”மூவாயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்ட இந்தியா”

மே 16-31

தமிழில் பேராசிரியர் முனைவர்

ப.காளிமுத்து எம்.ஏ.பி.எச்டி

புகழ்பெற்ற எழுத்தாளர் ஜான் வில்சன்
எழுதிய “India Three Thousand Years Ago” என்னும் ஆங்கில நூல் 1858 அக்டோபரில் மும்பையில் வெளியிடப்பட்டது. அது தற்போது மொழியாக்கம் செய்யப்பட்டு வெளிவருகிறது.

(5) வேத காலத்தில் ‘விஷா’ என்பது பொதுவாக ‘மக்கள்’ என்ற பொருளுடையதாய் விளங்கியது. இது ‘வெஷா’ – (வீடு) என்பதனோடு தொடர்புடையது. இதன் பெயரடையாகிய ‘வைஷியா’ (க்ஷிணீவீsலீஹ்ணீ) என்பது பின்னாளில் வீட்டு உரிமையாளரைக் குறித்து நின்றது; அல்லது பொதுமக்களில் ஒரு தனிமனிதனைக் குறிப்பதாக இருந்தது. ‘விகஸ்’ என்னும் லத்தீன் மொழிச் சொல்லும் ‘விகாக்’ என்னும் கிரேக்கச் சொல்லும் ‘வெஷா’ (Vesha) என்பதற்கு இணையான தொடர்புச் சொற்களாகும். (டாக்டர் முல்லர், ‘விஷா’ எனும் இந்தச் சொல்வழக்கு மேலைநாடுகளின் ஊர்ப்பெயர்-களோடு ஒட்டி வருவதைக் குறிப்பிட்டுக் காட்டுகிறார்; Greenwich. Woolwich) ‘விஷா’ என்பது சில நேரங்களில், சமுதாயத்தில் நிலவிய நாட்டுப்புற, வேளாண் தொழில்சார்ந்த, ஏனைய தொழில்சார்ந்த வகுப்பினரைக் குறிப்பதற்குப் பயன்படுத்தப்பட்டிருந்தாலும் அது அவர்கள் செய்துவந்த தேவைக்கேற்ற சிறுசிறு தொழில்களைக் குறிப்பதையே நாம் பொருளாக எடுத்துக்கொள்ள வேண்டும். ஆனால், இந்தத் தொழில்களில் அவர்களுக்கு ஏகபோகத் தனிஉரிமை தரப்படவில்லை. ரிக் வேதத்தில் ‘அஷ்வினை’ நோக்கி உரைக்கப்படும் உரைகளில் அந்தச் சமுதாயத்தின் பொதுவான விருப்பங்களையும், வழிபடுவோரின் விருப்பங்களையும் அல்லது உயிர்ப்பலி கொடுத்து அந்த வேள்வியைச் செய்வோரின் விருப்பங்களையும் நாம் காண முடிகிறது. பிரம்மாவை அன்புடன் ஆதரிக்க வேண்டுகிறோம்; இந்த யாகத்தினை அன்புடன் ஆதரிக்க வேண்டுகிறோம்; அரக்கர்களைக் கொன்றொழிக்க வேண்டுகிறோம்; தீமைகளை வெளியேற்றுக; ‘கத்ரா’வை (ஆற்றலை)ஆதரிக்க வேண்டுகிறோம்; மனித ஆற்றலை ஆரிக்குமாறு வேண்டுகிறோம்; பசுவை (தேனு _ சொத்துக்களைக் குறிப்பது காமதேனு) ஆதரிக்க வேண்டுகிறோம்; மக்களை (அல்லது _ இல்லத்தை விஷா) ஆதரிக்க வேண்டுகிறோம்.’’ இங்கு பொதுவான விருப்பங்கள் என்று குறிப்பிடப்பட்டவை பிற்காலத்தில் குறிப்பிட்ட ஜாதிகளுக்குச் சொந்தமானவையாக மாற்றப்பட்டுவிட்டன.

(‘ரிக் வேதத்தில் வரும் இந்தப் பகுதி குறிப்பிடத்தக்க ஒன்றாகும். பிற்காலத்தில் இந்தப் பகுதியில் வரும் பல சொற்கள் உருமாற்றம் செய்யப்பட்டும், தனித்தனியாகப் பிரிக்கப்பட்டும், சேர்க்கப்பட்டும் காணப்படுகின்றன. ‘சாயன ஆச்சாரி’, ‘ஜாதிய உணர்வுடன்’ வழிபாடு _ ‘பிரம்மா’ _ என்பதை ‘பிராமணன்’ என்றும், அதாவது வழிபடுபவன், ‘சத்ரா’ (ஆற்றல்) என்பதை ‘சத்திரியர்’ _ அதாவது அந்த அதிகார ஆற்றலைச் செயற்படுத்துகிறவன் என்றும், தேனு _ (பசுவையும்) ‘விஷா’ (மக்கள்) வையும், வைசியர்கள் என்றும், இந்த வேள்விச்செயல் மக்களுக்குரியது என்றும், ‘உரை எழுதியிருக்கிறார். இந்த விளக்கம் வியப்பிற்குரியதல்ல. (ஏனெனில் இதனை எழுதியுள்ளவர் ‘சாயன ஆச்சாரி’) ஆனால், இது மிக மிகத் தவறானதாகும். இவை மக்களின் விருப்பங்களையும், வேண்டுதல்களையும் குறித்தனவேயன்றி ஜாதிகளைக் குறிக்கவில்லை.)

வந்தேறிகளின் இன ஒற்றுமை தொடர்ந்தது;  நாம் அடிக்கடி குறிப்பிடும் ‘ஆரியர்’ என்ற பெயரால் _ அவர்களின் மூதாதையர் வழிப் பெயரால் அவர்கள் குறிக்கப்பட்டனர். மகாபாரதத்தின்படி, பாண்டவர் காலத்தில் வைசியர்கள் அரசின் நடவடிக்கைகளில் கணிசமான செல்வாக்குப் பெற்றிருந்தனர். அறிவுசான்ற விதுர், யது ஆகியோரின் செயற்பாடுகள் இதற்கு எடுத்துக்காட்டாகும். இஃதோர் அளவிலேயே இருந்தது; இந்தியாவின் செழிப்பு மிகுந்த சமவெளிப் பகுதிகளில் ஆரியர்கள் குடியேறிய பிறகு வைசியர்களுக்கு ஆடுகள், மாடுகள் முதலான கால்நடை மந்தைகளையும், வேளாண்மையையும் கவனிக்கும் ‘சிறப்புக்குரிய’ பொறுப்புக் கொடுக்கப்பட்டது. இத்துடன் வாணிகம் செய்யும் உரிமையும் அவர்களுக்கு ஒதுக்கப்பட்டது. இவை யாவும் ‘மனு’வின் பெயரால் நடைபெற்றன. நாம் ஏற்கனவே பார்த்ததைப் போல, பசு மாடுகளைப் பாதுகாத்து வைத்திருப்பவன் அந்தச் சமுதாயத்தின் தலைவனாக இருந்து வந்த காலம் அது!

(6) மனுவும் இந்துச் சட்டமும், சூத்திரர்களை இந்தியச் சமூகத்தின் ஓர் அங்கம் என்று பொதுவாகக் குறிப்பிட்டபோதிலும் அவர்கள் அடிமைப்படுத்தப்பட்டவர்களே; இரண்டாம் பிறப்புக்கு (இரு பிறப்பாளர்) அல்லது ‘புனிதமான பிறப்புக்கு’ அவர்கள் உரிமையுடையோர் அல்லர்! _ இப்படிப்பட்ட இவர்களைப் பற்றிப் பழைய வேதங்களில் எந்தக் குறிப்பும் இல்லை. ஒரு இடத்தில்கூட இவர்கள் குறிப்பிடப்படவில்லை! இவர்கள் முதன்முதலாக, மகாபாரதத்தில்தான், ‘அபிராஸ்’ என்பவர்களுடன் ‘இண்டஸ்’ ஆற்றின் கரையில் வசித்து வந்தார்கள் என்று கூறப்படுகிறது’ என்பது நம் கவனத்திற்குரியதாகும். இந்த ‘அபிராஸ்’ என்பவர்களை இதே நிலையில் தாலமியும் குறிப்பிடுகிறார். இவர்கள் வாழ்ந்த மாவட்டத்திற்கும் ‘அபிரியா’ என்று பெயரிடப்பட்டிருக்கிறது.

இவர்களின் வழிமரபினர் இன்றும் சிந்து கட்ச், கத்தியவாட் பகுதிகளில் இடையர்களாகவும், உழவர்களாகவும் காணப்படுகின்றனர். இந்தப் பகுதிகளிலும்  இவற்றை அடுத்துள்ள பகுதிகளிலும் சூத்திரர்களைப் பற்றிய மிகத் தெளிவான சிறப்புமிக்க அறிகுறிகள் _ குறிப்புகள் இருக்கின்றன. தொன்மைமிக்க வரலாற்றுக் காலத்தில், இண்டஸ் ஆற்றின் கீழ்ப்பகுதியில் இருந்த நகரத்தில் இவர்களின் பெயர் மறுபடியும் காணக் கிடைக்கின்றது என்று பேரா. லேசன் கூறுகிறார். இவ்வாறாக இவர்கள் (சூத்திரர்கள்) ஒரு தனித்த நாட்டினராக இண்டஸ் ஆற்றின் அணிமைப் பகுதிகளில் வாழ்ந்தனர் என்பது நிறுவப்படுகின்றது. அதாவது இதை இப்படிச் சொல்லலாம், பழங்காலத்தில் ‘ஆரிய இந்தியர்கள்’ எந்தப் பகுதியில் வசித்து வந்தார்களோ அந்தப் பகுதியில்! ஆரியர்கள் தொன்மைக் குடிமக்களான _ இந்த மண்ணின் மைந்தர்களை வெற்றி கொண்டிருக்கலாம். இந்தச் சூழ்நிலையிலிருந்து ஒன்று தெளிவாகத் தெரிகின்றது; நாட்டின் உட்பகுதியில் வாழ்ந்து வந்த இந்த மண்ணின் தொன்முது குடிமக்களை ஆரியர் வெற்றிகொண்ட பின்னர் ‘சூத்திரா’ என்ற பெயர், பிறரைச் சார்ந்து அடிமை ஊழியம் செய்துவந்த ஜாதி மக்கள் அனைவருக்கும் சூட்டப்பெற்றது. இந்தப் பெயர் சமஸ்கிருதத்திலிருந்து பெறப்பட்டிருக்க முடியாது.

இதனுடைய சரியான உச்சரிப்பு _ எழுத்து ‘SUDRA’ என்றுதான் இருக்க வேண்டும் என்று துணிவதற்கு இடம் இருக்கிறது. இது சரியாக இருக்குமானால், பழைய பெர்சிய மொழியில் இது ‘ஃகூத்ரா’ (Hudra) என்று ஒலிக்கப்பட வேண்டும். இது மெகஸ்தனீசின் கருத்தால் உறுதிப்படுத்தப்படுகிறது; அதாவது ‘இந்திய நாடுகள், அலெக்சாண்டரின் காலத்திற்கு முன்பாக பெர்சியன்களுக்குத் துணைப் படையினரை அனுப்பியுள்ளனர்’. இந்த நாட்டில் ஆரியர்களால் வென்று அடிமைப்படுத்தப்பட்ட மக்களுக்கும், பிறரைச் சார்ந்து அடிமை ஊழியஞ்செய்து வந்த மக்ளுக்கும் ‘சூத்திரன்’ என்ற பெயர் நீட்டித்து வைக்கப்பட்டு அவர்கள் சூத்திரர் ஆக்கப்பட்ட பின்னர், மிக எளிதாகவும், மகிழ்வுடனும் வெறுக்கப்பட்ட பழங்குடியினரான சண்டாளர்களுக்கும், அம்பஸ்தாஸ் மக்களுக்கும் பிறருக்கும் சூத்திரப் பட்டம் படிப்படியாகச் சூட்டப்பட்டது. ‘நாட்டின் உட்பகுதியில் இருந்த சூத்திரர்களில் சிலரும் பழங்குடி மக்களில் சிலரும்ஆரியர்களின் மொழியோடு ஒத்திருக்கும் ஒருவகைக் கிளைமொழியைப் பேசிவந்தனர்’ என்று ஆய்வாளர் சிலர் கூறுகின்றனர்; நானும் அவ்வாறே கருதுகிறேன்.

இக்கிளை மொழியானது ஆரியர்களுக்கு முற்பட்ட ‘வந்தேறிகளின்’ மொழியோடு தொடர்-புடையதாயிருக்கலாம் என்று கருதுகிறேன். (தஸ்யூ _ எனப்படுகின்ற தாசர்களின் பல பெயர்களும், ஆரியர்களின் மற்ற எதிரிகளின் பெயர்களும் ‘ஆரியப் பொருள்’ உடையனவாகவே உள்ளன. வடஇந்திய மொழிக் குடும்பத்தில் இன்றும் வழக்கில் உள்ள பல சொற்கள், சமஸ்கிருத மொழியோடு இன உறவுடையனவாகத் தோன்றுகின்றன. அவை சமஸ்கிருத மொழியோடு ரத்த உறவுடையன; அம் மொழியிலிருந்து அவை உடனடியாகப் பெறப்பட்டவை அல்ல. இந்தக் குறிப்பு அந்த நம்பிக்கையை எதிர்ப்பதற்காகக் கூறப்படுவதல்ல; இந்திய மொழிகளின் நிலை இந்தக் கருத்தினை உறுதிப்படுத்துகின்றது. ஆரியர் வருகைக்கு முன்பாக இந்தியாவிற்குள் நுழைந்த பழங்குடியினர் பலரும் சித்தியன் அல்லது துரேனியன் இனவழிப்பட்டவர்களாக இருக்க வேண்டும்.)

சூத்திரர்களுக்குக் கொடுக்கப்பட வேண்டிய உண்மையான மத உரிமைகளைப் பற்றி ஆரியச் சமூகம் பெரிதும் அக்கறை காட்டவில்லை. ஒரு தயக்கம் அவர்களைப் பற்றிக் கொண்டிருந்தது. வேதங்களைக் கற்றறிந்த ‘பிராமணர்களின்’ காலத்தில் ஆரியர் நடத்திய யாகங்களில் (வேள்விகளில்) பங்கெடுத்துக் கொள்வதற்கு அவர்கள் (சூத்திரர்கள்) அனுமதிக்கப்பட்டார்கள். ஆரியர்களின் வெற்றி தொடர்ந்து நீடித்துக் கொண்டு வந்தபோது, ஆரியர்கள் கங்கை, யமுனை ஆகிய ஆறுகளின் கிளையாறுகள் பாய்ந்த சமவெளிப் பகுதிகளில் நிலையானதோர் ஒழுங்குபட்ட சமுதாய அமைப்பை அவர்கள் ஏற்படுத்திக் கொண்டார்கள். இக்காலத்தில் சூத்திரர்களைத் தாழ்ந்த நிலைக்குத் தள்ளித் துன்புறுத்தி ஆரியர்கள் கீழ்மைப்படுத்தினார்கள். மனு தருமத்தில் கூறப்பட்டுள்ள சட்டங்களின்படி சூத்திரர்கள் இழிவாகவே நடத்தப்பட்டார்கள்; மனு கூறுவதாவது _
“ஒரு பிராமணன் சூத்திரனுக்கு அறிவுரை தரக் கூடாது; பிராமணன் சாப்பிட்ட எச்சத்தைக் கூடச் சூத்திரனுக்குத் தரக் கூடாது; நெய்யோ, வெண்ணெய்யோ எதுவும் அவனுக்குத் தரக் கூடாது. ஆன்மீக அறிவுரை தரக் கூடாது. சூத்திரன் செய்த பாவங்களுக்குப் பரிகாரம் எதனையும் சொல்லக் கூடாது. அடிமைத் தொழில் செய்யும் சூத்திரனுக்குப் பாவம் போக்கும் பரிகாரச் சட்டவிதிகளை அவனுக்குச் சொல்பவனும், அவற்றைச் செய்யும் முறைகளை அவனுக்குச் சொல்லித் தருபவனும் சூத்திரனோடு சேர்ந்து ‘அசம்விருதா’ என்னும் நரகத்தில் மூழ்குவான்’’ (மனு: VIII:417)

இவ்வாறு இந்தியச் சமுதாயத்தில் கீழ்நிலையில் உள்ள மக்களை இழித்தும் பழித்தும் தாழ்த்தும் செயல்கள் ஆதி வேதங்களில் எந்த இடத்திலும் இடம்பெறவில்லை. ஏற்கனவே கூறியதைப் போல, ‘சூத்திரர்’ இருந்தனர் என்ற கருத்தை ஒருமுறைகூட எந்த இடத்திலும் மறைமுகமாகக் கூடக் கூறவில்லை.

(7.) வேதங்களின் காலத்தில், ‘பிரம்மா’ என்ற கடவுளைப் பற்றிய கருத்தோ, அவருடைய முகம், தோள், தொடை, கால் முதலான இடங்களிலிருந்து இந்துக்களின் நான்கு முதன்மையான ஜாதிகள் தோன்றி வளர்ந்தன என்னும் கருத்தோ இல்லை! இந்தக் கருத்தியலே அப்போது உருவாகவில்லை.
இந்துக்களின் மூன்று கடவுளரில் ஒருவராகிய ‘பிரம்மா’ ‘மனித இனத்தை ஈன்றெடுத்த பெற்றோராகிய பிரமா’, வேதங்களில் எந்த இடத்திலும் ஒரு கடவுளாகக் குறிப்பிடப்படவே இல்லை!
‘பிரம்மா’ என்பது வேத மொழியில் ஆண்_ பெண் பால் வேறுபாடு காட்டாத பெயர்ச் சொல்லாகும். ‘வழிபாடு’ என்பது இதன் பொருளாகும்.

‘பிரம்மா’ _ ஆண்பால் பொருளில் ‘வழிபாடு செய்கிறவன்’ என்று வருகிறது. நெருப்பு, வேள்வி இவற்றின் கடவுளாகிய ‘அக்னி’; நெருப்பு,  வேள்வி இவற்றின் வழிபாட்டு முறைக்கு ‘பிரம்மா’ என்று பெயர். விருகஸ்பதி, பிரிகஸ்பதி அல்லது பிரமணாஸ்பதி ஆகியவை ரிக் வேதம் முழுமையிலும் வழிபடு முறையின் தலைவனாகவே கூறப்படுகின்றன. டாக்டர் ரோத் எனும் அறிஞர், இந்த ‘பதி’ கடவுளர் அனைவருமே ஏதோ ஒன்றின் எதிரொளி (பிரதிபலிப்பு) என்றும், பிற்காலத்திய ‘கண்டுபிடிப்பு’ இது என்றும் முடிவு செய்கிறார்.  அவர் விஷ்பதி, விஷாம்பதி, மானசாஸ்பதி என்று அழைக்கப்பட்டாலும் அவர் மனிதர்களின் தலைவர்; ‘வைஷ்வனாரா’ என்பது அனைத்துயிரினங்களின் முடிமன்னன்; ‘ஜாதவேதாஸ்’, ‘வேதாஸ் சாஸ்வதா’ _ இவை மனிதர்களைக் காவல் புரியும், நிலையான காவல் ஆய்வாளர்; இவர் மனிதர்களின் சமூக வாழ்க்கையிலும் தனி வாழ்க்கையிலும் உதவியாகப் பயன்படுபவர்; தொடர்ந்து வேள்வியில் பலியிடப்படும் பொருள்களை நுகர்வோர் இவரே; ‘சொர்க்கத்தின் மகன்’ என்றும் இப்பூவுலகின் மகன்’ என்றும் இவர் பேசப்படுகிறார். இவற்றின் பெற்றோராகவும் இவர் குறிப்பிடப்படுகிறார்; ஒன்றிலிருந்து வருவிக்கப்பட்ட கடவுளாகவும் படைப்-பாளராகவும் குறிப்பிடப்படுகிறார் தொன்மையுடைய ‘சுக்தா’க்கள் இயற்றப்பட்ட-போது இவ்வாறு நிலைமை இருந்தது.

பருப்பொருளாக விளங்குகின்ற இயற்கை, ஆற்றல் ஆகிய கடவுளருக்கு அப்பால், வழிபடுவதற்கென்றே ஒரு தனிக் கடவுள் தேவை என்ற விருப்பம் _ வேதங்களில் கூறப்படும் தொன்மைத் தெய்வங்களாகிய இவர்களுக்கு அப்பால் வழிபடு கடவுள் ஒருவர் தேவை என்ற விருப்பம். வெளிப்படையாக வேதங்களின் எழுத்துக்களில் தோன்றத் தொடங்கின. ‘பிரம்மா’ என்னும் செயற்பாட்டால் ‘அக்னி’ _ இந்தக் கடவுளாகத் தேர்வு செய்யப்பட்டான். பிராமணர்கள், முடிவில் ‘பிரம்மா’வை நுண்பொருள் வடிவிலான தனிக் கடவுளாக ஏற்றுக்கொண்டு பொது மக்களிடையே ‘பிரம்மா’வை அறிமுகப்படுத்தி விட்டார்கள். ஆனால், பிராமணர்கள் எவ்வளவுதான் பிரம்மாவைப் பெரிதுபடுத்திச் சிந்தித்து மக்களிடையே புழக்கத்தில் விட்டபோதிலும், இந்திய மக்களிடையே ‘பிரம்மா’ வழிபாட்டை நிலைநிறுத்துவதில் அவர்களால் வெற்றி பெற முடியவில்லை. இந்தியாவில் பிரம்மாவுக் கென்று ஒரேஒரு கோயில்தான் உருவாக்கப் பட்டிருக்கிறதென்று நான் கேள்விப்பட்டிருக்கிறேன். இவ்வாறு பிரம்மா பொதுமக்களால் வெறுக்கப் பட்டமைக்கு ஒரு காரணம் உண்டு; பிரம்மாவின் ஒழுக்கக் கேடான நடத்தைக்காக சிவன், பிரம்மாவின் ஒரு தலையை வெட்டியெறிந்து விட்டு அவனுக்குச் ‘சாபம்’ கொடுத்துவிட்டதால் பிரம்மா இவ்வாறு செயல்பட்டுக் கொண்டிருக்கிறான். இந்தக் கதையானது கற்பனையாகப் புனையப்பட்டுப் பிற்கால சாஸ்திரங்களில் சேர்க்கப்-பட்டிருக்கிறது.’ பிரம்மா (புனிதமான பொருளாகிய பிரம்மா) புனைவியலான வேதாந்தத்தின் இந்தக் கண்டுபிடிப்பு. பல தெய்வ வழிபாட்டு முறைகளில் ஒன்றாகும்; வேதங்களுக்கு மிகப் பிற்பட்ட காலத்தைச் சேர்ந்தது; இந்த முறையானது, அவற்றை வேதங்களின் ‘நோக்கம்’ அல்லது முடிந்த முடிபு’ என்ற பெயரில் ஒதுக்கி வைப்பதற்காகவே இது வடிவமைக்கப்பட்டது.

(8) இந்துக்களின் தற்காலச் சமூக, மத வாழ்க்கையில் இடம்பெற்றுள்ள, தொடுவதனால், உண்பதனால், தண்ணீர் குடிப்பதனால், ஏற்படுத்தப்பட்டுள்ள சடங்குவழிப்பட்ட தீண்டாமைக் கொள்கை அல்லது தீண்டாமை என்ற அமைப்புமுறை சாதி இருப்பைத் தெளிவாகச் சட்டிக் காட்டுகின்றது. இந்தத் தீண்டாமை, சாதிய அமைப்பு முறையை எடுத்த எடுப்பிலேயே _ திடீரென்று வேதங்கள் ஏற்கவில்லை. தீண்டாமை _ சாதிய அமைப்பு முறை, வேதப் படைப்புகள் உருவாக்கப்பட்ட காலத்தில் இருந்திருக்குமேயானால், குறிப்பாகவோ மறைமுகமாகவோ இது இடம் பெற்றிருக்கும். ஆதலின் இவை (தீண்டாமை, சாதி) தொன்மைக் காலத்தில் இல்லை என்பது தெளிவு.
(தொடரும்)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *