறுநீர் கழிக்கையில் வலி, எரிச்சல் ஏற்படுவது சிறுநீர்ப் பாதைத் தொற்றின் அறிகுறி. முந்தைய இரவு ஊறவைத்த வெந்தயத்தை, காலையில் வெறும் வயிற்றில் சாப்பிடலாம். அடிவயிற்றில் ஈரத்துணியை வைத்து உலரவிடலாம். தொட்டியில் இடுப்பளவு வரை நீர் நிறைத்து 20 நிமிடங்கள் வரை உட்கார்ந்திருப்பதன் மூலமும் இந்தப் பிரச்சினையை சரிசெய்யலாம்.